எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடர்ச்சியான ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பிறகு திருச்சியிலிருந்து சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சம்பளம் அதிகம் பெறுவபர்களும், வசதி படைத்த வர்களும், ஆம்னி பேருந்தில் சென்றனர்.
“என்னைப் போன்ற நடுத்தர சம்பளக்காரர்களும், குறைந்த சம்பளம் பெறுபவர்களும் தானே அரசாங்க பேருந்தில் செல்ல வேண்டி உள்ளது”.
ஞாயிற்றுக்கிழமை 4.00 மணிக்கு பேருந்து நிலையம் வந்த நான், பல முறை கூட்டத்தில் முந்திக் கொண்டு பேருந்தில் ஏற முயன்றும் 50 வயது ஆன என்னால் ஏற முடியவில்லை. நேரம் ஆக, ஆக கூட்டம் அதிகமாக வந்து கொண்டே தான் இருந்தது.
சிறப்பு பேருந்துகளும் புறப்பட்டு கொண்டே தான் இருந்தது. இனிமேலும் நாம் முந்திக் கொண்டு ஏறாவிட்டால் நம்மால் நாளை காலை வேலைக்குச் செல்ல இயலாது, என்ன செய்வது? என யோசித்தேன்.
பேருந்து நிலையத்திற்கு நுழைவு வாயிலின் முன்பு ஒரு வேகத்தடை இருக்கும், அங்கு போய் நின்று பேருந்து சற்று வேகம் குறைவாக இருக்கும் போது ஏறிக்கொள்ள முயற்ச்சிப்போம் என்று அங்கு சென்ற போது என்னைப் போல் பலரும் அங்கே நிற்பதை பார்த்தேன்.
ஒரு வழியாக இரவு 9.30 மணிக்கு ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்துக் கொண்டேன். என் பக்கத்து ஒரு சீட்டில் என் பையை வைத்து என்னை விட வயதானவர்கள் யாராவது வந்தால் இடம் தரலாம் என்று எண்ணி, என் தோளில் மாட்டிக் கொண்டு வந்த பையை வைத்தேன்.
பேருந்து நிலையத்திற்கு உள்ளே பேருந்து நுழைந்தவுடன் பலர் ஓடி வந்து ஏறினர், சிலர் பேருந்தின் பின்னாடியே ஓடி வந்தனர். ஒரு வழியாக பேருந்து நிற்க, கூட்டத்தில் முந்திக் கொண்டு ஏறினார்கள். பலர் என்னிடம் என் பக்கத்து சீட்டை கேட்டுக் கொண்டே இருந்தனர், எல்லோரிடமும் வயதான என் அக்கா வருவதாக கூறிக்கொண்டே இருந்தேன்.
உட்கார்ந்து வர இடம் கிடைக்காததால் பலர் நின்று கொண்டு இருந்தனர். பேருந்து நிரம்பியது. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். கடைசியாக ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி தன் ஐந்து வயது சிறுவனுடன் தட்டு, தடுமாறி ஏறினாள். என் அருகில் வந்தாள்.
அய்யா இந்த சீட்டு? என்றாள்,
என் வயதான அக்கா வருகிறார் என்று கூறினேன்.
நான் சென்னைக்கு போகணும், இது என் பேரன். இந்த பையனை மட்டும் உட்கார வச்சுக்கோங்க, நான் நின்னுட்டு வர்றேன் என்றாள்.
சரி, என்று கூறி விட்டு, பையனை பார்த்து உட்காருப்பா என்றேன்.
இன்னும் ஐந்து நிமிடத்தில் வண்டி கிளம்ப போகிறது என்று டிக்கெட் கொடுப்பவர் கூற, நான் அந்த பெண்மணியிடம் நீங்களும் உட்காருங்க, என் அக்கா வந்தால், நீங்கள் எழுந்துக் கொள்ள வேண்டும் என்று கூறி உட்காரச் சொல்ல, எதுவும் கூறாமல் சட்டென்று உட்கார்ந்தாள் அந்த பெண்மணி.
அருகில் இருந்த அனைவரும் என்னை முறைத்து பார்த்தனர். நான் என் அக்காவிற்கு போன் செய்வது போல் பாவனை செய்து காதில் வைத்துக் கொண்டேன்.
அய்யா உங்க அக்கா வராங்களா..? என்றார் அந்த பெண்மணி.
போன் எடுக்கவில்லை என்று கூறினேன். அப்போது அந்த பெண்ணின் முகத்தில் சிறிது மகிழ்ச்சி தெரிந்தது. வண்டி மெதுவாக நகர ஆரம்பித்தது. முகத்தில் கவலையுடன் அந்த பெண்மணி பேருந்தின் வாசற்படியையும், ஜன்னலையும் எட்டி, எட்டிப் பார்த்தபடியே இருந்தாள்.
பேருந்து சற்று வேகமெடுத்து பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து, திரும்பி மீண்டும் வேகமெடுத்தது. அந்த பெண்மணியின் முகத்தில் பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த பெண்மணி கண்ணை மூடிக்கொண்டு கடவுளுக்கு நன்றி கூறினாள் தன் மனதிற்குள், என் அக்கா பேருந்தில் வராமைக்கு..!
பெண்மணியின் மனதில் இருந்த எண்ணத்தை என்னால் உணர முடிந்தது. பின்னர் தன் ஒரு காலை நீட்டிக்கொண்டு இப்படியும் , அப்படியும் ஆட்டியவாறே தன் செயற்கை காலை கழற்றி எதிரில் இருந்த சீட்டின் கைப்பிடியில் தொங்க விட்டாள்.
இதை பார்த்த பேருந்தில் என் அருகில் இருந்தவர்கள், என்னைப் பார்த்து சிறிய புன்னகையுடன், தங்களின் கட்டை விரலை 👍உயர்த்தி காட்டினர்.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings