எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ரம்யா கண் விழித்துக் கொண்டாள். நேரம் காலை ஆறு மணி: நேற்று அவளுக்குப் பிறந்த நாள். அப்பா ஒரு சிறிய டின்னருக்கு ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த அனைவரும் அவளை வாழ்த்தினார்கள். அது மிகவும் மகிழ்வான தருணமாக இருந்தது.
நேற்று அவர் ரம்யாவிற்கு கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாகத் தந்தார். அனலாக் குவார்ட்ஸ் வகையிலான கடிகாரம் அது: அழகும் நளினமும் நிறைந்தஇ மெலிதான சற்றே பெரிய வட்ட வடிவிலான மார்பிள் மினுமினுப்புடன் கூடிய கருப்பு நிற டயல்: அதே நிறத்திலான் கடினமான ஃபைபர் கேஸ் ரோஸ்கோல்டால் ஆன நேரம் காட்டும் ரோமன் எண்கள் மற்றும் குறிமுட்கள் அதே கருப்பு நிற இருஓரமும் நுணுக்கமான தையலுடன் ஆன லெதர் ஸ்டாரப் என அந்தக் கடிகாரம் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.
“ஒன்பதாம் வகுப்பு படிக்குற பொண்ணுக்கு இருபதாயிரத்துல கைக்கடிகாரம்ங்குறது கொஞ்சம் அதிகம்தான்! இருந்தாலும் நீ பத்திரமா வைச்சுக்குவங்குற நம்பிக்கைல வாங்கித் தர்றேன்!” – என்றார் அவர். டின்னருக்கு வந்திருந்த அனைவரும் அவளின் ஆடை நேர்த்தியையும் அணிந்திருந்த கடிகாரத்தையும் பாராட்டிச் சென்றார்கள்.
அந்தக் கடிகாரம் அவள் படிக்கும் மேஜை மீது திறந்த பேழையில் அவள் பார்வையில் படும்படி இருந்தது. ஜன்னல் திரைச்சீலை ஊடாக வந்த மெல்லிய வெளிச்சம் அதன் மீது பட்டுக் கொண்டிருந்தது. அப்போதுதான் ரம்யா கவனித்தாள் அதன் டயல் கருப்பாக இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்ந்தது. அது கண்ணைப் பறித்தது.
அப்பாவிடம் உணவு மேஜையில் “கடிகார டயல் கருப்பா இல்லாம ஆரஞ்ச் நிறமா தெரியுதுப்பா!” – என்றாள்.
“அப்படியா?” – என்று ஆச்சரியப்பட்டவர் “ஏதோ ஒரு கோணத்துல இப்படி நிறம் மாறித் தெரியுது போல! டபுள்கலரா கூட இருக்கலாம்!” – என்றார் அவர்.
“எனக்கும் அப்படித்தான் தோணுச்சு!” – என்றாள் ரம்யா. இருந்தாலும் கருப்பு எப்படி ஆரஞ்சாக மாறும் என்ற கேள்வி அவளுள் எழுந்தது.
அன்றைக்குப் பள்ளிக்கூடத்திற்கு ரம்யா அதைக் கட்டிக் கொண்டு போனாள். தோழியர் அனைவரும் கடிகாரம் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள்.
ஆனால் இந்து மட்டும் “இது என்ன கடிகாரம் மாதிரியா இருக்கு? கறுப்பு கலர்ல பெரிய தோசைக்கல்ல கைல கட்டுன மாதிரி இருக்கு!” – என்றாள்.
அவள் அப்படித்தான்: அவளுக்கும் ரம்யாவிற்கும் எப்போதும் ஆகாது. எல்லோரும் பாராட்டும் போது இவளால் மட்டும் எப்படி முகத்திற்கு நேராகக் குறை சொல்ல முடிகிறது? ரம்யா மனம் குமைந்து போனாள். முகம் கறுத்து விட்டது.
வகுப்பில் கொஞ்சமும் மனம் செல்லவில்லை. அப்போது யதேச்சையாகக் கடிகாரத்தைப் பார்த்தாள். கடிகாரம் அடர்; பழுப்பு நிறமாக மாறி இருந்தது. அதன் வடிவமும் அழகற்றதாகத் தெரிந்தது. இது எப்படி சாத்தியம்? ரம்யா வியந்து போனாள்.
கடிகாரம் என்ன வானவில்லா? அனைத்து நிறங்களையும் காட்ட? இது சாதாரணக் கடிகாரம் இல்லை. மாயக்கடிகாரம் என்பதைப் புரிந்து கொண்டாள். அவளுக்குக் கடிகாரத்தின் மீது ஒரு ஆர்வம் பிறந்தது.
விடுமுறை நாள்: ரம்யா அம்மா அப்பாவுடன் கோவிலுக்குச் வந்திருந்தாள். சாமி கும்பிட்டு விட்டு; பிரசாதம் வாங்கிக் கொண்டு வெளிப்பிரகாரத்தில் அமர்ந்;தார்கள். மனம் நிறைவாக இருந்தது. அப்போது கடிகாரம்; மஞ்சள் நிறத்திற்கு மாறியது.
அவளுக்கு உடனடியாக பொன் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சாமியின் திருவுருவும் அவரது மேனியின் மஞ்சள் நறுமணச் சந்தனப்பூச்சும் மனதில் நிழலாடியது. அவள் கடிகாரத்தை உற்றுப் பார்த்தாள். அது தனக்கு ஏதோ உணர்த்த விரும்புவதாகத் தோன்றியது.
ரம்யா வீட்டில் தனது படிக்கும் மேஜையின் முன் அமர்ந்திருந்தாள். கடிகாரம் அவள் முன்னால் இருந்தது. அப்போதுதான் கவனித்தாள். அது ‘ரேவன் கிளாசிக்’ எனும் மாடல் சேகரிப்பு வகையைச் சேர்ந்தது. இந்தக் கடிகாரம் உண்மையில் வானவில் கடிகாரம் தானா? அவள் சற்றுத் திகைத்துப் போனாள். இப்போது கடிகாரம் பேசியது.
“என்ன ஆச்சரியமா இருக்கா ரம்யா? ” – என்றது அது: அதன் குரலில் சிநேக பாவம்: ரம்யா சுதாரித்துக் கொணடு பேசினாள்.
“பின்னே! முதல்ல நிறம் மாறுன! இப்ப பேச வேற செய்யுற! திகைப்பா இருக்காதா?” – என்றாள். அவளே தொடர்ந்து “நீ ரொம்ப மர்மமா இருக்க! உன்னை நான் மாயானு கூப்படலாமா?” – என்றாள்.
“ஓ… தாராளமா?” – என்றது கடிகாரம்.
“எதுக்காக நீ நிறம் மாறனும்?” – கேட்டாள் ரம்யா:
“யோசிச்சுப் பாரு! புரியும்!” – என்ற கடிகாரம் அமைதியானது. ரம்யா யோசித்தாள்.
அவள் காலையில் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருந்த போது ஆரஞ்சு நிறம் காட்டியது. பள்ளியில் மனக்குழப்பமாக இருந்தபோது பழுப்பு நிறம்: கோவிலில் பக்தி உணர்வில் கரைந்திருந்த போது மஞ்சள் நிறம்: கடிகாரம் தனது உணர்வுகளுக்குத் தகுந்த மாதிரி நிறம் மாறுவதை ரம்யா பரிந்து கொண்டாள்.
ஒருநாள் ரம்யா தனது வீட்டாருடன் அருகில் இருந்த அணைக்கட்;டிற்கு பிக்னிக் சென்றிருந்தாள். மழைகாலம் என்பதால் அணையில் முழுகொள்ளவு தண்ணீர் நிரம்பி இருந்தது. அது காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அப்போது கடிகாரம் அடர் நீல வண்ணத்திற்கு மாறியது. அது மிக அழகாக இருந்தது. அவள் கடிகாரத்தை பார்த்தபடி நின்றிருந்தாள்.
“என்ன ரம்யா! கடிகாரத்தையே உத்துப் பாத்துக்கிட்டிருக்க?” என்றபடி அம்மாவும் அப்பாவும் அருகில் வந்தார்கள்.
“கடிகாரம் அப்பப்ப நிறம் மாறுதுப்பா! பாருங்க இப்ப ஊதா நிறமாத் தெரியுது!” என்றாள்.
“இல்லையே! கருப்பு டயலாத்தான இருக்கு?” என்றார்கள் இருவரும்:
“நீங்க வாங்குன மாடல் ‘ரேவன் கிளாசிக்’! ஆனா இப்ப அதோட பெயர் ‘வர்ணா கலர்ஸ்’னு மாறி தெரியுது பாருங்க!” – என்றாள் ரம்யா.
அப்பா சிரித்தார். அவரே தொடர்ந்து “உனக்குக் கடிகாரம் ரொம்பப் பிடிச்சுப் போச்சுனு நினைக்குறேன்! அதுனால அடிக்கடி அதைப் பத்திய கற்பனைக்குள்ள போயிற! இது தேவையில்லை! வழக்கமாக கட்டுற மத்த கடிகாரத்தைக் கட்டு! இதை எப்பவாவது முக்கியமான நாட்கள்ல்ல கட்டு போதும்!” என்றார். அவளுக்கு சற்று அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் ஏன் மாயாவின் மீது கொஞ்சம்; கோபம் கூட வந்தது. அவள் கடிகாரத்தைப் பார்த்தாள். மாயா சற்றே நிறம் வெளிறி பின்னர் பழுப்பாகி சிவப்பாகி மீண்டும் தனது இயல்பு நிறத்திற்கு வந்தது.
வீட்டில் தனது படிக்கும் மேஜையில் அமர்ந்திருந்தாள். கடிகாரம் அவள் முன்னால் இருந்தது. “என்ன அப்பாகிட்ட பல்ப் வாங்குனியா?” என்ற மாயா தொடர்ந்து “என்ன யோசிச்சியா? நான் என் நிறம் மாறுறேனு தெரிஞ்சதா?” – என்று கேட்டது.
“தெரியும்! என்னோட உணர்வுகளுக்குத் தகுந்த மாதிரி நீ நிறம் மாறுற! ஓவ்வொரு நிறமும் ஒவ்வொரு உணர்வின் குறியீடு! ஆரஞ்ச் உற்சாகம் பழுப்பு குழப்பம் மஞ்சள் மங்கலம் நீலம் ஏகாந்தம்” என்றாள் ரம்யா.
“பரவாயில்லை! புத்திசாலி பொண்ணுதான்! கண்டுபிடிச்சிட்ட! ஆனா நான் அதுக்காக மட்டும் நிறம் மாறல! மிகை உணர்வு!” – என்றது மாயா.
“மிகை உணர்வு…?” – புரியாமல் பார்த்தாள் ரம்யா.
“மகிழ்ச்சியா இருந்தா தலைகால் புரியாம ஆடுறது, வருத்தமா இருந்தா மூலைல முடங்கிக் கிடக்குறது, யாராவது அவமானப்படுத்துனா கூனிக்குறுகிப் போறது, கெடுதல் செஞ்சா அவங்களைப் பழிவாங்கத் துடிக்கறது, கோபம் வந்தா நிதானம் இல்லாம பேசுறது செயல்படுறதுன்னு பெரும்பாலும் மனுஷங்க மிகை உணர்ச்சிகளைத்தான் வெளிப்படுத்துறாங்க! இது அவங்களுக்கு கெடுதலைத்தான் உண்டு செய்யுது! அதுனால எந்த ஒரு சூழ்நிலையையும் இயல்பா கடந்து போற மனப்பக்குவத்தை நீ வளர்த்துக்கனும்! அதுக்காகவும் நான் நிறம் மாறுனேன்!” – என்றது மாயா.
“என்னோட உணர்வுகளைக் கட்டுபடுத்தி எல்லாச் சூழலையும் நான் இயல்பா கடந்து போக முயற்சி செய்வேன்! இது நிச்சயம் மாயா!” – என்ற ரம்யா தொடர்ந்து “உன்னைய மாதிரி உணர்வுகளைப் பிரதிபலிக்குற கடிகாரம் என்கிட்ட இருக்குறது ஒரு அதிர்ஷ்டம்தான்!” – என்றாள். கடிகாரம் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியானது.
அன்று இரவு ரம்யா ஆழந்த உறக்கத்தில் இருந்தாள். அப்போது ஒரு கருமைநிறப் புறா ஒன்று அவளின் படுக்கை அறைக்குள் நுழைந்தது. அது அவளது படிக்கும் மேஜை மீது அமர்ந்தது. அவளின் கடிகாரத்தை தனது அலகால் கொத்தியது.
இப்போது அதன் வாயில் ஒரு அழகிய வண்ணச்சிறகு: “ஏய்… அது என்னோட கடிகாரம்! அதைத் தொடாத!” – என்றபடி கைகளை நீட்டிய படி எழுந்து உட்கார்ந்தாள்.
கனவு. ஒரு பறவையின் சிறகுகொலி மெல்லத் தேய்ந்து மறைந்தது. திரைசீலை ஆடியது. புறா போய் விட்டதா? அன்றைய இரவுக்குப் பின் அவளின் கைக்கடிகாரம் என்றும் நிறம் மாறவில்லை. அதன் இயல்பு நிறத்தில்தான் இருந்தது.
அது இனிமேல் நிறம் மாறாது என்பது அவளுக்குத் தெரியும். அதனால் என்ன? உணர்வுகளை அவள் எப்படிக் கையாள வேண்டும் என்ற விலை மதிப்பில்லாத பாடத்தை அவளுக்குக் கற்றுத் தந்து விட்டதே?
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings