பறவைகள் கூட்டமாக பறக்கும் போது ஏன் V வடிவத்தில் பறக்கின்றன …… மாணவர்களே தெரியுமா உங்களுக்கு?
காரணத்தை பார்க்கலாமா…
மாணவர்களே பறவைகள் பறப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.. அவைகளை கூட்டமாக ஆகாயத்தில் பறக்கும் போது பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இல்லையா??
வானத்தில் பறவைகள் பறப்பதைப் பார்த்தால் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பறவைகள் ஆகாயத்தில் பறப்பதை பார்க்கும்போது, அவற்றைப் போல நமக்கும் இறக்கைகள் இருந்தால், நாமும் காற்றில் பறந்தால், எத்தனை நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்திருப்பீர்கள் தானே??
இயற்கையில் பறவைகள் சிறியவை பெரியவை என பல ரகங்களில், பல வண்ணங்களில், பல குணாதிசயங்களில் உள்ளன. ஒவ்வொரு பறவைக்கும் ஒரு தனித்துவம் மற்றும் சிறப்பு அம்சம் இருக்கிறது. இப்படிப் பறவைகளைப் பற்றிச் சொல்லப் போனால் பல விதமான விசித்திரமான விஷயங்கள் இருக்கின்றன. அப்படிப் பறவைகளைப் பற்றிப் பேச வேண்டுமானால் மிக ஆச்சிரியமான மற்றும் முக்கியமான ஒன்றை பற்றி கண்டிப்பாக பேச வேண்டும்.
பறவைகள் கூட்டமாக காற்றில் பறக்கும்போது அவைகளின் சிறப்பை கவனித்து இருக்கிறீர்களா? பறவைகள் குழுக்களாக பறக்கும்போது ‘V’ வடிவில் தான் பறக்கும். அவை ஏன் ‘V’ வடிவத்தில் பறக்கின்றன? என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? இதற்குப் பின்னால் ஒரு சிறப்புக் காரணம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பறவைகள் V- அமைப்பில் பறப்பதற்கான காரணத்தை பார்க்கலாமா…
பறவைகள் உணவு தேடும் போதோ அல்லது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம் பெயரும் போதோ ‘V’ வடிவத்தில் பறக்கும். ஏனெனில் பறவைகள் V வடிவத்தில் பறந்தால் எளிதில் பறக்க முடியும். காற்றழுத்தம் அவற்றை தொந்தரவு செய்யாது. அவற்றின் இறக்கைகளின் அமைப்பைப் பார்த்தால், அந்த வடிவம் அவர்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது.
ஒவ்வொரு பறவையும் தனியாகப் பறக்கும் போது, பறப்பதற்குத் தேவையான ஆற்றல், காற்றைத் தள்ளிக்கொண்டு செல்வதற்கான ஆற்றல் என நிறைய ஆற்றல் தேவைப் படுகின்றன. இவற்றை சரி செய்ய பறவைகள் கண்டறிந்த நூட்பம் தான் இந்த V வடிவத்தில் பறக்கும் முறை.
ஒரு விமானத்திற்கு புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் என இவை இரண்டும் எப்படி மிக முக்கியமானதாக கருதப்படுகிறதோ அதைப் போலவே பறவைகளுக்கும் இவை இரண்டும் மிக முக்கியம். புலம்பெயர்ந்த பறவைகள் பெரும்பாலும் V-வடிவத்தில் பறக்கின்றன, இந்த செயல்முறை பறவை பறத்தல் என்று அழைக்கப்படுகிறது. இந்த தனித்துவமான இயக்கமானது காற்றியக்கவியலின் கொள்கைகளால் வழி நடத்தப்படுகிறது, குறிப்பாக தூக்குதல் மற்றும் இழுத்தல் மூலமாக அவைகள் நீண்ட தூரங்களுக்கு திறமையாக பயணம் செய்கின்றன.
பறவைகள் பொதுவாக V-வடிவமைப்பிலும் J-வடிவமைப்பிலும் அல்லது தலைகீழான V மற்றும் J-வடிவமைப்பிலும் பறக்கின்றன. பறவைகளின் இந்த நேரியல் வடிவங்கள் ஸ்கீன் உருவாக்கம் என்று அழைக்கப்படுகின்றன.
V-உருவாக்கம் பறவைகளால் மட்டுமல்ல, போர்க்காலத்தில் இராணுவ வீரர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இடைக்காலத்தில் ஸ்பார்டான்கள் முதல் நவீனகால போர் விமானங்கள் மற்றும் கடல் போர் வரையிலான போர்களில் V-உருவாக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பறவைகள், விமானங்கள் மற்றும் மக்கள் அனைவரும் இந்த உருவாக்கத்தைப் பின்பற்றுவதற்கு ஒத்த காரணங்களையே கொண்டுள்ளனர்.
V-உருவாக்கத்தில் அணிவகுத்து நிற்கும் போது ஒவ்வொன்றும் அவற்றின் பின்னால் இருக்கும் பறவைக்கு ஒரு தெளிவான காட்சியைக் கொடுக்கிறது. V வடிவத்தில் பறக்கும் பறவைகளின் கூட்டம் இந்த பறக்கும் உருவாக்கத்திற்கு மிகவும் ஈர்க்கக்கூடிய வேறு சில காரணத்தையும் கொண்டுள்ளது.
மேலோட்டமாக பார்க்கும் போது ஒரு பறவை முன்னால் செல்லும், அதன் பின்னால் மற்ற பறவைகள் பின் தொடரும். இதனை வெளியில் இருந்து பார்க்கும் பொழுது V வடிவத்தில் பறப்பது போன்று இருக்கும். இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணமும் உள்ளது.
அதாவது, முன்னால் செல்லும் பறவை காற்றை கிழித்து மற்ற பறவைகள் செல்வதற்கான பாதையை சீர்ப்படுத்திக் கொடுக்கும். இதன் மூலமாக பறவைக்கூட்டம் அதிக சக்தியை வீணாக்காமல் நீண்ட தூரம் பறக்கின்றன.
V-ன் பின்புறத்தில் உள்ள பறவைகள் மெதுவாக இதயத் துடிப்புகளைக் கொண்டிருப்பதாகவும், இறக்கைகளை குறைவாகவே அசைப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பறக்கும் உருவாக்கத்தால் பறவைகள் அதிக நன்மை அடைகின்றன என்பதை இது நிச்சயமாகக் காட்டுகிறது.
மேலும், இந்த V வடிவம் துணைப் பறவைகளுடன் மோதுவதைத் தவிர்க்க உதவுகிறது.
மேலும் பறவைகள் மனிதர்களை விட புத்திசாலிகள், பறவைகள் V வடிவத்தில் பறப்பதற்கு காரணம் அவை புத்திசாலித்தனமாக சிந்திப்பதுதான் என்று தெரிகிறது.
ஆனால் பறவைகளைப் பற்றிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும், குழுவில் முன்னணி பறவை சோர்வடைந்தால், மற்றொரு பறவை அதன் இடத்தைப் பிடிக்கும். இந்த வழியில் பறவைகள் ஒழுக்கத்துடன் எளிதாக நீண்ட தூரம் பறக்கின்றன.
மாணவர்களே, இப்போது உங்களுக்கு பறவைகள் v வடிவத்தில் பறப்பதற்கான விளக்கம் புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings