எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கவிதாவிற்கு முதலில் அதிர்ச்சியாகத்தானிருந்தது. அப்பா இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவார் என்று கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை.
‘மற்றவர்களைப் போல தினமும் புதிது புதிதாய் உடுத்திக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும். சம்பாதித்து தன் காலில் நிற்க வேண்டும்’ என மனக்கோட்டைக் கட்டியிருந்த கவிதாவிற்கு அப்பா சொன்ன செய்தி பேரிடியாக இருந்தது..
“கவிதா, நீ இனி வேலைக்குப் போனாலும் நாங்கள் அதற்குப் பிறகும் உனக்கு வரதட்சணை கொடுத்துதான் கல்யாணம் கட்டிக்கொடுக்க வேண்டும். டீச்சர் வேலை வாங்குவதற்கு எழுபத்தையாயிரம் கொடுத்து இப்போது நீ வேலைக்குப் போனாலும் பின்னாலே இதைவிட அதிகமாக செலவழிக்க வேண்டிய பிரச்சினை வரும். அதைவிட இப்போதே கூட ஒரு லட்ச ரூபாய் போட்டு அத்தை மகன் ராஜேந்திரனுக்கு திருமணம் செய்து விட்டால் எங்கள் பிரச்சினை தீரும். ஒழுங்காக நாங்கள் சொல்வதைக் கேளம்மா” என்றார்.
“அப்பா நீங்கள் எப்படியும் எனக்கும் ராஜேந்திரன் அத்தானுக்கும் தானே திருமணம் செய்து வைக்கப் போகிறீர்கள். சின்ன வயதிலிருந்தே எனக்கு அவர் என்றும், அவருக்கு நான் என்றும் முடிவு பண்ணிய விஷயம் தானே. அவர்களிடமே கேட்டு இந்த விஷயத்தை முடிவு செய்யலாமே”.
“ராஜேந்திரனிடம் என்னம்மா கேட்க நினைக்கிறாய்?”.
“நான் டீச்சர் வேலைக்குப் போவதால் மாதச் சம்பளம் கிடைக்கும். ஆனால் வரதட்சணை தருவதாகச் சொன்ன பணத்திலே ரூபாய் எழுபத்தையாயிரம் வேலை கிடைப்பதற்காக கொடுக்க வேண்டியுள்ளது. அதை பிறகு குறைத்து தான் செய்வோம். சம்மதமா? என்று கேட் டுப் பார்க்கலாமே” என்றாள் கவிதா.
“ஓ.கே. அதுவும் சரிதான். இருந்தாலும் ராஜேந்திரனிடம் மட்டும் கேட்பதைவிட உன் மாமா, மாமியையும் அழைத்து முறையாக கேட்டுவிட்டு அவர்கள் சம்மதித்தால் கண்டிப்பாக பணம் கொடுத்து உனக்கு இந்த டீச்சர் வேலையை வாங்கித் தருகிறேன்” என்று அருணாச்சலம் சொல்லிக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்த ராஜேந்திரன் “என்ன மாமா, கவிதாவிடம் என்ன வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது?” என்றான்.
“வாங்க மாப்பிள்ளை” என்று வரவேற்றவர், “கவிதா அந்த நாற்காலியை எடுத்துப்போடு” என்றார்.
ராஜேந்திரன் உட்கார்ந்ததும் “மோர் கொண்டு வா” என்றார் அருணாச்சலம்.
“வீணாக எதற்கு இதெல்லாம் மாமா, இப்போது வீட்டிலேயிருந்து கிளம்பும் போதுதான் மோர் சாப்பிட்டுட்டு வந்தேன்”
“பரவாயில்லை மாப்பிள்ளை. மோர்தானே, வாங்கிச் சாப்பிடுங்கள்” என்றார்.
கவிதா கொடுத்த மோரை வாங்கிக் கொண்டு “ஏதோ பேசிக் கொண்டிருந்த மாதிரி இருந்ததே, என்ன விஷயம் கவிதா” என்று கேட்டான்.
“அப்பாவிடம் கேளுங்கள்” என்று அவன் குடித்த கிளாஸை வாங்கிக் கொண்டாள் கவிதா.
“என்ன விஷயம் மாமா?”
“ஒன்றுமில்லை மாப்பிள்ளை, அவள் டீச்சர் வேலைக்குப் போகவேண்டும் என்று அடம் பிடிக்கிறாள்”.
“நல்லதுதானே மாமா. இரண்டு பேரும் சம்பாதித்தால் நாளைக்கு நாங்கள் வசதியாக இருக்க முடியுமே”.
“அது சரிதான் மாப்பிள்ளை. ஏற்கனவே விவசாயம் சரியில்லை. இதிலே வேற இவளுக்கு வேலை எடுப்பதற்கு ரூபாய் எழுபத்தையாயிரம் கேட்கிறார்கள். நாளைக்கு உங்கள் திருமணத்திற்கு என்னாலே நான் சொன்ன பணத்தை கொடுக்க முடியாமல் போய் விடலாமே, அதனால்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம்”.
“அதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் கவிதா வேலைக்குப் போகமுடியுமா? நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து வேலைக்கு அவளை அனுப்பிவையுங்கள். ஏற்கனவே பேசிய பணத்தில் வேண்டுமானால் இந்தப் பணம் எழுபத்தையாயிரம் குறைத்துக் கொண்டால் போச்சு” என்றான்.
“எதுவானாலும் உங்கள் அம்மா அப்பாவை ஒரு வார்த்தைக் கலந்து பேசிக்கொள்ளலாமே மாப்பிள்ளை”.
“அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை மாமா. நான் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் முதலிலே அவளுக்கு வேலையை வாங்கிக் கொடுங்கள். என்ன டீச்சர் வரட்டுமா?” என்று கேலியாக கவிதாவைப் பார்த்துவிட்டுக் கிளம்பினான் ராஜேந்திரன்.
பணம் கொடுத்து கவிதாவிற்கு வேலை கிடைத்து விட மிகச் சந்தோஷமாக வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள் கவிதா.
அன்று ராஜேந்திரனுடைய அப்பா ராமேஸ்வரனும், அம்மா தேவிகாவும் கவிதாவின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களோடு ராஜேந்திரனும் வந்திருந்தான்.
அவர்களை வரவேற்ற அருணாச்சலம் “வாங்க உட்காருங்க, என்ன விஷயம்?” என்றார்.
“எங்கேயோ அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருக்கிறீர்கள் போலியிருக்கு” என்றார் ராமேஸ்வரன்.
“ஆமாம். வாழைத் தோட்டத்திலே தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். நீங்கள் போட்டிருந்த புகையிலை செடியெல்லாம் விளையும். தருவாய்க்கு வந்து விட்டதா?” என்று கேட்டார் அருணாச்சலம்.
“ம்.. இந்த வருஷம் விவசாயம் கொஞ்சம் பரவாயில்லை”.
“என்ன திடுதிப்பென்று வீடு தேடி வந்திருக்கிறீர்கள். நம்ம மாப்பிள்ளைகிட்டே சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே” என்றார்.
“அதற்கென்ன. இப்போதுதான் நாங்களே தேடி வந்து விட்டோமே”.
“சொல்லுங்க என்ன விசேஷம்?”
“எத்தனை நாளைக்குத்தான் ராஜேந்திரனை மாப்பிள்ளை என்று கூப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவனை எப்போது தான் உங்கள் வீட்டு மாப்பிள்ளையாக்கிக் கொள்ளப் போகிறீர்கள்?”
“நீங்கள் சொன்னால் உடனே திருமணத்தை வைத்துக் கொள்ள வேண்டியது தானே?”
“அதுவும் சரிதான். நாங்கள் ஏற்கனவே சொன்னபடி பணம் எப்போது கொடுக்கிறதா உத்தேசம்? நல்ல படியா ஒருநாள் குறித்து நிச்சயதாம்பூலம் வைத்துக் கொள்ளலாம்” என்றார் ராமேஸ்வரன்.
“அந்தப் பணத்திலே கவிதாவிற்கு டீச்சர் வேலை வாங்குவதற்காக ரூபாய் எழுபத்தையாயிரம் கொடுத்திருக்கிறோமே. நம்ம மாப்பிள்ளை உங்களிடம் சொல்லவில்லையா?” என்று கேட்டார் அருணாச்சலம்.
“அவன் சின்னப் பையன். அவனிடம் என்ன கேட்க வேண்டியதிருக்கிறது. நாம் ஏற்கனவே பேசிய பணத்தை கொடுக்க வேண்டியதுதானே உங்கள் பொறுப்பு” என்றாள் தேவிகா.
கவிதா, ராஜேந்திரனைத் திரும்பிப் பார்க்க, அவன் அவளுடைய பார்வையைச் சந்திக்க விரும்பாமல் மேலே விட்டத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.
“பாருங்க மச்சான். உங்கள் மகள் டீச்சர் வேலைக்குப் போவதற்கு நீங்கள் எவ்வளவு கொடுத்தீர்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. உங்கள் மகளுக்கு நீங்கள் என்ன செய்ய விருப்பமோ அதைச் செய்திருக்கிறீர்கள். அதற்கும் நம் பிள்ளைகள். கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம்? சும்மா எதற்கெல்லாமோ முடிச்சுப் போட்டுப் பேசாதீர்கள். கொடுக்க வேண்டிய பணத்தை எப்போது கொடுப்பீர்கள் என்று சொல்லுங்கள். நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும்” என்றார் ராமேஸ்வரன்.
“நீங்கள் அப்படி சொல்லக்கூடாது மச்சான். நாங்கள் உங்களிடம் கலந்து கொண்ட பிறகுதான் கவிதா டீச்சர் வேலைக்குப் போவதற்கு பணம் கொடுப்பதைப் பற்றி முடிவு செய்ய வேண்டுமென்று நினைத்து பேசிக் கொண்டிருக்கும் போது ராஜேந்திரன்தான் ‘நான் அம்மா அப்பாவிடம் பேசிக் கொள்கிறேன்’ என்றார். என்ன மாப்பிள்ளை நீங்க ஒண்ணும் சொல்லாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என்றார் அருணாச்சலம்.
“ஆமாப்பா. நான் அன்றைக்கே உங்ககிட்ட” என்று ராஜேந்திரன் பேச ஆரம்பிக்க, “நீ சும்மாயிருடா. உனக்கு என்ன தெரியும். உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அண்ணே! கொடுக்க வேண்டிய பணத்தை எப்போது கொடுக்க முடியும் என்று சொல்லியனுப்புங்கள். அப்புறம் திருமணத்தைப் பற்றிப் பேசலாம்” என்று எழுந்த தேவிகா “வாங்க போகலாம்” என்று கணவன் ராமேஸ்வரனையும், மகன் ராஜேந்திரனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.
கவிதாவும் அருணாச்சலமும் என்ன சொல்வதென்று திகைத்துக்கொண்டு நின்றனர்.
மறுநாள் கவிதா பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வரும்போது எதிரே வந்த ராஜேந்திரன், “நான் எங்க அப்பா அம்மாகிட்டே எவ்வளவு எடுத்துச் சொல்லியும்” என்று பேசி முடிப்பதற்குள் “மிஸ்டர். நீங்கள் யார்? உங்களைப் பார்த்த மாதிரி இல்லையே” என்றாள் கவிதா.
“சொன்னால் கேளு. என்னைப் புரிந்து கொள்” என்று பின்னால் வந்த ராஜேந்திரனிடம்
“பாருங்க. அப்பா அம்மா முன்னாலே நின்று தைரியமா பேசத் தெரியாத தொடை நடுங்கி. உங்களுக்கெல்லாம் கல்யாணம் தேவையா? போய்யா. போய் உன் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு சுற்று” என்று கத்தியவள் வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings