in ,

மனதில் உறுதி வேண்டும் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சத்யா எங்கே போவதென்று தெரியாமல் திகைத்து சில நிமிடங்கள் யோசித்து, கிளம்புவதற்குத் தயாராக இருந்த கும்பகோணம் பஸ்ஸில் ஏறிக்கொண்டாள்.  அவளுக்கு சென்னை செங்கல்பட்டைக் கடந்து எந்த ஊரும் தெரியாது. 

சிறு வயதிலேயே அம்மாவை இழந்தவள். அப்பா அவளைத் தனது தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு துபாய் சென்று சம்பாதிக்க ஆரம்பித்தார். அங்கிருந்து கணிசமான தொகையும் அனுப்பி அவளை  நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

சத்யாவின் அப்பா ராமநாதன் அனுப்பும் பணத்தில்தான், அவர் தம்பியின் குடும்பம் ஓடியது. சித்தியின் கழுத்திலும், கைகளிலும் தங்க நகைகள் புதியதாக மின்னின. 

சத்யாவிற்கு அவள் அப்பா எவ்வளவு பணம் அனுப்புகிறார் என்று தெரியாது. ஏன், அவள் அப்பா அனுப்பும் பணத்தில்தான் அவளுக்கு சாப்பாடும், நல்ல ஆடைகளும் கிடைக்கின்றன என்று கூடத் தெரியாது. 

அவளுடைய சித்தி சரஸ்வதி எப்போதும், “உன் சித்தப்பா அரும்பாடு பட்டு சம்பாதித்து உனக்கு எவ்வளவு சிறப்பாக செய்கிறார் பார்! அந்த நன்றியை நீ என்றும் மறக்கக் கூடாது“ என்று அறிவுரை கூறுவாள். 

சத்யா நன்றாகப் படித்து அண்ணா யூனிவர்சிட்டியில் ஆர்க்கிடெக்ட் இன்ஜினீயரிங் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள். 

ஒரு நாள் துபாயில் இருந்து ஒரு தந்தி வந்தது. அதில் ரோட் ஆக்ஸிடென்டில் அவள் தந்தை இறந்து விட்டார் என்றும்… அவருடைய சம்பளம் உடமைகள் மற்ற சேமிப்புகள் எல்லாவற்றையும் அவருடைய வங்கியில் சேர்த்து விட்டதாகவும், அதை அவருடைய வாரிசுதாரர் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தகவல் வந்தது. 

ஏதேதோ படிவங்களிலும் சில வெற்றுத் தாள்களிலும் சத்யாவின் கையெழுத்தை வாங்கிக் கொண்டு அங்கு வேலை செய்யும் ஒருவரின் துணையோடு சித்தப்பா துபாய் போய் ஒரு மாதம் கழித்துத் திரும்பி வந்தார். 

“அவ்வளவு தூரம் போனதே தண்டம். ‘சுண்டைக்காய் கால் பணம். சுமை கூலி முக்கால் பணம்‘ என்ற கதைதான்“ என்று புலம்பிக் கொண்டிருந்தாள் சித்தி. 

ஒரு நாள் ஆவலை அடக்க முடியாமல் சத்யா அவள் சித்தப்பாவிடம், அவளுடைய அப்பாவின் சம்பளம் மற்றும் சேமிப்பு பற்றி பொதுவாக விசாரித்தாள். அதற்கே கோபம் கொண்ட அவள் சித்தி வானத்திற்கும் பூமிக்குமாய் குதித்தாள் .

இத்தனை கலாட்டாக்களின் இடையில் சத்யா இஞ்ஜினீயரிங் படிப்பின் இறுதித் தேர்வும் எழுதி முடித்தாள். ஆன்லைனில் வேலைக்கும் விண்ணப்பித்துக் கொண்டும் இருந்தாள்.

அப்போது தான் சித்தியின் அண்ணா பையன் ரமேஷுக்கு சத்யாவை பெண் கேட்டு, சித்தியின் உறவினர்கள் இவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். சித்தி அவளுடைய உறவினர்கள் வந்தாலே அந்தரத்தில்தான் நடப்பாள். இப்போது கேட்கவே வேண்டாம். ஒரே சந்தோஷம்தான், விருந்து தடபுடல்தான்.

சித்திக்கு ஒரே சந்தோஷம். அண்ணாவின் ஆசையை நிறைவேற்றவதும், சத்யாவை வீட்டை விரட்டுவதும் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று நினைத்தாள். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் கடவுளுக்கு என்ன வேலை? 

சத்யாவிற்கு அந்த கூட்டத்தைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. இருந்தாலும் சித்தியின் வாக்கிற்கு கட்டுப்பட்டு அலங்காரம் செய்து கொண்டு அவர்கள் எதிரில் நின்றாள். அதுவரையில் அமைதியாக இருந்த சித்தப்பா புயலாக சீறினார்.

“யாரைக் கேட்டு  நீ இந்த ஏற்பாடுகளை செய்தாய்? ரமேஷுக்கு ஊரறிய திருமணம் நடைபெற்றது. திருமணமான மூன்றாம் மாத்த்தில் அந்தப் பெண் இறந்து விட்டாள். இயற்கையான மரணமா இல்லை கொலையா என்ற சந்தேகம் இன்னும் நீங்கவில்லை. எவ்வளவு தைரியம் இருந்தால் என் வீட்டில் வந்து பெண் கேட்பீர்கள்?“ என்று பயங்கரமாக சப்தம் போட்டு எல்லோரையும் விரட்டி விட்டார்.

இது நாள்வரை தன் பேச்சிற்கு மறு பேச்சு பேசாத கணவரின் கோபம் முதலில் சித்தியை பயமுறுத்தியது. பிறகு உள்நாட்டுப் போர் வெடித்தது. தினம் ஒரு சண்டை.              

“சத்யாவை நாம் மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டுமா? அவளுக்கு ஒரு கல்யாணம் செய்ய வேண்டுமென்றால் எவ்வளவு பணம் செலவாகும்.  அதனால் அவள் இரண்டு மாதத்திற்குள் ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டு வீட்டை விட்டுப் போக வேண்டும், இல்லையென்றால் என் அண்ணாவின் பையன ரமேஷைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்“ என்று நிபந்தனை விதித்தாள்.

அப்போது தான் அவள் சித்தப்பா சித்திக்குத் தெரியாமல் ரகசியமாக பத்தாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்து, “இங்கேயிருந்தால் உன் சித்தி உன்னை யாருக்காவது விற்று விடுவாள்.  அதனால் நீ இந்த பணத்தை வைத்துக் கொண்டு, உன் மனதிற்கு நம்பிக்கையான ஒரு சிநேகிதி மூலம் ஒரு ஒர்க்கிங் உமன் ஹாஸ்டலில் தங்கி நல்ல வேலையில் சேர்ந்து கொள்“ என்றார்.

அதனால் தான் சத்யா இப்போது தன் நீண்டநாளைய சிநேகிதி நிஷாவைத் தேடி கும்பகோணம் செல்கின்றாள். நிஷாவிடம் தன் நிலையை எடுத்துச் சொல்லி, முதலில் ஒர்க்கிங் வுமன்’ஸ் ஹாஸ்டலில் ஒரு இடமும், தன் படிப்பிற்கேற்றபடி ஏதாவது ஒரு வேலையும்  தேடித் தரமுடியுமா என்று கேட்டிருந்தாள்.

நிஷாவிற்கு இவள் நிலமை நன்றாகத் தெரியும். அதனால், “நீ உடனே கிளம்பி வா, மற்றதெல்லாம் நேரில் இங்கு வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று தைரியம் கொடுத்தாள்.

சத்யாவும் ஒரு பக்கம் பயத்தோடும், வேறு வழியில்லாமலும்  கும்பகோணம் வந்து சேர்ந்து விட்டாள். ஸ்டேஷனுக்கு நிஷா வந்திருந்தாள். அவளுடைய அப்பா அந்த ஊர் முனிசிபாலிட்டியில் மேனேஜராகவும், அம்மா அங்கிருக்கும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகவும் பணிபுரிந்து வந்தனர். இவள் ஒரே பெண்ணானதால், அவளுடைய விருப்பத்திற்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை. 

ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்த பிறகு தான் ஒர்க்கிங் வுமன்’ஸ் ஹாஸ்டலில் இடம் கிடைக்கும் என்று நிஷா சொல்ல, சத்யா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள்.

நிஷாவின் அம்மாவும் அப்பாவும் வேலை கிடைக்கும் வரை சத்யா அவர்கள் வீட்டில் தான் தங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள் . இந்த காலத்தில், முன் அனுபவம் இல்லாமல் வேலை கிடைப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை என்று நினைத்தாள். விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற பழமொழியும் ஞாபகம் வந்தது. வீட்டை விட்டு வந்தது தவறோ என்று பயந்தாள்.

ஒருநாள்  மாலை குழப்பமான மனநிலையில் மொட்டை மாடியில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா. தெளிவில்லாத அவள் உள்ளத்தைப் போலவே தெளிவில்லாத வடிவங்களில் மேகங்கள். விதி ஏன் தன் வாழ்க்கையில் இப்படி விளையாடுகின்றது என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

அப்போது பின்னால் இருந்து, ‘மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்’ என்று இனிமையான குரலில் பாடியபடி நிஷாவின்  அம்மா.

அவள் கையில் ஒரு கப் காபி. அதை சத்யாவிடம் கொடுத்து, “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று மனோதைரியத்துடன் வாழ வேண்டும் சத்யா” என்றாள். 

“வருங்காலத்தைப் பற்றி எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல் எப்படி அம்மா தைரியமாக இருக்க முடியும்?”

“உங்கள் சித்தி அழியக்கூடிய பணத்தைத்தான் கொள்ளையடித்து இருக்கிறாள்.  ஆனால் உன் அப்பா யாராலும் கொள்ளையடிக்க முடியாத தொழிற்கல்வி என்னும் கல்விச் செல்வத்தைக் கொடுத்து இருக்கிறார். நீயும் நிஷாவும் மேலும் சில நண்பர்களும் சேர்ந்து ஒரு கம்பெனி ஆரம்பித்து பலருக்கு வேலை கொடுக்க வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள். முயற்சியும் கடின உழைப்பும் நிச்சயம் வெற்றி தரும்” என்று முடித்தார் அந்த தாய். 

அவர் வார்த்தைகளே பெரிய உந்துதலாகவும் சக்தியாகவும் இருந்தது.  சக்தி என்று அதனால்தான் பெண்மைக்குப் பெயர் போலும்.

அன்று இரவு டின்னருக்குப் பின் எல்லோரும் மொட்டை மாடியில் கொஞ்சநேரம் உட்கார்ந்து பேசுவது வழக்கம். அப்படிப் பேசும்போது சத்யா, நிஷாவின் அம்மா கூறியதை அங்கு கூறினாள்.

“ஆன்ட்டி சொல்வது மிகவும் சரி என்று நான் நினைக்கிறேன். நான் இன்னும் எத்தனை நாட்களுக்கு சாப்பிடுவதும் தூங்குவதுமாய் உங்களுக்கு பாரமாக இருக்க முடியும்? நிஷா இங்கே உன் நண்பர்கள் ஆர்க்கிடெக்ட் படித்திருந்தால் அவர்களுடன் சேர்ந்து ஒரு கம்பெனி தொடங்கலாமா?” என்றாள் ஆர்வத்துடன்.

“சத்யா, முதலில் ’பாரமாக இருக்கிறேன்’ என்றெல்லாம் உளராதே. அம்மாவும் நீயும் நன்றாகவே யோசித்திருக்கிறீர்கள். என் அப்பாவின் நண்பர் மகன் சதீஷ் என்னுடைய ஹைஸ்கூல் நண்பன்தான். கோயம்பத்தூர் ஜி.சி.டி.யில் படித்தவன், நேர்மையானவன், நல்லவன். வேலையில்லாமல்தான் சுற்றிக் கொண்டு தினம் தினம் அப்பாவோடு நூறு சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறான். அவன் மட்டும் போதும். நாளை அவனை இங்கு வரச்சொல்கிறேன்” என்றாள் நிஷா உற்சாகமாக.

நிஷாவின் அப்பா, “எனக்கும் சில பிளேட் (flat) பிரமோட்டர்ஸ் தெரியும். வரி நிர்ணயம் செய்வதற்காக என் அலுவலகம் வருவார்கள். அவர்களிடம் உங்களை அறிமுகப் படுத்துகிறேன். அதன் பிறகு மகளே உன் சமத்து” என்று சிரித்தார். அவருக்குத் தெரியும், இந்த காலத்துப் பெண்கள் கோடு போட்டால் ரோடே போட்டு விடுவார்கள் என்று.

அடுத்த நாள் சதீஷ் இவர்களைத் தேடி வந்தான். அவன் இவர்கள் இருவரையும் விட வேகமாக இருந்தான். சிவசக்தி ஆர்க்கிடெக்ட் என்று கம்பெனிக்குப் பெயர் சூட்டி கம்பெனி ஆக்ட்டிலும் ரெஜிஸ்டர் செய்து விட்டார்கள். நிஷாவின் அப்பா இவர்களை பில்டிங் பிரமோட்டர்ஸுக்கு அனுமதி செய்து வைக்க, நிறைய ஆர்டர்கள் வந்தன. 

சிறிய  இடத்தையும் இன்டீரியர் டெகரேஷன் மூலம் பெரியது போல தெரியவும் செய்தனர். ஒரு பெரிய  ஹாலில் மத்தியில் ஒரு பிரெஞ்சு டோர் வைத்து தேவைப்படும் போது ஒரு அறையாகவும் உபயோகம் செய்து கொள்ளவும் வடிவமைத்தனர். சுவற்றில் நிறைய அலமாரிகள் வைத்து எல்லாப் பொருட்களும் உள்ளுக்குள் அடங்கும்படி டிசைன் செய்தனர். 

சிறிது சிறிதாக அந்த கம்பெனி புகழ் திருச்சி, தஞ்சாவூர் போன்ற பக்கத்து ஊர்களிலும் பரவியது. இரண்டு வருடங்களில் தமிழ்நாட்டின் சிறந்த ஆர்க்கிடெக்ட் என்ற பரிசும் பெற்றது. 

ஒரு நாள் சத்யாவின் சித்தப்பா, அவர் மனைவியுடன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

“போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். மனதில் உறுதி வேண்டும் பெண்ணே” என்று நிஷாவின் அம்மா தனக்கே உரிய பாணியில் பாடி, சத்யாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். 

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்      

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காலச்சக்கரம் (சிறுகதை) – சியாமளா வெங்கட்ராமன்