எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நீரஜா மிகவும் களைப்புடன் அன்று அலுவலகத்தில் இருந்து திரும்பினாள். அம்மா லட்சுமி அவளைப் பார்த்தவுடன் வேகமாக சமையல் அறைக்குள் சென்று சூடாக வெங்காய பகோடாவும் டீயும் கொண்டு வந்து டைனிங் டேபிள் மேல் வைத்து அங்கே இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.
வழக்கம்போல், நீரஜா தன் ஹேண்ட் பேகை அருகில் இருந்த சோபாவில் போட்டுவிட்டு கை கால்களைக் கழுவிக் கொண்டு, அம்மாவின் அருகில் இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்து பகோடாவை ருசி பார்க்கத் தொடங்கினாள்.
அவளுக்கிருந்த பசியில் கை கால்களை சுத்தம் செய்யாமலே கூட சாப்பிடத் தயார் தான். ஆனால் அதன் பிறகு லட்சுமி ஒரு மணிநேரம் அட்வைஸ் செய்வதைத் தாங்கிக் கொள்ள முடியாது.
அப்பா இன்னொரு பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டார். ஏதோ வம்பு வளர்த்தத்தான் அரெஸ்ட் செய்வது போல் இருவரும் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று ஊகித்துக் கொண்டாள் நீரஜா. ஆனாலும் சூடான வெங்காயப் பகோடாவில் இருந்து தன் கவனத்தை திருப்ப விரும்பவில்லை. ஆனாலும் அவர்கள் விடுவதாக இல்லை.
“நீரு, பகோடாவை சாப்பிட்டுக் கொண்டே நாங்கள் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்து கேள்” என்றாள் அம்மா. பகோடாவை மென்றுக் கொண்டே அவளை முறைத்தாள் நீரஜா.
“நீ முறைப்பதில் இருந்தே நாங்கள் சொல்ல வந்தது உனக்குப் புரிந்திருக்கும் என்று தெரிகிறது. உன் கல்யாணப் பேச்சு பேசத் தான் வந்தோம். உனக்கும் இருபத்தி நான்கு வயது நடக்கின்றது, இன்னும் காலம் தாழ்த்துவது சரியில்லை. இந்த வருடம் நிச்சயம் உன் திருமணம் முடித்து விட வேண்டும் என்று நானும் உன் அம்மாவும் விரும்புகிறோம்” என்றார் அப்பா, அவள் தலையை லேசாகத் தடவியபடி.
அப்பா, அவள் தலையையோ அல்லது முதுகையோ தடவிக் கொடுத்தால் அவள் வீழ்ந்து விடுவாள். அதற்கு மேல் ஏதும் மறுத்துப் பேச மாட்டாள், அது அவளுடைய வீக் பாயின்ட். அது அவளைப் பெற்றவர்களுக்கும் தெரியும்.
அவள் பதில் ஏதும் சொல்லாமல் அவளுடைய அப்பாவைப் பார்த்து சிரித்தாள்.
“சிரித்தால் என்ன அர்த்தம்“ என்றார் அப்பா.
”நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டாள் நீரஜா, சாப்பிட்ட பிளேட்டை ஸிங்கில் போட்டு விட்டு.
அவள் கையில் சில பேப்பர்களை கொடுத்தார் அவள் அப்பா. “உன் அறைக்குள் போனவுடனே போனை நோண்டத் தொடங்காதே. இதெல்லாம் கல்யாணத் தரகர் கொண்டுவந்து கொடுத்த மாப்பிள்ளை பையன்களின் பயோடேட்டாவும் போட்டோவும். அதை நன்றாகப் படித்துப் பார்த்து விட்டு, உன் மனதிற்கு ஒத்துக்கொள்ளும் பேப்பரை மட்டும் உன் அப்பாவிடம் கொடு“ என்றாள் அம்மா.
‘சரி’ என்ற தலையாட்டலுடன் மாடியில் தன் அறைக்குச் சென்றாள் நீரஜா. போனில் இளையராஜா சாரின் இன்னிசைப் பாடல்களைக் கேட்டுக் கொண்டு கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து தன் கையில் கொண்டு வந்திருந்த பேப்பர்களை அலசத் தொடங்கினாள். அதில் இருந்த போட்டோக்களைப் பார்த்து அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.
ஒவ்வொரு பயோடேட்டாவும் ஒவ்வொரு விதம். அமெரிக்காவும் , சைனாவும் அவர்களின் பக்கத்து வீடு போலவும், இவர்களின் ஆலோசனையுடன் தான் ஐ.டி. உலகமே இயங்குகிறது என்ற ரேஞ்சுக்கு கதை அளந்திருந்தார்கள். எல்லாவற்றையும் கழித்து விட்டு இரண்டு பேரை மட்டும் தேர்ந்தெடுத்து அந்த பேப்பர்களை அப்பாவிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.
அதில் ஒருத்தன் அமெரிக்காவில் எம்.எஸ். படித்து அங்கேயே வேலை செய்கிறான். லேப்-டாப்பில் உட்கார்ந்து வேலை செய்வது போல் போஸ் கொடுத்திருந்தான். கம்ப்யூட்டரிலியே செவ்வாய் கிரகத்திற்குப் போவது போல் அவ்வளவு சீரியஸாக இருந்தது அவன் முகம்.
இன்னொருவன் கோவையில் எம்.எஸ்.ஸி. அக்ரிகல்ச்சர் படித்துவிட்டு, தமிழ் நாடு அரசின் விவசாய இலாக்காவில் ரிசர்ச் சென்டரில் வேலை செய்து கொண்டு, அவனுடைய சொந்த நிலத்தின் விவசாயத்தையும் மற்ற ஆட்களின் உதவியோடு செய்து கொண்டிருந்தான்.
அவன் மடித்து கட்டிய வேட்டியுடன் ஒரு டிராக்டரின் மேல் கை வைத்துப் போட்டோவிற்கு போஸ் கொடுத்திருந்தான். அவன் முகத்தில் ஏனோ ஒரு குறும்பான சிரிப்பு. ஒரு தலப்பாகையும் கட்டியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் நீரஜா.
நீரஜாவின் அம்மாவிற்கு அமெரிக்க மாப்பிள்ளையை மிகவும் பிடித்து விட்டது. அப்பா எப்போதும் அவர் கருத்தை அவ்வளவு சுலபமாக தெரிவிக்க மாட்டார். இரண்டு மாப்பிள்ளைகளின் ஜாதகப் பொருத்தம் ஏற்கனவே பார்க்கப் பட்டது.
ஒருவர் பின் ஒருவராகப் பெண் பார்க்க வரச் சொல்லலாம் என்றார் அப்பா. முதலில் அமெரிக்க மாப்பிள்ளையை வரவழைக்க வேண்டும் என்று அம்மா பிடிவாதமாய் நின்றாள்.
“நீ என்னம்மா சொல்கிறாய்?” என்றார் அப்பா.
“இரண்டு பேரையும் ஒன்றாகக் கூப்பிட்டு ‘சாலமன் பாப்பையா’ பட்டி மன்றம் போல் அமெரிக்காவா, இந்தியாவா என்று பட்டி மன்றம் நடத்தி விடலாம்“ என்றாள் நீரஜா. அப்பா சிரித்தார்.
“வாய் கொழுப்பு ஜாஸ்தி உனக்கு“ என்று பல்லைக் கடித்தாள் அம்மா.
வீடு அமர்க்களப்பட்டது. அமெரிக்க வரனுக்கு ஹோட்டலில் இருந்து பலகாரம் தருவிக்கப்பட்டால் அலர்ஜி ஆகி விடும் என்று வீட்டிலேயே ஆள் வைத்து ஸ்வீட், காரம் எல்லாம் செய்தாள்.
“பெண் பார்க்கத்தானே வருகிறார்கள், அதற்கு ஏன் இத்தனை அமர்க்களம் “ என்று அப்பா கூடக் கடிந்து கொண்டார். எப்படியாவது நீரஜாவை அமெரிக்க மாப்பிள்ளைக்கு கட்டி வைத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தாள் அம்மா.
அமெரிக்க வரன் நிதிஷும் சுற்றம் சூழ பெண் பார்க்க வந்தான். வரும் போதே அமெரிக்காவின் ஏகபோக வாரிசு அவன்தான் என்று நடந்துகொண்டான். ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸில் வேலை செய்வதால், நான்கு பேர் செய்யும் வேலையை அவன் ஒருவனே செய்வதால் நான்கு பேருக்கு கொடுக்கும் சம்பளம் இவனுக்கு வருகிறது என்றும் பெருமை பொங்கக் கூறினான்.
இவன் பெருமையை பறைசாற்றவே பெண் பார்க்க வந்தது போல் இருந்தது. எல்லாக் கதையையும் பேசிவிட்டு, அவர்கள் டிமாண்டையும் தெரிவித்து விட்டு, ஜட்ஜ்மென்ட் போய் தெரிவிப்பதாகக் கூறிவிட்டுக் கிளம்பினார்கள்.
அம்மாவிற்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. அப்பாவோ, இதுவும் கடந்து போகும் என்று அமைதியாக இருந்தார்.
அடுத்தாற்போல் விவசாய அதிகாரி பரத் வந்தான். அவனுக்கு நீரஜாவை மிகவும் பிடிக்கிறது என்று எல்லோர் எதிரிலும் சொன்னான். வரதட்சணை பற்றி பேச்சே எடுக்கவில்லை.
நீரஜாவின் அப்பா கேட்டதற்கு, “எனக்கு கை நிறைய வருமானம் வருகிறது. என் நிலத்தில் கிடைக்கும் வருமானமே அதிகம். அதற்கே நிறைய வருமான வரி கட்டவேண்டி இருக்கிறது. என் வயலில் நிறைய பேருக்கு வேலை கொடுக்கிறேன். எனக்கு நீரஜா மட்டும் போதும், எந்த வரதட்சணையும் வேண்டாம். யோசித்து உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்“ என்று கிளம்பி விட்டான்.
இரவு டின்னர் சாப்பிடும் போது, ”நீரஜா உன் முடிவு என்னம்மா?” என்றார் அப்பா.
“நீங்கள் என்னப்பா சொல்கிறீர்கள்?”
“எனக்கு என் மகள் அமெரிக்கா போக வேண்டும் என்று ஆசை, ஆனால் இந்த அமெரிக்கா வரன் வேண்டாம். நீ சொல்லுடா கண்ணம்மா“ என்றார் அப்பா.
“நாலு பேர் வேலையை பறிக்கும் ஆர்ட்டிபிஷியல் இன்ட்டலிஜன்ஸ் எனக்கு வேண்டாம். நிறைய பேருக்கு வேலை கொடுக்கும் விவசாயிதான் எனக்கு பிடிக்கிறது. கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி நல்ல விவசாயி” என்று பாடி தன் முடிவைத் தெரிவிதாள் நீரஜா.
எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)




GIPHY App Key not set. Please check settings