எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் பௌர்ணமி கிரிவலம் அன்று மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வழிநெடுக பக்தர்கள் மற்றும் சமூகசேவை அறக்கட்டளைகளைச் சார்ந்தோர் அன்னதானம் வழங்குவது வழக்கம். அப்படி ஒரு அன்னதான வரிசையில் நின்று கொண்டிருந்தார் ‘தமிழ்மணி’.
அவரைப் பார்த்ததும் ஆடையாளம் கண்டுகொண்ட ஒருவர் … “சார் …நீங்களா?!…நீங்க ஏன் வரிசையில் நிக்கிறீங்க … வாங்க … வாங்க சார்” என்றார்.
“இல்ல … இறைவனுக்கு முன்னால எல்லோரும் சமம்தான் … நான் வரிசையிலே வரேன்” என்றார்.
“என்ன சார் இப்படிச் சொல்லறீங்க? … நீங்க பிரபல உணவகத்து முதலாளி …இப்படி அன்னதானத்து வரிசையில நிக்கலாமா?”
“பழச எப்பவும் மறக்க கூடாது …அன்பரே … இருங்க …வாங்கிட்டு வரேன் பேசுவோம்”
ஒரு தொன்னையில் வெண்பொங்கல் வாங்கிக் கொண்டு வந்தார் தமிழ்மணி
அவரை அடையாளம் கண்டு உரையாடிவரிடம் … “எனக்குப் பசித்தபோதெல்லம் நினைத்துப்பார்க்கிறேன்… என் இளைய பருத்தில்… என் தாய் சாப்பாட்டிற்குப் பட்ட அவமானங்களை…அன்பரே”
“என்ன சார் சொல்லறீங்க ?!”
“இன்னிக்கு வேணுன்னா நான் மிகப்பெரிய உணவகங்களை நடத்தி வரலாம் …ஆனா எங்க குடும்பம் ஒரு தோட்டத்துல விவசாயக் கூலி செஞ்சவங்க …நான் சிறு பிள்ளையா இருக்கிற போது …அம்மா பசிக்குதுன்னு அழுவேன்”
“இரு சாமி …ஆண்ட வூட்டுல இப்பதான் அடுப்புப் பத்தவச்சி இருப்பாங்க …எல்லோரும் சாப்பிட பின்னாடிதான் கஞ்சி ஊத்துவாங்க”…..என்று எங்க அம்மா சொல்லுவாங்க.
“அங்கே கஞ்சி வாங்க போனா …ஆண்ட வூட்டு முதலாளியம்மா …”
“ஏண்டி …அடுப்பு பத்த வைக்கும் போதே பாத்திரத்தை தூக்கிட்டு வந்திடுவீங்களா ?”
“இல்ல யம்மா கொழந்த பசிக்கு அழுவுறன் …அதான் வந்தேன் …”
“சோறு ஆனதும் கஞ்சி ஊத்துறேன் …அதுக்குள்ள நீ போயி மாட்டுக்கு ஊறவைச்சி இருக்கிற பருத்திக் கொட்டைய ஆட்டு… அப்படிப்பாங்க”
“ஓ … எவ்வளவு சிரமப்பட்டிருக்கீங்க”
“அந்த வேல முடிச்சி வந்தாலும் வேற வேல கொடுப்பாங்க …அவங்க எல்லாரும் சாப்பிட்டு முடிஞ்ச பின்னாடி ஆறிப்போன கஞ்சி ஊத்தவாங்க … அப்படிக் கஞ்சி வாங்கிக் குடிச்சி வளர்த்தவன் தான் …பள்ளியில சத்துணவு சாப்பிட்டு … கல்லூரியில படிக்கும் போது கல்யாண மண்டபத்துல சாப்பாடு பரிமாறி …சில நாட்களில் இந்த மாதிரி கோயில் அன்னதானத்துல சாப்பிட்டு வளர்ந்தவன் தான்”
“மிகப்பெரிய விஷயம் சார் …. அதுனால தான் உங்க உணவுகளில் ஏழைகளுக்கு இலவசம் என்று இருக்கோ? பெரிய நிலைமைக்கு வந்தவங்க யாரும் இப்படித் தங்களுடைய முன் வாழ்க்கையைச் சொல்லுவாங்களா?! தெரியல”
“உண்மையை மறைத்து வைத்து என்ன செய்யப் போகிறோம்” என்று சொல்லிவிட்டு புன்கைகையுடன் விடை பெற்று நடந்தார் தமிழ்மணி
பௌர்ணமி நிலவு வெளிச்சம் அவரைத் தொடர்ந்தது.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings