எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘ஏங்க, மணி ஒன்னாககப் போகுது… ரிஸல்ட் வாங்கப் போகலையா… போயிட்டு வந்துட்டு குளிச்சிட்டு சாப்பிடனுமில்லையா… ‘
சுந்தரி குரல் கொடுத்ததும், கையிலிருந்த புத்தகத்தை வீசிவிட்டு எழுந்தான், நடராஜன். கண்ணாடி பார்த்து தலை வாரி, லேசாய் பவுடரும் அடித்துக்கொண்டு கிளம்பி விட்டான் கிளினிக்கை நோக்கி.
மாதம் ஒரு முறை சுகர் செக்அப் செய்து கொள்வான். வழக்கம்போல அன்று காலையிலும் ஏழு மணிக்கெல்லாம் வாக்கிங் போனவன், திரும்பி வந்து மறுபடியும் டெஸ்ட்க்காக மறுபடியும் போக வேண்டாமே என்று வாக்கிங் முடித்து அப்படியே நடந்தே லேபிற்கு போய் ரத்த மாதிரி கொடுத்தான்.
வழக்கம் போல சாப்பிட்டு முடித்து ஒன்னரை நேரம் ஆனதும் வரச் சொன்னார்கள். சாப்பிட்ட பிறகு மறுபடியும் போய் ரத்த மாதிரி கொடுத்தான். ஒரு மணி போல வந்தால் ரிஸல்ட் ரெடியாக இருக்கும், வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார்கள், மறந்தே போனான், இப்போது ஞாபகப் படுத்திவிட்டாள் சுந்தரி.
ஆவல் அதிகமானது. ‘ சுகர் லெவல் குறைஞ்சிருக்குமா… ‘
போன முறை சாப்பிடும் முன்பு 202 என்றும் சாப்பிட்ட பிறகு 300 என்றும் வந்திருந்தது. டாக்டர் பார்த்துவிட்டு மாத்திரையை மாற்றிக் கொடுத்திருந்தார். ‘ கேப் விடாம சாப்பிடுங்க… அரிசியை தவிருங்க… வாக்கிங் போங்க… ‘ என்று சொல்லியிருந்தார்.
உடனே அவரிடமிருந்து ரிஸல்ட்டை வாங்கி வாட்ஸப்பில் பையனுக்கு அனுப்பியிருந்தாள் சுந்தரி. அவன் புனேயில் ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை செய்கிறான். அப்பாவைக் கூப்பிட்டு செல்லமாய் கடிந்துகொண்டான்.
‘அப்பா… மாத்திரையை கரெக்டா போட்டுக்கிறீங்களா இல்லையா… டயட் கண்ட்ரோல் கடைபிடிக்கிறீங்கதானே… கிரீன் டீ சுகர் இல்லாம குடிங்க… காலையிலயும் சாயங்காலமும் மறக்காம நடங்க… சுகர் கண்ட்ரோலா இருந்தாதானே மத்த நோயிங்க நம்மை அண்டாது… அஸால்ட்டா இருக்காதீங்கப்பா…ப்ளீஸ்… ‘
எங்கே கடைபிடிக்க முடிகிறது. ஏதாவது ஒரு வேலை வந்தால், வாக்கிங் போவது நின்று போய் விடுகிறது. சாப்பாடும் அப்படியே. வாயை எங்கே கட்ட முடிகிறது.
மாதா மாதம் செக் செய்வாரே என்று, போன வாரம் கூட நினைவு படுத்தியிருந்தான் ரவி, ‘இந்த மாசம் சுகர் லெவல் பார்த்தீங்களாப்பா…’
‘ பார்க்கனும்ப்பா… ‘ என்றிருந்தார்.
ஆவலுடன் லேபில் நுழைந்தான். பணம் கட்டிய ரசீதைக் காட்டினான். டிராயரைத் திறந்து கவர் ஒன்றை எடுத்து பெயரை உறுதிபடுத்திக்கொண்டு நீட்டினார்கள். படபடப்புடன் கவரைத் திறந்தபடியே படிகளில் இறங்கினான். உள்ளே இருந்த பேப்பர் என்னை விரி… படி…என்றது.
விரித்தான்… படித்தான்… மொபைல் சிணுங்கியது.
‘ஏங்க… லேபுக்கு போயிட்டீங்களா… ரிஸல்ட் வாங்கியாச்சா… என்ன ஆச்சு… சுகர் குறைஞ்சிருக்கா… ‘ கேள்விமேல் கேள்வி கேட்டு குடைந்தாள் சுந்தரி.
இவனை விட, அவனது சுகர் லெவலைத் தெரிந்துகொள்வதில் அவளுக்குத்தான் ரொம்பவும் ஆர்வம்.
‘கொஞ்சம் இரு… இப்போத்தான் சுடச்சுட வாங்கிட்டு வந்திட்டே இருக்கேன்… ‘ என்றவன், ரிஸல்ட் பேப்பரை பார்த்தபடியே, பாஸ்ட்டிங்கல 110… ‘ என்றான்.
அவன் சொல்லிகொண்டிருக்கும்போதே, குறுக்கிட்டு கேட்டாள், ‘சரி… சாப்பிட்டப்புறம்…?‘
‘ கொஞ்சம் இரு… ‘ என்றவன், பேப்பரை பார்த்தபடி, ‘ 180.. ‘ என்றான்.
அவள் அப்படியே நின்றுவிட மாட்டாள். உடனே ரவிக்கு போன் போட்டுவிடுவாள். உடனே அவனும் கருத்து சொல்வான்.
‘பரவால்ல… போனதடவைக்கு குறைஞ்சிதான் இருக்கு போல… ‘ அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே லைனை கட் செய்தான் இவன்.
வீட்டை அடைந்து மொபெட்டை நிறுத்தும்போதே, ‘ தம்பிக்கு போன் போட்டு சொன்னேன்… “மாத்திரையை விடாம போட்டுக்கச் சொல்லுங்க… நடையை விடாம தொடர்ந்து போகச் சொல்லுங்க… தோசை இட்லியை குறைச்சிக்கிட்டு கேழ்வரகு கம்பு சோளம் எல்லாம் சேர்த்துக்கச் சொல்லுங்க… “‘ ன்னான்… சரியா… ‘ என்றாள்.
‘உடனே தந்தியடிச்சிட்டியாக்கும் புனேக்கு… ‘ என்று நக்கல் விட்டுவிட்டு ரூமிற்குள் நுழைந்தான்.
அவசரமாய் ரிஸல்ட் கவரை படுக்கை மெத்தைக்கு அடியில் உள்ளே தள்ளி செருகினான்.
‘இனிமே கேப் விடாம மாத்திரையை போட்டுக்கணும்,,, ஒருவேளை மட்டும் போடாம ரெண்டு வேளையும் போட்டுக்கணும். ரெண்டு வேளையும் விடாம நடக்கணும்… அஞ்சு ரவுண்டு போறதை பத்து ரவுண்டாக்கணும்…‘ என்று அப்போதே முடிவு செய்துகொண்டான்.
நல்லவேளை, ‘ ரிஸல்ட்டை காண்பியுங்க… ‘ என்று அவள் கேட்கவில்லை.
சட்டையை கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு நிமிர்ந்தவன் திரும்பி ஒருமுறை சுந்தரி வருகிறாளா என்று பார்த்துவிட்டு, படுக்கை மெத்தைக்கு அடியில் செருகிய கவரை எடுத்து மறுபடியும் ஒருமுறை பார்த்துக்கொண்டான்.
வெறும் வயிற்றில் 220
சாப்பிட்டதும் 330
தெரிந்தால் இவளாவது சதாரணமாகத்தான் திட்டுவாள், ரவியோ கன்னாபின்னாவென்று திட்டுவான்… ! ரிஸல்ட் மறைவாகவே இருக்கட்டும்.
நட ராஜா, இனிமே நட… நட… தான்…!
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings