எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுந்தரம் இல்லம்.
அம்மா மீனாட்சி – மனைவி சுதா இருவரின் கோவத்திற்கு காரணமாக இருந்தான் வெங்கடேஷ்.
“உனக்கு என்ன பைத்தியமா? அப்பா இறந்த சமயத்துல நம்மள அப்படியே விட்டு போனவர் உங்க பெரியப்பா. எல்லா செலவும் அவர் மேல விழுந்திரும்னு நெனச்சு அப்படியே சொல்லாம கிளம்பிட்டார். அப்போ நாம எவளோ கஷ்டபட்டோம். உதவி பண்ண அவங்களுக்கு மனசு வரல. இதுவரை நாம என்ன நிலைமையில் இருக்கோம்னு கூட கேக்கல. நம்மள எந்த ஒரு விசேசத்திற்கும் கூப்பிடல.” என்று தாய் மீனாட்சி கோவமாக மகன் வெங்கடேசை நோக்கி பாய்ந்தாள்.
“உங்களுக்கு எதுக்கு இந்த எண்ணம். இதுவரை அவங்க நமக்கு எதுவும் பண்ணல , நாம மட்டும் எதுக்கு அவங்களுக்கு உதவி பண்ணனும்.? நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம். வேலைக்கு கிளம்புங்க. அது அவங்க வீட்டு பிரச்னை. உங்க (பெரியப்பா மகன்) அவர் கூட நம்ம கிட்ட சரியா பேசல. அவருக்கு கல்யாணம் , அப்புறம் குழந்தை பிறந்தபோ கூட ஒரு வார்த்தை சொல்லல. நீங்க போன்ல நம்ம வீட்டு விசேசங்களுக்கு உங்க பெரியப்பாவ கூப்பிட்டீங்க , வந்தாங்களா ? நாம வேணாம் என்று ஒதுங்கி போறவங்களுக்கு போய் உதவி பண்ணனும் ஏன் தான் நெனைக்கிறீங்களோ! ” என்று மனைவி சுதா , அவள் பங்கிற்கு கொதித்து எழுந்தாள்.
மௌனமாய் இருந்தவன் வாயை திறந்தான் வெங்கடேஷ்.
“எனக்கு பைத்தியம்தான் அம்மா. எனக்குதான் என் பெரியப்பா ஒன்னும் பண்ணல. ஆனா அவரோட பேரனுக்கு நானும் பெரியப்பா முறைதான். நான் என் பெரியப்பா மாதிரி இருந்தும் பிரயோஜனம் இல்லாம இருக்க கூடாது என்ற எண்ணம் எனக்கு. அப்பா – பெரியப்பா அவங்க காலம் முடிஞ்சு போச்சு. இனிமே எங்க தலைமுறை ஒன்னா இருக்கணும் அதான் என் ஆசை. நாம கஷ்டபட்டபோ அவங்க நமக்கு உதவி செய்யிற நிலைல இருந்தும் உதவி செய்யாம கல் நெஞ்சகாரங்க மாதிரி இருந்தாங்க. அதோட வலி எனக்கு தெரியும். அதுக்காக இப்போ பழி வாங்க நெனைக்கிறது ரொம்ப தப்பு.
என் பெரியப்பா தான் கல் நெஞ்சகாரன். நான் அப்படி இல்லை. என் அப்பா என்னை அப்படி சொல்லி கொடுத்து வளர்க்கல. நல்லதை மட்டும் சொல்லி கொடுத்து வளர்த்திருக்கார். அம்மா நீயும் அதான சொல்வ. இப்போ என்ன இப்படி மாத்தி பேசுற. பெரியப்பாவும் , தம்பியும் இப்போ கொஞ்ச சிக்கல்ல மாட்டிகிட்டாங்க. அவங்களுக்கு நான் தான் உதவி பண்றேன்னு சொன்னேன். அவங்க எதுவும் கேக்கல. பெரியப்பா வயசுல மூத்தவர் , அவர் என்கிட்ட தயங்கி நின்னு உதவி கேட்டா தான், நான் செய்யணும்னு தேவை இல்லை.
பெரியப்பா என் அப்பாவின் ரத்தம் தான. என் அப்பா இருந்திருந்தா இந்த சூழ்நிலையில இப்படி பார்த்துட்டு சும்மா விட்ருக்க மாட்டார். அவங்களுக்கு உதவி பண்ணி இருப்பார். அத தான் நான் பண்ண போறேன். இப்போ இருக்கிற உறவுகளுக்குள்ள இருக்கிற பிரச்சனயே இது தான். யார் முத பேசுவது? , யார் முதல்ல விட்டு கொடுப்பது? என்பது. யாரு? யாரு? என்று எல்லாரும் யோசிக்கும் போது , அது ஏன் நானா! இருக்க கூடாது என்று , எல்லாருமே இறங்கி வந்து பேசி பாருங்க. அப்படி இருக்கும் வாழ்க்கை.”
வெங்கடேஷ் அம்மா – மனைவி இருவருக்கும் பாடம் நடத்திவிட்டு, தன் பெரியப்பா வீட்டை நோக்கி கை கொடுக்கும் உறவு இருக்கிறது என்பதை காட்டுவதற்காக நகர்கிறான்.
வெங்கடேசின் பேச்சு அம்மா – மனைவி இருவர்க்கும் உறைய வைத்தது போல இருந்ததால் , வெங்கடேஷ் உடன் இருவரும் செல்கின்றனர்.
அடுத்த பிறவி இருக்கா? இல்லையா? என்று கூட தெரியாது.
கிடைத்த இந்த பிறவியில் நல்ல மனித நேயத்துடன் ,
உறவுகளுடன் நல்லா பேசி , மேலும் உறவுகளோடு அன்பையும் வளர்த்து கொள்வோம்.
கை கொடுக்கும் உறவுகளாய் முதலில் நாம் மாற வேணும்.
குறை கூறும் பழக்கத்தை முதலில் தவிர்ப்போம்.
கை கொடுப்போம் உறவுகளுக்கு…
எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings