எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பவானி குளித்து விட்டு, கண்ணாடி முன்பு நின்று தலையில் சுற்றிய துண்டைக் கூட எடுக்காமல் கழுத்தில் இருந்த புதுமெருகு மாறாத மஞ்சள் கயிறைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உதடுகளை விட அழுதழுது அவள் கண்கள் சிவப்பாக இருந்தன.
‘நிஜமாகவே இது தாலிக்கயிறா இல்லை நல்ல விலைக்கு விற்றுவிட்ட ஒரு அடையாள அட்டையா?’ என்று யோசித்தாள்.
பவானியின் கணவன் ராம்குமார், “ஏய் பவானி… உடனே கிளம்பு, நான் சொன்னது புரிந்ததா?” என்றான் கடுமையான குரலில்.
பவானிக்குக் கோபம் பொங்கியது. ”நீங்கள் என்ன பிரெஞ்சில் சொன்னீர்களா இல்லை லத்தீன் பாஷையில் சொன்னீர்களா? அதே சுத்தத் தமிழில் வரதட்சிணை பாஷையில் தானே பேசுகிறீர்கள். நன்றாகப் புரிகிறது“ என்றாள் சுள்ளென்று.
“சொன்ன சொல்லைக் காப்பாற்ற துப்பில்ல, வாய் மட்டும் கிழிகிறது. நீ சீக்கிரம் புறப்படு. உன்னைக் கொண்டு போய் உன் அம்மா வீட்டில் தள்ளி விட்டு நான் ஆபீஸ் போக வேண்டும். விட்டால் நீ இங்கேயே தங்கி எங்களை நாட்டாமை செய்துகொண்டு இருப்பாய்” என்று உறுமினான்.
பவானிக்கு அம்மா வீடும் ஸ்ட்ராங்காக இல்லை, அம்மாவே இல்லை. அம்மா வீடு எங்கிருந்து வரும். அப்பா மட்டும்தான். அம்மா இடத்தில் ஒரு சித்தி. சித்தி கௌரிக்கும் இவள் மேல் ஒன்றும் பாசம் கொட்டவில்லை, ஆனால் கொடுமைக்காரி இல்லை.
கொஞ்சம் மனச்சாட்சிக்கு பயந்தவள் தான். பவானியின் அம்மா நகைகளையும், அவள் அம்மாவின் பழைய வீட்டையும் விற்றுத்தான் பவானிக்கு நகைகளும், சிறப்பாகத் திருமணமும் செய்து கொடுத்தார்கள்.
கதைகளில் வரும் மற்ற சித்திகளைப் போல் அதில் இடையில் புகுந்து கௌரி கொள்ளையடிக்கவில்லை. அப்பா ஒரு ரிடையர்ட் நடுத்தர வகுப்புப் பள்ளி ஆசிரியர். சித்திக்கு நல்லவேளையாக இரண்டு ஆண் பிள்ளைகள். ஆறாம் வகுப்பும் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள்.
பவானி நன்றாகப் படித்ததால் கார்ப்பரேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரையும், பிறகு அரசு கலைக்கல்லூரியில் ஸ்காலர்ஷிப் உதவியுடன் மாஸ்டர் டிகிரியும் முடித்தாள். சித்தி அவள் படிப்பதற்கும் எந்த இடையூறும் செய்யவில்லை.
அவள் அப்பாவின் பென்ஷன் சாப்பாட்டு செலவிற்கே சரியாக இருந்தது. அதற்கே இருபது தேதிக்குப் பிறகு மிகவும் நெருக்கமாக இருக்கும். கௌரிதான் செலவைக் கட்டுக்குள் வைத்து சிக்கனமாக செலவு செய்தாள்.
பவானிக்கே அவள் படும் அவஸ்தையைப் பார்த்து சில நேரங்களில் மனம் கஷ்டப்படும். அப்படி இருக்கும் போதுதான் பவானியின் யோசனைப்படி தினமும் மாலையில் டியூஷன் வகுப்பு தொடங்கினார்கள். பவானியும் கல்லூரியில் படிக்கும் போது அப்பாவிற்கு உதவியாக டியூஷன் வகுப்பு எடுத்தாள்.
இதில் அவள் தந்தை ஒரு தவறு செய்தார். பவானி மாஸ்டர் டிகிரி முடித்தவுடன் திருமணம் செய்து விட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அவருக்கு வயதாகி விட்டதென்றும், உடம்பில் பலம் இருக்கும்போதே அவருடைய கடமையை முடித்துவிட வேண்டும் என்றும் பிடிவாதம் செய்தார்.
இரண்டு வருடங்களாவது வேலை செய்து குடும்பத்திற்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று பவானி விரும்பினாள்.
சித்தியும், “உன் அப்பாவிற்கும் வயதாகிறது, அவர் ஆசையை நிறைவேற்ற வேண்டியது உன் கடமை. நீ வேலைக்குப் போய் சம்பாதித்து இந்த குடும்பத்திற்குப் போடலாம். அப்போதும் உலகம் என்னைத்தான் திட்டும். சொந்த அம்மாவாக இருந்தால் இப்படி வயதுக்கு வந்த பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்காமல் , சம்பாதிக்கவிட்டு சந்தோஷமாக இருப்பாளா என்பார்கள். உன் அம்மாவின் நகைகள் இருக்கின்றன. இப்போது நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து உனக்கு முடித்து விடலாம்“ என்றாள் அந்த பிழைக்கத் தெரியாத சித்தி.
கல்யாண புரோக்கர் மூலம் மாப்பிள்ளையானவன் தான் இந்த ராம்குமார். பவானியைப் பார்த்தவுடன் அவள் அழகில் மயங்கினான். திருமணத்தில் அவர்கள் வீட்டில் கேட்ட நூறு பவுன் நகைக்கும், ஒரு ஸ்கூட்டருக்கும் பவானியின் அப்பா எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் ஒத்துக்கொண்டதால், திருமணமும் பவானி அப்பாவின் செலவிலேயே நடந்தது.
திருமணமாகி ஒரு மாதம் தான் அவன் மனிதனாக இருந்தான். மனிதன் பாதி மிருகம் பாதி என்றுதான் இருந்தது அவன் பேச்சும், நடத்தையும். திருமணமான் மூன்றாம் மாதமே அவர்களின் தலை தீபாவளி வந்தது .தீபாவளி சீராக பவானி வீட்டில், ராம்குமாருக்கு ஒரு பவுனில் பிரேஸ்லெட்டும், அரை பவுனில் மோதிரமும் போட, நாகப் பாம்பாகச் சீறினான் ராம்குமார்.
“ஐந்து பவுனில் சங்கிலியும், ஒரு வைர மோதிரமும் போட்டால் தான் தலை தீபாவளிக்கு வர முடியும். உங்கள் பெண்ணை நீங்கள் அழைத்துக் கொண்டு போகலாம். நான் கேட்டதை ரெடி செய்து கொண்டு என்னைக் கூப்பிடுங்கள்“ என்றான் அந்த நரகாசுரன்.
சரியென்று தலையையாட்டிவிட்டுப் போனார்கள். ‘அவர்களால் அவ்வளவு செய்ய வசதியில்லையென்றும், தீபாவளிக்குச் செய்யத் தவறியதை எப்படியும் பொங்கலுக்கு செய்து விடுவதாக கெஞ்சினார் பவானியின் தகப்பனார். ஆனால் அவனோ, “உங்கள் பெண்ணை இப்போது கொண்டுவந்து உங்கள் வீட்டில் விட்டுவிட்டு நீங்கள் பொங்கலுக்கு சீர் செய்தவுடன் அழைத்துக் கொள்கிறேன்“ என்றான். அதனால் தான் அவளை அழைத்துக்கொண்டு அவள் அம்மா வீட்டில் விட்டுச் சென்றான் .
போகும் போது, “நகைகள் ரெடியானவுடன் சொல்லி, உங்கள் மகளை இங்கே கொண்டு வந்து விடுங்கள்“ என்று சொல்லி விட்டுப் போனான்.
“சரியான லூஸ்! தீபாவளிக்கும் பொங்கலுக்கும் உள்ள இடைப்பட்ட மூன்று மாதங்களில் லாட்டரியா அடிக்கப் போகிறது?“ என்று வாயைச் சுழித்து அழகு காட்டினாள் பவானி. அவள் தம்பிகள் இருவரும் அதை ரசித்து சிரித்தனர். சித்தியோ தலையில் தட்டிக் கொண்டு உள்ளே போய்விட்டார்.
பவானி எந்த வித உணர்ச்சியும் வெளிக்காட்டவில்லை. அவள் முகத்தில் துக்கமோ, சந்தோஷம் எந்த உணர்ச்சியும் இல்லை. அவளுக்கு ஒரு பழக்கம்.
எந்த சர்வீஸ் கமிஷன் தேர்விற்கு அறிக்கை வந்தாலும் அதில் கலந்து கொள்வாள். அப்படித்தான் திருமணத்திற்கு முன்பு ரெயில்வே சர்வீஸ் கமிஷன் எழுதியிருந்தாள். பிறகு திருமண ஜோரில் அதை மறந்தே விட்டாள். இப்போது அப்பாவிற்குத் துணையாக டியூஷன் எடுத்துக் கொண்டு இருக்கிறாள்.
திடீரென்று பவானியின் பெயருக்கு ஒரு ரிஜிஸ்டர் தபால் வந்தது. அதில் பவானி ரெயில்வே எக்ஸாம் தேர்ச்சியடைந்ததாகவும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்.
பவானி இப்போது வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை அவளுடைய இரண்டு தம்பிகளுக்கும் ஏதோ பாடம் எடுத்துக் கொண்டு இருந்தாள் பவானி. ரேழியில் செருப்பு சப்தம் கேட்கவும் அவள் திரும்பிப் பார்த்தாள். வந்தது ராம்குமாரும், அவன் அம்மாவும் தான். அப்பாவும், சித்தியும் சந்தோஷமாக வரவேற்றார்கள். பவானி ஒன்றும் சொல்லவில்லை.
“பவானி கிளம்பு, நம் வீட்டிற்குப் போகலாம்“ என்றான்.
“மிஸ்டர் ராம்குமார், எங்கள் வீட்டில் இன்னும் ஐந்து பவுன் சங்கிலியும் வைர மோதிரமும் வாங்கவில்லையே“ என்றாள் கேலியாக சிரித்துக் கொண்டு.
“எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம். நீ இல்லாமல் வீடே வெறிச்சோடிக் கிடக்கிறது. அதனால் உன்னால் தான் எங்கள் வீட்டில் பழைய சந்தோஷம் வரவேண்டும்“ என்றான் உருகி விடும் குரலில் ராம்குமார்.
“பவானி, புருஷனைப் பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாது“ என்றாள் கோபமாக ராம்குமாரின் அம்மா கோபமாக.
“கேவலம்! பணத்திற்கும், நகைக்கும் கேவலப்படுத்தி எங்கள் மகளை வீட்டை விட்டு அனுப்பியவர் தானே உங்கள் பிள்ளை“ என்றாள் கௌரி கோபமாக.
“பழிக்குப் பழியா?“ என்றான் ராம்குமார்.
“ராம்குமார்! நீங்கள் இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் தான் இருக்கிறீர்கள். தற்போதைய நடைமுறைக்கு வாங்க பாஸ்“ என்றாள் மேலும் தொடர்ந்தாள்.
“திருமணத்தின் போது, நாங்கள் உங்களுக்கு சமமாகப் படித்திருந்தாலும் எங்கள் சிறகுகள் கட்டப்பட்டு உங்கள் மனைவியாகத் தான் அனுப்புகிறார்கள். நீங்கள் அந்த சிறகுகளை ஒடித்து வாழ்நாள் அடிமையாக ஆக்கிக்கொண்டீர்கள். நல்ல வேளையாக என் அம்மா வீட்டிற்கு அனுப்பியதால் நான் தப்பித்துக் கொண்டேன்.
எனக்கு படிப்பு என்ற ஒரு சிறகைத் தந்த என் பெற்றோர் வருமானம் என்ற மற்றொரு சிறகும் கொடுத்து விட்டார்கள். அதனால் இந்த சிட்டுக்குருவிக்கு இனி எந்த கட்டுப் பாடும் கிடையாது. நீங்கள் ‘ போ’ என்று விரட்டி அடிக்கும் போது போவதற்கும், திரும்ப கூப்பிடும் போது வருவதற்கும் நான் ஒன்றும் உங்கள் வீட்டு நாய் இல்லை. நீங்கள் போகலாம் “ என்றாள் பவானி கோபமாக.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings