எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“மீனாட்சி நாளையிலிருந்து உனக்கு ஓய்வு கிடைக்கப் போகிறது” என்றார் ராஜசேகர்.
“ஓய்வா, யாருக்கு? எனக்கா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் மீனாட்சி.
“ஆமாம், நான் இன்று மாலையுடன் பணியிலிருந்து ஓய்வு பெற போகிறேன். எனக்கு இன்று தான் கடைசி வேலை நாள்” என்றார் ராஜசேகர்.
“நீங்கள் வேலைக்கு போகும் கடைசி நாளுக்கும், எனக்கு ஓய்வு கிடைப்பதற்கும் என்ன சம்மந்தம்” என்று கேட்டாள் மீனாட்சி.
“இருக்கு..! மீனாட்சி, நாளை முதல் நீ எனக்காக அதிகாலையில் எழுந்து, அவசர, அவசரமாக காபி, டிபன், சாப்பாடு தயார் செய்ய வேண்டிய அவசியம் இல்லையே..!” அப்ப ஓய்வு தானே..? நிதானமா காலையில் ஒரு ஒன்பது மணிக்கு எழுந்து குளிச்சிட்டு, பூஜை புனஸ்காரம் பண்ணிட்டு, 10 மணி வாக்கில் காபி, டிபன் தயார் செய்தால் போதும். மதிய சாப்பாட்டை ஒரு 11 மணிக்கு ஆரம்பித்தால் போதும். நானும் உனக்கு துணையாக சின்ன, சின்ன வேலைகளை செய்வேன்” என்றார் ராஜசேகர்.
மீனாட்சி மீண்டும் சிரித்துக்கொண்டே, “அப்ப நம்ம பையனுக்கும், மருமகளுக்கும் காபி, டிபன், மதியம் சாப்பாட்டை யார் செய்வது?” என கேட்க..
“ஏன்? உன் மருமகள் செய்யட்டும், இதுவரைக்கும் எனக்காக செய்யும்போது அவர்களுக்கும் சேர்த்து செஞ்சே சரி.. பொறுத்துகிட்டேன். உனக்கும் ஓய்வு பெறும் வயது தான். உனக்கும், எனக்கும் ஒரே வயசு தான். ஒரு மாதம் தான் வித்தியாசம். அந்த ஓய்வை உனக்கு நான் தான் தர வேண்டும். இப்ப அவர்களுக்காக செய்ய ஆரம்பிச்சா உன் ஆயுசு வரைக்கும் உனக்கு ஓய்வே கிடைக்காது” . என்று சற்று கோபத்துடன் ராஜசேகர் கூற
“என்ன காலையில் உங்க இரண்டு பேருக்கும் வாக்குவாதம்? ஏம்பா இன்னிக்கு தான் நீங்க ரிடையர்டு ஆக போறீங்களே..!? , இன்னிக்கும் அம்மாகிட்ட காலையில் வாதம் பண்ணனுமா..?” என்று அங்கு இருவருக்கும் நடந்த உரையாடலை தெரிந்து கொள்ளாமல், தன் தூக்க கண்களை கசக்கி கொண்டே வந்து கேட்டான் அவர்களின் மகன் ராஜன்.
ராஜசேகர் தன் மகனை முறைத்தபடியே, மீனாட்சியை பார்க்க, “நீங்க கிளம்புங்க, சாயங்காலம் பேசிக் கொள்ளலாம்” என்று மீனாட்சி கூற,
ஒன்றும் புரியாமல், இருவரையும் பார்த்து “என்ன விஷயம்” என்றான் ராஜா?.
ராஜசேகர் ஆபீஸ்க்கு கிளம்ப “அப்பா Wish you Happy Retirement” என்று ராஜா கூற,
Thank you my son என்று ராஜசேகர் கூறியபடியே, ஏண்டா? உன் மனைவி இன்னும் எழுந்துக்கலையா? என்று கேட்க,
“இல்லப்பா..! இப்ப மணி ஏழு தானே ஆகுது , அவ எப்போதும் 9.00 மணிக்கு மேல தான் எழுந்திருப்பா” என்று ராஜன் கூற,
ராஜசேகர் ஏதோ சொல்ல வர, இதை கவனித்த மீனாட்சி, “ராஜன் நீ போய் குளிச்சிட்டு வா, காபி, டிபன் ரெடியா இருக்கு” என்று சமாளித்து அவனை அந்த இடத்தை விட்டு நகர வைத்தாள்.
இதை புரிந்து கொண்ட ராஜசேகர் மீனாட்சி.. நீ .. என்று ஆரம்பிக்க
“எதுவும் சொல்ல வேணாம், நீங்க கிளம்புங்க, வேலைக்கு செல்லும் கடைசி நாள், வழக்கம் போல இன்னைக்கும் நேரம் தவறாமல், வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுங்க.. என்று அவரையும் கிளப்பினாள், அன்று எந்த பிரச்சனையும் வர வேண்டாம்” என்ற எண்ணத்தில்.
ராஜனின் மனைவி கமலாவை 10.00 மணிக்கு அவள் ஆபீஸ் கார் வந்து அழைத்துச் செல்லும். அதனால் 9.00 மணிக்கு தான் எழுந்திருப்பாள். 9.30 க்கு தன் அறையை விட்டு வெளியே வருவாள். காபி பிளாஸ்க்கிலும், டிபனும், lunch boxம் டைனிங் டேபிளிலில் தயாராக இருக்கும். டிபனும், காபியும் சாப்பிட்டு முடிக்கவும், கார் வரவும் சரியாக இருக்கும். Lunch box எடுத்து கொண்டு கிளம்பிடுவாள். இது தான் தினமும் நடைபெறும்.
அன்று ராஜன் குளித்து விட்டு வந்து காபி மட்டும் சாப்பிட்டு விட்டு, மீண்டும் அவன் அறைக்கு சென்றான். “என்ன? ஏழரை மணிக்கே எழுந்துட்டே” என்று ஆச்சரியமாக கேட்டான் தன் மனைவியை பார்த்து.
“அது ஒண்ணுமில்லீங்க, தூக்கம் வரல அதான். ஏங்க.. உங்க அப்பா இன்னைக்கு தானே ரிடையர்டு ஆக போகிறார்?”
“ஆமாம்.. ஏன்? எதுக்கு கேட்கறே” என்றான் ராஜன்.
“அவருக்காக தான் நாம் இன்று வரை இந்த வீட்டில் இருந்தோம். உங்களுக்கும், எனக்கும் ஆபீஸ் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தினமும் காரில் சென்று வர எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தவிர காருக்காக பத்தாயிரம் ரூபாய் என் சம்பளத்தில் பிடித்துக் கொள்கிறார்கள். உங்களுக்கும் அதே நிலைதான். மாதம் இருபதாயிரம் வீண் செலவு. நம்ம ஆபீஸ்கிட்டேயே வீடு ஒன்னை விலைக்கு வாங்கிட்டா இருபதாயிரம் மிச்சம், அலைச்சலும் மிச்சம். இன்னொரு இருபதாயிரம் சேர்த்து ஆக நாற்பதாயிரம் Home loan EMI கட்டிடலாம், எப்படி என் யோசனை” என்றாள்.
“உன் யோசனை சரிதான். நாம வேலை செய்யற ஆபீஸ் ஏரியால மூன்று பெட் ரூம் உள்ள அபார்ட்மெண்ட் வாங்கினால் குறைந்த பட்சம் எண்பதிலிருந்து, தொண்ணுறு லட்சம் வரை ஆகும். Down payment 20%, பதிவு கட்டணம் மற்றும் இதர செலவுகள் ஆக மொத்தம் குறைந்தபட்சம் 30 லட்சம் தேவைப்படும். இதை வெளியே வட்டிக்கு கடன் வாங்கி, அசலும் வட்டியும் கட்டணும். EMI 10 வருஷத்துக்கு கணக்கு போட்டா சுமார் ரூ.65,000/- கட்ட வேண்டி வரும். உனக்கும், எனக்கும் சேர்த்து சம்பளமே பிடித்தம் போக ஒரு லட்சம் தான் வருது. வீட்டை எப்படி வாங்க முடியும்? மத்த செலவுகளுக்கு என்ன செய்வது ?” என்று கேட்டான் ராஜன் கமலாவிடம்.
“நான் போன மாசமே எல்லாம் கேட்டும், பார்த்தும், கணக்கும் போட்டு வச்சுட்டேன். நீங்க சொன்ன மாதிரி இல்லை . நம்ம ஆபீஸ் ஏரியாவில் டபுள் பெட் ரூம் வீடே 90 லட்சம் ஆகுது. ஏங்க உங்க அப்பா 35 வருஷ சர்வீஸ்க்கு GPF, Gratuity எல்லாம் சேர்த்து சுமார் முப்பது இலட்சத்துக்கும் மேலேயே வரும். அதை கேட்டு வாங்கிக்கோங்க. அந்த பணம் நீங்க சொன்ன மாதிரி down payment and other expensesக்கு சரியா இருக்கும். நமக்கு எதுக்கு மூன்று பெட் ரூம் வீடு?, மூன்று பெட் ரூம் உள்ள வீடு ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் ஆகுது. நமக்கு இரண்டு பெட் ரூம் வீடு போதாதா? நமக்கு ஒன்னு, நம்ம பையனுக்கு ஒன்னு”. என்றாள்.
“அப்ப.. எங்க அப்பா, அம்மாவுக்கு..,?”
“அவங்க இங்கேயே இருக்கட்டும். மாசம் ஒரு தடவை வந்து பார்த்துட்டு போகலாம்”. என்றாள் கமலா.
“முன் பணம் எங்கப்பா கொடுக்கணும், ஆனா வயதான காலத்தில நம்ம சௌகரியத்துக்காக அவங்கள தனியா இங்கே விட்டுட்டு, நாம புது வீட்டுக்குப் போகணும், ஆக மொத்தம் உனக்கு தனி குடித்தனம் போற ஐடியா இது” என்றான் ராஜன்.
“புரிஞ்சா சரி” என்றாள் கமலா.
“அப்ப நான் ஒன்னு செய்யறேன், உங்க அண்ணிகிட்ட சொல்லி அவங்களையும் நீ வாங்க போற அபார்ட்மெண்ட்டில வீடு வாங்கி தனிக்குடித்தனம் போக சொல்றேன், அவங்களும் இப்ப எங்க ஆபீஸ்ல தானே வேலை செய்யறாங்க சரியா?” என்றான் ராஜன்.
“ஏங்க, ஒன்னா இருக்கிற குடும்பத்தை பிரிக்கப் பார்க்கீறீங்க? எங்க அப்பாவும் அம்மாவும் எப்படி தனியா இருப்பாங்க? அவங்க ஏற்கனவே இரண்டு பேரும் இதய நோயாளிகள்” என்றாள் கமலா.
“உங்க அப்பா, அம்மாவை விட்டுட்டு உங்க அண்ணன் தனிக்குடித்தனம் போக கூடாது, ஆனால் நான் மட்டும் எங்க அப்பாவையும், அம்மாவையும் தனியா விட்டுட்டு, உன்னோடு வந்து தனிக்குடித்தனம் பண்ண பிளான் பண்றே இல்ல” என்று கோபமாக கேட்டான் ராஜன்.
மெளனமாகி போனாள் கமலா.
இதை வெளியே இருந்து கேட்டு கொண்டிருந்த மீனாட்சி , மாலை ராஜசேகர் வந்தவுடன் “காலையில் தன் மகனும், மருமகளும் பேசியதை கூறிவிட்டு, இதுபோல அம்மா, அப்பா மீது பாசம் வைத்துள்ள மகனுக்கு என் ஆயுள் உள்ள வரை விடியற்காலையில் எழுந்து சமையல் செய்து தர நான் தயார், எனக்கு ஓய்வு எதுவும் தேவையில்லை” என்று கூறினாள் மீனாட்சி.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings