in , ,

உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (இறுதி அத்தியாயம்) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“மாதவி கொஞ்சம் பொறுமையாக இரு, அவர்களிடம் கோபித்துக் கொள்ளாதே” என்றான் ராகுல்.

ஆனால் மாதவி எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை, அவள் தந்தையுடன் வெகுநேரம் பேசினாள். சில நேரம் கடுமையான வாக்குவாதம் செய்தாள் சில நேரம் அழக்கூட செய்தாள்.

ராகுல் மட்டும் ஒன்று புரிந்து கொண்டான். தென்றல் போல் மென்மையான மாதவி ஏன் புயலானாள்? அவனுக்குத் தெரிந்த ஒரே விடை அவன் பெற்றோரின் நிராகரிப்பும், சில நேரங்களில் அவள் உறவினரே அவள் தாயை மட்டம் தட்டிப் பேசுவதும்தான், அவளின் மனமாற்றத்திற்குக் காரணம் என்பதுதான்.

மாதவி பேச்சை நிறுத்தி போனைத் தூக்கி அருகில் இருந்த சோபாவில் எறிந்தாள். ராகுல் அருகில் சென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“மாதவி, உணர்ச்சிப்பெருக்கில் உடைந்துவிடாதே. என்றும் நான் உனக்காகவே என்பதை மட்டும் மறக்காதே. நாம் இருவர் அல்ல, ஒருவரே என்று நினைத்துக் கொள். ‘உன் கண்ணில நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்ற பாடலை பாரதியார் ஒன்றும் போகிற போக்கில் எதுகை மோனைக்காகப் பாடவில்லை. நன்றாக அனுபவித்துத்தான் பாடி இருக்கிறார். நிஜமாகவே நீ கலங்கினால் என் இதயம் வெடித்து விடும்போல் இருக்கிறது தெரியமா?” என்றான் கிசுகிசுத்த குரலில்.

அடுத்தநாள் காலை காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது யாரோ கதவைத் தட்ட, மாதவிதான் திறந்தாள். அங்கே அவள் தந்தை ராகவன் நின்றிருந்தார். மாதவியும் ராகுலும் அவருக்கு மதுமிதாதான் சரயு என்று விவரித்தார்கள், ஆனால் அவ்வளவு எளிதில் அவர் நம்புவதாக இல்லை.

ஆனால் எத்தனையோ வருடத் தேடலுக்கு பலன் கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும் என்றார். ஸ்வர்ணாவிடம் ராகுலும் மாதவியும் அவள் தந்தை வந்ததை கூறினார். மதுமதியை ஒரு காபி ஷாப்பிற்கு அழைத்து வருவதாகவும், அங்கே திடீரென்று ராகவனைப் பார்த்தால், உணர்ச்சிப் பெருக்கில் கட்டாயம் தன்னை மறந்து சரயுவாக வெளிப்படுவாள் என்றாள் ஸ்வர்ணா.

மதுமிதாவும் ஸ்வர்ணாவும் காபி ஷாப்பில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, மாதவியும் ராகுலும் எதிரில் வந்து அமர்ந்தனர்.

அவர்களை நிமிர்ந்து பார்த்த மதுமிதா, “அப்பா… முடியலை சாமி. மறுபடியும் முதலில் இருந்தா? மழை விட்டும் தூவானம் விடவில்லையா?” என்றாள்.

“மழையும் இல்லை தூவானமும் இல்லை. இப்போது  பெரு வெள்ளம் வந்து அடித்துச் செல்லப்போகிறது பாருங்கள்” என்றாள் மாதவி.

அப்போது ராகவன் திடீரென்று மதுமிதாவின் எதிரில் வந்து உட்காரந்தார். அவரைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத மதுமிதா, டக்கென்று எழுந்ததில் கையில் இருந்து காபி கோப்பை நழுவ, “நீங்களா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“ஆம் சரயு, நானேதான். இத்தனை வருடங்கள் கழிந்த பிறகாவது என்னை மன்னிப்பாயா? நான் செய்த தவறுக்கு நம் அருமை மகளை தண்டிக்கலாமா? எனக்கும் வெயிலுக்குப் போனதால் தான் நிழலின் அருமை தெரிந்தது” என்றார். அவரையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமிதா.

“நம் குழந்தை உன்னைத் தேடி நாடு விட்டு நாடெல்லாம் அலைந்திருக்கிறாளே, அப்போது கூட நீ உன்னைக் காட்டிக் கொள்ளவில்லையே. ஏன் சரயு அப்படி செய்தாய்?  கோபம் என் மேல் தானே, நம் மகள் என்ன தவறு செய்தாள்? என் செயலால் நீ தனியே பிரிந்து போய் விட்டாய். தவறு என்னுடையதுதான், ஆனால் மக்கள் உன் மேல்தான் பழி சொல்கிறார்கள். நீ கணவனோடு வாழாமல் ஓடி விட்டாய் என்கிறார்கள்.  அதனால் பாதிக்கப்படுவது நம் பெண்ணின் திருமண வாழ்க்கை தான் என்பது உனக்குப் புரிகிறதா இல்லையா?” என்றார்.

அதற்கும் அவள் பதில் சொல்லாமல் உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். “இப்படிப் பார்த்தால் என்ன அர்த்தம்?” என்றார் ராகவன்.

அதற்கும் அவளிடம் பதில் இல்லை. அப்போது ராகவன் யாரும் எதிர்பார்க்காமல், இருப்பது காபி ராகவன் என்றும் பார்க்காமல்  டக்கென்று அவள் கால்களில் விழுந்து, “என்னை மன்னிப்பாயா சரயு?” என்றார்.

“அப்பா ஒரு ரோஸ் தரட்டுமா? சரயு ஐ லவ் யூ என்றும் சொல்லி விடுங்கள்” என்று சமயம் பார்த்து கிண்டல் செய்தாள் மாதவி.

ராகவனைக் கையைப் பிடித்துத் தூக்கிய மாதவி, “டாடி, எனக்காக யார் காலிலும் போய் நீங்கள் விழ வேண்டாம். என் வாழ்க்கையைப் பற்றி என் அம்மாவே கவலைப்படவில்லை. எனக்கும் திருமணம் ஆனால்தான் நல்ல வாழ்க்கை என்ற எண்ணமும் இல்லை. நான் ஏன் என் அம்மாவைத் தேடினேன் என்றால், மற்றவர்கள் பழிக்கும்படி அவர்கள் பெயர் கெடக் கூடாது  என்றுதான். அதற்கு மேல் என் நல்வாழ்வைப் பற்றி அவர்களே தீர்மானிக்கட்டும்” என்று நீண்ட ஒரு பெருமூச்சுடன் முடித்தாள் மாதவி.

“சரயு, நம் பெண்ணின் திருமணம் முடியும் வரை மட்டுமாவது நீ என்னுடன் இருக்க வேண்டும்.  இங்கே எப்படி ஒரு யூனிவர்ஸிட்டியில் வேலை செய்கிறாயோ, அதே போல் நம் சென்னையிலும் செய்யலாம். அதனால் உன் சுதந்திரத்திற்கு எந்த கெடுதலும் வராது. வருகிறாயா சரயு?” என்றார் ராகவன் கெஞ்சும் குரலில்.

“நீங்கள் வந்தால் எங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். என் பெற்றோரும் அவர்களே முன்னின்று எங்கள் திருமணத்தை முடித்து வைப்பார்கள்” என்றான் ராகுல் கெஞ்சும் குரலில்.

உதட்டைக் கடித்துக்கொண்டு சிரித்தாள் சரயு. “ஏன் சிரிக்கிறாய் சரயு? உனக்கு எங்கள் தவிப்பு சிரிப்பாக இருக்கிறதா?” ராகவன் எரிச்சலுடன் கேட்டார்.

“மாமா” என்ற குரல் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்க்க, அங்கே மாதவியின் சித்தி லதாவின் குடும்பம், ராகுலின் பெற்றோர் மற்றும் ரக்‌ஷிதாவின் பெற்றோரும் சிரித்தபடி நின்றிருந்தனர். மாதவியும் மற்றவர்களும் அவர்களைத் திகைப்புடன் பார்க்க, லதா தான் விளக்கினாள்.

“ராகுல் மாதவியுடன் இங்கே வந்ததும், ராகுலின் பெற்றோர் என்னுடன் தொடர்புகொண்டு மாதவியின் அம்மாவைப் பற்றி விசாரித்தனர். சரயு அக்காவின் பொறுமையான நல்ல குணத்தையும், அவர்களுக்குக் குடும்பத்தாரால் ஏற்பட்ட அவமானத்தையும், ராகவன் மாமாவின் முன்கோபத்தைப் பற்றியும், அவருடைய முரட்டுத்தனமான நடத்தையையும், அதனால் சரயு அக்காவின் மனவருத்தத்தையும் அவர்களுக்கு விவரித்தேன். சில வருடங்கள் அக்காவை யாருமே தேடவில்லை, பிறகு எங்கு தேடினாலும் சரயு அக்காவைக் கண்டே பிடிக்க முடியவில்லை. ராகுலின் பெற்றோர், அவர்களுடைய இலங்கை அலுவலகத்தில் உள்ளவர்கள் மூலமாக சரயு அக்காவைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு எங்களையும் அழைத்து வந்து விட்டனர்” என முடித்தாள் லதா.

ராகுலின் அன்னை கௌசல்யா, நெருங்கி வந்து சரயுவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“நீங்கள் எவ்வளவு படித்திருக்கிறீர்கள்? இரண்டு டாக்டரேட் வாங்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு மிஸ்டர் ராகவன் மட்டும் அநீதி இழைக்கவில்லை. உங்களைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் எங்கள் பங்கிற்கு உங்களைத் தவறாகப் பேசி மாதவியின் மனதை நோகடித்திருக்கிறோம், வெரி ஸாரி” என்றனர் ராகுலின் அம்மாவும் அப்பாவும்.

“அதற்கெல்லாம் பிரயாச்சித்தமாகத்தான், மாதவி ராகுலின் திருமண நிச்சயத்தை இங்கேயே நடத்தி விட வேண்டுமென்று குடும்பத்துடன் வந்து விட்டோம்” என்றார் ரக்‌ஷிதாவின் தாய்.

“இங்கே என்றால் இந்த காபி ஷாப்பிலா ஆன்ட்டி?” என்று சிரித்தாள் மாதவி.

மகளின் சிரிப்பை ஒளிவு மறைவின்றி ரசித்த சரயு, உரிமையுடன் மாதவியை அணைத்துக் கொண்டாள்.

அன்னையின் அணைப்பில் உருகி நின்ற போதும், “அவ்ளோ கெஞ்சினப்ப கண்டுக்காம போயிட்டு இப்ப உங்க கணவர் வந்ததும் கொஞ்சரீங்களா?” என உரிமையுடன் அன்னையிடம் கோபித்துக் கொண்டாள் மாதவி.

“அப்படி இல்லடா கண்ணம்மா, என்னால உனக்கு பிரச்சனை வந்துடக்கூடாதுனு தான் ஒதுங்கிப் போனேன்” என்றார் சரயு கண்ணில் நீருடன்.

பெற்றவள் கண்கலங்கக் கண்டதும், ஆறுதலாய் அணைத்துக் கொண்டாள் மாதவி. மகள் மற்றும் மனைவியின் சங்கமத்தை கண்குளிர ரசித்து நின்றார் ராகவன். 

“எப்பம்மா கல்யாணம் வெச்சுக்கலாம்?” என ராகுல் ஆர்வமாய் கேட்க 

“கௌசி… சீக்கிரம் ஒரு நல்லநாள் பார்க்கணும். இல்லேனா உன் புள்ள மருமகளை நாடு கடத்திடுவான் போல” என ராகுலின் தந்தை கேலி செய்தார்.

“அதான் இப்பவே ரெண்டு நாட்டுக்கு கடத்தியாச்சே, இனி புதுசா வேற கடத்தணுமா?” என தன் பங்குக்கு ரக்ஷிதா கேலி செய்ய 

“மொதல்ல இவளுக்கு ஒரு நல்ல அடிமையை தேடிப் புடிச்சு கோர்த்து விடணும் அத்தை” என்றான் ராகுல்.

“நோ வே… நீங்க அண்ணிகிட்ட அடி வாங்கற சீன் எல்லாம் பார்த்து என்ஜாய் பண்ணிட்டு, அவங்ககிட்ட ட்ரைனிங் எல்லாம் எடுத்துட்டு அப்புறம்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்” என ரக்ஷிதா கூற, சத்தமாய் சிரித்தாள் மாதவி.

தன்னவளின் சிரிப்பில் சுற்றம் மறந்த ராகுல் அவளை அணைக்கச் செல்ல, கண்களாலேயே செல்லமாய் மிரட்டி விலக்கி நிறுத்தினாள் மாதவி.

சிறியவர்கள் காதல் விளையாட்டை கண்டும் காணாது மற்றவர்கள் ரசித்து நின்றனர்.      

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 19) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    வனிதாவின் ஸ்ரீ ராமச்சந்தர் (சிறுகதை) – அகிலா சிவராமன்