in ,

காஸ்ட்லி காமாட்சி (சிறுகதை) – ஜெயந்தி.M

எழுத்தாளர் ஜெயந்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

திருப்பச்சேத்திரம் என்று அழைக்கப்படும் அந்த ஊர், தாமரையுடன் குளம் மலரும், குழந்தைகள் சத்தம் எழும், மாலை நேரத்தில் மல்லிகை வாசம் காற்றில் கலக்கும் ஊர்.அந்த ஊரின் அரசு மேல்நிலைப் பள்ளி தான் எல்லோருக்கும் பெருமை. அங்கு தமிழ் ஆசிரியையாக இருந்தவள் — காமாட்சி.

காலை ஒன்பது மணிக்கு காமாட்சியின் பைக் ஒலி தெருவில் கேட்டாலே, மாணவர்கள் சிரித்துக் கொண்டே ஓடிவந்து விடுவார்கள். அவள் எப்போதும் புன்னகையுடன், சிறிய சாயம் போட்ட நெற்றியில் ஒரு புள்ளியாகப் பொட்டு, சிம்பிளான புடவை, தோளில் பை, வாயிலில் ஒரு நகைச்சுவை. அவள் வந்தால் பள்ளி உயிர் பெறும்.

“மேடம், இன்று பாடம் எது?” என்று குழந்தைகள் கேட்டால், அவள் சிரித்து, “இன்று பாடம் ‘வாழ்வில் சிரிப்பின் அர்த்தம்!’ — நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்பாள்.

அந்தக் காமாட்சியைப் பற்றி ஊர் மக்களுக்கே ஒரு பாசம் இருந்தது. ஆனால் அவளது பெயருக்கு பின்னே ஒரு விசேஷம் — ‘காஸ்ட்லி காமாட்சி’ என்று குழந்தைகளே வைத்த பெயர். ஏனெனில் அவள் மிகவும் ‘costly’ மனம் கொண்டவள் — எந்தச் சின்ன விஷயத்திலும் பெரும் அன்பு காட்டுவாள், அவள் பாசம் விலையில்லாதது.

ஒரு நாள் பள்ளிக்குப் புதிய ஆசிரியர் வந்தார். பெயர் — ராஜா, கணித ஆசிரியர்.நகரத்துப் பாணி, நாகரீகத் தோற்றம்.பள்ளி மாணவர்களுக்கு அவர் புதியதாய், ஆசிரியர்களுக்குப் பேசிக்கொள்ளும் புதுமையாக இருந்தார் அவர்.

முதல் நாளே அவன் ஊர் பாணி புரியாமல் திணறினான். குழந்தைகள் “மேடம், மழை போயிடுச்சு” என்று சொன்னதும், அவன் “yes, yes, it’s rain…” என்று ஆங்கிலத்தில் பதில் சொல்ல, மாணவர்கள் சிரித்து, “சார், நாங்க தமிழ் பேசுறோம்!” என்று சொல்லினர்.

அவனைக் காப்பாற்ற வந்தது காமாட்சி தான்.”பரவாயில்லை சார், நம்ம ஊரு பிள்ளைகள் இப்படி playful-ஆ பேசுவாங்க,” என்று சிரித்தாள். அந்த ஒரு சிரிப்பு ராஜாவின் மனத்தில் எங்கோ பதிந்தது.

அந்த நாள் முடிவில், ராஜா தனது டையை சரிசெய்து கொண்டே, “உங்க பெயர் காமாட்சி தானே? எல்லாரும் காஸ்ட்லி காமாட்சினு சொல்றாங்க, அதென்ன?” என்று கேட்டார்.அவள் சிரித்தாள், “அது ghostly இல்ல, costly — எனக்கு affection அதிகம், அதனாலதான்!”ராஜா சிரித்தார், “அது உண்மைதான் போல.”இருவரும் சேர்ந்து வேலை செய்த நாட்கள் இனிமையாகச் சென்றன. பள்ளிப் பாடங்களில் போட்டி, குழந்தைகளுக்கு நாடகம், மழலையர் தின விழா — எல்லா நிகழ்ச்சிகளிலும் காமாட்சியும் ராஜாவும் இணைந்து உழைத்தனர்.

மாணவர்களின் சிரிப்பு, ஆசிரியர்களின் பாராட்டு, ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் நொடிகள், தேடல் நிமிடங்கள், இணைந்து முடிவுகளை எடுத்தல், பயிற்சிகளில் புதுமை என்று  இவை எல்லாம் அவர்களை மிகவும் நெருக்கமாக்கின.

ஆனால் ஊருக்குள் வேறொரு பார்வை. “காமாட்சி மேடம், ராஜா சார் உடன் நிறைய நேரம் செலவழிக்கிறாரே!” என்று துவங்கிய பேச்சு, “இருவரும் காதலிக்கிறாங்கன்னு!” என்பதில் முடிந்தது. அந்தச் சொற்கள் காமாட்சியின் காதில் விழுந்தது.

மாலை வீட்டுக்குத் திரும்பியபோது, அவள் கண்ணாடியில் தன்னையே பார்த்தாள். “எதற்காக எல்லாரும் பெண்ணை மட்டும் குறை சொல்லுறாங்க? எனக்கும் மனசு என்று ஒண்ணு இருக்கு தானே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

அடுத்த நாள் பள்ளியில், அவள் வழக்கமான சிரிப்புடன் இருந்தாலும், உள்ளுக்குள் சிறிது கலக்கம். அதைக் கவனித்த ராஜா  “என்ன காமாட்சி மேடம், சிரிப்பு சின்னதாயிருக்கு இன்று?” என்று கேட்டார்.

அவள் சொன்னாள், “சில சின்னச் சின்னப் பேச்சுக்கள் தான், அது வருத்தமா இருக்கு.” என்றாள். ராஜா நிதானமாக, “நாம் நல்லவங்கனா, மத்தவங்க சொல்றதுக்காக வருத்தப் படணுமா?” என்று கேட்டார். அந்த வார்த்தை காமாட்சியின் மனத்தில் ஆறுதலாக நிறைந்தது.

ஒரு நாள் மாலை பள்ளி முடிந்ததும், மழை கொட்டித் தீர்க்கத் தொடங்கியது. மழையின் வாசமும், மண்ணின் நறுமணமும் காற்றில் கலந்தது.காமாட்சி குடையில்லாமல் பள்ளி வாசலில் நின்றாள்.

அங்கே ராஜா பைக்குடன் வந்தார். “மேடம், ஏறுங்க, மழை விடாது.”வண்டி நனைந்துவிடும்!” அது கூட பரவாயில்லை.ஆனால் “நீங்க நனைந்தா தான் பிரச்சனை!” என்று சிரித்தார். அவள் மனம் திகைத்தது.மழை வழியாக இருவரும் ஊர்சாலையில் பறந்தபடி சென்றனர்.

அந்த ஒவ்வொரு துளியும் ஒரு நினைவாயிற்று.அவள் மெல்லச் சொன்னாள், “ராஜா சார்…” “ஹும்?” ” நீங்க நல்லவங்க தானே?” அவர் சிரித்தார், “அதை நீங்க சொன்னால்தான் நல்லா இருக்கும்.”மழையில் துளிகள் முகத்தில் பட்டபடி இருவரின் பார்வை சந்தித்தது. காமாட்சியின் உள்ளம் சொல்லாத சொல்லால் நாணத்திலும் நெகிழ்ச்சியிலும் நிரம்பியது.

ஒரு வருடம் கழித்து அவர்கள் பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள், ஊரார் என அனைவரும் கூடியிருந்தனர்.பள்ளித் தலைமை ஆசிரியர் மேடையில் அறிவித்தார் —

“இந்த ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருது, மாணவர்களின் மனதில் அளவில்லாப் பாசத்தை விதைத்தவர் அவர் வேறு யாரும் அல்ல— நம் காஸ்ட்லி காமாட்சி மேடம் தான்!”.அவள்  எழுந்தாள். மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.

விருதை வழங்க வந்தவர் — ராஜா. அவளுக்கு  மலர் கொத்தினைக் கொடுத்துச் சிரித்தார்.அவள் மைக்கில் பேசினாள்:

“காஸ்ட்லி காமாட்சி என்பதற்கான எனது பெயரின் பொருள் நான் costly  ஆன பொருட்களைப் பயன்படுத்துபவள் அல்ல—அன்பு, மனம், நேர்மை — இவையெல்லாம் விலை கொடுத்து வாங்க முடியாதவை. நான் அதை என் மாணவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.கற்றுக்கொண்டேன்.கொடுத்தும் மகிழ்கிறேன்” என்றாள்.

கைத்தட்டல் முழங்கியது.ராஜாவின் பார்வை அவள்மேல் நிலைத்தது —அந்தப் பார்வை சொல்லாமலே எல்லாவற்றையும் கூறியது.மாலையில் பள்ளி காலியாகிவிட்டது.காமாட்சி மலர் குத்துவிளக்கை அணைக்கப் போனாள்.ராஜா அருகே வந்தார்.

“காமாட்சி, ஒரு கேள்வி கேட்கலாமா?”

“சொல்லுங்க சார்.”

“நீங்க வாழ்க்கையில் ஒருவரை நம்ப முடியுமா?”அவள் சிரித்தாள், “முடியும். ஆனால் அந்த நம்பிக்கை ஒரு ஆசிரியர் மாணவர்க்கு கொடுக்கும் அளவு துல்லியமாக இருக்கணும்.” அவன் மெதுவாக, “அப்படியா? அப்படின்னா நம்பிக்கையோடு வாழ்வோம்,” என்றார்.அவள் சிரித்துத் தலையசைத்தாள்.

மழை பெய்யத் துவங்கியது.அந்த மழை அவர்களுக்குப் பழைய நினைவுகளின் நிழல் போல இருந்தது.காமாட்சி மனதில் சொன்னாள்.

“நான் அளவில்லாத பாசத்துக்குச் சொந்தக் காரி தான். அதனால்தான் மக்கள் என்னைக் ‘காஸ்ட்லி காமாட்சி’ன்னு அழைக்கிறாங்க.”அந்த மழையில் அவள் சிரிப்பு மழைத்துளிகளாய்க் கலந்தது.அது அந்த ஊரில் அவர்கள் நினைவாகவே என்றும் நிரந்தரமானது.

எழுத்தாளர் ஜெயந்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சோறு (சிறுகதை) – ஜெயந்தி.M

    மருதம் (சிறுகதை) – ஜெயந்தி.M