இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கௌசல்யாவின் மனதிலும் ரக்ஷிதா ஒரு உயர்ந்த இடத்தைத் தான் பெற்றிருந்தாள். சோம்பேறித்தனமாக இருக்க மாட்டாள். காலையில் எழுந்து சமையல் அறையில் வந்து வேலம்மாள் செய்யும் சமையலை மேற்பார்வையிடுவாள். அவளுக்குப் பிடித்த ஏதாவது ஒரு ஐட்டத்தையும் கூட செய்து வைப்பாள். இதனால் சாப்பிடுபவர்களுக்கு ஒரு டிஷ் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால் ரக்ஷிதாவிடம் வேலம்மாளிற்கு பிடிக்காத விஷயம் ஒன்று உண்டு.
“எப்பப் பார்த்தாலும் கையை சோப் போட்டு கழுவச் சொல்லும்” என்பாள்.
“இந்த ரக்ஷிதா பாப்பா கையைக்கழுவச் சொல்லி என் கை மட்டும் வெளுத்துப் போச்சு. கையைக் கழுவிக் கொண்டே இருப்பதால் சளி பிடித்துக் கொண்டது“ என்று புலம்புவாள்.
ரக்ஷிதா லண்டனிலிருந்து வந்த பிறகு வீடு நிறைந்திருக்கிறது என்பார் பரத். ஒரு நாள் அவள் வயலின் வாசிக்கும் அழகைப் பார்த்து மெய்மறந்து ரசித்தார். அப்போது தான் அவருக்கு அந்த எண்ணம் உதித்தது. உடனே தன் மனைவி கௌசல்யாவை அழைத்துத் தங்கள் அறைக்குச் சென்றார்
“கௌசி, நம் மகன் ராகுலுக்கு உடம்பெல்லாம் மச்சம். நீ என்ன நினைக்கிறாய்?” என்றார் கேலியாக.
“நீங்கள் சொல்வது ஏதாவது புரிந்தால் தானே நினைப்பதற்கும் மறுப்பதற்கும்” என்றாள் வியப்புடன் அவரைப் பார்த்துக் கொண்டு.
“விளக்கமாகச் சொல்கிறேன் கேள். நம் ராகுலிற்குப் பொருத்தமான பெண் ரக்ஷிதாதான். நீ என்ன சொல்கிறாய்?”
“அதை நாம் எப்படித் தீர்மானிக்க முடியும்? அவன்தான் ஏற்கெனவே மாதவியை விரும்புகின்றானே, அப்படியிருக்க நாம் ஏன் குட்டையைக் குழப்ப வேண்டும்“ என்றாள் கௌசல்யா.
“போடி போக்கத்தவளே. அவனுக்கு என்ன தெரியும். கல்லூரி என்னும் சிறிய வட்டத்திற்குள் தான் அந்த மாதவியைப் பார்த்திருக்கிறான். அதுவும் இல்லாமல் அவள் தாயை உயிரோடு இழந்ததால் ஏற்பட்ட பரிதாபம். இதெல்லாம் சேர்ந்து ராகுல் அவளைக் காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறான். அதுவுமல்லாமல் எப்போது பாரத்தாலும் சந்தேகப்பட்டு தாயை விரட்டிய ஒரு தந்தை, உற்றார் ,பெற்றோரை விட்டு முன்பின் தெரியாத ஒருவனை நம்பி வாழ்க்கையைத் தொலைத்து இப்போது தானும் தொலைந்து நிற்கும் ஒரு தாய். இப்படி ஒரு பேரன்டேஜ் அந்தப் பெண் மாதவிக்கு. எதிர்காலத்தில இந்தப் பெண்ணின் குணமும் எப்படி இருக்குமோ?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.
“அது எப்படி அவன் வாழ்க்கையை நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும்? ராகுல் அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமல்லவா?” என்றாள் கௌசல்யா.
“அவனுக்கு என்ன தெரியும்? உடம்புதான் வளர்ந்திருக்கிறதே தவிர மனதால் ஒரு குழந்தை. அவனுக்குத் தெரியாததை அவனுடைய தந்தை நான் தானே சொல்லித் தர வேண்டும்“ என்றார்.
“நீங்கள் ஏன் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டும்? இத்தனை வருடங்கள் காணாமல் போன உங்கள் தங்கை புவனாவிற்கு இப்போதுதான் திடீரென்று அண்ணா பாசம் வந்திருக்கிறது. அதுவும் நம் மகன் ராகுலைப் பற்றிப் பேஸ்-புக் அது இது என்று எல்லா ஸைட்டுகளிலும் பார்த்த பிறகு வந்திருக்கிறது. சுயநலத்தினால் வந்த பாசமெல்லாம் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்காது, தெரிந்து கொள்ளுங்கள்” என்றாள் கௌசல்யா.
அவளையே ஆழமாக யோசனையுடன் பார்த்தார் பரத். பிறகு, “புவனாவை விட்டுத் தள்ளு. அந்தப் பெண் ரக்ஷிதா எவ்வளவு அழகாக அறிவாக இருக்கிறாள். ஏன், அத்தை மாமாவென்று பாசமாகக் கூட இருக்கிறாள். என்ன இருந்தாலும் நம் உறவுக்காரப் பெண்ணல்லவா. எனக்கென்னவோ மாதவியை விட ரக்ஷிதாதான் பிடித்திருக்கிறது” என்றார்.
“இதையே நீங்கள் உங்கள் மகனிடம் சொல்லிப் பாருங்கள்” என்ற கௌசலயா, வாயை ஒரு கையால் மூடிக்கொண்டு சிரித்தாள்.
“ஏன் சொன்னால் என்ன சொல்லுவான்? நீ எதற்கு இப்போது பைத்தியம் மாதிரி சிரிக்கிறாய்?” என்றார் ஒன்றும் புரியாமல்.
“உங்களுக்குப் பிடித்தால் நீங்களே கல்யாணம் செய்துக் கொள்ளுங்கள் என்பான்”
“அது சரி. அந்தப் பெண் மாதவி நிறைவேற முடியாத கண்டிஷனெல்லாம் போடுகிறாள். எப்போதோ இருபது வருடங்களுக்கு முன் காணாமல் போன அவள் அம்மா வந்தால் தான் கல்யாணம் நடக்கும் என்கிறாள். எப்போதோ காணாமல் போன யாரோ ஒரு சம்பந்தமே இல்லாத பெண்ணிற்காக என் மகன் துறவியாக்க் காத்திருக்க வேண்டுமா? ராகுலை லண்டனிலிருந்து உடனே வரச்சொல்ல வேண்டும். அவனுக்கும் வயதாகிறது, வாழ்நாள் வீணானால் திரும்ப கிடைக்காது. நல்ல புத்திமதி சொல்லி திருத்த வேண்டும்” என முடித்தார்.
புவனா மதுரையில் உள்ள தன் கணவர் வழி உறவினர்களைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று தன் மகளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். இது தான் சரியான நேரம் என்று நினைத்த பரத், உண்மையான காரணங்களையும், இல்லாத் காரணங்களையும் காட்டி ராகுலையும் சென்னைக்கு வரவழைத்து விட்டார்.
காரணம் மட்டும் கூறவில்லை. தனக்கு வயது ஆகிவிட்டதால் கம்பெனியின் கணக்கு வழக்குகளைப் பார்க்க முடியவில்லை என்றும், அதனால் அவன் இந்தியாவில் பாதி நாட்களும், லண்டனில் பாதி நாட்களுமாக வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ராகுல் வழக்கம் போல் கம்பெனிக்குப் போவதும், மாதவியுடன் வார்த்தையில் விளையாடுவதும், எல்லா ரெஸ்டாரண்ட்டுகளுக்கும் விசிட் செய்து ஜாலியாகப் பொழுது போக்குவதுமாக இருந்தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை லஞ்சிற்கு வீட்டிற்கு அழைக்க அவளுக்குப் போன் செய்தான். அப்போது அவள் சித்தி லதா அவனுடைய பெற்றோரைப் பார்க்க விரும்புவதாக்க் கூறினாள் மாதவி.
“இன்னொரு நாள், அம்மா அப்பாவிடம் சொல்லி விட்டு அவர்களை அழைக்கலாம். இன்று எனக்கு உன்னோடு மட்டும் தனியாக இருக்க வேண்டுமென்று ஆசை. அதனால் வீட்டில் லஞ்ச் முடித்து விட்டு நாம் எங்காவது வெளியே போக வேண்டும். நான் வந்து உன்னை அழைத்துப் போகிறேன், நீ ரெடியாக இரு” என்ற ராகுல் நேரில் கொடுக்க முடியாத முத்தத்தை போனில் கொடுத்து விட்டு போனை கட் செய்து விட்டான்.
‘சரியான லூஸ், நாம் சொல்வதைக் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டான். எல்லாம் ஆணாதிக்கம்’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டே நிஜமாகவே நேரில் வந்து முத்தம் கொடுத்ததைப் போல் தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள்.
அவன் வீட்டிற்குப் போவதற்கு என்ன டிரஸ் போடுவதென்று யோசித்தாள். முதலில் புடவை கட்டலாமென்று நினைத்தவள், அது கொஞ்சம் அதிகப்படியாகத் தெரியும் என்று வழக்கம் போல் சுடிதாரிலேயே போகலாமென்று நினைத்து, சமீபத்தில் அவள் தோழி வெண்பா தேர்ந்தெடுத்துக் கொடுத்து வாங்கிய அந்தப் புது சுடிதாரை எடுத்தாள்.
அழகான இலைப்பச்சை நிறத்தில், சம்கியாலும் முத்துக்களாலும் எம்பிராய்டரி வேலைப்பாடுடன் கூடிய அழகிய டாப்ஸ். அடர் பச்சை நிறத்தில் லேசான எம்பிராய்டரி வேலைப்பாடுடன் பாட்டம். அதே நிறத்தில் ஒரு துப்பட்டா.
சுருண்டு நீண்ட தலை முடியை வழக்கம் போல் இரட்டைப் பின்னலாகப் பின்னி கடைசியில் ரப்பர் பேண்ட் எதுவுமில்லாமல் அப்படியே விட்டாள். அந்தப் பின்னல்களே ஒவ்வொன்றும் அடர்த்தியாக கருநாகம் போல் நீண்டு முட்டி வரைத் தொங்கியது. காதோரங்களில் அழகாக ஸ்பிரிங் போல் வேறு கட்டுக்கடங்காமல் தொங்கியது. லேசான பௌடர் பூச்சுடன் சிறிய சிகப்புக் கலர் ஸ்டிக்கர் பொட்டு, அவ்வளவுதான் அவள் அலங்காரம்.
ராகுலுடன் அவன் வீட்டிற்கு லஞ்ச்சிற்கு வந்து சேர்ந்தாள் மாதவி. கௌசல்யா அவள் அழகைப் பார்த்து பிரமித்து நின்றாள். அவ்வளவு ஏன், பரத் கூட ஒரு நிமிடம் அவளுடைய அழகை அந்த எளிமையான அலங்காரத்திலும் பார்த்து பிரமித்து தான் நின்றார்.
‘இருந்தும் ரக்ஷிதாவும் அழகிலோ அறிவிலோ இவளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவளில்லை. அதனால் மனதில் உள்ள சந்தேகங்களை கட்டாயம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்’ என்பதில் உறுதியாக இருந்தார்.
அன்று வெகு நாட்கள் கழித்து வந்த மாதவிக்காக சில ஸ்பெஷல் ஐட்டங்களும், ராகுல் நன்றாக சாப்பிட வேண்டும் என்பதற்காக அவனுக்கும் பிடித்த சில உணவுகளையும் தயாரிக்க சொல்லி இருந்தாள் கௌசல்யா. எல்லோரும் ஏறக்குறைய சாப்பாட்டின் இறுதிப்பகுதிக்கு வந்த நேரத்தில் பரத் லேசாக பேச்சைத் தொடங்கினார்.
“மாதவி, உன் திருமணத்திற்கு நீ உன் வீட்டாரிடம் சம்மதம் கேட்டாயா அம்மா?” என்றார்.
“எங்கள் வீட்டில் எல்லோருக்கும் சம்மதம்தான் அங்கிள். நான்தான் காணாமல் போன அம்மாவைத் தேடிப் பிடித்து அவர்கள் எதிரில் எங்கள் திருமணம் நடக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்றாள் மாதவி உறுதியுடன்.
“இன்னும் ஆறு மாதத்திற்குள் நீ உன் அம்மாவைக் கண்டுபிடித்து விடுவாயா மாதவி?”
“அது எப்படி சொல்ல முடியும் அங்கிள்? சீக்கிரம் கண்டு பிடித்தால் எங்களுக்கும் சந்தோஷம் தானே. எத்தனையோ மாதங்களாய் வருஷங்களாய் தேடுகின்றோம், கிடைக்கவில்லையே” என்றாள் வருத்தத்துடன்.
“ஆனால்…” என்று இழுத்த பரத் மேற்கொண்டு ஏதும் பேசாமல் நிறுத்திக் கொண்டார்.
“சொல்லுங்கள் அங்கிள்… என்னிடம் எந்தத் தயக்கமும் வேண்டாம்” என்றாள் மாதவி.
“ஆனால் ராகுலின் ஜாதகப்படி, அவனுக்கு இந்த வருடத்திற்குள் திருமணம் முடிக்க வேண்டும். ‘பருவத்தே பயிர் செய்‘ என்று பெரியவர்களும் சொல்லியிருக்கிறார்கள் இல்லையா? இப்போதே அவனுக்கு திருமண வயது கடந்து விட்டது. தேவையில்லாத சென்டிமென்ட் எல்லாம் வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். அவனுக்கும் காலாகாலத்தில் எல்லாம் நடந்தால் தான் நாங்களும் பேரக்குழந்தைகளுடன் கொஞ்ச முடியும். எங்களுக்கும் வயதாகி விட்டதல்லவா?” என்றார்.
ஆரம்பத்தில் மென்மையாக இருந்த அவர் குரல், பேச்சை முடிக்கும் போது கடுமையாக இருந்தாற் போல் இருந்தது மாதவிக்கு.
திடுக்கிட்ட ராகுல், “அப்பா என்ன பேசுகிறீர்கள்?” என்றான்.
“நான் ஒன்றும் தவறாகப் பேசவில்லை ராகுல். நம் குடும்பத்தின் நிலமையையும் சொல்ல வேண்டுமல்லவா. அப்போது தான் மாதவிக்கு நம் நிலமை புரியும். அவளுடைய விருப்பத்தை அவள் சொல்லி விட்டாள். நம் குடும்பத்தின் நிலமையையும் எங்கள் ஆசையையும் சொன்னால் தானே அவளுக்குப் புரியும்” என்றார்.
“அப்பா, இன்று மாதவியின் பிறந்த நாள். இன்று அவள் வருத்தப்படும்படி எதுவும் சொல்ல வேண்டாம். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. அதை நான் அவளிடம் பேசுகிறேன். ஆனால் என் மாதவிக்காக நான் எத்தன வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன்” ராகுல் திட்டவட்டமாகக் கூறினான்.
பரத் நேரடியாக மாதவியிடமே பேசலானார். “மாதவி, எங்கள் பிள்ளையை வைத்து எங்களுடைய உணர்ச்சிகளுடன் விளையாட வேண்டாம். காத்திருந்து காத்திருந்து உங்கள் இருவர் வாழ்க்கையும் வீணானால் யாருக்கு என்ன லாபம்?. என்னிடம் யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள். மாதவி ,உன் அம்மாவை இன்னும் ஆறு மாதங்களுக்குள் நீங்கள் கண்டுபிடித்தால் எங்களுக்கு உன்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள எந்தத் தடையுமில்லை, அதற்கு மேல் எங்களால் காத்திருக்க முடியாது” என்றார் உறுதியாக.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings