எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மீனாட்சிபுரம் சுந்தரம் தெருவில்…
“பெரிய வீட்டுக்காரர்” என்ற பெயர் அருணாசலத்திற்கு உண்டு. அருணாசலம் அரசு அதிகாரியாய் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அரசு வேலையில் இருக்கும் போதே பெரிய வீடு அந்த காலத்தில் அந்த ஏரியாவில் முதன் முதலில் கட்டியவர்.
மனைவி மற்றும் இருபிள்ளைகளுடன் வசதியாக நன்கு வாழ்ந்தவர். கர்வம் பிடித்த நபர். பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பி விட்டார்.
அவருடைய சொத்து மதிப்பை வைத்து பார்த்தால், குறைந்தது மூன்று தலைமுறை தாரளமாக அமர்ந்து சாப்பிடலாம். இருப்பினும் பணம் தான் மதிப்பை பெற்று தரும் என்று பிள்ளைகளுக்கு சொல்லி சொல்லி வளர்த்து, அவர்களை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பி விட்டார்.
தற்போது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். தனிமையில் இருப்பதை போல உணர்ந்தாலும், கவலைபடுவது இல்லை.
சில மாதங்களுக்கு முன் , அவர் வீட்டுக்கு வலதுபுறம் இருக்கும் பக்கத்து வீட்டை விலை கொடுத்து வாங்கினார் அருணாச்சலம்.
அந்த வீட்டை இடித்து, தன் வீட்டை விட பெரிய வீடாக கட்டி , தன் பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து வரும் போது பேர பிள்ளைகளுடன் சொகுசாக வந்து தங்குவதற்காக ஏற்பாடு செய்து வேலைகளை துவங்கி இருந்தார்.
அருணாச்சலம் பணதிமிர் பிடித்தவர். மனிதனை தரம் பிரித்து , தராதரம் பார்த்து பேசுவார். வலது பக்க வீட்டை வாங்கியவர் , இடது பக்க வீட்டை வாங்க முயன்றும் இயலவில்லை.
இடது பக்க வீடு சின்ன இடம் என்றாலும், அந்த இடத்துகாரன் தன்னை விட பொருளாதாரத்தில் கீழ் உள்ளவன். தான் அந்த இடத்தை வாங்க முற்பட்டும் , அதனை தனக்கு விற்க மனமில்லை என்று கூறி விட்டான். அதனால் தான் அருணாச்சலம் எப்பவுமே அந்த வீட்டுகாரரிடம் சண்டை போட்டு கொண்டே இருப்பான்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் , அருணாச்சலத்திற்கே ஆதரவாக வந்து பேசுவார்கள். அவரின் பக்கம் நியாயம் இல்லை என்றாலும் , வேறு வழி இன்றி பேசுவார்கள். காசுக்கு தானே மதிப்பு.
இன்று காலையும் அப்படி தான் ஆரம்பித்தது.
அருணாச்சலம் தன் இடது பக்கத்து வீட்டுகாரன் சுந்தரத்தை சப்தம் போட்டு அழைத்தான்.
“சுந்தரம் , வெளிய வாயா !?” என்று அருணாச்சலம் சப்தம் போட்டார் . அக்கம் பக்கத்தினர் கூட்டம் கூடினர்.
அருணாச்சலத்தின் குரல் கேட்டு, அந்த சிறிய வீட்டில் இருந்து சுந்தரம் வெளியில் வந்தார். வீட்டு வாசலின் முன் அருணாச்சலம் மற்றும் அக்கம் பக்கத்தினர் நிற்பதை பார்த்தபடி,
“என்னங்க அருணாச்சலம் சார்? இன்னைக்கு என்ன பிரச்னை? இத்தனை பேரோட வந்திருக்கீங்க?” என்று சுந்தரம் கேட்டார்.
“என்ன சொன்ன? இன்னைக்கு என்ன பிரச்சனையா? என்னைய பார்த்த உனக்கு எப்படி தெரியுது ? தினமும் நான் பிரச்னை பண்ற மாதிரி சொல்ற ? “ என்று அதிகமா சப்தம் போட்ட படி அருணாச்சலம் பேசினார்.
“பின்ன என்ன ? தினமும் , என் கூட சண்டை போடலன உங்களுக்கும் , உங்கள சுத்தி நிக்கிற அவங்களுக்கும் தூக்கம் வராது, புதுசு புதுசா ஒரு பிரச்னை சொல்லி சண்டை போடுவீங்க. அதுக்கு அவங்க உங்களுக்கு ஆதரவா பேசுவாங்க” என்று சுந்தரம் சலிப்பாய் கூறினார்.
“நான் சண்டை போட்ற அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா ? தராதரம் தெரியாத ஆள் நீ . “ என்று அருணாச்சலம் கூறினார்.
“தேவை இல்லாம பேச வேணாம். இப்போ என்ன பிரச்னை ? அத சொல்லுங்க “ என்று சுந்தரம் கூறியதும் ,
“உன் வண்டிய என் வீட்டு வாசல் முன்னாடி எதுக்கு நிப்பாட்டி இருக்கிற , உனக்கு அறிவு இல்லையா? எத்தனை தடவை சொல்லிருக்கேன். பிச்சைக்கார நாய் நீ , என் வீட்டு வாசல் தான் உன் பார்கிங்கா ! ஒழுங்கா வண்டிய எடுத்திரு” என்று அருணாச்சலம் ஆவேசமாக கூற,
“நீங்க புதுசா வாங்கிருக்க வீட்ல இருந்து செங்கல் , மணல் எல்லாம் என் வீட்டு வாசல் முன்னாடி போட்டு போயிருந்தாங்க , அதான் வண்டி நிறுத்த இடம் இல்லாமல் அங்க நிப்பட்டுனேன். நான் நிப்பாட்டுனது தப்பு தான் , அப்போ என் வீட்டு வாசல்ல மணல் செங்கல் போட்டு வச்சிங்களே , அதுக்கு என்ன சொல்லுவீங்க ?” என்று கோவமாக சுந்தரம் பதில் பேசினான்.
“எனக்கு தெரியாம நடந்த தப்பு , நான் இருந்திருந்தா உன் வீட்டு வாசல்ல கொட்ட சொல்லிருக்க மாட்டேன்? நீ ஒரு ஆளு , உன் கிட்ட பேச்சு வாங்குற அளவுக்கு நான் தரம் குறைஞ்சு போயிட்டேனா” என்று அருணாச்சலம் தொடர்ந்து , சுந்தரத்தை தர குறைவாக பேசி கொண்டே இருந்தார்.
இதனால் சுந்தரம் , திரும்ப பேச விரும்பாமல் வீட்டிற்குள் நுழைந்தார். அருணாச்சலமோ விடுவதாக இல்லை. பேசி கொண்டே இருந்தார். அக்கம் பக்கத்தினர் சமாதனம்படுத்திய பிறகு தான் , பேச்சை நிறுத்தினார்.
அருணாச்சலத்தின் மனைவியும் , அவரின் பேச்சை விடுமாறு மாடியில் இருந்து சப்தம் போட்டு கொண்டு தான் இருந்தாள். அருணாச்சலம் சமாதனாம் ஆக முடியாமல் வேறு வழி இன்றி , முனங்கிய படியே , தன் வீட்டு வாசலுக்கு வந்தார்.
“பிச்சைக்கார நாயெல்லாம் , என்னை பேசுற அளவுக்கு , குளிர் விட்டு போய் கிடக்கு” என்று கூறி வீட்டை நோக்கி வந்தார்.
அப்போது தான் புதிதாக வாங்கிய பக்கத்து வீட்டில் பெரும் சப்தம் கேட்டது. என்ன சப்தம் என்று அருணாச்சலம் எட்டி பார்க்க முற்படும் போது , அங்கே கட்டி கொண்டு இருந்த பக்கத்து வீட்டின் பில்லர் சரிந்து விழுந்து கொண்டு இருந்தது.
அதில் இருந்து சிறு கம்பி கலவை பூச்சுடன் பறந்து வந்து அவரின் தலையை பதம் பார்த்தது. அவரின் தலையில் விழுந்த அந்த அடியில் , தலை தெரித்து கீழே சரிந்தார் அருணாச்சலம். கர்வம் தலைக்கு ஏறி இருந்த அருணாச்சலம் சரிந்து விழுந்தார் தரையில். ஒரு நொடியில் அருணாச்சலத்தின் உயிர் பிரிந்தது.
# அடுத்த நொடியில் என்ன நிகழும் என்பது யாருக்கும் தெரியாது ?
# அடுத்த நொடி பல ஆச்சரியங்களையும் , ஆபத்துகளையும் வைத்துள்ளது , இருப்பினும் , யாருக்கும் அது தெரியாது.
# நிச்சயமில்லா அடுத்த நொடி , நாம் இங்கு சிறு சிறு விசயங்களுக்காக , ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்தி பேசி, தான் உயர்ந்தவன் என்ற தோணியில் பேசி சண்டை போட்டு வருகிறோம்.
எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings