எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சிற்றோடையில் நீர் அதிகச் சலனமின்றி ஓடிக் கொண்டிருந்தது. கெண்டைக்கால் அளவு ஓடிய நீரின் அடியில் சிறுசிறு கூழாங்கற்கள் கிடந்தன. ஆதித்யா அப்பாவோடு ஓடையில் நீராட வந்திருந்தான்.
அவன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்பா ஓடை நீரில் துணிகளை அலசிக் கொண்டிருந்தார். தொலைவில் வானில் புகைமூட்டம் எழுந்து கொண்டிருந்தது. அது இடுகாடு உள்ள பகுதி: அந்த இடத்தில் உயரே பருந்துகளும் காகங்களும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
ஓடையின் இரு கரைகளிலும் பச்சைப் பசேலென்று செடிகள் பூக்கள் மண்டிக் கிடந்தன. இங்கே மைனாக்கள் குருவிகள் அலைந்து கொண்டிருந்தன. ஓடை காண்பதற்கு கண்ணிற்குக் குளிர்ச்சியாய் மனதிற்கு இதமாய் இருந்தது.
ஆனால் இடுகாடு…? அவனுக்கு நீதிபோதனை வகுப்பில் ஆசிரியர் சொன்னது நினைவிற்கு வந்தது.
“நாம இருக்குற இடத்தப் பொறுத்துதான் நம்மோட மதிப்பாப்பா?”–ஆதித்யா அப்பாவிடம் கேட்டான்.
“எதுக்காக திடீர்னு கேக்குற?”– இது அப்பா:
“ஸ்கூல்ல மாரல் டீச்சர் இருக்குற இடத்தப் பொறுத்ததுதான் நம்மோட மதிப்பு! அதுனால எங்க இருக்குறோம் யாரோட இருக்குறோம்ங்குறதுல நாம கவனமா இருக்கனும் அப்படீனாங்க!”–என்றான் அவன்;.
“அவங்க சொன்னது சரிதான்!” – என்ற ஆதித்யாவின் அப்பா அதை அவனுக்கு விளக்க முற்பட்டார். அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
ஓடையில் இருந்து ஒரே மாதிரியான மூன்று வண்ணக் கூழாங்கற்களை எடுத்து வைத்துக் கொண்டார். அதில் ஒன்றை ஆதித்யாவிடம் தந்தார்.
“நீ இதை நம்ம ஊர் சந்தைல கொண்டு போய் வித்துட்டு வா!”–என்றார். அவரே தொடர்ந்து “ஒரு நிபந்தனை! இதை விக்குறதுக்காக நீ எதுவும் பேசக் கூடாது! யாராவது இதோட விலை என்னனு கேட்டா ரெண்டுங்குற பொருள் படும்படி கைவிரலால சைகை மட்டும் காட்டனும் சரியா?” – என்றார்.
இவனும் ‘சரி’ என்றபடி சந்தைக்குப் போனான். சந்தையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இவனிடம் வந்தார்.
“இந்தக் கல் என்ன விலை?” – என்று கேட்டார். இவன் இரண்டு என்று பொருள்படும்படி ஆள்காட்டி விரலையும் நடு விரலையும் உயர்த்திக் காட்டினான்.
“ஓ…இருபது காசுகளா! இந்தக் கல் என்னோட சமையல் அறைல பொடிச் சரக்குகளை நுணுக்க உதவும்!” – என்றபடி இருபது காசுகளத் தந்து கல்லை வாங்கிக் கொண்டு போனார்.
ஆதித்யா அப்பாவிடம் போனான். வெறும் கூழாங்கல்லிற்கு இருபது காசுகளா? அவனால் நம்ப முடியவில்லை. கூழாங்கல்லை தான் இருபது காசுகளுக்கு விற்றதை ஆச்சரியத்துடன் சொன்னான்.
அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அவர் இரண்டாவது கல்லை எடுத்துக் கொடுத்தார். “நீ இதைக் கொண்டு போயி நகைக் கடை வீதில வித்துட்டு வா!” – என்றார். ஆபரணங்கள் விற்பனை செய்யும் அங்காடிக்குப் போனான்.
“இந்தக் கல் நவரத்தினக் கல்! இதன் மதிப்பு சில வெள்ளிக் காசுகள் பெறும்! இதைக் கொண்டு அழகான ஆபரணங்கள் செய்ய முடியும்! நீ இதை என்னிடம் விற்றால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்! இதன் விலை என்ன?” – என்று கேட்டார் ஆபரணக் கடைக்காரர்: இவன் இரண்டு என்று பொருள் படும்படி கை விரல்களால் சைகை காட்டினான்.
“ஓ…இதன் மதிப்பு இருபது வெள்ளிக் காசுகளா?” – என்றபடி இருபது வெள்ளிக் காசுகளை அவனிடம் தந்து கல்லைப் பெற்றுக் கொண்டார்.
ஆதித்யாவிற்கு ஆச்சரியம் தாளவில்லை. அவன் அப்பாவிடம் ஓடினான். தான் இருபது வெள்ளிக் காசுகளுக்கு அந்தக் கூழாங்கல்லை விற்றதை ஆச்சரியம் விலகாமல் சொன்னான். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அவர் புன்னகைத்தார்.
அவர் தன்னிடம் இருந்த மூன்றாவது கல்லை அவனிடம் கொடுத்து “நீ இதைக் கொண்டு போயி அருங்காட்சியகம் இருக்குற வீதில வித்துட்டு வா!”–என்றார். ஆதித்யா அந்த நகரத்தின் பெரிய அருங்காட்சியகம் ஒன்றிற்குச் சென்று அந்தக் கல்லைக் காட்டினான். அதன் உரிமையாளர் கல்லை பல ஆய்வுகளுக்கு உட்படுத்தினார்.
“இது மிகவும் அரிதான வைரக்கல்! பட்டை தீட்டாம இருக்கு! பட்டை தீட்டினா இதோட ஜொலிப்பை நம்மால பார்க்க முடியாது! அந்த அளவுக்குக் கண் கூசும்! தம்பி! இது உங்களுக்கு எப்படிக் கிடைச்சது? இதோட மதிப்பு சில பொற்காசுகள் இருக்கும்! இந்த மாதிரி அரிதான வைரம் எங்க அருங்காட்சியகத்துல இருக்குறதே எங்களுக்குப் பெருமையான விஷயம்! இதோட விலை எவ்வளவுன்னு சொல்லுங்க! நானே வாங்கிக்கிறேன்!” – என்றார் அவர்.
இவன் பதில் ஏதும் பேசாமல் இரண்டு என்று பொருள் படும்படி விரல்களைக் காட்டினான். “ஓ…இருநூறு பொற்காசுகளா?” – என்றபடி ஒரு பட்டுத்துணி முடிப்பில் இருநூறு பொற்காசுகளை வைத்து மிகவும் பவ்யமாக இவனிடம் தந்து கல்லைப் பெற்றுக் கொண்டார்.
ஆதித்யா தன்னை ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். அவனுக்கு வியப்புத் தாளவில்லை. மூச்சிரைக்க அப்பாவிடம் ஓடி வந்தான். தான் அந்தக் கூழாங்கல்லை இருநூறு பொற்காசுகளுக்கு விற்றதை கண்கள் விரியச் சொன்னான்.
“இப்பப் புரியுதா? நாம இருக்குற இடத்தைப் பொறுத்துதான் நம்மோட மதிப்புங்குறது!” – என்றார் அப்பா.
ஆதித்யா மவுனமாக இருக்கவே அவரே தொடர்ந்து பேசினார். “சந்தைங்குறது நாம அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் விக்குற இடம்! கல்லோட விலையும் அங்க விக்குற பொருட்களோட விலையை ஒட்டியே அமைஞ்சது! ஆபரணங்கள் விற்கும் அங்காடில கல்லோட தரமும் ஆபரணங்களோட தரத்தை ஒட்;டியே நிர்ணயிக்கப்பட்டது! அருங்காட்சியகம்ங்குறது அரிதான கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாக்குற இடம்! அதுனால கல்லும் ஒரு பொக்கிஷமாகவே பார்க்கப்பட்டது! மூன்றும் ஒரே கல்தான்! ஆனா இடத்தைப் பொறுத்து அதன் மதிப்பு வேறுபட்டது! அதுனால நாம நமது நண்பர்களைத் தேர்ந்தெடுக்குறதுல கவனமா இருக்கனும்! நாம எங்க இருக்குறோம் எப்படி இருக்குறோம் யாரோட இருக்குறோம்ங்குறதப் பொறுத்துதான் நம்மோட மதிப்பும் உணரப்படும்!”– என்றார் அப்பா.
சுடுகாட்டில் எழுந்த சாம்பல் புகைமூட்டமும் அங்கே சுற்றித் திரி;ந்த காக்கை பருந்துகளும் அதே சமயம் பச்சைப் பசேலென்ற ஓடையும் அதில் சுற்றித் திரி;ந்த மைனாக்கள் குருவிகளும் ஆதித்யாவின் மனகண் முன் ஒரு கணம் தோன்றி மறைந்தது. அருகருகே இருந்தாலும் இடுகாடும் ஓடையும் ஒன்றல்ல என்பது புரிந்தது. அவன் அப்பா சொன்னதை அமோதித்து ஏற்றுக் கொண்டான்.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings