இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“நான் எந்த டிரஸ் வாங்கி வந்து கொடுத்தாலும், அதை வேண்டா வெறுப்பாகத்தான் வாங்கிக் கொள்கிறாளே தவிர அதை ஆசையுடன் உபயோகப் படுத்தவதில்லை. நான் அவள் அம்மாவிற்கு செய்தது துரோகம் தான். நானே அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இவள் என் அன்பை அலட்சியப்படுத்துவது என் மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது ராகுல்” என்றார் கலக்கத்துடன்.
“எந்த கஷ்டத்திற்கும் ஒரு முடிவு உண்டு மாதவி. நீ ஏன் உன்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு உன் அப்பாவையும் சங்கடப்படுத்துகிறாய்?” என்றான் ராகுல்.
“நான் என்ன சின்னக் குழந்தையா? எல்லாவற்றிற்கும் எல்லோரையும் அடிமைப்படுத்தித்தான் இந்த நிலையில் இருக்கிறோம். பிறந்தநாள் டிரஸ் கூட இவர் வாங்கித் தருவதைத்தான் போட்டுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவது மிகவும் அநியாயம்“ என்று கத்தினாள் மாதவி.
“இன்று உன் பிறந்த நாளா மாதவி?” என்றான் வியப்புடன்.
“ஆமாம், அது ஒன்றுதான் பாக்கி” என்றாள் வெறுப்புடன்.
‘அதற்கு ஏன் இத்தனை சலிப்போ’ என்று மனதிற்குள் நினைத்த சிரித்துக் கொண்டான் ராகுல்.
“என்ன சிரிப்பு?” என்றாள் மாதவி.
“ஒன்றுமில்லை, அம்மா உன்னை அழைத்து வரச் சொன்னார்கள், போகலாமா?“ என்றவன், ராகவனிடம் திரும்பி “அங்கிள், அம்மா மாதவியைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள், நான் அழைத்துப் போகட்டுமா?” என அவர் அனுமதியைக் கேட்டான்.
“அழைத்துப் போ ராகுல். ஆனால், ஒரு திருமணமாகாத பெண் அவர்கள் பையனுடன் தேவையில்லாமல் சுற்றுகிறாள் என்று தவறாக நினைக்காமல் பார்த்துக் கொள். என்னுடைய தேவையில்லாத தவறான எண்ணங்களால் வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிற்கிறோம். என் மகள் வாழ்க்கையில் அந்த மாதிரித் தவறுகள் நேராமல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்றார் மிகுந்த வருத்தத்துடன் பெருமூச்சு விட்ட வண்ணம்.
அவருடைய வருத்தம் மாதவியையும் பாதித்திருக்க வேண்டும். ஒன்றும் பேசாமல் ராகவன் வாங்கி வந்த புது சுடிதாரைப் போட்டுக் கொண்டாள். அவர் வாங்கி வந்த முத்துக்கள் பதித்த மெல்லிய செயினையும் கழுத்தில் அணிந்து கொண்டு அவள் தந்தையின் எதிரே வந்து நின்றாள்.
அவளைப் பார்த்த ராகவனுக்கு, அவர் மனைவி சரயூவே எதிரில் நிற்பது போல் தெரிந்தது. அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தப் புது டிரஸ்ஸில் அவளைப் பார்த்து ஒன்றும் பேசாமல் பிரமித்து நின்றான் ராகுல். வெளிர் மஞ்சள் நிறத்தில், சம்கி வேலைப்பாடுகளுடன் அவ்வளவு அழகாக இருந்தது அந்த சுடிதார். அவள் கழுத்தில் அணிந்திருந்த சிறிய முத்துக்கள் பதித்த அந்த சங்கிலியும் அவளுக்கு அவ்வளவு அழகாகப் பொருந்தியிருந்தது. ஆனால் அவளுடைய உடலின் அழகிய தங்க நிறத்தோடு அந்த வெளிர் மஞ்சள் நிறம் போட்டி போட முடியவில்லை. இப்படியும் ஒரு அழகா என்று பிரமித்து நின்றான் ராகுல்.
“எதைப் பார்த்து இப்படி இரண்டு பேரும் விழிகள் தெறிக்க முறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றாள் மாதவி எரிச்சலுடன்.
தலையை லேசாக இடம் வலமாகக் ஆட்டியபடியே உள்ளே சென்று விட்டார் ராகவன், அவரால் சரயுவின் நினைவில் இருந்து மீளவே முடியவில்லை. அவர் செய்த பிழை அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து விட்டது. ஆம், அவர் அப்படித்தான் நினைத்துக் கொண்டார்.
ராகுலோ, இந்தத் தங்கச்சிலையின் முன்னால் எந்தத் தங்க நிறமும் எடுபடாது என்று நினைத்துக் கொண்டான். அவனுக்கு எப்.எம். ரேடியோவில் கேட்கும் ஒரு கதாநாயகனின் பாட்டுத் தான் ஞாபகம் வந்தது.
‘கட்டித் தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து தட்டித் தட்டி சிற்பிகள் செய்த உருவம்‘ என்ற பாடல் தான் அது. ’என் மாதவி நிஜமாகவே ஒரு தங்கச் சிலைதான். அந்தக் காலத்தில் கவிஞர்கள் கூட நன்கு அனுபவித்து, அவர்கள் அனுபவத்தை மற்றவர்களும் உணருமாறு வர்ணித்திருக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டான்.
காரில் அவன் பக்கத்தில்தான் மாதவி உட்கார்ந்திருந்தாளே தவிர, காரின் கண்ணாடி வழியாக எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் அவன் குரல் அவளைத் தொந்தரவு செய்யாமல் ராகுல் யாருடனோ மிக மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றான். யாருக்கோ, ஏதேதோ உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்தான். அவன் பேசி முடிக்கவும், தன் நினைவிலிருந்து விழித்து, மாதவி திரும்பிப் பார்க்கவும் சரியாக இருந்தது.
“மாதவி, உன் கோபம் தணிந்து விட்டதா?” ராகுல் லேசான சிரிப்போடு கேட்டான்.
“ஏன், என்னைப் பார்த்தால் பைத்தியக்காரி போல் தெரிகிறதா? உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது ராகுல். நல்ல புரிதலுள்ள ஒரு அம்மா அப்பா, அவர்களின் ஒரே செல்லப் பிள்ளை நீ. அதனால் தான் நீ என்னைப் பார்த்து கேலி செய்கிறாய்?” என்றாள் மனத்தாங்கலுடன்.
“நிஜமாகவே நீ பைத்தியக்காரிதான். சரியானவற்றை எல்லாம் தவறாகவேப் புரிந்து கொள்ளும் புத்திசாலி. நான் போய் உன்னை கேலி செய்வேனா மாதவி? நான் உன்னை கேலி செய்தால் என்னையே கேலி செய்துக் கொள்வது போல் ஆகும். ஆனாலும் நீ உன் அப்பாவுடன் இப்படிப் பாராமுகமாக நடந்து கொள்வது எனக்கே கொஞ்சம் மனதிற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது.
நீயும் நானும் சந்தித்து சில வருடங்கள்தான் ஆகின்றது. நீ என்னைப் பேச வேண்டாம் என்றும், பழக வேண்டாம் என்றும் கூறியதும் நான் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனாகவே மாறிவிட்டேன். நீயோ, நான் பேசாமல் விட்டதும் எப்படி கலங்கினாய், எப்படி என்னுடன் சண்டைப் போட்டாய்?
உன் பெற்றோரோ பல ஆண்டுகள் காதலித்து, வீட்டாரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஒரு அழகான, சண்டைக்காரப் பெண்ணையும் பெற்றவர்கள். மனைவியைப் பிரிந்து வாழ்வது உன் அப்பாவிற்கு எவ்வளவு துன்பமாக இருக்கும். அவர்கள் துயரமும் சங்கடமும் பல மடங்கு அதிகமாக இருக்கும். அவருடைய துயரத்தைப் புரிந்து கொள்ளாமல் மேலும் குத்தலாகப் பேசுவது செத்த பாம்பை அடிப்பது போல்” என்று ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தான் ராகுல்.
அவனையே முறைத்துப் பார்த்தாள் மாதவி. “சும்மா முறைக்காதே மாதவி. நீ சாதாரணமாகப் பார்த்தாலே உன் கண்களில் மூழ்கி விடுவோமோ என்னும் பயம் இருக்கும். நீ இப்படி முறைத்தால் இன்னொரு சந்திரமுகி போலவே இருக்கிறது. பயமாக இருக்கிறது ! ரா ரா சரசுக்கு ராரா என்று பாடி விடுவோனோ என்று பயமாக இருக்கிறது” என்று பயந்தவன் போல் நடித்தான். அவன் நடிப்பைப் பார்த்து மாதவி ‘பக்’ கென்று சிரித்து விட்டாள்.
ஒரு வழியாக அவனுடைய வீடும் வந்தது.
“உன்னுடைய நலனில் உன் அப்பாவைத் தவிர யார் உண்மையான அக்கறை கொள்வார்கள்? அவரிடம் கொஞ்சம் பிரியமாக நடந்து கொள்ளேன்” கெஞ்சுதலாக சொன்னான் ராகுல்.
“எல்லாவற்றுக்கும் என்னையே குற்றம் சொல். அக்கறை என்ற பெயரில் தேவையில்லாத டாமினேஷன்” என்று முணுமுணுத்தாள் மாதவி.
சின்னக் குழந்தைகள் அடிக்கடி அம்மா அப்பாவிடம் செல்லமாகக் கோபித்துக் கொள்வது போல் சிணுங்கினாள். அவளுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்த ராகுலிற்கு, அவளை இரு கைகளாலும் அள்ளி அணைக்க வேண்டும் என்று ஆவல் பெருகியது.
அவன் வீட்டின் அருகில் வந்து விட்டனர். கார் பார்க்கிங்கில் ஏற்கனவே நின்று கொண்டிருந்த லேட்டஸ்ட் பென்ஸ் காரும், ஒரு பிஎம்டபுள்யூவும், அவன் பெற்றோர் இருவரும் வீட்டில் இருப்பதைத் தெரிவித்தது.
காரில் இருந்து இறங்கிய ராகுல், மாதவியின் பக்கம் கதவைத் திறந்து அவள் கையைப் பிடித்து அழைத்துச் செல்லக் கையை நீட்டினான். அவன் கையைப் பிடித்து இறங்கினாள் மாதவி.
“கிருஷ்ண பகவானே! போதுமே கீதோபதேசம். உன் வீடும் வந்து விட்டது. போதும் நீ எனக்கு கிளாஸ் எடுத்தது. மூடு வாயை. உன் அம்மா அப்பா எதிரில் என் மானத்தை வாங்காதே” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.
ராகுல் வாயைக் ஒரு கையால் பொத்தியபடியே மறுகையால் உள்ளே அவளைக் கையைப் பிடித்து வீட்டினுள் அழைத்துச் சென்றான்.
வீட்டில் அம்மா அப்பா இருவரும் காணவில்லை, ஆனால் வீடு முழுவதும் நிஜ பூக்களாலும், காகிதப் பூக்களாலும், வண்ணவண்ண பலூன்காளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
“ராகுல், வீடு முழுவதும் அழகாக அலங்கரிக்கப் பட்டிருக்கிறதே, ஆனால் அம்மா அப்பா இல்லையே. இருவரும் வெளியே போயிருக்கிறார்களா?” என மாதவி கேட்க, ராகுல் அவள் கையை விடவேயில்லை.
“பஞ்சு போல் எவ்வளவு மென்மையாக இருக்கிறது உன் கை. புறாவின் வயிற்று பாகத்தைத் தொட்டால் இப்படித்தான் இலவம் பஞ்சு போல் இருக்கும்” என்றான் அவள் கைகளைத் தன் கன்னத்தில் பதித்தபடி.
“இதுதான் சாக்கு என்று சும்மாவே என் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்காதே. எல்லா பெண்கள் கைகளும் மென்மையாகத்தான் இருக்கும். அது சரி, ஆன்டியும் அங்கிளும் எங்கே?” என்று கேட்டாள்.
“அப்படியே பூஜை அறைக்கு இருவரும் வாருங்கள்“ என்று கௌசல்யாவின் குரல் பூஜை அறையின் உள்ளிருந்து கேட்டது.
ராகுல், மாதவியின் கையைப் பிடித்து பூஜை அறைக்குள் நுழையும் போது திடீரென்று அவர்கள் இருவர் மேலும் பூ மழை பொழிந்தது. பலூன்கள் பறந்தன. ‘ஹேப்பி பர்த்டே’ பாடல் உற்சாகமாக ஒலித்தது.
மாதவிக்கு ஒன்றும் புரியவில்லை, சந்தோஷத்தில் திணறினாள். “அதிசயம் ஆன்ட்டி. இன்று என் பிறந்தநாள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் ஆன்ட்டி?” எனக் கேட்டாள் மாதவி.
“ஒரு பட்சி சொல்லிச்சி” என்ற கௌசல்யா கலகலவென்று சிரித்தாள்.
ராகுலின் அப்பாவும் அவன் அம்மாவின் அருகில் நின்று எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கௌசல்யாதான், “ஒரு ஸ்வாமி பாட்டு பாடம்மா” என்றாள்.
”நானா?” என்ற மாதவி ‘நின்னைச் சரண்டைந்தேன்’ பாடலைப் பாடினாள். ’நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட நின்னைச் சரண்டைந்தேன் கண்ணம்மா‘ என்று மனமுருகப் பாடினாள். பொருள் பொதிந்த அந்தப் பாடலைப் பாடும் போது அவளையுமறியாமல் உணர்ச்சி மிகுதியால் அவள் கண்களில் கண்ணீர் முத்துக்கள்.
உணர்ச்சி மிகுதியால் தத்தளிக்கும் மாதவியின் கைகளைப் பற்றி லேசாகத் தட்டிக் கொடுத்தாள் கௌசல்யா. “ராகுல் காலையில் வெறும் பால் மட்டும் தான் குடித்து விட்டுப் போனான், வேறு ஒன்றும் சாப்பிடவில்லை. நீயும் அப்படித்தான், ஒன்றும் உருப்படியாக சாப்பிட்டு இருக்க மாட்டாய். அதனால் தான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டாலும் கண்களில் கண்ணீர். வலுவான உடலில்தான் வலுவான உள்ளம் இருக்கும். எதையும் எதிர் கொள்ள மனமும் பலமாக இருக்க வேண்டும். உடம்பும் பலமாக இருக்க வேண்டும்” என்று பேசி முடித்தாள்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings