இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மலைகளின் ராணி பனிப்போர்வை போர்த்தி இருளில் அமர்ந்திருந்தாள். ஸ்கிரீனை தள்ளி மெதுவாக ஜன்னல் கதவை திறந்த மதுவந்தியின் முகத்தில் பனிக்காற்று சில்லென வீசி அவளை சிலிர்க்க வைத்தது.
“அட இன்னும் வெளிச்சமே வரலையா” என்று முணுமுணுத்தவள் சுவரில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள் மணி காலை எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது
“அம்மாடியோ மணி எட்டு ஆகப்போகுதே. கடையை திறக்கணுமே.” நினைத்த அவளின் உடலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
படுக்கையறையை விட்டு வெளிவந்தவள் சமையலறையில் விளக்கு எரிவதை பார்த்து அங்கு வந்தாள். அங்கு அவள் அம்மா கனகவல்லி காலை சிற்றுண்டி செய்வதில் மும்முரமாக இருந்தார்.
அவளிடம், “அம்மா அப்பாவுக்கு காய்ச்சல் இல்லையே, நல்லா இருக்காருல்ல” என்று கேட்டாள் மதுவந்தி.
“காய்ச்சல் விட்டுடுச்சுடா. இன்னைக்கு ஒரு நாள் ஓய்வெடுத்தா போதும். நாளைக்கு நல்லா ஆயிடுவாரு” என்றார் கனகவல்லி சிரித்தபடி.
“தம்பி உதயா எழுந்து விட்டானா மா” என்று கேட்ட மதுவந்தியிடம்
“விடுமுறை நாளில் இவ்வளவு சீக்கிரமா அவன் எழுந்திருப்பானா நாம தான் போய் எழுப்பணும்” என்றார் கனகவல்லி சலித்தபடி.
“சரிமா நான் பிரஷ் பண்ணிட்டு அவனை எழுப்பறேன். இன்னைக்கும் நாங்களே கடைக்கு போய்க்கறோம். நாளையிலிருந்து அப்பா வழக்கம் போல போய்க்கட்டும் சரியா” என்றாள் மதுவந்தி.
“சரி மது நீ சொன்னா சரிதான்” என்றார் அவள் தாயார்.
ஊட்டி மார்க்கெட். காலை நேர சுறுசுறுப்புடன் இருந்தது. மதுவந்தியும் அவள் தம்பி உதயனும் தங்கள் டூவீலரை கடை ஓரமாக நிறுத்திவிட்டு அவர்கள் அப்பாவின் பூங்கொத்துக்கள் விற்பனை கடையை திறந்தனர்.
முதல் நாள் வந்து இறங்கிய டேலியா சாமந்தி மற்றும் ரோஜா பூக்களை மூட்டையில் இருந்து பிரித்து எடுத்து உள்ளறையில் இருவரும் அடுக்கினர். அவர்களின் கடையில் பொக்கே தயார் செய்யும் வேலை ஆட்களான மாதவியும் சோமுவும் சற்று நேரத்தில் வந்தனர்.
உள் அறையிலிருந்து வெளியே வந்த மதுவந்தி, “அக்கா வந்துட்டீங்களா இன்னைக்கு வந்திருக்கிற ஆர்டர்ஸ்க்கெல்லாம் கொஞ்சம் சீக்கிரமா பொக்கே தயார் செய்யுங்க. பத்து மணி ஆனாலே கஸ்டமெர்ஸ் வர ஆரம்பிச்சிடுவாங்க” என்றாள் சற்று பதட்டத்துடன்.
“அதெல்லாம் நீ பதட்டமே படாத மது அரை மணியில் ரெடி பண்ணிடுவோம்” என்றாள் அவளிடம் மாதவி.
மதுவந்தியும் சற்று நிம்மதியுடன் பில் கவுண்டரில் வந்து அமர்ந்தாள். சற்று நேரத்தில் சாம்பல் நிறத்தில் பெரிய பென்ஸ் கார் கடை வாசலில் வந்து நின்றது மதுவந்தியும் ஆர்வமாக அந்த காரை பார்த்தாள்.
காரில் இருந்து இறங்கியவன் இயல்பை விட சற்று உயரமாக இருந்தான். அவன் அணிந்திருந்த உடை காலில் இருந்த ஷூ கையில் கட்டி இருந்த ரோலக்ஸ் வாட்ச் கண்களின் கூலர் என அனைத்துமே அவன் செல்வ செழிப்பை பறைசாற்றியது.
கடையை நிமிர்ந்து பார்த்து ஒருமுறை அந்த கடைதான் என உறுதிப்படுத்திக் கொண்டவன் போல் கடைக்குள் நுழைந்தான் அதற்குள் அவன் செல்போன் அடிக்கவும் எடுத்துப் பேசினான்.
“ஹேய் நான் கடைக்கு வந்துட்டேன், மது பொக்கே ஷாப் தானே அங்கே வந்துட்டேன். ஓகேமா நான் பார்த்து கரெக்டா வாங்கிட்டு வந்துருவேன். நீ கவலைப் படாத” என்றான் புன்னகைத்தபடி.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த மதுவந்தி அவன் புன்னகை முகத்தைப் பார்த்து அவளையும் அறியாமல் புன்னகைத்தாள்.
முகத்தை சற்று இறுக்கமாக வைத்தபடி உள்ளே நுழைந்தவனை பார்த்து வியந்த மதுவந்தி புன்னகைக்கும் போது எத்தனை அழகாக இருந்தது இவன் முகம் என நினைத்தாள்.
சீராக வெட்டப்பட்ட கிராப் விசாலமான நெற்றியில் தீர்க்கமான கண்ணும் கூரான மூக்கும் சற்று அழுத்தமான சிவந்த உதடுகள் அவனுக்கு சிகரெட் பிடிக்கும் வழக்கம் இல்லை என உறுதிப்படுத்தியது.
“ஹலோ என் முகத்தில் ஏதாவது எழுதி இருக்குதா, ம்..” என புருவத்தை உயர்த்தி அதட்டலாக கேட்டான் அவன் மதுவந்தியிடம்.
ஒரு கணம் எதிர்பாராத இந்த கேள்வியில் திகைத்த மது மறுநொடியே தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.
“உங்களுக்கு என்ன வேணும் பொக்கே ஆர்டர் பண்ணி இருக்கீங்களா எந்த பெயரில் என்று சொன்னால் எடுத்து தருவேன்” என்று வாடிக்கையாளர்களிடம் பேசும் பாணியில் கேள்விகளை தொடுத்தாள்.
அவன் தோள்களை குலுக்கியபடி “ம்.. மிஸஸ் ரேகா ராஜன் என்ற பெயரில் மேரேஜ்க்காக ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்திருந்தாங்க ரெடி ஆயிடுச்சா” என்றான் அவளை சற்று கர்வமாக பார்த்தபடி.
“உட்காருங்க நான் பார்த்து சொல்றேன்” என்று எழுந்தாள் உள்ளறைக்கு செல்ல.
அப்போது கடைகளுக்குப் போய் பொக்கே செய்ய தேவையான கலர் டிஷ்யூ பேப்பர்ஸ் கலர் லேஸ் போன்ற பண்டில்களை வாங்கி வந்தான் உதயன்.
“மது” என்று அழைத்தவன் அங்கு நாற்காலையில் அமர்ந்திருந்த அவனை பார்த்து, “வாங்க சார் ஒரு பத்து நிமிஷத்துல உங்க பொக்கே ரெடியாயிடும் தேவையான சில மெட்டீரியல்ஸ் ஷார்ட்டேஜ் ஆயிடுச்சு அதான், கொஞ்சம் பொறுத்துக்கோங்க” என்றான் பணிவுடன்.
ஆனால் மதுவோ “உதயா ரொம்ப எல்லாம் தழைய வேண்டாம். அவர் டெலிவரி டைம்க்கு முன்னாலேயே வந்திருக்காரு. கொஞ்சம் வெயிட் பண்ணட்டும்” என்றாள் வெடுக்கென்று.
உதட்டைப் பிதுக்கியவன் “கொஞ்சம் வாடிக்கையாளர்களிடம் எப்படி பேசுறதுன்னு கத்துக்கோங்க” என்றான் அவன்.
“சார் உங்க பேரு” என்று கேட்ட உதயனிடம் “ராஜ ஹம்சன்” என்றான் அந்த புதியவன் சிரித்தபடி.
மேலும், “உனக்குத்தான் வாடிக்கையாளர்களை கையாளும் விதம் நல்லா தெரிஞ்சிருக்கு உங்க அக்கா மதுவுக்கு அது இன்னும் புரியல” என்றான் கேலியாக.
அவனை முறைத்தபடி உள்ளறைக்குச் சென்று “மாதவி அக்கா சீக்கிரம் வேலையை முடிங்க அந்த ஆளை முதல்ல வெளியே அனுப்பணும்” என்றாள் மது கோபமாக.
சோமுவோ “ஐயோ இன்னும் அரை மணி நேரம் ஆகுமே” என்றான் கவலையுடன். மது இதைக் கேட்டு மிகவும் எரிச்சலுற்றாள்.
“என்ன நீங்க நேத்தே தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வச்சுட்டு போயிருக்கலாம் இல்ல இப்போ கஸ்டமர் முன்னாலே இப்படி அவமானப்பட வேண்டியிருக்கு பாருங்க” என அவர்களை கடிந்தாள்.
வெளியே அமர்ந்திருந்த ராஜஹம்சனுக்கு மதுவின் கோபம் புரிந்தது. உதயனிடம் “நான் இன்னும் சில பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்ல வேண்டும். பொருட்களை வாங்கி வரும் பொழுது பொக்கேவை வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி சென்று விட்டான்.
மதுவந்தி சிறிது சங்கடத்துடன் கடையின் முன்னறைக்கு வந்தவள் அங்கு ராஜஹம்சன் இல்லாதது கண்டு திகைத்தாள்.
உதயனோ, “ஏன் அக்கா அப்படி கோபமா பேசினே அவருக்கு ஏதோ சில பொருட்கள் வாங்க வேண்டுமாம், அதனால் சென்று விட்டார்” என்றான் வருத்தத்துடன். மதுவுக்கும் சற்று வருத்தமாகத்தான் இருந்தது.
ஆனால் அதை வெளிக்காட்டாமல் “உதய் அரை மணி நேரம் இங்கேயேவா உட்கார்ந்து இருக்க முடியும் போய்ட்டே வரட்டும் “என்றாள் கெத்தாக.
உதயன் அவளை சற்று ஆச்சரியமாக பார்த்து, “உனக்கு என்ன ஆச்சு இன்னைக்கு” என்றான் அவளிடம்.
“ஒன்றும் இல்லைடா “என்று சலிப்பாக பதில் அளித்தாள் மதுவந்தி.
திருமணத்திற்காக ஆர்டர் செய்திருந்த இரண்டு பூச்செண்டுகளை அழகாக அடுக்கி முடிக்க ஒருமணி நேரம் ஆகிவிட்டது. சோமு இரண்டு பொக்கேகளையும் மிகச் சிறப்பாக அலங்கரித்து எடுத்துச் செல்லவும் வசதியாக இரண்டு பைகளில் போட்டு எடுத்து வந்து வைத்தான்.
மதுவந்திக்கு அதை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியானது. அவள் மனநிலை அவளுக்கே புதிதாக இருந்தது. இது என்ன புதிரான மகிழ்ச்சியும் வருத்தமும் எனக்கே புரியவில்லை என நினைத்தாள். அவன் வருகிறானா என வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
உதயன் அவள் மனநிலை புரியாமல், “மது ராஜஹம்சன் வந்தா கொஞ்சம் தன்மையா பேசு. நான் வீட்டுக்கு போய் லஞ்ச் எடுத்துட்டு வரேன்” என்று கூறி கடைக்கு வெளியே வந்தான்.
அங்கு அவன் தந்தை ஜெகநாதன் கடை முன் காரை நிறுத்திவிட்டு இறங்குவதை பார்த்து “அப்பா நீங்க எதுக்குப்பா இப்ப வந்தீங்க நாங்க ரெண்டு பேரும் இன்னைக்கு முழுவதும் கடையை பார்த்துக்கறோம்னு சொன்னோமில்லப்பா” என்றான் கவலையாக.
“எனக்கு உடம்பு நல்லாயிடுச்சு உதயா. அதனால சும்மா வீட்ல இருக்க முடியல. நீ மதுவை கூட்டிட்டு வீட்டுக்கு போயிக்கோ இனி நான் கடையை பார்த்துக்கிறேன்” என்று கூறினார் ஜெகநாதன்.
அதற்குள் ராஜஹம்சனின் பென்ஸ் கார் வருவதைப் பார்த்ததும் உதயன் தன் தந்தையிடம் “அப்பா கஸ்டமர் கார் வருது. நான் நம்ம காரை கொஞ்சம் தள்ளி நிறுத்துறேன் சாவி கொடுங்கப்பா” என்றான்.
ஆனால் ராஜஹம்சன் தன் காரை சற்று தள்ளி நிறுத்திவிட்டு இறங்கி நடந்து வந்தான். ராஜஹம்சனை சிரித்தபடி வரவேற்ற உதயன், “அண்ணா வாங்க உங்க ஆர்டர் ரெடியாயிடுச்சு” என்றான் உற்சாகமாக. உதயனின் உற்சாகத்தை பார்த்த ஜெகன்நாதன் யார் என்று திரும்பி ராஜஹம்சனை பார்த்தார்.
மூவரும் கடையினுள் நுழைய பில் கவுண்டரில் அமர்ந்திருந்த மது விறுக்கென எழுந்தாள். “மரியாதை மனசில இருந்தா போதும்னு சொல்லு உதய் உங்க அக்காவுக்கு” என்று கேலி பேசிய ராஜஹம்சன் அங்கு ஒரு பெரியவர் இருப்பதை அறிந்து, ஒருவேளை அவர் இவர்களின் தந்தையாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என நினைத்து பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டான்.
ஆனால் அவனின் கேலி பேச்சைக் கேட்டு சுர் எனக் கோபம் எழ, மதுவந்தி “இந்தாங்க உங்க ஆர்டர் ரெடியா இருக்குது பணத்தை செலுத்திட்டு கிளம்புங்க” என்றாள் எரிச்சலுடன்.
ராஜஹம்சன் தோளைக் குலுக்கியபடி பொக்கேக்களுக்கான பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு உதயனிடம் பொக்கேக்களை வாங்கிக்கொண்டு “வரேன் உதய் ஸ்வீட் பாய்” என்று கூறி சென்றான். “ஸ்வீட் பாயாம்” என முகத்தை சுழித்து பழிப்பு காண்பித்த மதுவை பார்த்து சிரித்தான் உதயன்.
இருவரையும் உற்றுப் பார்த்த ஜெகநாதன் மதுவந்தியிடம், “என்ன மது இப்படியா கஸ்டமர் கிட்ட பேசுறது இதான் காலேஜ்ல போய் கத்துக்கிட்டயா நீ” என்று கோபமாக கேட்டார்.
மதுவந்திக்கு கோபமும் வருத்தமும் ஒன்று சேர கண்கள் கலங்கியது அக்காவின் கண்கள் கலங்கியதைப் பார்த்து உதயன் ஜெகநாதனிடம், “அது ஒண்ணும் இல்லப்பா அவர் டெலிவரி டைம்க்கு முன்னாலேயே வந்து ஆர்டர் ரெடி ஆயிடுச்சான்னு கேட்டாரு அதான் அக்கா…” என்றான் மதுவை விட்டுக் கொடுக்காமல்.
“சரி நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன்” என்றார் ஜெகநாதன் கட்டளையாக இருவரும் மறு பேச்சு பேசாமல் புறப்பட்டனர்.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings