எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சொக்கநாதபுரம் கிராமம், அன்று ஊரே மயான அமைதி , அனைவரின் வீட்டின் முன் கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது.
ஊரின் நிரந்தர தலைவர் என்றும் , ஊர் பெரிய தலை என்றும் , ஊர் தலைக்கட்டு என்றும் அழைக்கப்பட்டு வந்த சுந்தரம், (வயது 70) நேற்று இரவு உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். மனைவி மீனாட்சி. மகன்கள் இருவர் .
சுந்தரத்தின் வீட்டு முன் இருந்த பெயர் பலகையில் , நிரந்தர தலைவர் சுந்தரம் என்று இருந்தது. அதன் பக்கத்தில் “சாதிகள் இல்லையடி பாப்பா” , “அனைவரும் சமம்” என்ற வாசக பலகையும் இருந்தது.
சுந்தரத்தின் இறப்பு செய்தி கேட்டு அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சொக்கநாதபுரம் வந்து சென்ற மயம் இருந்தனர். சாதி ஒழிப்பு போராட்டம் நடத்தி , பலமுறை சிறை சென்றவர். அனைவரும் சமம் என்று கூறும் நல்லவர். அதனால் தான் ஊரின் நிரந்தர தலைவர் என்று கூறி , அவரே இறக்கும் வரை தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
சொக்கநாதபுரம் கிராமத்தின் சொக்கதங்கம் இந்த சுந்தரம். சுந்தரம் மகன்கள் இருவரும் அவருக்கு நேர் எதிர். தந்தை சுந்தரம் ஊருக்காக அள்ளி கொடுத்து , மக்களுக்காக வாழ்ந்தார் . மகன்கள் அதனை ஏற்பது இல்லை.
மேல் சாதி – கீழ் சாதி என பிரிவினை எண்ணம் கொண்டவர்கள். தனக்கு கீழே வேலை செய்பவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். தரம் பிரித்து நடத்தும் குணம். நம் பணம் அவர்களுக்கு ஏன் செலவு செய்ய வேண்டும் , என்று கூறி தந்தைக்கு தெரியாமல் வட்டிக்கு கொடுத்து , வசூல் செய்வார்கள். தந்தை சுந்தரதிடம் பலமுறை இதற்காக திட்டு வாங்கியும் , அடி வாங்கியும் திருந்தவில்லை இருவரும்.
ஊர் முழுவதும் ரேடியோ வைத்து , அழுகுரல் எங்கும் கேட்க்கும் படி , தன் தந்தையின் மரணத்தை ஊர் திருவிழா மாதிரி , ஊரே மெச்சிக்கொள்ளும் விதம் நடத்தி அதன் மூலம் தன் சாதியின் பெருமையை காட்ட வேண்டும் மகன்களுக்கு ஆசை.
ஊருக்கு நல்லது செய்து பழகிய சுந்தரம் , அவரின் மரணத்திற்காக , அவரின் நல்ல குணதிற்க்காகவும் கிராம மக்கள் மிகவும் பொறுமையாக இருந்தனர். தன் தந்தையின் இறுதி ஊர்வலம் துவங்கிய போது, கிராமத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் வெடி வைத்து ஆரவாரம் செய்த படி , அலப்பரையாக கிளம்பினர்.
மகன்களின் செயல்கள் கிராம மக்களை முகம் சுளிக்க செய்தது. இருப்பினும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க , ஊரே அவரின் இறுதி ஊர்வலத்தில் வர வேண்டும் என்ற கட்டளை விடுத்தனர்.
அவர்களை பகைத்து கொள்ள முடியாமல் , வேறு வழியின்றி மக்களும், தலைவர் சுந்தரத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். ஊர்வலத்திற்கு அனைவரும் கலந்து கொண்டனர். ஊர்வலம் துவங்கியது.
அந்த ஊருக்கு ஒரே ஒரு சாலை. அதன் வழியாக அந்த ஊரை விட்டு தான் வெளியில் செல்ல முடியும். அந்த ஊருக்கு மயானகரை , தலைவர் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் இருக்கும். அதுவரை மக்களும் நடந்தே வந்து கொண்டு இருந்தனர்.
தாரை தப்பட்டை , வெடி , ஆட்டம் பாட்டம் என்று ஊரே அசந்து போகிற அளவிற்கு இறுதி ஊர்வலம் நடந்து கொண்டு இருந்தது. மகன்கள் இருவரும் ரொம்ப திமிராக , முன் நின்று சென்றனர். தந்தையின் இறப்பு அவர்களுக்கு துளி அளவு கூட வருத்தம் தரவில்லை.
கிராம மக்கள் கூட அவரின் இறப்புக்கு , கண்ணீர் சிந்திய படி இருந்தனர். தலைவரின் மீது இருந்த உண்மையான பாசத்தினால் , இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட , அவர்கள் வீட்டு வேலைக்காரியின் மகள் , செல்லதாய் நிறை மாத கர்ப்பிணி.
செல்லத்தாய் நடக்க முடியாமல் , திணறினாள். கிராம மக்கள் அவளை வர வேண்டாம் என்ற போதும் , தலைவருக்காக வருவேன் என்று நடக்க ஆரம்பித்தாள் செல்லத்தாய். அவளுக்கு வயிறு வலி ஆரம்பித்த நேரம் , தடுமாறினாள் செல்லத்தாய். உடனே முன் சென்று கொண்டு இருந்த தலைவரின் மகன்களுக்கு தகவல் சொல்லப்பட்டது.
வேலைக்காரியின் மகளுக்காக, என் அப்பாவின் இறுதி ஊர்வலத்தை ஓரம் கட்ட அவர்கள் மனம் ஏற்கவில்லை. வலியின் வேதனை பொருத்து கொள்ள முடியாமல் தவித்தாள், தலைவர் வீட்டு வேலைக்காரியின் மகள் செல்லத்தாய்.
இவ்வளவு செலவு செய்து , இறுதி ஊர்வலம் நடத்தும் தலைவரின் மகன்கள் , பிரசவ வலியால் தவிக்கும் வீட்டு வேலைக்காரியின் மகளுக்கு வழி கொடுக்க மனது இல்லை.
நம்ம சாதி தலைவர் , ஊர் தலைவர் , என் அப்பாவுக்கு இறுதிமரியாதை செலுத்த ஊரே போயட்ருக்கு , அதனை கெடுக்கும் விதமாக , கீழ் சாதிகார மகளின் பிரசவ வலிக்கு பாதை விட்டா, என் சாதி சனம் தப்பா பேச மாட்டங்க. கொஞ்ச நேரம் பொருத்துக்க சொல்லு என்று பதில் அவர்களுக்கு அனுப்ப பட்டது.
பிரசவ வலி அதிகமாக – செல்லத்தாய் வலியினை பொறுக்க முடியாமல் மயக்கம் அடைந்தாள். சாலையில் கீழே விழுந்தாள். சில பெண்கள் உதவி செய்ய முன் வந்த போதும் , தலைவரின் மகன்களின் கட்டளை படி , இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நகர்ந்தனர்.
செல்லதாயின் அம்மா , மற்றும் செல்லதாயின் கணவர் இருவரும் மட்டுமே அவளின் அருகில் நின்று செய்வதறியாது தவித்தனர். சில நிமிடங்களில், குழந்தையின் அழுகுரல். அழகான ஆண் குழந்தை. செல்லத்தாய் கண் திறக்கவில்லை.
ஆண் குழந்தையை தன் அம்மா – கணவரிடம் கொடுத்து செல்லதாய் கண்களை மூடி விட்டாள். குழந்தையின் அழுகுரல் சப்தம் , இறுதி ஊர்வலத்தில் முன் சென்று கொண்டு இருந்த தலைவரின் மகன்களின் காது படும் படி சப்தம் கேட்டது.
செல்லத்தாய் இறந்து விட்டாள். அவளின் அம்மா – செல்லத்தாய் கணவன் இருவரும் கண்களில் கண்ணீருடன் , கையில் குழந்தையை ஏந்திய படி இருந்தனர்….
# அங்கு நடப்பது இருவருக்கான இறுதி ஊர்வலம் ஆனது.
# சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் வரிகள், பாட நூல்களில் மனப்பாடம் செய்வதற்காக மட்டும் தானா ???
# இன்றைய உலகிலும் சாதி – ரீதியான பிரச்சனைகள் நடந்து கொண்டு இருப்பது மிகவும் வேதனையான ஒன்று.
எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings