in , ,

பீனிக்ஸ் பறவைகள் ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த கவிதாவை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் தாய் அம்பிகா.

சாயம்போன சல்வார் கமீஸ், கழுத்தில் ஒரு முத்துமாலை, இடது கையில் ஒரு கறுப்பு லெதர் ஸ்ட்ராப்புடன் ஒரு மெரூன் கலர் முக்கோண வடிவ வாட்ச். சுருண்டு நீண்ட அட்ர்த்தியான கூந்தல்.

கல்லூரிக்கு வரும் மற்ற பெண்களைப் போல் தலைமுடியை ப்ரீயாக லூஸாக விட வேண்டும் என்று கவிதாவிற்கும் ஆசைதான், ஆனால் அவள் அம்மா அம்பிகா பேசிப் பேசியே சாகடித்து விடுவாள்.

“பாஞ்சாலி சபதம் முடித்து பல யுகங்கள் ஆகி விட்டன. இந்தத் தலைவிரி கோலம் யாருக்காக?” என்பாள்.

ஏதாவது திருப்பிப் பேசினால் இடுப்பிலேயே இரண்டு ரிப்பன் சுருட்டி வைத்திருப்பாள். அதை வைத்து இழுத்து பின்னி விடுவாள். அதனால் எதற்கு வம்பு என்று கவிதா அவளாகவே  இரண்டு பின்னல்களாகப் பின்னி கடைசியில் ஒரு ஜாண் நீளத்திற்கு பின்னாமல் ப்ரீயாக விடுவாள்.

அதுவே அவளைப் பேரழகியாக்க் காட்டும். கரு நாகங்கள் போல் தொங்கி அசைந்து ஆடும் . அதைப் பார்த்தே அவள் உடன் படித்தவர்கள்  பிரமித்தார்கள்.

“நீ ஏன் கவிதாவிடம்  இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறாய்?” என்று கவிதாவின் தந்தை பாலாஜி கூட கேட்பான்.

உடனே அடுத்தவள் ஸாதனா வந்து விடுவாள். “அப்பா, அம்மா அக்காவிடம் ரொம்ப ரொம்ப கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்றால் என்னிடமும் அகிலாவிடமும் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்” என்று கம்ப்ளெயின்ட் பண்ணுவாள்.

“பணக்காரர்களாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நாமெல்லாம் ஏழைகள். நாம் செய்யும் சிறு தவறு கூட உலகத்தின் கண்களுக்கு பெரியதாகத் தோன்றும். பணம் இருந்தால் எந்தத் தவறும் யாருக்கும் தெரியாது. அதனால் தான் ‘ஏழை சொல் அம்பலமேறாது‘ என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். நம்மிடம் பணபலமும் இல்லை, பங்காளி பலமும் இல்லை. நாம் நம் வழியில் எளிமையாக, நம் அழகைப் படம்பிடித்துக் காட்டாமல் நடந்தால், யாரும் நம்மைப் பற்றி எதுவும் பேச முடியாது” என்றாள் அம்பிகா.

“இப்படியெல்லாம் யாரும் நம்மைப் பற்றிப் பேசக் கூடாதென்றால் இவ்வளவு அழகாக எங்களைப் பெற்றிருக்கக் கூடாது. செய்கிற தப்பெல்லாம் நீங்கள் செய்து விட்டு எங்களுக்கு சட்ட திட்டம் போட்டால் எப்படி?” என்றாள் மூன்றாவது பெண் அகிலா.

அவள் எப்பவும் இப்படித்தான். யாருக்கும் எதற்கும் பயப்பட மாட்டாள். மனதில் தோன்றியதை உடனே சொல்லி விடுவாள்.

“அடிக் கழுதை, வாயைப் பார். பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்றால், தேவையில்லாமல் திமிர் பேசிக்கொண்டு” என்று அம்மா திட்ட, மற்ற மூவரும் வாய் விட்டு சிரித்தனர்.

மூத்தவள் கவிதா மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள், அடுத்தவள் சாதனா ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். கடைக்குட்டி அகிலாவோ, பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.

பத்தாம் வகுப்பிலேயே பார்டரில்தான் பாஸாகி இருந்தாள், ஆனால் அவளோ தினம் ஒன்றாய் சொல்லுவாள். ஒரு நாள் டாக்டராகப் போகிறேன் என்பாள். மறுநாள், எனக்கு டாக்டரெல்லாம் பிடிக்காது. எவளோ பிள்ளை பெற்றுக் கொள்ள இடுப்பு வலி என்றால் நான் ஏன் சாப்பிடாமல் தூங்காமல் ஓட வேண்டும்? அதனால் நான் வக்கீலுக்குத்தான் படிக்கப் போகிறேன் என்பாள்.

இப்படி தினம் ஒன்றைக் கூறுவதால் அவளுடன் கூடப் பிறந்தவர்களே அவளைக் காமெடி பீஸ் என்று கேலி செய்வார்கள்.

அவளுடைய அம்மாவோ, தலையில் லேசாக அடித்துக் கொண்டு, “முதலில்  ஒழுங்காக பாஸாகிற வழியைப் பார்” என்பாள். இப்படிப் பேசிக்கொண்டு மூவரும் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் கிளம்பினர். அவர்கள் கிளம்பிய பிறகு பாலாஜி தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

“இப்போது நீங்கள் எதற்குக் கண்ணைக் கசக்குகிறீர்கள்?” என்றாள் அம்பிகா.

“எல்லாம் என்னால்தான். நான் மட்டும் இன்னும் கொஞ்சம் கேர்புல்லாக இருந்திருந்தால், எனக்கு இந்த நிலை வந்திருக்குமா? குழந்தைகள்தான் இப்படி வறுமையில் கஷ்டப்படுவார்களா?” என்று புலம்பினான் பாலாஜி, தன் உடைந்து போன காலைப் பார்த்துக் கொண்டே.

“சரி வருத்தப்படாதீர்கள். முடிந்து போன கெட்ட நேரத்தை நினைத்து வருத்தப்படுவானேன். நம் தலையில் ஆண்டவன் என்ன எழுதியிருக்கிறானோ, அது தானே நடக்கும். நீங்கள் செய்யும் தொழிலுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் தான் பாடுபட்டீர்கள். ஆனால் அதை மனிதர்களும் புரிந்து கொள்ளவில்லை, அந்த கடவுளும் புரிந்து கொள்ளவில்லை”

“கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன்? நான் அறிவோடு மனிதர்களின் குணம் அறிந்து நடக்கவில்லை, அதன் பலனைத் தான் என் குழந்தைகள் இப்போது அனுபவிக்கிறார்கள்” என்றான் நீண்ட பெருமூச்சுடன்.

“பீனிக்ஸ் பறவைகள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா அம்பிகா? இறந்த அதன் சாம்பலிலிருந்தே மீண்டும் உயிர்த்தெழுந்து உயிருடன் பறக்கும் ஒரு இதிகாசப் பறவை.  நாமும் அதைப் போலத்தான். வருமானம் இழந்து நொண்டியாக்கப் பட்டேன், வேலையிலிருந்து விரட்டப் பட்டேன். இப்போது எல்லாம் இழந்து உன் ஆதரவில் தான் இந்த குடும்பம் ஓடுகிறது”

அம்பிகா மெதுவாக அவன் அருகில் வந்து அமர்ந்து தோளில் முகத்தை சாய்த்து,  “பழசை நினைத்து எந்தப் பயனுமில்லை. வீணாக வருத்தப்பட்டால்  நமக்குத் தான் மனதிற்கும் உடம்பிற்கும்  கஷ்டம். போனதெல்லாம் போகட்டும், இனிமேல் நம் சந்தோஷமெல்லாம் நம் பிள்ளைகளின் வளர்ச்சியில் தான்” என்றாள் மென்மையான குரலில்.

“எனக்குப் பணம் நஷ்டமான வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், என் கூடப் பிறந்த அண்ணனே என்னை நிர்கதியாய் அவன் கம்பெனியிலிருந்து ஏமாற்றி  வெளியேற்றினான் பார், அதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை” என்றான் கண்கள் கலங்க.

“பிள்ளைகள் எல்லாம் அவரவர் வேலைக்குக் கிளம்பி விட்டார்கள். மணியும் காலை ஒன்பது ஆகிறது, நானும் என் வேலையைத் தொடங்குகின்றேன். பள்ளிக்குப் போகிறவரகள் ஆபீசுக்குப் போகிறவர்கள் எல்லோரும் டிபனும் லஞ்ச்சும் தேடி வருவார்கள். காலையில் நாமும் சிரித்த முகத்துடன் சாப்பாட்டுக் கடையைத் திறந்தால் தான் நமக்கு வருமானம். இனி ஆகவேண்டிய வேலையைப் பார்க்கலாம்” என்றவள் மெதுவாக எழுந்து தன்னை சீர் படுத்திக் கொண்டாள்.

படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்த பாலாஜி, தன் உடைந்த காலை லேசாக பரிதாபத்துடன் அவனே ஒருமுறை தடவிக் கொடுத்துக் கொண்டான்.

சென்னையில் ‘சிவராஜ் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்‘ என்னும் பில்டிங் பிரமோட்டர்ஸ் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதில் முக்கியமான சைட் இஞ்ஜினீயராக பணி புரிந்தவன்தான் பாலாஜி.

சிவராஜ் பாலாஜியின் அண்ணன்தான். பாலாஜி, அண்ணன் கம்பெனி என்றே நினைத்ததில்லை. தன் சொந்தக் கம்பெனியில் பணிபுரிவது போலவே நினைத்துக் கொண்டு தன் கடின உழைப்பு, திறமை மொத்தத்தையும் அர்ப்பணித்தான்.

அண்ணனும் அதேபோல் பேசித்தான் இவனிடம் வேலை வாங்குவான். அப்படியே அண்ணன் கம்பெனியிலே எந்த அதிகப்படியான லாபத்தையும் எதிர்ப்பார்க்காமல்  அண்ணன் கம்பெனி தன் கம்பெனியே என்று பாடுபட்டான்.

சுமாராகப் படித்ததினால் டிப்ளமோ இன் சிவில் இஞ்ஜினீயரிங்தான் படிக்க முடிந்தது. படிப்பில்தான் சுமாரே தவிர, பிராக்டிகலாக எந்த வேலையும் திறம்பட செய்வான். கண் பார்த்ததை கை செய்யும் என்று சொல்வார்கள் இல்லையா? அப்படி ஒரு திறமைக்காரன் பாலாஜி.

அவர்கள் ஏரியாவில் எங்கெல்லாம் கன்ஸ்ட்ரக்‌ஷன் ஒர்க் நடக்கிறதோ அங்கெல்லாம் போய்ப் பார்ப்பான். அவர்கள் கட்டிடப்பிளான், அந்த மனையை அவர்கள் எப்படி வீணாக்காமல், சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு கட்டுகிறார்கள், எப்படி தொழிலாளர்களிடம் வேலை வாங்குகிறார்கள் என்று எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து  தன் அண்ணாவிடமும் கலந்து பேசி அதை நடைமுறையில் கொண்டு வருவான். அதேபோல் பேச்சுத் திறமையும் அதிகம்.

மேற்படி குணங்களால் அவனுடைய அண்ணாவைப் போலவே அண்ணிக்கும் இவன் மேல் மதிப்பு அதிகம். அதனால் அவனுடைய அண்ணி அவளுடைய தங்கையை பாலாஜிக்கு எப்படியாவது மணமுடித்து விட வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தாள்.

பாலாஜிக்கு அவன் பெற்றோர் மேல் பாசம் அதிகம். ஆனால் அவன் அண்ணியோ அவர்கள் இருக்கும் வரை இருவரையும் சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்களை எவ்வளவு மோசமாக வெறுக்க முடியுமோ அப்படி வெறுத்தாள். அதனால் பாலாஜி  அண்ணியிடம் அதிகம் பழகியும் பழகாமலும் இருந்தான்.

ஆகவே அண்ணியிடம், ஒரே வீட்டில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாதென்று மழுப்பலாகப் பேசி விட்டான். அத்தோடு, தங்கள் கிராமத்திற்குப் போய் தன் அத்தையின் மகளான அம்பிகாவையும் திருமணம் செய்துக் கொண்டு வந்து விட்டான். இதனால் அவன் திருமணத்திற்குப் பிறகு அண்ணி சந்திரமுகியாக மாறி  எப்போதும் வெறுப்பை மட்டுமே கொட்டிக் கொண்டு இருந்தாள்.

அம்பிகா வீட்டிற்கு வந்த பிறகு புதிதாகத் திருமணமானவர்கள் கல்யாணமாகாத பிள்ளைகள் இருக்கும் இடத்தில் இருக்கக் கூடாதென்று பாலாஜியையும் அவன் மனைவியையும்  அவுட்ஹௌசிற்கு அனுப்பி விட்டார்கள்.

அண்ணாவிற்கும் ஒரு பையன் இரண்டு பெண் குழந்தைகள் ஆகிவிட்டன.  பாலாஜிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாகப் போட்டுக் கொடுத்து விட்டார்கள்.

அவுட் ஹௌசிற்கு வாடகையில்லை. கரண்ட் பில், தண்ணீர் வரி என்று தனித் தனியே கட்ட வேண்டியதில்லை. அதனால் பாலாஜி சந்தோஷமாகவே அவுட்ஹௌசில் பால் காய்ச்சி, சம்பிரதாயப்படி அம்பிகாவுடன் குடி புகுந்தான்.

எலி வளையானாலும் தனிவளை ஆதலால், அவுட் ஹௌசில் யாருடைய இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாம் என்று அம்பிகாவும் மனப்பால் குடித்தாள். ஒரு மாதம் ஆனதும் அண்ணிக்கு என்ன தோன்றியதோ, ஏதோ தகராறு என்று அவர்கள் வீட்டில் சமையல்கார மாமியை நிறுத்தி விட்டாள்.

ஒரு நாள் அண்ணா சிவராஜ், பாலாஜியை ஆபீசில் தன் அறைக்கு வரச் சொன்னான்.

“பாலாஜி எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?” என்றான்.

கட்டிட வேலை சம்பந்தமாகத்தான் ஏதோ கேட்கப் போகிறான் என்று நினைத்து, “சொல் அண்ணா, அதற்கு ஏன் உதவியென்றெல்லாம் பெரிய வார்த்தை சொல்கிறாய்?” என்றான்.

“உன் அண்ணிக்கு தைராய்ட் பிராப்ளம் இருக்கிறது, அதனால் என்ன மருந்து எடுத்தாலும் உடம்பு இளைக்கவில்லை. இந்த நிலையில், சமையல்கார மாமி வேறு கோபித்துக் கொண்டு நின்று விட்டாள். நீ ஆபீசிற்குக் கிளம்பிய பிறகு உன் மனைவி அம்பிகா வீட்டில் ப்ரீயாகத்தானே இருக்கிறாள். அப்போது வந்து அம்பிகா உன் அண்ணிக்கு கொஞ்சம் ஒத்தாசையாய் வேலை செய்து கொடுக்க முடியுமா?”

“நான் அம்பிகாவிடம் சொல்கிறேன் அண்ணா, ஆனால் அண்ணிக்குத்தான் அவளைப் பிடிக்காதே. அவளை ஒத்துக் கொள்வார்களா? நீங்கள் அண்ணியிடம் பேசி விட்டீர்களா?” என்றான் பாலாஜி.

“நானும் பேசுகிறேன், நீயும் உன் மனைவியை நாளை அழைத்து வா” என்று முடித்தான் சிவராஜ்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும் – வியாழன் தோறும்))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் விழிகளில் விழுந்தேன்❤️(அத்தியாயம் 1) – கி.கரோலின்மேரி

    பூ பூக்கும் ஓசை (சிறுகதை) – பவானி உமாசங்கர்