இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஒரு திருமணத்திற்காக பொக்கே வாங்க மதுவந்தியின் பூக்கடைக்கு வந்த ராஜஹம்சன் மதுவந்தியுடன் பேசுவதைப் பார்த்து மதுவின் தந்தை ஜகன்நாதன் தன் வீட்டில் மனைவியிடம் மதுவந்திக்கு திருமண ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்.
மறுநாள் குன்னூரில் உள்ள மதுவந்தியின் பாட்டி வீட்டுக்கு நால்வரும் காரில் செல்லும் பொழுது வழியில் காரின் முன் டயர் வெடித்ததில் கார் அவர்களை இழுத்துக் கொண்டு கீழே மலைப்பாதையில் கார் செல்கிறது.
நால்வருக்கும் பயத்தில் மூச்சு நின்று விடும் போலாகியது. அடுத்து வரும் ஹேர்பின் பெண்டை நினைத்து ஜகன்நாதன் பயத்தில் உறைந்து போனார். நிச்சயமாக கார் இருநூறு அடி பள்ளத்தில் விழுவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது.கடவுளே எங்களை காப்பாற்று.நால்வருமே கந்த சஷ்டி கவசத்தைத்தான் முணுமுணுத்தனர்.
குன்னூரில் வேலை முடித்து ஊட்டிக்கு கிளம்பிய ரகுவரனும் ராஜஹம்சனும் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு வந்தார்கள். வீட்டில் இருக்கும் அனைவரையும் ரகுவரன் கிண்டலாக இமிடேட் செய்து கொண்டே வந்ததில் இருவருக்கும் ஊட்டி நெருங்கியது கூட தெரியவில்லை.
திடீரென” ரகு ரகு காரை நிறுத்துடா “என்று ராஜஹம்ஸன் சத்தம் போட்டதில் பின்னாடி எதுவும் கார், வேன் வருகிறதா என்று பார்த்த ரகு வேகமாக காரை ஒரு ஓரமாக நிறுத்தினான். “ஏண்டா கத்தின” என்ற ரகுவரனிடம் எதுவும் பேசாமல் இறங்கி டிக்கியில் இருந்து ஸ்டெப்னி டயரை எடுத்தவன் எதிர் திசையில் ஓடி வீசி எறிந்தான் ஹம்சன்.
எதிரில் மலை மேலிருந்து அதி வேகமாக வந்த காரின் டயரில் ஸ்டெப்னி அதிர்ஷ்டவசமாக பட்டு அங்கிருந்த பெரிய மரத்தின் வேரும் தடுத்ததில் கார் ஆடிய படி நின்றது. எல்லாம் கண நேரத்தில் நிகழ்ந்தது. பாதையின் ஓரப் பள்ளத்தில் மரத்தின் அருகில் எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிடும் போல நின்று இருந்தது கார்.
மதுவந்தியும் கனகாவும் பயத்தில் மயக்க நிலையில் இருந்தனர். ஜகன்நாதன் மனதில் கடவுளுக்கு நன்றி கூறியவர் சற்று சுதாரித்து எப்படி இறங்குவது என்று பார்த்தார். காரின் அருகில் வந்த ஹம்சன் காரில் ஜகன்நாதனைப் பார்த்ததும் ஆச்சரியமானான். “சார் கொஞ்சம் பொறுமையா மெதுவாய் இறங்குங்க. நான் உதவி செய்கிறேன், வாங்க” என அவர் கையை பிடித்து இறக்கி விட்டான்.
அதன்பின் கனகவல்லியிடம் “நீங்களும் இந்த வழியாகவே இறங்குங்க” என்றவன் அவர் பயத்தில் பதறுவதைப் பார்த்து “அம்மா பயப்பட வேண்டாம். காரை மரம் தாங்கி இருக்குது நீங்க மெதுவா இறங்குங்க கை கொடுங்க” என அவரையும் இறக்கி விட்டான் ஹம்ஸன்.
அதற்குள் ஜெகன்நாதன் மதுவந்திக்கும் உதயனுக்கும் காரில் இருந்து இறங்க உதவி செய்தார். நால்வருமே அந்த அதிர்ச்சியில் சற்று பதட்டத்துடனே இருந்தனர். அவர்களை ஆசுவாசப்படுத்த வேகமாகச் சென்று தங்கள் காரிலிருந்து வாட்டர் பாட்டில் எடுத்து வந்து கொடுத்தான் ஹம்சன்.
நால்வருமே அதை பருகி தங்களை சமன்படுத்திக் கொண்டனர். உதயன் ஹம்சனிடம் “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா “என்றான். அதற்குள் எதிர்ப்புறம் நிறுத்தி இருந்த அவர்கள் காரில் இருந்து ரகுவரனும் இறங்கி இவர்களிடம் வந்தான். ஹம்சனைப் பார்த்ததில் முகம் மலர்ந்திருந்த மதுவந்தி ரகுவரனை பார்த்ததுமே முகம் மாறிப் போனாள்.
தன் முகத்தையே எதிர்புறம் திருப்பிக் கொண்டாள் அவனைப் பார்க்க பிடிக்காதது போல். ராஜஹம்சன் இதை கவனித்தும் எதுவும் பேசாமல் இருந்தான். ஜகந்நாதன் ஹம்சனிடம் “தம்பி எப்படி கண்டுபிடிச்சீங்க எங்க கார் ட்ரபிள்ல இருக்குதுன்னு” என்று கேட்டார்.
அவனை முந்திக்கொண்டு “காரை ஓட்டிட்டு வர நான் பார்க்கல, ஆனா பக்கத்துல இருந்த இவன் பார்த்துட்டான் அது எப்படின்னு எனக்கே தெரியல” என்றான் ரகுவரன் ஆச்சரியமாக.
“இவன் உங்க காரைத்தான் பார்த்தான். ஆனால் நான் அது ஜிக்ஜாக்கா வரத பார்த்துட்டு ஒரு வேளை முன் டயர் பஞ்சர் ஆகியிருக்கலாம்னு யூகிச்சேன். அதுதான் ஸ்டெப்னியெ எடுத்து வீசினேன். அதுவும் ஆபத்து தான்”.
“மரம் இருக்கிறதால கண்டிப்பா காரை தடுத்துவிடும் என்று எதிர்பார்த்தேன். அதுவே நடந்தது கடவுள் அருளால” என்றான் ராஜஹம்சன் மகிழ்ச்சியுடன்.
ஜகன்நாதன் அவர்களிடம் “நன்றிப்பா உங்க ரெண்டு பேருக்கும்” என்றார் ராஜஹம்சனின் கைகளை பிடித்தபடி.
கனகவல்லியோ” கடவுள் தான் உங்களை அனுப்பி இருக்காரு” என்றார் மனம் நெகிழ்ந்தபடி. எல்லோருமே உணர்ச்சிவசமாக இருந்தனர் மதுவந்தியோ அங்கிருந்த மரங்களை ஆராய்வது போல் அதன் அருகில் நின்று கொண்டிருந்தாள்.
“தம்பி நான் மெக்கானிக்கிடம் போன் செய்து வரச் சொல்லி விடுகிறேன். நீங்க என் மனைவி பசங்கள மட்டும் கொஞ்சம் வீட்டில் டிராப் பண்ணிடுறீங்களா ப்ளீஸ்” என ஜகன்நாதன் ராஜஹம்சனிடம் கேட்டார்.
“ஷுயர் அங்கிள், ப்ளீஸ் எல்லாம் வேண்டாமே” என்றான் ராஜஹம்சன் சிரித்தபடி.
மூவரையுமே ஜெகன்நாதன் அவர்கள் காரில் வீட்டுக்குப் போகச் சொன்னார். ஆனால் உதயனோ “அப்பா நான் உங்களுக்கு பேச்சு துணைக்கு இங்கே இருக்கேன். எப்படியும் மெக்கானிக் வந்து காரை ரெடி பண்ண ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விடும்” என்றான் பொறுப்பாக.
ரகுவரனையே கார் ஓட்ட பணித்த ஹம்சன் அவன் அருகில் அமர்ந்தான். கனகவல்லியும் மதுவந்தியும் காரில் ஏறியதும் உற்சாகமாக காரை ஓட்டினான் ரகுவரன். மதுவந்தியின் முகம் இறுக்கமாகவே இருந்தது.
கார் கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்த்த ராஜஹம்சன் ‘என்னாச்சு இவளுக்கு?’ என நினைத்து கவலையுற்றான். சமயம் புரியாமல் ரகுவரன் ஏதோ ஜோக் சொல்கிறேன் என அனைவரையும் ராவிக் கொண்டிருந்தான்.
“டேய் பாதையைப் பார்த்து பேசாம ஓட்டு” என்றான் ஹம்சன் அவனிடம் கடுமையாக.
வீடு வந்ததும் அவர்களை கனகவல்லி உள்ளே வந்து ஒரு காபி சாப்பிட்டுட்டு போகலாமே என்று அழைத்தார்.
“வித் ப்ளஷர் ஆன்ட்டி” என்ற ரகுவரனின் கையை அழுத்திய ஹம்சன் “ஆன்ட்டி தவறா நினைச்சுக்காதீங்க கல்யாண வேலை இருக்குது. இன்னொருமுறை கண்டிப்பா வரோம்” என்று கூறி கை கூப்பி வணங்கி விட்டு காரில் ஏறினான்.
ரகுவரன் அவனை முறைத்துக் கொண்டே வந்து காரை எடுத்தான். காரில் ரகுவரனிடம் “ரகு உனக்கு மதுவந்தியை முன்னாலேயே தெரியுமா ” என்று கேட்டான் ஹம்சன்.
“நல்லா தெரியும். நான் படிச்ச லாரன்ஸ் ஸ்கூல்ல தான் அவளும் படிச்சா. எனக்கு அவ ரொம்ப ஜூனியர் பா. நான் எட்டாவது படிக்கும் போது அவ மூணாவதோ நாலாவதோ படிச்சா” என்றான் பெருமையாக.
“அப்புறம் நான் தான் நீ படிக்கிற ஸ்கூல்ல சேர கோயம்புத்தூர் வந்துட்டேனே” என்றான் ரகு அசடு வழிந்தபடி.
“ஓ…” என்ற ராஜஹம்சனுக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது. கார் கல்யாண மண்டபத்துக்கு வந்ததும் இருவரும் அடுத்தடுத்த வேலைகளைச் செய்யவும் காலைச் சம்பவம் மூளையின் ஓரமாக ஒதுங்கியது.
கார் பஞ்சர் ஒட்டியபின் வீட்டுக்கு வந்த ஜெகநாதன் மிகுந்த களைப்பாகிப் போனார். சோர்வான அவரைப் பார்த்த கனகவல்லி “போன வாரம் முழுக்க உடம்பு சுகம் இல்லாமல் இருந்தீங்க. இன்னைக்கு காலையில நடந்த நிகழ்ச்சியில என் ஈரக்குலையே நடுங்கி போச்சுங்க. இந்த வாரத்துல நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரலாம். மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றார் ஆதரவாக.
“ஆமா, இன்னும் இரண்டு நாளில் மதுவுக்கு காலேஜ் திறந்துடுவாங்க இல்ல” என்றார் ஜகன்நாதன் யோசனையாக.
நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் வேறு எதுவோ பேசுறாரே என நினைத்த கனகவல்லி, “ஆமாங்க” என்று கூறிவிட்டு “ஏங்க இன்னைக்கு மாலைல ஒரு ரிசப்ஷன் வேற போகணும்” என்றாள் தொடர்ந்து.
“ஓ.. ராஜன் ஸ்பேர் பார்ட்ஸ் வீட்டு கல்யாணம் இல்ல. நீ வேணா போயிட்டு வா கனகு நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கணும் அப்பதான் நாளையிலிருந்து ரொட்டீன் ஒர்க் பார்க்க முடியும்” என்றவர் பெட்ரூமுக்கு சென்று படுத்துக் கொண்டார்.
நான் மட்டும் எப்படி போறது என்று நினைத்த கனகவல்லி இல்லைனா பிள்ளைகளை கூட்டிட்டு போயிட்டு வந்துட வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டார்.
மாலையில் மதுவந்தியையும் உதயனையும் கெஞ்சி கூத்தாடி அந்த திருமண வரவேற்புக்கு செல்ல சம்மதம் வாங்கினார் கனகா. கொஞ்சம் கிராண்டாவே டிரஸ் செய்துக்கோ என்ற தன் அம்மாவை முறைத்தாள் மது.
“இடத்துக்கு தகுந்த மாதிரி நாமும் கொஞ்சம் மாறிக்கணும் மதும்மா” என்றார் கனகா.
பேபி பிங்க்கில் இலைப்பச்சை பார்டருடன் முழுவதும் ஆரி ஒர்க் செய்திருந்த ஷிபான் புடவையும் அதன் மேட்சாக ஆரிவர்க்குடன் கிரீன் ஜாக்கெட்டும், கழுத்திற்கு எமரால்டும் ரூபியும் பதித்த நெக்லஸும் ரூபி கல் வளையல்களையும் எடுத்து வைத்திருந்தார் கனகா.
“அம்மா சாரியா கட்டணும் சுடிதார் போதுமே” என்று கெஞ்சிவாறு கேட்ட மதுவிடம் “அம்மா சொன்னா கேளு தங்கம்” என்று கூறி செல்லமாக அவள் கன்னத்தில் தட்டி சென்றார் கனகா.
மண்டபத்தில் பெண் அழைப்புக்காக அனைவரும் ரெடியாகிக் கொண்டிருந்தனர். கோவையிலிருந்து ராஜஹம்சனின் பெற்றோர் மண்டபத்திற்கு வரவும் உமையாளும் மனோகரும் அவர்களை வரவேற்றனர். அவர்களுடன் காரிலிருந்து மீனாட்சியின் அண்ணன் மகள் பிரியாவும் இறங்கவும் “அட பிரியா வா வா, எங்க அப்பா அம்மா எல்லாம்” என்று விசாரித்தாள் உமையாள்.
“வெளியூர் கல்யாணத்துக்கு எல்லாம் எங்க அண்ணி வந்திருக்காரு என் அப்பா. அதான் அத்தையோட என்னை அனுப்பி வச்சிட்டாங்க” என்றாள் பிரியா உதட்டை சுழித்த படி.
தன் பெற்றோரைப் பார்த்து அங்கு விரைந்து வந்த ராஜ ஹம்சன் பிரியாவைப் பார்த்ததும் ஐயோ இவளா என்று தயங்கி ஒரு தூண் மறைவில் நின்று கொண்டான். ஆனால் அவன் அங்கு மறைந்து நிற்பதை பார்த்த ப்ரியா ஒரே ஓட்டத்தில் அவனிடம் வந்து அவன் கைகளைப் பிடித்து தன்னோடு இணைத்துக் கொண்டு “எப்படி இருக்கீங்க ஹம்சன் நீங்க இல்லாம போர் அடிக்குது எனக்கு அங்க” என்றாள் கொஞ்சியபடி.
அவள் கைகளை மெதுவாக விலக்கி சிரித்தபடி “ப்ரியா, உனக்காக ஜெயந்தி வெயிட்டிங் அவளை போய் முதல்ல பாரு” என்று மாமன் மகளை அனுப்பினான் ஹம்சன்.
பிரியாவும் “சரி உங்களை அப்புறம் வந்து பாத்துக்கறேன் நீங்க என்னை விட்டு எங்க போயிட போறீங்க” என்று கூறியபடி சென்றாள். அவளிடமிருந்து தப்பிய உணர்வுடன் தன் பெற்றோருடன் பேச விழைந்தான் ஹம்சன்.
அவனைப் பாசத்துடன் பார்த்த மீனாட்சி “என்னப்பா கல்யாண வேலை ரொம்ப அதிகமோ” என்றாள் ஆதுரமாக.
“ஏம்மா மூணு நாளில என் தம்பி இளைச்சுட்டானா என்ன” என்று கேலியாக கேட்டாள் உமையாள்.
“அதெல்லாம் இல்ல உமை” என்று மகளை அடக்கிய மீனாட்சி, “சரி நீங்க வந்தவங்கள கவனிங்க நாங்க உள்ள போய் கொஞ்சம் ரெஃப்ரெஷ் பண்ணிக்கிறோம்” என்று கூறி உமையாளின் பெற்றோர் உள்ளே சென்றனர்.
திருமண வரவேற்புக்கு அழைக்கப்பட்டவர்கள் வர ஆரம்பித்ததால் மண்டப வாயில் சற்று கூட்டமாக இருந்தது. அந்த கூட்டத்தில் மண்டப ஒளி வெள்ளத்தில் காரில் இருந்து இறங்கியவளை பார்த்து இமைக்க மறந்தான் ராஜ ஹம்சன். உமையாளும் மனோகரனும் அப்படியே.
அவளின் கொடி உடலுக்கு அந்த பேபி பிங்க் சாரி அத்தனை பொருத்தமாய் இருந்தது. அதிக ஒப்பனை இல்லாத முகம். நீண்ட கூந்தலை தழைய வாரி பின்னல் இட்டு மல்லிகை பூ வைத்திருந்தாள்.
எளிமையான அலங்காரத்துடன் தேவதை போல் தெரிந்தாள். கேமராக்களின் பார்வைகளும் அவளையே மொய்த்துக் க்ளிக்கியது. ஹம்சன் அவளை ஆசையுடன் பார்த்த பார்வையை கண்ட மற்றொரு ஜோடி கண்களை எரிப்பது போல் பார்த்தது.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings