எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புனைவு கதை)
வட்டில் நிறைய பழைய சாதத்தை கணவன் முன் கொண்டு வந்து வைத்தாள் அய்யம்மா . அதற்கு தொட்டுக்க தோதுவாக உப்பிட்ட நார்த்தங்காய் ஊறுகாயும், நெத்திலி கருவாட்டையும். அத்துடன் நாலைந்து சின்ன வெங்காயம் ரெண்டு பச்சை மிளகாயையும் வைத்துவிட்டு கணவன் அருகில் தரையில் உட்கார்ந்தாள். சாதத்தை அள்ளி அத்துடன் துண்டு ஊறுகாயை வைத்து சாப்பிட ஆரம்பித்தவன் மிளகாயையும் ஒரு கடி கடித்தான்.
சற்று தள்ளி அமர்ந்து கூடை பின்னி கொண்டிருந்த மகள் பொன்னுத்தாயிடம், “ஏந்தாயி இந்த கண்ணாலத்துல உனக்கு சம்மதம்தான.. மாப்ள சொந்த விவசாயம்தான்.. பெருசா சொத்துபத்து இல்ல.. ஆனால் ரொம்ப நல்ல பையன். உங்க ஆத்தாவுக்கு சம்மதம். உனக்கு சம்மதம்னா இந்த இடத்தை முடிச்சிடலாம்” என்றான் மாதையன்.
அதை ஆமோதிப்பது போல அய்யம்மாவும் தலைசைத்தாள்.
தனக்கும் சம்மதம் என்று தலையாட்டிய பொன்னுத்தாயின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன. அடுத்த முகூர்த்தத்தில் ராசைய்யா அவள் சங்கு கழுத்தில் தாலி கட்ட.. மேலமங்கலம் கிராமத்திற்கு மருமகளாக வந்து சேர்ந்தாள் பொன்னுத்தாயி. கிராமத்திலிருந்து ஒதுக்குப்புறமாக பசுமை கொஞ்சுமிடமாக இருந்தது ராசைய்யா வீடு. சுற்றிவர தோப்பும், துரவுமாக வீடு சிறியதாக இருந்தாலும் அழகாக இருந்தது.
பக்கத்து ஊரின் குளம் வால்போல நீண்டிருந்தது. தண்ணீரின் நடுவே ஆங்காங்கே தென்பட்ட பச்சைத் திட்டுகள்.. அதில் அமர்ந்திருந்த பறவைகள்.. அழகான அந்த வெள்ளை பறவைகள் ஆரஞ்சு கலர் மூக்குடன் மனதை கொள்ளை கொள்ளும் அழகோடு, அவள் மனதை ரொம்பவே கவர்ந்தன.
மகளின் மனதை, அவள் முகமலர்ச்சியால் படித்த மாதைய்யன் நிம்மதியாக ஊர் திரும்பினான். ராசைய்யாவுக்கு உறவுகள் ஒருவரும் கிடையாது. தூரத்து சொந்தங்களும் ஊர் திரும்பி விட, தனித்து விடப்பட்டனர் இருவரும்.
“ஏன் பொன்னு.. ஏதோ காட்டுக்குள்ள இருக்கிற மாதிரி இருக்கா?”
“இல்ல மாமா இந்த இடம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. பசுமையா, அழகாயிருக்கு.. அதோ பாருங்க அந்த குளத்து பச்சை தட்டுல வெள்ளை பறவைங்களப் பாக்கிறதே பரவசமாயிருக்கு. எனக்கு பறவைங்கன்னா ரொம்ப பிடிக்கும்.. இந்த பறவைங்க எல்லாம் நம்ம கிட்டக்க வருமா மாமா”
“என்ன அப்படி கேட்டுட்ட பொன்னு.. வீட்டச் சுத்தி இருக்கிற மரங்க எல்லாமே, நான் இந்த பறவைங்களுக்காகத்தான் வளக்கறேன்.. விடிஞ்சதும் பாரு, ஒவ்வொரு மரத்திலும் பறவைகள் கூடுகள் வச்சு குஞ்சு பொரிச்சிருக்கும்.. நிறைய பறவைகள் நம்மள சுத்தி இருக்குதுக, சொந்தபந்தம் இல்லாத எனக்கு இந்த பறவைகளும், தோட்டமும்தான் சொந்தம்”
“ஏன் மாமா இந்தப் பறவைங்க எல்லாம் இங்கேயேதான் இருக்குமா?.. இல்ல குளத்தில் தண்ணி இல்லன்னா பறந்து போயிடுமா?” ஆர்வத்தோடு கேட்டாள் பொன்னுத்தாயி.
“ஒரு மாசம் கழிச்சு பாரு.. நிறைய புதுபுது பறவைங்க எல்லாம் வரும். எல்லாம் வெளிநாட்டு பறவைங்க இங்க ஒன்னு ரெண்டு மாசம் தங்கியிருக்கும். அப்புறம் குளத்துல தண்ணி குறஞ்சதும் அதுக நாட்டப் பாக்க பறந்திடும்”
“அய்யய்யோ வழி தவறி பறந்துட்டா எப்படி அதுக நாட்டுக்கு போய் சேரும்?” குழந்தைத்தனமாக கவலைப்படும் மனைவியை அணைத்துக் கொண்டான் ராசைய்யா.
“பொன்னு.. அதுகளுக்கு அறிவு சாஸ்தி. எங்கிருந்து.. எங்க உள்ள இடத்துக்கு.. எவ்வளவு அழகா வந்துட்டு அதுக நாட்டுக்கு திரும்பி போகுது பாரு”
“அப்ப இந்த பறவை எல்லாம் போயிட்டா வெறிச்சுன்னு ஆயுடுமா மாமா”
“வெளிநாட்டு பறவைங்கதான் போகும் பொன்னு. இங்கே இருக்கிற பறவைங்க இங்க தான் இருக்கும். அதுக நம்ம குழந்தைங்க மாதிரிதான் நம்மள சுத்தித்தான் இருக்கும். ரொம்ப சினேகா இருக்கும்.. நம்மள பாத்து பயப்படாது.. சாப்பாடு கொடுத்தாலும் கிட்டக்க வந்து சாப்பிடும். நீயே போக போக புரிஞ்சிக்குவ.. நீயும் அதுக மேல பாசமா இருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்குது” என்றான் ராசைய்யா மன நிறைவோடு.
தனக்கு வரும் மனைவி தன்னைப் போலவே பறவைகளிடம் பாசமாக இருக்க வேண்டுமே என்ற கவலை அவனுக்கு நிறையவே இருந்தது. இப்போது அவனைவிட பறவைகளிடம் பாசமாக இருக்கும் பொன்னுத்தாயை பார்க்கும்போது அவன் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது.
காலையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தவள் கையில் இருந்த பெரிய பாத்திரத்தை கீழே போட்டுவிட, “தடால்” என்ற சத்தத்துடன் பாத்திரம் உருண்டது.. அந்த சத்தம் கேட்டு பறவைகள் மிரண்டு படபடவென சிறகையடித்து தத்தளிக்க, பொன்னுவுக்கு ஒன்று புரிந்தது.. இந்த பறவைகள் சத்தம் கேட்டால் பயப்படுகின்றன. அதற்கப்புறம் சத்தமில்லாமல் பாத்திரம் கழுவ கற்றுக் கொண்டாள். துணி கூட அடித்து துவைக்க மாட்டாள்.
“மாமா.. சீக்கிரம் வாங்க.. சீக்கிரம் வாங்க.” பொன்னுவின் குரல் கேட்டு பதறியோடினான் ராசைய்யா. “இங்க பாருங்க கூட்டிலிருந்து ரெண்டு குஞ்சு கீழே விழுந்து கெடக்கு. அய்யய்யோ அதுக்கு நல்ல அடிபட்டிருக்கே” பதறினாள்.
ராசைய்யா ஒரு சின்ன கூடையில் வைகோலை பரத்தி குஞ்சை அதன்மேல் படுக்க விட்டான். காயங்களுக்கு மூலிகை மருந்து தடவினான்.. ஒவ்வொரு வேளையும் அதற்கு சின்ன சங்கு போல ஒரு மூங்கில் குழாயை வைத்து சாப்பாடு கொடுத்தான். கீழே விழுந்த பறவைகளுக்கு அவன் செய்யும் உபசாரத்தைப் பார்த்து பொன்னுவும் அதேபோல பறவைகளைப் பராமரிக்க பழகிக் கொண்டாள்.
பின்னர் அதுவே அவளுக்கு முழுநேர வேலையாயிற்று. மரத்திலிருந்து விழும் பறவைகளைப் பார்த்து எடுத்து பராமரித்து, அவை சரியாகும்வரை அதுகளுடனே கிடப்பாள். அவளுடைய அன்பான உபசரிப்பால் பறவைகள் அவளையே சுற்றி சுற்றி வரும்.
அன்று ராசைய்யா, “பொன்னு பக்கத்து ஊர்ல திருவிழா நடக்குது.. பாத்துட்டு வருவமா? அப்படியே குளத்தங்கரையில நிறைய பறவைங்க இருக்கும்.. வெளிநாட்டு பறவைகள் கூட வந்திருக்கும். பாக்க நல்லா இருக்கும்”
பறவைகள் என்றதும் உடனே கிளம்பி விட்டாள் பொன்னு.
வானவேடிக்கையும், வெடிகளும், அதிர ஊர் திருவிழா களைகட்டியிருந்தது. குளத்தின் பச்சை திட்டுகளில் வெள்ளை பறவைகள் பாக்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அப்போதுதான், கொஞ்சமாக வெளிநாட்டு பறவைகளும் வர ஆரம்பித்திருந்தன. வெடிச் சத்தத்திற்கு பயந்து அங்குமங்கும் பறந்து பறவைகள் அலைமோதிக் கொண்டிருந்தன.
“ஏன் மாமா இந்த ஊரு பஞ்சாயத்து தலைவரப் பாக்க முடியுமா?”
“நம்ம பெரியசாமி அண்ணன்தான் இந்த ஊர் தலைவர்”
“என்னம்மா என்ன விஷயம்?” என்றார் பெரியசாமி
“ஐயாகிட்ட ஒரு விண்ணப்பம்.. இந்த பறவைங்கள்ல வெளிநாட்டு பறவைகளும் இருக்கு. அதெல்லாம் சத்தத்துக்கு பயப்படுதுக பாருங்க.. அந்த அதிர்வேட்டு சத்தத்துக்கு எப்படி படபடன்னு பறக்குது. அதனால நாம திருவிழாவில அதிர்வேட்டு போட வேணாம்னு சொல்லுங்கய்யா” என்றாள் தயவாக.
“நல்லா இருக்கு பொன்னு.. நீ அசலூரிலிருந்து வந்தவ, அதிர்வேட்டு போடாம எப்படி திருவிழாக் களகட்டும்”
“ஐயா எந்த ஊருக்கும் இல்லாத ஒரு மருவாத, இந்தூருக்கு இருக்கு. இம்புட்டு பறவைங்கள எந்த ஊர்லயாவது பாக்க முடியுமா? நம்ம ஊர நம்பி அடைக்கலமா வர்ற பறவைங்கள அதுகளுக்கு ஒரு இடைஞ்ச இல்லாம பத்திரமாக பாத்துக்கறது நம்ப பொறுப்பில்லையா? தயவுசெஞ்சு அதிர்வேட்டு மட்டும் வேண்டாங்கய்யா” என்று கைகூப்பினாள்.
“வெளியூரிலிருந்து வந்த பொண்ணு, இந்த ஊர் பறவைகள் மேலயும் இவ்வளவு பாசமா பேசுது.. அது சொல்றதையும் நாம கேட்டுத்தான் பாப்பமே.. இந்த தடவை அதிர்வேட்டு இல்லாம திருவிழா நடக்கட்டும். மத்தாப்பு மட்டும் பொருத்திகிடட்டும்” ஊர் பெரியவர் ஒருவர் சொல்ல, அரை மனதாய் சம்மதித்தனர் இளவட்டங்கள்.
பறவைகள் சத்தமின்றி நிம்மதியாக இருக்கும் என்ற நிறைந்த மனதுடன் ஊர் திரும்பினர் ராசைய்யாவும் பொன்னுவும்.
வரும் வழியில் சந்தையில்.. “ஏம்மாமா கைல காசிருக்கா?”
“என்ன பொன்னு.. உனக்கும் சீல மேல ஆசை வந்துருச்சா? சந்தையில சீல எடுக்கப் போறியா?”
“அடப்போ மாமா.. நம்ம புள்ளைங்களுக்கு இன்னைக்கு தீவனம் சரியா வைக்கல.. பாவம் வாடி கிடக்குது.. ரெண்டு கிலோ மீன் வாங்கிட்டு போனோம்னா.. அதுகளுக்கு ஒரு ரெண்டு நாளைக்கு வச்சு பராமரிச்சுக்கிடலாம்”
காலையில் கூட்டில் இருந்து விழுந்த அந்த சின்ன குஞ்சின் சோர்வான முகமே அவள் மனக்கண்ணில் வந்தது. மனசு நிலை கொள்ளாமல் தவித்தது. ‘பாவம் சிறுசு.. திருவிழா பாக்க போறேன்னு அத விட்டுட்டு வந்தாச்சு.. எப்படி இருக்குதோ? மனசு கிடந்து அடிச்சுகிட்டது.’
மீனை வாங்கிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்ததும் முதலில் ஓடியது அந்த குஞ்சைப் பாக்கத்தான். தலைதூக்க முடியாமல் சோர்ந்து படுத்திருந்தது. உள்ளே ஓடியவள் “ஆத்தா வனப்பேச்சி.. அந்த குஞ்சு பொழைக்கட்டும்” என்று ஒரு ரூபா காச ஒரு துணியில் முடிஞ்சு சாமி முன்னால் காணிக்கையாய் வைத்தாள்.
பொன்னுவின் குரலை கேட்காமலா இருப்பாள் வனப்பேச்சி. காலையில் குஞ்சு நன்றாக கண்ணை உருட்டி அவளை பார்க்க.. “அடி என் சீமசிறுக்கி.. நேத்து எவ்வளவு பயமுறுத்திட்ட” என்று திட்டிக்கிட்டே அதை பூப்போல எடுத்து மடியில் விட்டுக் கொண்டாள் .
அன்று அவள் அப்பனும், ஆத்தாவும் கை நிறைய பண்டங்களுடன் மகளை பார்க்க வந்தனர். பறவைகளை கொஞ்சிக் கொண்டிருந்த மகளைப் பார்த்து முகம் சுழித்தாள். ஆத்தா அய்யம்மா.. கைகாலையெல்லாம் சுத்தபத்தமாக கழுவிட்டு உள்ளே வந்தவள், பொங்கி வைச்சிருந்த சோத்தை இலை போட்டு ரெண்டு பேருக்கும் பரிமாறினாள்..
“நல்ல மணமா இருக்குடி பொன்னு.. அருமையா சமச்சிருக்க” என்றவள் மகளை தனியாக அழைத்து, “ஏண்டி ஏதும் விசேஷம் உண்டா? இப்படி இந்த பறவைகள கொஞ்சிட்டு உட்கார்ந்திருக்க.. எப்ப குழந்த பெத்துக்கப் போற”
“அம்மா பெத்துக்கிட்டா ஒரு குழந்த. இங்க பாரு என்ன சுத்தி எத்தன குழந்தைங்க.. என் மேல எம்புட்டு பாசம் வச்சிருக்கு.. என்னையே சுத்தி சுத்தி வருதுக.. இந்த சந்தோஷம் எதிலுமே கிடைக்காதுமா. என் வாழ்க்கை பூரா இதுகளோட இருக்கனும். கடைசி மூச்சு வரைக்கும்”
கோபத்தில் விருட்டென எழுந்து வெளியே போனாள் அய்யம்மா.
உண்மையில் அடுத்து வந்த வருடங்களில் ராசைய்யாவும், பொன்னுத்தாயும் வாழ்ந்தது ஒரு அற்புதமான வாழ்க்கை. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை.. இப்போதெல்லாம் இவர்கள் சொல்வதைக் கேட்டு பக்கத்து கிராமத்தில் வெடிபோடுவதை நிறுத்தி விட்டார்கள். பறவைகளுக்கு மீன் வாங்க தோட்டத்து வரும்படியை பயன்படுத்தினார்கள்..
ஒருமுறை அடித்த கடுமையான புயல் காற்றில் நிறைய மரங்கள் முறிந்து விழுந்தன.. பெரிய பறவைகள் பறந்து தப்பித்துக் கொள்ள.. பறக்க முடியாத குஞ்சுகள் நிறைய காயமுற்று விழுந்தன.. ராசைய்யாவும், பொன்னுவும் ஓடிஓடி அந்த பறவைகளை எல்லாம் மீட்டு, வீட்டுக்குள் வைத்து பத்திரப்படுத்தினர். மூலிகை மருந்திட்டு, உணவு கொடுத்து ராப்பகலாய் கண்விழித்து, தங்களால் முடிந்த அளவு அவற்றை காப்பாற்றினர். அவைகளுக்கு மீன் வாங்கவும், மருந்து செலவிற்கும் என தன்னுடைய சங்கிலியை விற்று பணத்தை செலவு செய்தாள் பொன்னுதாயி.
இந்த செய்தியை கேட்டு வனத்துறை அதிகாரிகள் தங்கள் விழாவுக்கு பொன்னுத்தாயையும், ராசைய்யாவையும் அழைத்தனர். அவர்களை பாராட்டி பேசி, கேடயம் கொடுத்தனர். “பறவை பாதுகாவலர்கள்” என்ற பட்டம் கூட கிடைத்தது.
விழா முடிந்ததும் இருவரையும் விருந்து சாப்பிடச் சொன்ன அதிகாரி “நீங்க ரெண்டு பேரும் பறவைகளை பேணுறது ரொம்ப சந்தோஷமான விஷயம். அவையெல்லாம் காட்டுப் பறவை, ஜாக்கிரதையாக இருக்கிறது நல்லது.. வெளியிடங்களிலிருந்து வரக்கூடிய பறவைகளால் நோய் தொற்று வரக்கூடும்.. அத மனசுல வச்சுக்கோங்க” என்று அறிவுரை கூறினார்.
அந்த விழாவுக்குப் பின் பத்திரிக்கை வெளிச்சம் அவர்கள் பேரில்பட, நிறைய பத்திரிக்கையில் பேட்டி எடுத்தனர். பறவைகளிடம் அவர்கள் கொண்ட பாசமும், அக்கறையும் எங்கும் பேசும் பொருளாயிற்று. பறவைகளை பார்க்க வரும் கூட்டமும் பெருகத் தொடங்கியது. அந்த மக்களிடமிருந்து பறவைகளை காக்க இன்னும் மெனக்கிட வேண்டியிருந்தது..
இப்போது சில நாட்களாக பொன்னுவுக்கு முன்னப்போல முடியவில்லை. அடிக்கடி உடம்பு சரியில்லாமல் படுக்க ஆரம்பித்தாள்.. காய்ச்சல் வந்து பாடாய்படுத்த ராசைய்யா டவுன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் காண்பித்தான்.. அப்படியும் சரிப்பட்டு வராமல் பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு போனான். நாளாக நாளாக மெலிந்து கொண்டே போன பொன்னுத்தாயி ஒருநாள் புருஷனிடம்..
“எனக்கு என்னவோ நான் பிழைச்சு வருவேன்னு தோணல.. டாக்டர் சொல்லும்போது கவனிச்சேன் எனக்கு வந்த நோய்க்கு காரணம், பறவைகளிடமிருந்து வந்த நோய் தொற்றுன்னு.. ஆனா அதுக்காக அதுகளை வெறுத்துடாதீங்க மாமா.. மனுஷங்ககிட்டயிருந்து மனுஷங்களுக்கு வர்றதில்லையா? அந்த மாதிரி நினைச்சுக்குவோம். நமக்கு இந்த ஜென்மத்துல பிள்ளைங்க அதுகதான். நான் இருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி, நம்ம பிள்ளைகளை நீங்கதான் பாத்துக்கனும்” என்றவள் சத்தியம் வாங்குவதுபோல அவன் கையை இறுகப்பற்றிக் கொண்டாள்.
அதுதான் அவள் அவனிடம் பேசிய கடைசி பேச்சு, காலையில் அவனிடம் பேச அவள் உடம்பில் உயிர் இல்லை.. ராசைய்யா மனதை தேற்றிக்கொண்டான். அவள் எங்கும் போகவில்லை..
இதோ அவளுக்காக ஒரு சிலைய எழுப்பியிருக்கிறான், அவனுடைய வீட்டின் முன்னே.. அந்தச் சிலைக்கு அவன் கட்டிய சின்ன மண்டபத்துக்குள் அவனுடைய ஓய்வு நேரத்தில் அவளை நினைத்தவரே உட்கார்ந்திருப்பான்.
பொன்னுத்தாயின் நினைவில் இருந்தவனை கீச்சு கீச்சென்ற குரல் கவனத்தை ஈர்த்தது. பார்த்தான் பொன்னுத்தாயின் சிலையின் மடிக்கும்.. கைக்கும் இடையே ஒரு சின்ன கூட்டில் ரெண்டு பறவைகள். “இருந்தாலும், இறந்தாலும் நீதான் எங்கள் தாய்” என்று சொல்லுவது போல. அப்படியே அவள் பாதத்தை இறுகப்பற்றி தலையை சாய்த்துக் கொண்ட குஞ்சுகள் நிம்மதியாயின..
தன்னையும் அறியாமல் ராசைய்யனின் கண்களில் கண்ணீர் வழிந்தது . .
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings