எழுத்தாளர் குமார் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அப்பா ! தினசரி பத்தாயிரம் அடிகள் நடங்க. அதுக்குத்தான் ஸ்மார்ட் வாட்ச். வாரத்தில நாலு நாட்களாவது பண்ணிடுங்க… ஒரே மூச்சில முடியலையா… காலையில பாதி.. மீதி சாயந்திரம்னு வச்சுக்குங்க..
அமேசான் அனுப்பித்த உபகரணத்தை என் மணிக்கட்டில் மாட்டிவிட்ட பையனின் பரிந்துரை. டிவி ரிமோட்டும் கையுமாகவே இருக்கும் என்னை ஓய்வு காலத்திற்கு தயார் செய்கிறான் என்பது புரிந்தது. ஸ்மார்ட் வாட்ச் ஒரு உந்துவிசைதான். சந்தேகமில்லை. அதனுடன் நடந்தால் ஒரு களிப்பு!.
பெரிய காலனி. பெட்டி பெட்டியாய் வீடுகள். மண், நீர்வளங்களால் செம்பருத்தி, ரோஜா என பூச்செடிகள். நாலு ரவுண்ட் வந்தால் எட்டாயிரம் அடிகள் சொச்சம்….. மீதி வீட்டுக்குள் ஆகலாம்..
அக்கம் பக்கத்தில அதிகம் தெரியாது.. ஆனால் நடைப்பயிற்சியில் புன்னகைத்துக் கொண்டார்கள்; ‘ குட் மார்னிங் ‘ பரிமாற்றமும் நடந்தது. நடைப்பயிற்சி சமூக முன்னேற்றத்தையும் தருகிறதோ…?
யோசித்தபடி நடந்தபோது அந்த பெரியவரை கவனித்தேன். காலனியின் கோவில் வளாகத்தில் பார்த்த ஞாபகம். எழுபத்தைந்தைத் தொட்ட பிராயம். சற்றே குனிந்த முதுகு.. ஆனால் கூரிய பார்வை. தனியாகத்தான் வருவார்.
ஒரு கையில் பூக்குடலை ! மறு கையில் பேப்பரில் சுற்றி எதையோ எடுத்து வந்திருந்தார். பெஞ்சில் அமர்ந்தார். சுற்றி வைத்திருந்த பேப்பரைத் திறந்தார். ரொட்டி வெளிப்பட்டது. அதை பெஞ்சுக்கு அடியில் ஒடுங்கியிருந்த நாய்க்கு அளித்தார். நாய் நொண்டுவது தெரிந்தது.
நாய்க்கும் அந்நேரத்தில் அவர் வருவார் என்று புரிந்திருந்தது.. அவரைக் கண்டதும் அதனிடம் ஒரு சிலிர்ப்பு ! அவருக்கும் அந்த ஜீவன் இருப்பிடம் தெரிந்திருந்தது…
ஏனோ அவரை மேலும் கவனிக்கத் தோன்றியது. தள்ளியிருந்த பெஞ்சில் அமர்ந்தபடி அவர் பக்கமே பார்வையைத் திருப்பியிருந்தேன்.
நாய் உண்டு முடித்ததும் எழுந்தார். பூக்குடலையுடன் பூச்செடிகள் முன்னால் நின்றார். அவர் பார்வை செடியின் அடியிலேயே பதிந்திருந்தது. உதிர்ந்த மலர்களை மட்டும் சேகரித்தார். மண் பதிந்திருந்தால் அதை கவனமாக நீக்கினார். பின்னர் மலர்களை குடலையில் வைத்தார். ஆச்சரியமாக இருந்தது.
அவர் கவனம் செடியின் மேற்புறம் எழவேயில்லை. இத்தனைக்கும் செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்கின. பெரியவர் ஏறெடுத்தே பார்க்கவில்லை. காலனியின் பூங்கா பொதுச் சொத்து. மலர்களைப் பறித்தால் எவரும் எதுவும் சொல்லப் போவதில்லை. மற்ற முதியவர்கள் சில வீடுகளிலிருந்து காம்பவுண்ட் சுவருக்கு மேல் எட்டிப் பார்க்கும் செடிகளிடமிருந்தும் மலர்களைக் கொய்து கொண்டுதான் இருந்தனர். வீட்டுக்காரர்கள் முணுமுணுத்ததில்லை. பின் ஏன் இந்த முதியவர் மட்டும் இப்படி..?
சில சமயங்களில் காலனிக்குள்ளும் கீழே விழுந்த மலர்களை மட்டுமே அவர் கோது நீக்கி பொறுக்கிக் கொண்டார். வீடுகளின் சுற்றுச்சுவர்களின் வெளிப்புறத்திலிருந்து மட்டுமே எடுத்தார். கீழே விழுந்திருந்த பூக்களில் மட்டுமே அவர் கவனம் இருந்தது. ! சுத்தம் செய்து குடலையில் இட்டுக்கொண்டார். பூஜை செய்யற வழக்கமோ.. ?
பூஜைக்கு இந்த மலர்களை உபயோகிக்கலாமா…? மற்ற மூத்த குடிமக்கள் செடியிலிருந்துதானே பறிக்கிறார்கள். என் ஆவல் அதிகரித்தது. மறுநாள் அவரையே கேட்கலாம் என முடிவு செய்தேன்.. காரணம் என்ன…? யோசித்தபடியே உறக்கத்தில் ஆழ்ந்தேன்.
மறுநாள் முதலில் அந்தப் பெரியவர் தென்படவில்லை.. இரண்டாம் சுற்றில் ஒரு காம்பவுண்ட் சுவர் அருகில் குடலையுடன் அந்த முதியவர் தெரிந்தார். தும்பைப் போன்ற வெள்ளைச் சட்டை ! கீழ்ப்புறம் முழுக்கால் சட்டை.. கீழே கிடந்த மலர்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்.
குட்மார்னிங் !
ஆச்சரியத்துடன் நிமிர்ந்தார். அவரைச் சட்டை செய்யாதவர்களே அதிகம் எனப் புரிந்தது.
பூஜைக்காகத்தான் இந்த பூக்கள நீங்க சேகரிக்கிறீங்களா..?
கேள்வியின் உள் அர்த்தம் அவருக்குப் புரிந்தது.
ஆமாம் ! ஆனா வீட்ல கடவுளுக்கு என்னோட பிரத்யேக அர்பணிப்பா தர நான் பயன்படுத்தறேன்..
அதைச் சொல்லும்போது அவரிடம் ஒரு மெய் மறப்பு ! ஒவ்வொரு வார்த்தைகளையும் எடைபோட்டு பேசினார்..
ஆச்சரியமாக இருந்தது. அடுத்த கேள்வியும் தயாராக இருந்தது…
மத்தவங்க செடியிலிருந்துதான் பறிக்கிறாங்க… நீங்க மட்டும் ஏன் கீழ விழுந்த பூக்களை மட்டும் எடுத்துக்கறீங்க…?
நானும் கவனிச்சிருக்கேன்.. செடியிலிருந்து மொட்டுக்களை மட்டும் பறிக்கிறாங்க…. மொட்டுக்கள் செடியிலேயே அழகான மலர்களா மாறிடுங்கறது அவங்க நினைவில இருக்கிறதில்ல.. சிலர் மலர்ந்த பூக்களை மட்டும் கொய்யறாங்க.. பூக்கள் மணம் வீசி காலனியை ரம்மியமா ஆக்கிடுங்கறதை மறந்துடறாங்க. மணம் வீசிற பூக்கள் அத்தனையையும் சிலர் பறிச்சுடறாங்க… செடிகள் மொட்டையா நிற்கற கவலை அவங்களுக்கு இல்லை.
ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு பிடிச்சதை, அவங்களுக்கு வேண்டியதை, அவங்களுக்கு அழகா இருக்கறதை மட்டும் எடுத்துக்கறாங்க.. ஆனா செடிகளோட அழகு போயிடறது….
சில நொடிகள் மௌனம். சீராக மூச்சு விட்டார்.. குடலையை மற்றொரு கைக்கு மாற்றிக்கொண்டார். என் தோளில் கை வைத்தபடி மெதுவாக நடக்கலானார். நிமிர்ந்து என் கண்களை அவ்வப்போது பார்த்தபடி பேச்சைத் தொடர்ந்தார்.
ஓவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில ஒரு குறிக்கோள் இருக்கும் ; இல்லாட்டி வாழ்க்கைக்கு அர்த்தமில்லை.. பூக்களுக்கும் உயிர் இருக்கு. பூக்களுக்கும் குறிக்கோள் இருக்கலாம்.. அதை வெளிப்படுத்த பூக்களால முடியாது.. நாமதான் புரிஞ்சுக்கனும்.. இல்லையா..?
நான் ஆமோதிப்பதற்கு தலையை அசைத்தேன். ஒன்றும் புரியவில்லை.
இறுதி காலத்தில இறைவனோட ஒதுங்கி இருக்கனும்னு நமக்கு ஆசை !. உதிர்ந்த பூக்களுக்கும் அந்த அந்தஸ்தை கொடுக்கனுமா இல்லையா..? கீழ விழுந்தது அந்த மலர்களோட தப்பு இல்ல. அது அந்த பூக்களோட கடைசி நிலை ! ஆனா அந்த பூக்களை உரிய இடத்தில சேர்க்கனும்.. அந்த சின்ன காரியத்தைத்தான் நான் தினம் செய்யறேன்.. அதனாலதான் உதிர்ந்த பூக்களை ஆனால் கருகாதவைகளை மட்டும் எடுத்துக்கறேன்.. பூஜையில தட்டு முன்னால வைக்கிறேன்.. வெறும் ஒரு நாளைக்காவே இருக்கட்டும்.. ஆனா அந்த பூக்களுக்கு உரிய இடம் தரதில எனக்கு ஒரு மகிழ்ச்சி !
நம்மைச் சுத்தி அழகானவங்க, வசதியானவங்க மட்டும்தான் இருக்கனும்னு விரும்பறோம். அந்தஸ்துக்கு குறைவா இருக்கறவங்களோட பழக தயங்கறோம்.. ஆனா உண்மையான திருப்தி எளியவர்களோட வாழ்க்கையில ஒரு நல்ல நிலைமையைக் கிடைக்க வழி செய்யும்போதுதான் நமக்குக் கிடைக்கறது. அது மனுஷங்களாகத்தான் இருக்கனும்னு அவசியமில்லை. மிருகங்களாக இருக்கலாம்.. செடிகள், கொடிகள், மரங்கள், பூக்கள்ன்னு கூட இருக்கலாம்… இல்லையா..?
இதைச் செய்யறப்போ எனக்குக் கிடைக்கற நிம்மதிக்கும் பரவசத்துக்கும் அளவேயில்ல.. எனக்கு வயசாயிடுச்சு ! மத்தவங்களுக்கு அதிகம் உதவ முடியாது.. ஆனா இந்த பூக்களோட முக்திக்கு வழி பண்ண முடியும்.
சில நொடிகள் தாமதித்தார். மேலும் ஏதோ சொல்ல விரும்புவது தெரிந்தது.
மூத்த குடிமக்களும் உதிர்ந்த மலர்கள் மாதிரிதான்.. அதிக வயசை எட்டறது இயற்கைதானே ? உதிர்ந்த பூக்களுக்கும் மரியாதை தர இந்த சமுதாயம் நெனைச்சா வயது முதிர்ந்தவங்களோட இறுதிக் காலமும் அமைதியா ஒரு அர்த்தத்தோட முடியும். இல்லையா..?
சொல்லிவிட்டு ஒரு அர்த்தபுஷ்டியுடன் என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
ஒரு சின்ன அனுபவம்… மனிதர்களில் ஒரு வினோதம்… ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான புதுப் புது அர்த்தங்கள்.. நெகிழ்ச்சியாக இருந்தது. கை கூப்பிவிட்டு நடையைத் தொடர்ந்தேன்.
மனதில் வெவ்வேறு எண்ணங்கள்.. வழியில் ஒரு வீட்டின் அருகில் உதிர்ந்த செம்பருத்தி பூக்கள்.. தினசரி பார்க்கும் காட்சிதான். அவைகள் மேல் யாராவது பாதத்தை வைத்து விட்டால்… நினைக்கவே கஷ்டமாக இருந்தது.
பொறுக்கக் குனிந்தேன்.
உதிர்ந்த மலர்களை இறைவனுக்குப் படைக்கலாமா…? யாரோ கேட்பது போன்ற பிரமை !
சுற்றும் முற்றும் பார்த்தேன்… ஒருவருமில்லை.
இறைவன் அர்ப்பணிப்பையும் உணர்ச்சிகளையும் தான் பார்க்கிறான்.. தயங்காம எடுத்துக்கோ…
சொர்க்கத்திலிருந்து தாயாரே பேசுவதுபோல் இருந்தது.
பால் வாங்க இல்லத்தரசி ஒரு தோள் பையை மாட்டிவிட்டிருந்தாள். அதில் பூக்களை ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டேன்.. இதயத்தில் ஒரு துடிப்பு.. ஒரு அலாதி பிரேமை… உடல் முழுவதும் பரவியது.
அந்த பூக்களுடன் நடக்கும்போது பெருமையாக இருந்தது. ஒரு உயிரைக் காப்பாற்றிய எண்ணம் ! பெரும் இடர்பாடுகளைக் கடந்து ஒரு ஜீவனை முக்தி அடைய வைத்த உணர்வு!.
நீராடியதும் பூக்களை ஸ்வாமி படத்தின் முன் வைத்தேன். ஒரு நாளைக்காவது உதிர்ந்த மலர்கள் அவைகளுக்குத் தகுதியான இடத்தை நிரப்பட்டுமே !
எழுத்தாளர் குமார் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings