எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“டீடீடீ.. செண்பகம் உன் மக அதிர்ஷ்டகாரிதான்.. கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்த ஜம்புநாதன் ஒரு வழியா உன் மவள கட்டிக்க சரின்னு சொல்லிட்டானே..”
“ஆத்தா அதுல என்ன இருக்கு? அவனுக்கு மொறை பொண்ணுதானே அவ.. என்ன நடுப்புற கொஞ்சம் குழப்பம் ஆயிடுச்சு.. இருந்தாலும் நீரடிச்சு நீர் விலகுமா? என்னைக்கும் எனக்கு அண்ணன் உறவு வேணும். என் பொண்ணு கற்பகம் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா.. வந்தா என்ன.. வரக்கூடிய உரிமை உள்ளவதானே எல்லோருக்கும் சந்தோஷம் தானே. உனக்கும் சந்தோஷம்தான ஆத்தா”
“அது என்னடி அப்படி கேட்டுப்புட்ட? என் மகள் வயித்து பேத்தியும், மகன்வயித்து பேரனும், ஒன்று சேர்வதில எனக்கு எம்புட்டு சந்தோசம் தெரியுமா? காரக்குளம் பண்ணையார் வீட்டுக்கு மருமகளா, இந்த சொத்து சொகத்த அவ ஆள்றதுல எனக்கு சந்தோசம்தானே..”
காரக்குளம் பண்ணையாரின் நான்கு வாரிசுகளில் மூத்தவன் ஜம்புநாதன்.. அவனுக்கு கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும்? வீடு தடபுடல் பட்டது.. பண்ணையார் வீட்டு கல்யாணமென்றால் சும்மாவா? வருவோரும் போவோரும் என உறவுகள் நிரம்பி வழிந்தனர். பந்தி பந்தியாக சாப்பாடு நடந்து கொண்டிருந்தது..
கற்பகம் பட்டுப்புடவை சரசரக்க, தலையில் இருந்து கால்வரை பூட்டிய நகைகளுடன், வலம் வந்து கொண்டிருந்தாள். அவ்வளவு சந்தோஷத்திற்கு இடையிலும், அவள் முகம் அவ்வப்போது லேசாக மாறுவதை அவள் அம்மா செண்பகம் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.
“ஏண்டி இன்னும் பழசயே நினைச்சுகிட்டு இருக்கியா? அது முடிஞ்சு போன கதை. இப்ப அத நினைச்சு என்ன ஆகப் போகுது. இந்த காரக்குளம் பெரிய பண்ணையார் மாளிகைக்கும், சொத்துக்கும் உரிமையுள்ள மூத்த மருமக நீ .. இன்னும் அந்த வெட்டிப் பய பொன்னம்பலத்தை நெனச்சுக்கிட்டு இருக்காத.. அவன் போய்ச் சேர்ந்த இடத்தில புல்லு முளைச்சாச்சு. இன்னும் ஏன் உன் முகத்தில ஒரு சொணக்கம்?”
“அம்மா எனக்கு என்னவோ பயமாயிருக்கு.. சில சமயம் அறை வாசல்ல பொன்னு நிக்கிற மாதிரி தோணுது. அவன் அங்க இங்க நின்றுகிட்டு என்ன பாக்குற மாதிரி தோணுது”
“அட அசடு.. நீ அவன விரும்பினது இங்க யாருக்கும் தெரியாது.. ஏதோ தெரியாத்தனமா அவன் கூட பழகிட்ட.. அவன் வெட்டிப்பய.. இந்த குடும்பத்துக்கு தூரத்து சொந்தம் தான். அவனுக்கு வந்த தைரியத்தை பாரு, உன்னை கல்யாணம் பண்ணனும்னு கொள்ள ஆசை. அத அந்த கிழவிகிட்ட அதான் எங்க ஆத்தாகிட்ட சொல்லி உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டான். அந்த நேரம் ஜம்புவுக்கு உன்ன கொடுக்கணும்னு ஆத்தா முடிவு பண்ணுச்சு. வலிய வந்து வாசக்கதவ தட்டுற லட்சுமிய வேணாம்னு சொல்ல முடியுமா? அதான் அந்த பயலுக்கு மருந்து கலந்த பாயசத்த கொடுத்தேன். உன் கையாலே குடுக்க வச்சேன்.. அவனும் உன் மேல உள்ள ஆசையில பாயசத்தை குடிச்சிட்டு மேலே போய் சேர்ந்துட்டான். என்னமோ புதுசா கேட்கிற மாதிரி முழிக்கிற.. நீதானடி இந்த யோசனையே சொன்னது”
கற்பகத்துக்கு மனதில் ஒரு கலக்கம் இருந்தாலும், வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. இவ்வளவு ஒரு பெரிய அதிர்ஷ்டம் வரும் போது காதலாவது, கத்திரிக்காயாவது.
கல்யாணம் ஜாம் ஜாம் என்று முடிய.. முதல் இரவு.. ஜோடனை செய்யப்பட்ட தேக்கு மரக்கட்டில் ஜம்புநாதன் ஒய்யாரமாய் அமர்ந்து, கற்பகத்தை எதிர்நோக்கி ஆர்வமாய் காத்திருந்தான்.
பனங்கற்கண்டு குங்குமப்பூ போட்டு சுண்ட காய்ச்சிய பாலை வெள்ளிச் சொம்பில் ஏந்தியபடி உள்ளே வந்தாள் கற்பகம். வாட்ட சாட்டமாய் முறுக்கு மீசையுடன் இருக்கும் அத்தானை வெட்கத்துடன் ஏறிட்டுப் பார்த்தவள் தீயை மிதித்தவள் போல் அதிர்ந்தாள்.
ஜம்புநாதன் அருகில் உட்கார்ந்திருப்பது யார்? பொன்னு.. வெகு இயல்பாக அவளைப் பார்த்து சிரித்தபடி.. ஜம்பு அவன் அருகாமையை உணரவில்லையா? அப்படியானால் இவன்.. இது..
“என்ன கற்பகம் அங்கே நின்னுட்ட! பால் உங்க அத்தானுக்கா இல்லை இந்த அத்தானுக்கா? வழக்கமா இந்த அத்தானுக்கு பாயாசம் தானே தருவ.. இன்னைக்கு என்ன பழக்கத்தை மாற்றி பால் ..ஓ இனிமே உன்னோட வாழப்போவது நான் தானே.. காதில் அவன் குரல் கேட்க, அதிர்ச்சியில் தலை சுற்றி கீழே விழுந்தாள் கற்பகம்.
கல்யாண மாப்பிள்ளை ஜம்பு, புது மனைவியை ஆசையுடன் ஏறிட்டு பார்க்க, அவன் கண்கள் நிலைகுத்தி நின்றது. அவளுக்கு பின்னே வாசல் கதவருகே நின்று கொண்டிருந்தது அருக்காணி. அவன் நான்கு ஆண்டுகளாக ரகசியமாக குடும்பம் நடத்திவிட்டு, கல்யாணம் நிச்சயமானதும் ஆற்றில், தண்ணீரில் அமுக்கிக் கொன்ற அதே அருக்காணி..
“மாமா உனக்கு பால் ஊத்தத்தான் நான் வந்திருக்கிறேனே.. அப்புறம் எதுக்கு கற்பகம் தர்ற பால குடிக்கப் போற” என்றவளது கை நீண்டு அவன் அருகே வந்தது.. அவளது உருவம் கோரமாய் தலைவிரி கோலமாய் பயங்கரமாய் காட்சியளித்தது பயத்தில் நெஞ்சை பிடித்துக் கொண்டே சரிந்தான் ஜம்புநாதன்.
துரோகம் அங்கே பேய் சிரிப்பு சிரித்தது..
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings