எழுத்தாளர் சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தனது அன்றட பணிகளை முடித்துவிட்டு ஜன்னல் கம்பிகளுக்கு ஊடாக தெரியும் மரத்தில் உள்ள குருவிகூட்டை வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் செல்வி. அவளின் அந்த பார்வையில் இயற்கை மீதான ரசனையையோ அல்லது அந்த கூட்டில் வசிக்கும் குருவிகள் மீதான ஈர்ப்போ இல்லை. அந்த கண்களில் வெறும் ஏக்கம் மட்டுமே குடியிருந்தது.
அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் குடியிருக்கிறாள் செல்வி. கணவன் அசோக் தனியார் மென்பொருள் நிறுவத்தில் வேலை பார்க்கிறான். கண் இமைக்காது அந்த குருவிக்கூட்டையே பார்த்துக்கொண்டு இருந்த செல்வியை நிகழ்காலத்துக்கு கொண்டுவந்தது அவள் மகனின் அழுகை.
காய்ச்சல் கண்டு துவண்டு கிடந்தவன் அருகில் தாய் இல்லை என்றதும் அழுக ஆரம்பித்துவிட்டான்.
“அம்மா வந்துட்டேன் டா, அம்மா எங்கையும் போகல நீ தூங்குடா கன்னு” என்று அவனை அணைத்தபடியே அவனருகில் படுத்தாள் செல்வி.
கடந்த இரண்டு நாட்களாக குழந்தைக்கு காய்ச்சல் விட்டு விட்டு வந்தது செல்வியும் கைவசம் இருந்த மருந்தை கொடுத்து சமாளித்து பார்த்தாள் ஆனால் காய்ச்சல் விடுவதாய் இல்லை. அசோக்கிடம் காலையில் அலுவலகம் போகும் முன் மருத்துவமணைக்கு கூட்டிபோக சொன்னாள் செல்வி.
“உனக்கு நேரம் காலமே கிடையாதா இன்னைக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு இப்ப வந்து ஆஸ்பத்திரி போகனும்னு சொல்லுற முன்னமே சொல்லுறதுக்கு என்னவாம்”.என்று கடுப்பில் கத்தினான்
“இல்லைங்க நான் மருந்து கொடுத்தால் சரியாகிவிடும்னு பாத்தேன் ஆனா காய்ச்சல் வந்து வந்து போகுது ஒரு எட்டு ஆஸ்பத்திரி போயிட்டு வந்துட்டா சரியாகிடும் அதான்….,” என்று செல்வி முடிக்கும் முன்னமே
“சரி சரி கிளம்பித் தொல எல்லாம் என் நேரம் உங்கூட போறாட எனக்கு இப்ப நேரம் இல்ல”என்றபடியே அலுவலகம் கிளம்பினான் அசோக்.
செல்விக்கு இது ஒன்றும் புதிதல்ல பழக்கப்பட்ட ஒன்றுதான். அசோகிடம் எந்த கெட்டபழக்கங்களும் கிடையாது. வேலை முடிந்ததும் வீடுஎன்று இருப்பவன் கோவம் வந்தால் மட்டும் சொல் அம்பால் குத்திவிடுவான் .குடும்ப வன்முறையின் உச்சகட்டம் அடித்தல் என்று சொல்லும் சமூகத்திடம் எப்படி புரியவைப்பது சொற்களின் வீரியம் தரும் வலியை விட பெரிய வலி ஏதுமில்லை என்பதை.
‘வசி குழந்தைகள்நல மருத்துவமணை’ என்ற பெயர் பலகைக்கு கீழ் அசோக்கின் இருசக்கர வாகனம் நின்றது. டோக்கன் வாங்க வரவேற்பரையில் இருந்த செவிலியரிடம் சென்றான் அசோக்.
குழந்தையின் பெயர், வயதை கேட்டுவிட்டு “எடைபாக்கனும் குழந்தைய இதுல படுக்க வைங்க “என்று எடை இயந்திரத்தை கை காட்டினாள் .
செல்வியும் குழந்தையை இயந்திரத்தில் படுக்க வைத்தாள் 19.730 என்று இயந்திரம் காட்ட அதையும் குறித்து வைத்துக்கொண்டவள் இருபத்தி இரண்டாம் நம்பர் டோக்கனை கையில் கொடுத்து காத்திருக்கச்சொன்னாள். அதுவரை அடக்கப்பட்ட அசோக்கின் கோவம் மீண்டும் வெடிக்க ஆரம்பித்தது
“இருக்குறது இவன் ஒருத்தன் தான் அவனையும் ஒழுங்க பாத்துக்க முடியலயா ? அப்படி என்ன வெட்டிமுறிக்கிற வேலை பாக்குற நானும் ஆபீஸ் போனதுக்கு அப்பறம் சும்மாதான வீட்டுல இருக்குற இவன ஒழுங்க பாத்தா தான் என்னவாம்” என்று சாடினான் அசோக்.
செல்விக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை மௌனமாக இருந்தாள். குழந்தைகளுக்கு இதுபோல் உடல்நிலை பாதிக்கபடுவது என்பது இயல்பான ஒன்று. பெரும்பாலும் கணவரோ வீட்டில் இருக்கும் பெரியவர்களோ இதை புரிந்துகொள்வது கிடையாது. எடுத்த எடுப்பிலேயே தாயின் கவனக்குறைவு தான் காரணம் என்று அவளை பழிசொல்வது இயல்பாகி போனது.
செல்வியின் முறை வந்தது குழந்தையுடன் மருத்துவரின் அறைக்குள் சென்றனர். பரிசோதித்து பார்த்த மருத்துவர், “குழந்தைக்கு சளி கூடியிருக்கு அதுதான் காய்ச்சல் வந்து வந்துபோகுது. எதுக்கும் நீங்க நாளைக்கு ஒரு தடவ வந்து காட்டுங்க இப்போதைக்கு ஊசி போட்டுவிடுறேன். இந்த மருந்த நாலு மணிநேரத்துக்கு ஒருவாட்டி குடுங்க” என்று சிரப்பை பரிந்துரை செய்தவர் ஊசியும் போட்டு அனுப்பிவைத்தார் .
மருத்துவமணை வாயிலில் இருந்த மருந்தகத்தில் பணம் செலுத்தி மருத்தை வாங்கிக்கொண்டு இருவரும் பேரூந்து நிலையம் வந்தனர் .
“எனக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு ஏற்கனவே ரொம்ப நேரமாச்சு இப்ப உன்ன கொண்டுபோயி வீட்டுல விட்டுட்டு நான் திரும்பவும் ஆபீஸ் வர்ரதுனா ரொம்ப நேரமாகிடும் நீ பஸ் ஏறி வீட்டுக்கு போ, புடி காசு” என்று இரண்டு இருநூறு ரூபாய் தாளையும் ஒரு நூறு ரூபாய் தாளையும் அவளின் கைகளில் தினித்துவிட்டு அவசரமாக தனது இருசக்கர வாகனத்தை திருக்கிகொண்டு விரைந்தான் அலுவலகத்திற்கு.
காலையில் கிளம்பும் அவசரத்தில் சாப்பிடாததன் விளைவு இப்போது பசி வயிற்றை கிள்ளியது. குழந்தைவேறு முடியாமல் அவள் மேல் துவண்டு படுத்திருக்க பேரூந்துக்காக காத்திருந்தாள் செல்வி.
சிவப்பு நிற வண்ணமடித்த புறநகர் பேரூந்து சிந்தாகிரிபேட்டை என்ற பதாகை தாங்கி வந்தது. வாசல் வரை பொங்கிவழியும் கூட்டத்தில் ஒருவாராக சமாளித்து உள்ளே சென்றவளுக்கு நிற்க மட்டுமே இடம் கிடைத்தது.
“ஏறுனவங்க டிக்கட்ட குடுத்து விடுங்க” என்று நெரிசலின் கூடாக வந்தது நடத்துனரின் குரல்.
“வம்பளந்தான் முக்கு ஒன்னு குடுங்க”
“வண்டி ஊருக்குள்ள போகாது மா அவுட்டர்லதான் நிக்கும் இறங்கிகிடனும்” என நடத்துனர் கூறி அடுத்த பயணியை நோக்கி நகர்ந்தார்.
செல்வியின் நினைவுகள் பின்னோக்கி நகரத் தொடங்கியது மணமான புதிதில் இனிமையாக இருந்த இல்லறவாழ்வு நாட்கள் செல்ல செல்ல நெருஞ்சி முள்ளாக குத்த தொடங்கியது.
அசோக்கின் சட்டையை அயன் செய்யும் போது செல்வியின் கவனக் குறைவால் அதில் ஒரு இடத்தில் கருகிவிட தொடுத்தான் முதல் சொல் அம்பைஎடுத்த எடுப்பிலேயே “வீட்டுல சும்ம தான இருக்க ஒரு வேலைய உன்னால ஒழுங்க செய்ய முடியாதா” என்று கூற செல்விக்கு சுள்ளென சுட்டது அந்த வார்த்தை
சி.ஏ படித்துவிட்டு ஆடிட்டர் அலுவலக்ததில் வேலைபார்த்துக் கொண்டு இருந்தாள் செல்வி திருமணத்திற்கு பெண் கேட்டு அசோக் வீட்டார் வரவும் செல்வியின் வீட்டாருக்கும் அசோக்கை பிடித்து போனது. திருமணத்திற்கு அசோக் விதித்த முதல் நிபந்தனையே வேலைக்கு செல்லக்கூடாது என்பது தான்.
செல்வி முடியாது என்று கூற அவளின் வீட்டில் ஏதேதோ பேசி அவளை சம்மதிக்க வைத்தனர் ஆசைபட்ட வேலையை வேறு வழியின்றி விட்டுவிட்டு திருமணபந்தத்தில் இணைந்தாள் செல்வி.
ஆனால் எடுத்த எடுப்பிலேயே நீ சும்மா தான இருக்க என்ற அவனின் வார்த்தை அவளை நோகடித்தது. காலையில் கடிந்துவிட்டு போனவன் மாலையில் எதுவும் நடக்காதது போல இயல்பாக வீட்டுக்கு வந்து அவளிடம் பேசினான். பாவம் அவளுக்கு தான் அதன் தாக்கத்திலிருந்து வெளிவர சில நாட்கள் தேவைபட்டது.
அடுத்து வந்த நாட்களில் எல்லாம் சின்ன சின்ன விஷயத்துக்கும் “அறிவில்லையா, நீயெல்லாம் என்னத்த படிச்ச, இதுல சி.ஏ வேலை வேற” என்ற உதாசின பேச்சுகள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. தவறுதலாக ஏற்படும் பிழைகளுக்கு கூட அவளின் பட்டறிவு பரிசோதனைக்குள்ளாவதை அவளால் ஏற்கமுடியவில்லை.
அவளின் பொறுமையும் எல்லை மீறியது ஒருநாள் . உடல் அசதியின் காரணமாக காய்ந்த துணிகளை அப்படியே சோபவில் போட்டுவைத்திருக்க அலுவலகம் முடித்து வந்த அசோக் வழக்கம் போல பேசிவிட அதுவரை மனசுக்குள் மட்டுமே குமுறிக்கொண்டிருந்த செல்வி நேருக்கு நேர் அவனிடம் முறையிட்டாள்
“ஏங்க உங்களுக்கு என்ன பாத்த எப்படி தெரியுது? நீங்க வேலைக்கு போனதும் நான் ஹாயா உட்காந்துட்டு இருக்கேனு நினைக்கிங்களா எனக்கும் இங்க வீட்டுல நிறைய வேலை இருக்கு, எப்ப பாத்தாலும் சும்மா இருக்க சும்மா இருக்கனு சொல்லிட்டே இருக்கிங்க. நானும் கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்கு போனவதான் நீங்க வேண்டானு சொன்ன காரணத்தால தான் எனக்கு புடிச்ச வேலைய கூட நான் விட்டேன் ஆனா நீங்க என்னடானா எப்ப பாரு என்ன மட்டம் தட்டிட்டே இருக்கிங்க என்னால இதுக்கு மேலயும் இத பொருத்துக்க முடியாதுங்க?”
“பொருத்துக்க முடியாட்டி எதுக்கு என் வீட்டுல இருக்க இப்பவே வெளிய போ , என்னமோ நா உன்ன அடிச்சு கொடும படுத்துன மாதிரில பேசுற. வீட்டுல அப்படி என்ன பெரிய வேலை உனக்கு துணிதுவைக்க மிஷின் இருக்கு,மோட்டர் போட்ட தண்ணிவரப்போகுது, வாசல்யே காய்கறி வந்துடுது வீட்டுல இருக்குறதும் நம்ம ரெண்டுபேரு தான் என்னமோ கூட்டு குடும்பத்துல இருந்து பத்து பதினைந்து பேருக்கு சமைச்சுபோடுற மாதிரி ஓவர பண்ணுற. எல்லா வசதியும் செஞ்சுகுடுத்து உன்ன நல்லா பாத்துக்கிடுறேன்ல அதான் உனக்கு என்னோட அருமை தெரியல, நீ யெல்லாம் எங்கையாது போயி கஷ்டப்பட்டதான் உனக்கு புத்திவரும்” என்று கூறிவிட்டு முகத்தில் அறைந்தார் போல வாசல் கதவை அடித்து சாத்திவிட்டு போனான் அசோக்.
இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்காத செல்விக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது தரையில் அமர்ந்து கதறி அழ ஆரம்பித்தாள். “என் வீடு , வீட்டை விட்டு நீ வெளியே போ ” என்ற வார்த்தை அவளை குத்தி கிழிக்க அவளின் அம்மாவுக்கு அழைத்து பேசினாள் .
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அவளின் தாய் சரோஜா, “இதெல்லாம் சாதாரணம் மா, மாப்பிள்ளை ஏதோ கோவத்துல பேசிருப்பாரு அதுக்காக நீ இப்ப இங்க கிளம்பி வரப்போறியா? இங்க பாரு உங்க அப்பா எத்தனையோ தடவ கோவத்துல என்ன வீட்ட விட்டு வெளிய போனு சொல்லிருக்காரு தெரியுமா? அதுக்காக நானும் உன்னாட்டம் கிளம்பனும்னு யோசிச்சிருந்த எப்பவோ நான் போயிருக்கனும். ஊரு உலகத்த பாரும்மா எத்தனையோ போரு குடிச்சிட்டு வந்து அடிக்கிறாங்க, வேற பொண்ணுகூட தொடர்பு வச்சுக்கிறாங்க, மாப்ள அப்படிலாம் கிடையாதுமா ரொம்ப நல்லவருமா என்ன கொஞ்சம் கோவத்துல வார்த்தைய விட்டுறாரு அம்புட்டு தான இதுக்கு போயி வீட்ட விட்டு வர்ரேனு சொல்லுற. ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோ கோவம் இருக்குற இடத்துல தான் குணம் இருக்கும் நீ எத பத்தியும் யோசிக்காம எப்போதும் போல இரு . கல்யாணத்துக்கு அப்பறம் புருஷன் வீடு தான் பொம்பளைங்களுக்கும் வீடு. இனி இது உன் வீடு கிடையாது அத மொதல்ல நியாபகம் வச்சுக்கோ மா. நீ படிச்சபுள்ள உனக்கு புரியும்னு நினைக்கிறேன் உடம்ப பாத்துக்கோ எத பத்தியும் யோசிக்காம சாப்பிடு சரியா மா நான் வைக்கிறேன்” என்று அழைப்பை துண்டித்தாள்.
அதன் பிறகு அவள் தன் தாயிடம் இது பற்றி பேசவே இல்லை. பேசி எந்த பலனும் இல்லை பாவம் அவளும் என்ன போல தானே அது என்னோட அப்பாவீடு அம்மாவீடு கிடையாதே அப்படி இருக்கையில எப்படி உரிமையா வீட்டுக்கு வானு அம்மாவால கூப்பிட முடியும் என்ற உண்மை நன்கு புரிந்தது செல்விக்கு. அன்று நடந்த சண்டைக்கு பின் செல்வியை பொருத்தவரை இது அவளின் கணவன் அசோகின் வீடு.
குயிலின் குரல்களுக்காக கொண்டாடப்படலாம். ஆனால் அவைகள் கூடுகளற்ற பறவைகளாக தான் அடையாளப்படுத்தப்படுகிறது வீடற்ற பெண்களை போல.
எழுத்தாளர் சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings