எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அம்பு, நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன்” சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி நடந்தார் ராகவன்.
மனைவி அம்புஜம் அடுத்து என்ன சொல்வாள் என்பது அவருக்குப் பழகிப்போயிருந்தது. அதைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காகவே வேகமாக வாசலுக்கு வந்தார். ஆனாலும் அம்புஜம் விடுவதாக இல்லை.
“ஆமா, இப்போ நீங்க போகலைன்னா கோவில் நடையே திறக்கமாட்டா பாருங்கோ. உங்களை எதிர்பார்த்துதான் பகவான் காத்துண்டிருக்காரா? தினமும் கண்ணைப் பொட்டறதுக்கு முன்னால கோயிலுக்குக் கிளம்ப மட்டும் தெரியறது. நம்ம ஆத்துல அரிசி பருப்பு டப்பா எல்லாம் காலியா போய் நீங்க எப்போ சாமான் வாங்கிண்டு வந்து றொப்பப் போறேள்னு காத்துண்டிருக்கு. அதையும் மனசுல வச்சுக்கோங்க. உங்களுக்கு அப்புறம் வேலைக்கு வந்தவா எல்லாம் இப்போ எவ்வளவோ சுபிட்சமாக இருக்கா தெரியுமா.”
அம்புஜத்தின் அர்ச்சனைகள் தொடர்ந்தபடியே இருந்தது. ராகவன் பதில் ஏதும் பேசாமல் சாலையில் இறங்கி நடந்தார்.
ராகவன் மிகவும் அமைதியானவர். வீண்வாதங்களை விரும்பாதவர். அம்புஜம் தினம் தினம் காலையில் ஆரம்பிக்கும் இந்த அர்ச்சனை, மதியம் அவர் வீட்டிற்கு வரும்போதும் தொடரும். மௌனமே அப்போதும் ராகவனின் பதிலாக இருக்கும்.
ஐம்பத்தைந்து வயதில் உடல் அளவில் அவர் தளரவில்லை என்றாலும், மனதளவில் தளர்ந்திருந்தார். வீட்டிலிருந்து பதினைந்து நிமிட நடையில் இருக்கும் பெருமாள் கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார் ராகவன். உலகை அளந்த கமலக்கண்ணனுக்கு கைங்கரியம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததே அவர் அளவில் பெரும் பேறுதான். வேறு பெரிதாக சொத்து சுகம் என்று ஆசைப்படாதவர். ஒண்டிக்கட்டையாக இருந்திருந்தால் அவன் பாதாரவிந்தங்களைப் பற்றிக்கொண்டு பற்றற்று இருந்திருக்கலாம்.
என்ன செய்வது? முப்பது வருடங்களுக்கு முன்னால் பெற்றோர் பேச்சைத் தட்ட இயலாமல், அம்புஜத்தைக் கரம் பிடித்தார். அதற்காக விருப்பமில்லாமல் ஒன்றும் அம்புஜத்துடன் வாழவில்லை. மனம் நிறைந்த காதலுடனும், அக்கறையுடனும்தான் அம்புஜத்தை கவனித்துக் கொண்டார். ஆனால் குழந்தைப்பேறு மட்டும் அமையாமல் போய்விட்டது.
ராகவன் அதையும் நாராயணன் சித்தம் என்று கடந்துபோக பழகிக் கொண்டார். அம்புஜத்தால் அது இயலவில்லை. அந்த ஏமாற்றத்தின் வலிகளை ராகவன் மேல் இறக்கி வைக்க ஆரம்பித்தாள். அப்போது ஆரம்பித்ததுதான் இப்படி ராகவனை அர்ச்சனை செய்வது. சந்தான பாக்கியம் இல்லை என்றாலும் மூன்று வேளை நல்ல சாப்பாட்டிற்குப் பஞ்சம் இல்லாமல் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.
ஆமாம், ராகவன் முன்பு பக்கத்து ஊரில் ஒரு பெரிய கோயிலில் அர்ச்சகராக இருந்தார். அங்கிருந்தவரை வருமானம் ஓரளவுக்கு இருந்தது. வாரம் ஒரு முறை ஒவ்வொரு சந்நிதி என சுழற்சி முறையில் பூஜை செய்வார். பெரிய கோயில் என்பதால் கூட்டமும் வரும். பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் என சந்நிதி மாறி மாறி பொறுப்பு இருக்கும்.
ஆண்டாள், சக்கரத்தாழ்வார் சந்நிதிகளில் பூஜை செய்யும் வாரங்களில் வருமானம் சற்று குறைவாக இருந்தாலும், மற்ற சந்நிதிகளில் அர்ச்சனை செய்வதும், ஆர்த்தித் தட்டில் விழும் சில்லறை எல்லாம் தாராளமாகவே இருக்கும்.
குழந்தை இல்லாத குறையின் ஆதங்கத்தை மட்டுமே கணவரிடம் கொட்டிக் கொண்டிருந்த அம்புஜம் மனதில், மூன்று வருடங்களுக்கு முன் திடீரென ஏதோ மாற்றம். அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் சிரமப்படும் பெற்றோரை அருகே இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற சாக்கை வைத்து இடமாற்றத்திற்கு அடி போட்டாள். ராகவன் பிடி கொடுக்காமல் சமாளித்தார்.
“அம்பு, பஸ்ஸைப் புடிச்சா ஒரு மணி நேரத்துல உங்க ஆத்துக்குப் போயிடலாம். இப்போ கூட மாசத்துல ரெண்டு மூணு தடவை போயிண்டுதானே இருக்கே. எப்போ வேணுமோ நாம போய் பார்த்துட்டு வரலாம். இல்ல, அவாள இங்க வரச் சொல்லு. அதுக்காக நாம அங்க மாத்திப் போகணுமா அம்பு?”
“இப்ப என்ன, எங்காத்துலயே போய் இருக்கணும்னா நான் சொல்றேன். எங்காத்துக்குப் பக்கத்துலயோ ரெண்டு தெரு தள்ளியோ வீடு பார்த்துண்டு போகலாம். இங்கே கோவில்ல பண்ற வேலையை அந்த பெருமாள் கோவில்ல நீங்க பண்ணப் போறேள். இங்கே சந்தான ஸ்ரீனிவாசன், அங்கே வரதராஜ பெருமாள். பெயர்தான் வித்தியாசம், ரெண்டும் பெருமாள் வாசம் செய்யற கோவில்தானே?”
“அதுக்கில்ல அம்பு, இது பெரிய ஊர். கோவிலுக்கு வர கூட்டம் அதிகம். வரும்படியும் நமக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருக்கு. அங்க அப்படி எதிர்பார்க்க முடியாது மா.”
“அதெல்லாம் எங்க அப்பா பார்த்துப்பார். சும்மா தேடித் தேடி காரணம் சொல்லாதீங்கோ.”
அதற்குமேல் வாதம் செய்ய விரும்பவில்லை ராகவன். இப்படி மூன்று வருடங்களுக்கு முன் ஜாகை மாற்றி இந்த ஊருக்கு வந்ததும், ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது.
வரதராஜ பெருமாள் கோயிலில் மாமனாரின் சிபாரிசில் வேலையும் வருமானமும் நன்றாகவே இருந்தது. அம்புஜம் தினமும் பிறந்த வீட்டிற்கும் தன் வீட்டிற்கும் நடையாய் நடந்தாள்.
ஆறு மாதங்களில் எதிர்பாராத விதமாக எல்லாமே தலைகீழாக மாறிப்போனது. தனியாரின் நிர்வாகத்தில் இருந்த அந்தக் கோயிலில், நிர்வாகம் செய்த பெரியவர் தவறிப் போக, அவர் மகன் நிர்வாகப் பொறுப்பைக் கையில் எடுத்தான்.
நியாயம், நேர்மை, பக்தி என்றிருந்த பெரியவருக்கு நேர்மாறாக இருந்தான் மகன். அவனுக்கு ஜால்ரா அடித்தவர்களை முக்கியமான சந்நிதிகளில் நிரந்தர பணியில் பூஜைக்கு நியமித்தான். வயதில் பெரியவர்களாக, நேர்மையாக இருந்த ராகவன் ஆண்டாள் சந்நிதிக்கும், வரதன் ராமர் சந்நிதிக்கும் மாற்றப்பட்டனர்.
அன்றிலிருந்து வீட்டில் வறுமை நடமாட ஆரம்பித்தது. ராகவன் இரண்டரை வருடங்களாக ஆண்டாள் சந்நிதியில் அர்ச்சகராக இருக்கிறார். கோயிலில் கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. சனிக்கிழமை, வியாழக்கிழமை, ஏகாதசி நாட்களில் எல்லாம் நிறையவே கூட்டம் வரும். ஆனால் ஆரத்தித் தட்டில் பத்து, இருபது, ஐம்பது, நூறு என விழுவதெல்லாம் பெருமாள், தாயார், ஆஞ்சநேயர் சந்நிதிகளில்தான்.
ஆண்டாள் சந்நிதியில் நின்று நிதானமாக வேண்டிக் கொள்வோர் ஒரு சிலரே. அவர்களும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் எனச் சில்லறைகளைத் தேடித் தேடி ஆரத்தித் தட்டில் போடுவார்கள். அர்ச்சனை செய்வதற்கும் யாரும் ஆண்டாள் சந்நிதிக்கு வருவதில்லை.
இதுபோன்ற சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதால்தான் ராகவன் மிகவும் தயங்கினார். இருக்கும் நல்ல வேலையை விட்டுவிட்டு யாராவது இப்படி வலிய வந்து சிக்கிக் கொள்வார்களா? ஆனால் ராகவன், இது குறித்து தன் மாமனாரிடம் வருத்தப்படவோ, அம்புஜத்திடம் கோபப்படவோ இல்லை. இந்த நேரத்தில் இந்த இடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது தனக்கு இறைவன் இட்ட கட்டளை என்றே நினைத்தார்.
அம்புஜம்தான் மிகவும் மனஅழுத்தத்திற்கு ஆளானாள். அவளின் பிடிவாதம் அவளுக்கே பாதகமானதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அவள் பெற்றோர்களிடம் புலம்புவாளே ஒழிய, வயதானவர்களிடம் ஆதங்கம் முழுவதையும் கொட்ட முடியவில்லை. அதுவும் ராகவன் தலையில்தான் விடிந்தது.
இப்படி ஆரம்பித்ததுதான், எல்லாவற்றிற்கும் எரிந்து விழுவது, தன் குற்றத்தை மறைக்க ராகவனை ஏதோ ஒன்று குறை சொல்லிக்கொண்டே இருப்பது என்று தினம் ராகவனுக்கு லட்சார்ச்சனைதான்.
மனதுக்குள் ஆயிரம் வேதனைகள் இருந்தாலும் அனைத்தையும் மௌனமாகவே கடந்தார் ராகவன். அது அவரது இயல்பு.
“அவா அவா என்னென்னவோ பண்ணி சட்டுனு முன்னுக்கு வரா. எல்லாத்துக்கும் வாயைத் தொறந்து தைரியமாப் பேசணும். எப்பவும் மௌனவிரதம் இருக்கிறாப்போல இப்படி பேசாம இருந்தா நல்லா மிளகாய் அரைப்பா. நிர்வாகத்துல இருக்கிறவா சொல்றதைக் கேட்டுண்டு கொஞ்சம் முன்னபின்ன நடந்தா என்ன உங்களுக்கு? பெருமாளுக்குக் கைங்கரியம் பண்ற சேஷா மாமா, அர்ச்சனைக்கு வரவா வெளில அர்ச்சனை டிக்கெட் வாங்கிண்டு வந்தாலும், நூறைக் கொண்டா, ஐநூறைக் கொண்டா, பேஷா அர்ச்சனை பண்றேன். பிரசாதம் தரேன். பெருமாளுக்கு சாத்தின மாலை தரேன்னு தினுசு தினுசாப் பேசி நல்லா வருமானம் பார்க்கறார். அதுல கொஞ்சமாவது சமத்து உங்களுக்கு வேண்டாமா?”
“என்னைப் பத்தித் தெரிஞ்சுண்டே இப்படிப் பேசறியே அம்பு. கோவிலுக்கு வரவா நிம்மதியைத் தேடி வரா. அவாளோட பிரார்த்தனையை நாம வியாபாரமாக்கக் கூடாது.”
“போதும், ஆரம்பிக்காதீங்கோ உங்க வியாக்கியானத்தை. உருப்படியா முன்னேற வழி சொன்னா, வேண்டாத நியாயம் பேசறேள். எல்லாம் என் தலையெழுத்து.”
இப்படி அம்புஜத்தின் புலம்பல் தொடர்கதை. அதனாலேயே ராகவன் எதுவும் பேசுவதே இல்லை.
ராகவன் கோயிலுக்கு வந்து சேர்ந்தபோது மணி காலை ஐந்தே முக்கால். வெளிச்சம் பாதி வந்திருந்தது. கோயிலை அடைந்ததால் ராகவன் மனதிலும் கவலை இருள் நீங்கி வெளிச்சம் பரவியது. பெருமாள் தாயாரைத் தரிசித்து, தன் வேலைகளில் மும்மரமானார். அவர் மனதில் இப்போது வேறு எந்த சிந்தனையும் இல்லை.
சேவிக்க வரும் பக்தர்களுக்கு சிரத்தையுடன் தீபாராதனை காட்டினார். மஞ்சள் பிரசாதம் வழங்கினார். தட்டில் விழும் தட்சணையைப் பற்றி அவர் கண்டுகொள்ளவே இல்லை. பெருமாள், தாயார், ஆஞ்சநேயர் சந்நிதிகளில் அர்ச்சனைகளும், ஆராதனைகளும் வெகுஜோராக நடந்து கொண்டிருக்க, ராகவன் மானசீகமாக பகவானுக்கு சகஸ்ர நாமங்களால் அர்ச்சனை செய்துகொண்டிருந்தார்.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings