in , ,

உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அன்று முழுவதும் ராகுல் அந்த ஹோட்டலில் மாதவியுடனே இருந்தான். அவனுடைய அருகாமையில், மாதவிக்கு புதிய இடத்தில் இருப்பது போல் இல்லை.‌ ஒரு தாயின் அரவணைப்பில், ஒரு தந்தையின் பாதுகாப்பில் இருப்பதுபோல் உணர்ந்தாள்.

ஆறடி உயரத்தில், ஆணுக்குரிய கம்பீரத்துடனும், அழகுடனும் அவனுடன் கைகோர்த்து வரும்போது உலகமே அவள் கையில் இருப்பது போல் உணர்ந்தாள் மாதவி.

அன்று இரவும் அந்த ஹோட்டலில் அவளைத் தனியாக விட்டுச் செல்லாமல் அதே அறையில் சோஃபாவில் படுத்துக் கொண்டான்.

“இப்படி சோஃபாவில் அவஸ்தைப்பட்டுத் தூங்குவதற்கு பேசாமல் உங்கள் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருக்கலாம் இல்லையா?”

“கெஸ்ட் ஹவுஸில் நாம் இருவர் மட்டும் தங்கினால் மற்றவர் நம்மைப் பற்றித் தவறாகப் புரிந்து கொள்ளலாம். எதற்காக வீண் பேச்சிற்கு இடம் கொடுக்க வேண்டும்?  இங்கே தங்குவதால் நன்றாக சாப்பிடலாம்,‌ எந்த பிரச்சனையும் இல்லை.‌நாளை ஆஃபீஸ் போய் கொஞ்சம் முக்கியமான வேலைகளைப் பார்க்க வேண்டும். நீயும் என்னோடு என் ஆபீஸ் வந்து பார்க்க வேண்டும். அதற்குள் ரக்ஷிதா ஏதாவது மெசேஜ் அனுப்பினால் அங்கும் போய் உன்னைப் போலவே இருக்கும் அந்தப் பெண்ணையும் பார்த்து பேசிவிட்டு வரலாம்.‌ அது தான் நாளைய பிளான், என்ன சொல்கிறாய்?”

“நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது” என்றவள் மேலும் சிறிது நேரம் அவனுடன் பேசிவிட்டு, பிரயாணக் களைப்பு மேலிட தூங்கி விட்டாள்.

அடுத்த நாள், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் காலை உணவை முடித்துக் கொண்டு ராகுலின் அலுவலகம் சென்று சேர்ந்தனர். ராகுல் அவனுடைய லேப்டாப்பில் மெயில்களை செக் செய்துவிட்டு, அவற்றிற்கு பதில்கள் அனுப்பிக் கொண்டு இருந்தான்.

அப்போது சென்னையில் இருந்து அவன் தந்தை போனில் அழைத்தார். “ராகுல், நேற்று நீ எங்கே போயிருந்தாய்? உன்னைப் பலமுறை போனில் அழைத்தும் நீ ஏன் பேசவில்லை?” என்று கேட்டார்.

“டாடி, நேற்று இங்கே மாதவி வந்தாள்.‌ ரக்ஷிதாதான் அவளை அழைத்து இருக்கிறாள். அவர்களுடன் சேர்ந்து கம்பெனி கொடுக்க நானும் போயிருந்தேன்” என்றான்.

“இந்த ரக்ஷிதாவிற்கு அறிவில்லையா? அவள் ஏன் மாதவியை லண்டனுக்கு அழைத்தாள்?” என்று கோபமாகக் கேட்டார் அவனுடைய தந்தை பரத்.

“டாடி, இந்த கேள்வியை நீங்கள் ரக்ஷிதாவிடம்தான் கேட்க வேண்டும்? டாடி, நம் சொந்த விஷயங்களை ஆபீசில் பேச வேண்டாமே” என்றான்.

அன்று மாலை வரை ராகுலுக்கு அவன் ஆபீஸில் வேலை நிறையவே இருந்தது. இரவு டின்னருக்குத் தான் அவர்கள் ஓட்டலுக்குத் திரும்பினார்கள்.

தங்கள் ஹோட்டல் ரூமில் டின்னர் வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது, ரக்ஷிதா போனில் அழைத்தாள்.

“அண்ணி… இன்று நன்றாக என்ஜாய் செய்தீர்களா?  அண்ணாவை ஒருமுறை போனில் அழைத்தேன், ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அதனால் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து மறுபடியும் போன் செய்யவில்லை” என்றாள்.

“ரக்ஷிதா, இன்று காலையில் ராகுல் ஆபீஸ் கிளம்பி விட்டார். எனக்கு ஹோட்டலில் தனியாக இருந்தால் போர் என்று என்னையும் கூடவே அழைத்துச் சென்றார். கொஞ்சம் நேரம் முன்பு தான் வந்தோம். இப்போது டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், நீ பேசு” என்றாள் மாதவி வாயில் உணவை மென்று கொண்டு.

“அண்ணி, சாப்பிடும் போது பேசாதீர்கள். நான் சொல்வதை மட்டும் கவனமாகக் கேளுங்கள். சாப்பிட்ட பிறகு தூக்கம் வராமல் இருந்தால், கூகிளில் போய் பக்கிங்ஹாம் அரண்மனை பற்றி படித்துப் பாருங்கள். நாளை நாம் அங்கு போய் பார்க்கலாம்” என்றாள்.

மாதவி கையில் இருந்த போனை ராகுல் வாங்கி, “ஏய் ரக்ஷிதா! நாளை அங்கு என்ன வேலை?” என்றான்.

“அண்ணா, அதுவும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்தானே. அங்கிருந்து சில மைல்கள் தொலைவில் ‘ஆக்லே’ என்னும் ஒரு சிறிய நகரம் இருக்கிறது. இலங்கை மக்கள் நாளை அங்குதான் அவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். ஆதலால் நாளை நாம் அங்கு சென்றால் அவர்களை சந்திக்கலாம். காலையில் கிளம்பி விட்டால் பக்கிங்ஹாம் அரண்மனையையும் எவ்வளவு அருகில் பார்க்க முடியுமோ அவ்வளவு அருகில் பார்த்து விட்டுப் பிறகு கலைநிகழ்ச்சியைப் பார்க்கலாம்.‌ அதற்கு டிக்கெட் கூட ஆன்லைனில் வாங்கி விட்டேன்” என்றாள்.

விக்டோரியா ரெயில்வே ஸ்டேஷனில் ரக்ஷிதா இவர்கள் இருவரும் வருவதற்காகக் காத்திருந்தாள். மாதவி இது நாள் வரை எந்த வெளிநாட்டிற்கும் போனதில்லை. அவளுக்கு எல்லாமே ஒரே பிரமிப்பாக இருந்தது. 

விக்டோரியா ஸ்டேஷனில் விக்டோரியா அரண்மனையும் இருந்தது. எல்லா அரண்மனைகளும் வாயில் விரலை வைத்து ஆச்சர்யம்படும்படி தான் இருந்தது. திடீரென்று அவர்கள் அந்த இடத்தைத் தேர்வு செய்ததால், பக்கிங்காம் அரண்மனையை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கவில்லை.

“மாதவி, என்ன அவ்வளவு ஆச்சர்யமாகப் பார்க்கிறாய்?  நம் ஹனிமூன் இங்கே வைத்துக் கொள்ளலாமா?” என்றான் ராகுல் கிண்டலாக.

“நான் ஹை-ஸ்கூலில் படிக்கும்போது ‘மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ்’ என்னும் ஷேக்ஸ்பியர் நாடகம் படித்தேன். அதில் இத்தாலியின் வெனிஸ் நகரில் கிராண்ட் கானல் வழியாக, நீர்வழிப் போக்குவரத்திற்கு பெரிதும் உதவும் ‘கொண்டாலா’ என்னும் படகுகள் பற்றிப் படித்திருக்கிறேன். அந்தக் கால்வாயின் இருபுறத்திலும் பெரிய கட்டிடங்கள். அதைப் படிப்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அந்த கொண்டாலா படகில் சவாரி செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றாள் கனவில் மிதந்த கண்களோடு.

“நீ கவலையே படாதே, நம் ஹனிமூன் அங்கேதான்” என்றான் ராகுல் காதலாய்.

அவனை பைத்தியக்காரனைப் பார்ப்பது போல் மாதவி கேலியாகப் பார்க்க, “ஏண்டி இப்படி ஒரு கேலிப்பார்வை” என்றான் ராகுல் சற்றே கோபமாய்.

“அடின்னு  சொல்றதுக்கு பெண்டாட்டி இல்லையாம், அஷ்ட புத்திரன் பேர் என்ன என்றார்களாம்” என்று சிரித்தாள் மாதவி.

“அதான் பொண்டாட்டி என் பக்கத்துலயே இருக்கியே” என ராகுல் கூற, அவன் குரலில் இருந்த உறுதியில் மௌனமானாள் மாதவி.

பக்கிங்ஹாம் அரண்மனையை நேரில் பார்த்த மாதவி, அதன் அழகில் அதன் பிரம்மாண்டத்தில் திகைத்து நின்றாள்.‌ உள்ளே சென்று பார்க்க முன் அனுமதி பெறவேண்டும்,‌ ஆதலால் எவ்வளவு தூரம் சென்று பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் சென்று பார்த்தார்கள். ‌அந்த அரண்மனையில் எழுநூற்று எழுபது அறைகள் இருக்கிறது, ஆனால் பார்வையாளர்களுக்கு பதினைந்து அறைகள் போல்தான் காட்டப்படுகிறது என்றாள் ரக்ஷிதா.

இதற்குள் மாதவி பசி என்ற சொல்லவும், அங்கே இருந்த மெக்டொனால்ட் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றாள் ரக்ஷிதா. ஆளுக்கு ஒரு முட்டை ஆம்லெட், பேன் கேக், ஐஸ்கிரீம் என்று சாப்பிட்டார்கள்.

விலையைக் கேட்டு மாதவி பயந்து விட்டாள். “அரண்மனைக்குள் எல்லாம் அதிக விலையாகத்தான் இருக்கும்” என்றாள் ரக்ஷிதா.

அப்போது இங்கிலாந்து ராணி குயின் எலிசபெத் பற்றியும், அந்த பக்கிங்காம் அரண்மனையின் பெருமைகளைப் பற்றியும், அவளுக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு வந்தாள் ரக்ஷிதா.

முதலில் ஆர்வமாகக் கேட்டு வந்த மாதவி, பிறகு வேறு ஏதோ யோசித்தவளாய் கவனம் சிதற, எரிச்சலான முகத்தோடு இருந்தாளோ என்று ராகுலுக்கு சந்தேகம் வந்தது.

“மாதவி… உனக்கு ஏதாவது அன்கம்போர்ட்டபுளாக இருக்கிறதா?” என்றான் கவலையுடன்.

“நான் என் அம்மாவைத் தேடித் தானே இங்கு வந்தேன்?  ராணியின் பெருமையைக் கேட்கவும், பக்கிங்காம் அரண்மனை சிறப்பைப் பற்றியும் கேட்க எனக்குப் பொறுமையில்லை. ஆனால் ஐயம் சாரி” என்றாள் வருத்தத்துடன்.

“அண்ணி… ஆக்லே என்னும் அந்த சிறிய நகரம் இங்கிருந்து சில மைல்கள் தொலைவில்தான் உள்ளது. அந்த இலங்கை மக்களின் கலைநிகழ்ச்சிகள் மாலை ஆறுமணிக்குத் தான். நம்மிடம் டிக்கெட்டும் இருக்கிறது. நாம் சீக்கிரம் போனாலும் யாரையும் பார்க்க முடியாது, ஆதலால் கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்களைப்போல் எங்களுக்கும் உங்கள் அம்மாவைப்போல் இருக்கும் அப்பெண்ணைப் பார்க்க மிகவும் ஆவலாகத்தான் இருக்கிறது. கடவுள் நமக்கு நல்ல செய்தியே தருவார், நம்பிக்கையுடன் காத்திருப்போம்” என்றாள் ரக்ஷிதா, ஆதரவுடன் மாதவியின் தோள்களை அணைத்தவாறு.

மாதவிக்கோ தன் பொறுமையின்மை குறித்துத் தன் மேலேயே கோபம் வந்தது. ‘பாவம் ரக்ஷிதா, தன் அம்மாவைக் கண்டுபிடிக்க கல்லூரிக்கு லீவ் போட்டு வந்திருக்கிறாள். ராகுவும் ஆபீஸ் வேலையெல்லாம் விட்டுவிட்டு இவர்களோடு சுற்றிக்கொண்டு இருக்கிறான். அப்படியிருக்க அவர்களிடம் கோபித்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? என்று தன் தலையிலேயே குட்டிக் கொண்டாள்.

அன்று மதியம் லஞ்ச், சிக்கன் ஸாண்ட்விச், பிஷ் பிங்கர், பிளாக் காஃபி என்று அங்கேயே முடித்துக் கொண்டு, தங்கள் பயணத்தை ஆக்லே நகரத்திற்கு மேற்கொண்டார்கள். தியேட்டர் நிரம்பி வழிந்தது. நடிகர்களைத் தெளிவாகப் பார்க்க ஏதுவாக, முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி வைத்திருந்தாள் ரக்ஷிதா.

மாதவி குறைவான நம்பிக்கையோடு தான் அங்கு வந்தாள், ஆனால் ரக்ஷிதாவும் ராகுலும் நம்பிக்கையுடனும் ஆவலுடனும் தங்கள் இருக்கையில் பொறுமை இல்லாமல் காத்திருந்தனர்.

முதலில் மாதவி நம்பிக்கை இல்லாமல்தான் அங்கு வந்து உட்கார்ந்தாள், ஆனால் நேரமாக ஆகஆக அவளை அறியாமலே ஒரு பரபரப்பு அவளை ஆட்கொண்டது. நடிகர்கள் ஒவ்வொருவராக மேடையில் தோன்றித் தங்களைத் தாங்களே அறிமுகம் செய்து கொண்டார்கள். அப்போதுதான் அவர்கள் எதிர்பார்த்த அந்தப் பெண் மேடையில் தோன்றி, தன்னை சோனியா என்று அறிமுகம் செய்து கொண்டாள்.      

மேடையில் அந்தப்பெண்ணைப் பார்த்தவுடன் மாதவி மிகுந்த அதிர்ச்சி அடைந்தவளாய் தன் ஸீட்டிலிருந்து எழுந்து “அம்மா”  என்றாள் உணர்ச்சியோடு.  அவள் குரல் உணர்ச்சி மிகுதியால் வெளியில் யாருக்கும் அதிகமாகக் கேட்கவில்லை,

‘டெலிபதி’ என்று மனோதத்துவத்தில் படித்திருக்கிறான் ராகுல். ஆனால் அவன் அதை நம்புவதில்லை.மாதவியின் குரல் இவனுக்கே கேட்கவில்லை. ஆனால் பத்தடி தூரத்தில் இருந்த மேடையில் நின்று கொண்டு இருந்த அந்தப் பெண் வேகமாகத் திரும்பி மாதவியைப் பார்த்தாள். அதுதான் அவனுக்கு மிகவும் ஆச்சர்யம்.

நாடகம் முடிந்த பிறகு அந்த இலங்கைப் பெண்ணை, அந்த நாடகக்குழுவினரின் அனுமதியுடன் நேரில் சந்தித்தனர்.

அந்தப் பெண் சரயுவே தான், அதில் மாதவிக்கு துளியும் சந்தேகமில்லை. ஆனால் அந்தப் பெண்ணோ இவளை புதியவளாகப் பார்த்தாள்.

“நீங்களா என்னை அம்மா என்று அழைத்தீர்கள்?”

“ஆம், நீங்கள்தானே என் அம்மா? அம்மாவை அம்மா என்று தானே கூப்பிட முடியும்” என்றாள் மாதவி.

“ஹலோ யார் நீங்கள்? கண்டபடி உளறுகிறீர்கள். உங்களைப் பார்த்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்போல்  இருக்கிறீர்கள். நானோ ஈழத்தமிழர், தமிழ்நாட்டிற்கு நான் வந்தது கூட கிடையாது. என்னைப் போய் அம்மாஎன்று கூப்பிடுகிறீர்கள். இந்த ட்ரூப்பில் உள்ள எல்லோரும் ஏறக்குறைய திருமணம் ஆகாதவர்கள். நீங்கள் என்னை அம்மா என்று கூப்பிட்டால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?”

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    குறை ஒன்றும் இல்லை (சிறுகதை) – கீதா இளங்கோ