உலகத்தில் எங்கேணும் ஓரிடத்தில்
உயிர்மாய்க்கும் போர்நாளும் நடக்கிறது
பலம்தன்னை வல்லரசு நாடுகள்தாம்
பார்முன்னே காட்டுதற்கே இப்போர்கள் !
குலமதத்துக் காழ்புணர்வு பகையாகிக்
குலமழிக்கும் போர்களின்று நடக்கிறது
புலம்பிடிக்கும் ஆசையினால் எல்லைதாண்டிப்
புரிகின்ற போரெல்லாம் உலகழிவே !
அறிவியலின் வளர்ச்சியென்று நாள்தோறும்
அழிவிற்கே வித்துகளை இடுகின்றோம்
பொறியியலில் அணுக்குண்டைச் செய்வித்துப்
போட்டுலகைச் சாம்பலாக்கி எரிக்கின்றோம் !
வெறியாகத் தொழிற்சாலை கட்டுவித்து
வேகமாகக் காற்றுதனைக் கெடுக்கின்றோம்
அறிவின்று வளர்ந்ததுபோல் உலகத்தில்
ஆபத்தும் வளர்ந்துளது பலமடங்காய் !
புயல்காற்று கடல்சீற்றம் கரைதாண்டிப்
பூமரங்கள் கட்டடங்கள் சாய்ப்பதுவும்
நயமான ஓசோனைத் துளையாக்கி
ஞாலத்தை வெப்பத்துள் தள்ளுவதும்
இயற்கையினை அழிப்பதனால் வருவதுதான்
இடிகின்ற நிலச்சரிவு பூகம்பம்
வயல்ஆறு மலைகாட்டை அழிப்பதனால்
வாழுலகம் அழிகிறது நாளுமிங்கே !
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings