எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ரகு ஆபீஸ் முடிந்து டயர்டாக உள்ளே நுழைந்தான். பக்கத்து வீட்டு கமலா அவன் அம்மா வசுமதியோடு பேசிக் கொண்டிருந்தாள். அவ்வளவுதான் ஊரில் உள்ள அத்தனை தலையையும் கமலா அம்மா உருட்டுவாள்.. வசுமதி புறம் பேசும் குணம் கொண்டவள் இல்லை என்றாலும் இந்த ஊர் கதையை எல்லாம் கேட்க பிடிக்கும். அதற்காக ரகு அடிக்கடி அம்மாவுடன் சண்டை போடுவான்.
” அடுத்த வீட்டு விஷயம் எல்லாம் நமக்கு எதுக்கு ? அந்த அம்மா வந்தா யாரைப் பற்றியும் பேசாதீங்க… எனக்கு யாரை பத்தி பேசினாலும் பிடிக்காதுன்னு தைரியமா சொல்லு…அடுத்தவங்கள பத்தி.. அடுத்த வீட்டு விஷயத்தை பத்தி.. பேசுறது அநாகரீகம்” என்பான்.
ரகுவைப் பற்றி தெரியும் என்பதால் கமலா அவசரமாக வசுமதியிடம்…
” நான் சொன்னதை நினைவில் வச்சுக்கோ.. நாளைக்கு வெள்ளிக்கிழமை சாயங்காலம் போயி கோயில்ல விளக்கேத்திட்டு வந்துரு ராகு காலத்துல அந்த அம்மனுக்கு விளக்கு போட்டா நெனச்சது நடக்கும்..ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன் .. விளக்கு போட்ட பிற்பாடு தான் தான் இந்த பக்கத்து வீட்டு வசந்தாவுக்கு நல்லது நடந்தது …” என்று போகிற போக்கில் சொல்லியபடியே வெளியே நடந்தார் கமலா.
உள்ளே வந்த ரகு முகம் கை கால் கழுவிக்கொள்ள காபியை கொண்டு வந்து கொடுத்தாள் அவன் மனைவி அகல்யா …ஏனோ வழக்கத்தை விட மனைவியின் முகம் வாட்டமாக இருப்பது போல தோன்றியது ரகுவுக்கு.
தங்களுக்குத் திருமணமாகி ஒரு வருடமாகியும் இன்னும் குழந்தை பேறு கிடைக்கவில்லை என்பதை கமலாம்மாவும் ,அம்மாவும் பேசியிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்தது. அதுதான் அகல்யா முகம் வாடி இருக்கிறதோ.. இதைப் பற்றி ஒருநாள் அம்மாவிடம் கேட்க வேண்டும் என்று மனதிற்குள் கறுவிக்கொண்டான் ரகு …
மறுநாள் அகல்யா வசுமதியுடன் கோயிலுக்கு போவதாக அவனுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாள். வீடு திரும்பும் வழியில் தான் கோயில் என்பதால் ரகு காரை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் நுழைந்தான். வசுமதியும் அகல்யாவும் ஆளுக்கு ஒரு தீபம் அம்மனுக்கு ஏற்றிக் கொண்டிருந்தார்கள் …
மனதிற்குள் கடுப்பாக வந்தது ரகுவுக்கு.. சாமி கும்பிட்டதும் இருவரையும் கூட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவன் அம்மாவிடம் கத்தினான்..
“எங்களுக்கு குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும்.. அதுக்காக நீ அகல்யாவை வருத்தப்படுத்தாதே.. எதற்காக அவளை கோயிலுக்கு கூட்டிட்டு போய் விளக்கு போட சொல்ற.. ராகு காலத்துல போட்டா குழந்தை பிறக்கும்னு கமலா அம்மா சொன்னாங்களா?”
அகல்யாவும் வசுமதியும் திகைப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் …
“ஏண்டா என்னைப் பற்றி நீ எப்படி ஒரு தப்பான அபிப்பிராயம் வச்சிருக்க ..நீ பிறப்பதற்கு நாலு வருஷம் ஆச்சு.. அந்த கேள்வியை..அதுதான் ஏதும் விசேஷம் உண்டாங்கிற கேள்விய நான் எத்தனை தடவை எத்தனை பேர் கிட்ட சந்தித்திருப்பேன்.. நானே என் மருமகளை வருத்தப்படுத்துவேனா “
பொழுது போறதுக்கு கமலாகிட்ட ஏதாவது பேசுவேனே தவிர யாரையும் புண்படுத்த எதையும் கேட்க மாட்டேன்..” என்றாள் வருத்தத்தோடு..
“ஏங்க அத்தை யாரையாவது மனசு நோக என்னைக்காவது பேசியிருக்காங்களா? அப்படிப்பட்டவங்க என்கிட்ட அப்படி கேட்பாங்களா? நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு பேசுறீங்க !”
“நேத்து கமலாம்மா விளக்கு போட்டா நல்லது நடக்கும்ன்னு அம்மாகிட்ட சொன்னாங்க. நீயும் முகம் வாடினாபுல இருந்த ..அதுதான் அம்மா உன்னை ஏதாவது பேசி புண்படுத்திட்டாங்களோன்னு நினைச்சுட்டேன் ..”
“நல்லா நினைச்சீங்க …என் தங்கை தாராவ நாளைக்கு பெண் பார்க்க வராங்க.. ஏற்கனவே மூணு நாலு வரன் வந்து பார்த்துட்டு அமையல.. அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க அத அத்தைகிட்ட சொன்னேன் அப்பதான் இந்த கோயில்ல ராகு காலத்துல விளக்கு ஏத்தினா கல்யாணம் கூடி வரும்னு கமலா மா சொன்னத அத்தை சொன்னாங்க.. அதனால நாங்க ரெண்டு பேரும் போயி இப்ப பாக்குற வரனாவது அவளுக்கு கூடி வரட்டும்னு விளக்கு போட்டுட்டு வந்தோம்…”
அவள் பேச பேச ரகுவின் முகத்தில் அசடு வழிந்தது…
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings