in , ,

உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சாப்பிட்டுக் கொண்டே மெதுவாகப் பேசலானான் விமல். “நாம் நினைக்கிறாற் போல் மாதவி கர்வம் பிடித்தவள் இல்லை, அவள் வாழ்க்கையே மிகவும் பரிதாபமானது”

“நீ மாதவியோடு பேசினாயா?”  

இல்லையென்று தலையாட்டினான். “அவள் அப்பாவோடு பேசினேன். ஆனால் அவரோ, அது எங்கள் குடும்ப விஷயம், உனக்கு தெரியவேண்டிய அவசியமில்லை என்று என்னை பயங்கரமாகத் திட்டி விரட்டி விட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் வெண்பாவை நாடினேன். கடைசியில் அவள் தான், மாதவியின் சித்தியைப் பிடித்தால் ஏதாவது விஷயம் தெரியும்  என்றாள்.

வெண்பாவிற்கு மாதவியின் சித்தி லதாவை நன்றாகத் தெரிந்திருக்கிறது. அவர்கள் தான் மாதவி ஏன் இப்படி இருக்கிறாள் என்று விவரித்தார்கள். குற்றமற்ற மாதவியின் அம்மா சரயுவை வெளியே தள்ளி அவமானப்படுத்தி தாயற்ற குழந்தையாக, கிட்டத்தட்ட அனாதையாக மாற்றிய தன் தந்தையின் மேல் ஏற்பட்ட வெறுப்பு தான் அவளுக்கு எல்லா ஆண்களும் சுயநலம் பிடித்தவர்கள் என்று நினைக்கிறாள்.

அதன் பிறகு அவள் அம்மாவை அவள் பார்க்கவும் இல்லை. மாதவியின் அப்பாவும் அவர் செய்த தவறைப் புரிந்து கொண்டு இருக்கிறார். அப்பாவும், மகளும் பல இடங்களில் தேடியும் அவள் அம்மா கிடைக்கவில்லை. இது தான் மாதவியை இப்படி ஓர் நிலைக்கு ஆளாக்கியது. அந்தப் பெண்ணின் மனம் தாய்ப் பாசத்திற்கு ஏங்குகிறது.

ஆண்களைப் பற்றிய அவளின் மொத்தமான, ஒருதலையான தப்பான அபிப்பிராயம் தவறு என்று அவளுக்குப் புரிய வேண்டும். அதன் பிறகு தான் நீ அவளுடன் பழக முடியும்” என்றான்.

“ஒருத்தர் கெட்டவராக இருந்தால் எல்லோரும் அப்படியே இருக்க வேண்டுமா? அதுவுமன்றி அவள் அப்பாவும் மற்றவர்கள் தூண்டுதலால் தானே அது போல வில்லத்தனமாக நடந்திருக்கிறார். உண்மை தெரிந்தவுடன் அவர் தான் மகளை அழைத்துக் கொண்டு தனியாக வந்து விட்டாரே. அவர் மோசமானவராக இருந்தால் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டிருக்கலாமே. அவருடைய மனதைப் புரிந்துக் கொண்டு மாதவி அப்பாவுடன் அன்பாக இருக்கலாம் இல்லையா?”

“எல்லாம் விதி. ஆனால் யாருடைய விதி இப்படி ஒரு அழகான குடும்பத்தை உடைத்தது? குடும்பத்திற்காகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தன் மனைவி மகளைப் பிரிந்து சென்ற மாதவியின் தந்தை ராகவனின் விதியா, இல்லை தன் பெற்றோர், உறவினர், அழகான சொந்த ஊர் எல்லாவற்றையும் உதறிவிட்டு காதலித்த கணவனோடு வந்த சரயுவின் விதியா, இல்லை நல்ல படித்த அறிவாளியான பெற்றோர் இருந்தும், புரிதல் இல்லாத தந்தையைப் பெற்ற மாதவியின் விதியா? தெரியவில்லை” என்றான் விமல்.

“ஆனால் விதியை மதியால் வெல்லலாம் இல்லையா?” என்றான் ராகுல். அவள் மனதை எப்படியும் பாஸிட்டிவ்வாக மாற்றி அவளைத் தன்னவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான் ராகுல். விதி அவனுக்கு உதவுமா?

காலை ஐந்து மணிக்கு எழுந்து ஜாகிங் செய்வது ராகுல் வழக்கம். சில நேரங்களில் அவன் நண்பர்களும் அந்த நேரத்தில் வந்து சேர்ந்து கொள்வது வழக்கம். ஜாகிங் முடிந்த பிறகு டீயோ காபியோ குடித்து விட்டு வீடு திரும்புவார்கள்.

ஆனால் விமல் மட்டும் காலை எட்டு மணிக்கு முன்னால் எழுந்து கொள்ள மாட்டான். ராகுல் ஜாகிங் முடிந்த பிறகு அவன் அம்மாவுடன் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டுத் தான் குளிக்கப் போவான்.

அன்று அவன் அம்மா கௌசல்யா வழக்கம் போல் ஹாலில் இல்லை. சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்தார்.

“அம்மா, ஏன் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்? வேலம்மா எங்கே?” என்று கேட்டான்.

“வேலம்மா எங்கோ விழுந்து காலில் நன்றாக அடிபட்டிருக்கிறது. நான்தான் அவளைத் தோட்டத்தில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்கச் சொன்னேன்” என்றார்  கௌசல்யா.

வேலம்மா அவர்கள் வீட்டு சமையல்காரம்மா. அவள் பல வருடங்களாக அந்த வீட்டில் வேலை செய்து வந்ததால் யாரும் அவளை ஒரு வேலையாள் என்றே நினைக்க மாட்டார்கள். கௌசல்யா உட்பட எல்லோரும் அவளை வேலம்மா என்று தான் மிகவும் பிரியமாக அழைப்பார்கள்.

ராகுல் அவளைத் தேடிச் சென்றான். தோட்டத்தில் வேலம்மா வேப்ப மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள். முழங்கால் வரை புடவையைத் தூக்கி மடித்து விட்டிருந்தாள். முட்டியில் ஏதோ பத்து போட்டிருந்தாள். ஒரு கையில் கௌசல்யா கொடுத்த சூடான டீயை வைத்துக் கொண்டு ஊதி ஊதி ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள்.

“வேலம்மா, அம்மாவை சமையல் செய்ய வைத்து விட்டு நீ ஜாலியாக ‘ஸன் பாத்’ எடுத்துக் கொண்டிருக்கிறாயா?” என்று சிரித்துக் கொண்டு கிண்டலடித்தான் ராகுல்.

“அட போங்க தம்பி, நானே கீழே விழுந்து கால் முட்டி வீங்கி விட்டதால் புளிப் பத்து போட்டுக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறேன். நீங்கள் வேற கிண்டல் செய்கிறீர்களே” என்றார் வேலம்மா.

“கீழே விழுந்து அடியா? இல்லை உங்க வீட்டுக்காரர் நன்றாகக் குடித்து விட்டு முட்டியை உடைத்து விட்டாரா?” என்று உண்மையாகவே பரிதாபப்பட்டுக் கேட்டான். ஏனெனில் அது போலவும் பலமுறை நிகழ்ந்திருக்கிறது.

“இல்லை தம்பி, கீழே தான் விழுந்து விட்டேன். என் வீட்டுக்காரர் தான் புளிப் பத்து போட்டு விட்டார். ஆனால் ரொம்ப வலிக்கிறது ராகுல் தம்பி. அதனால் தான் சமையல் செய்ய முடியவில்லை. வேலை செய்யாமல் ஏமாற்றவில்லை தம்பி” என்றாள்

“வேலம்மா, உன்னை எனக்குத் தெரியும். நீ ஒன்றும் ஏமாற்றும் ஆளில்லை. நான் குளித்து விட்டு, சாப்பிட்டு வருகிறேன். ரெடியாக இரு, நான் உன்னை நம் டாக்டரிடம் அழைத்துப் போகிறேன்” என்றான் ராகுல்.

“டாக்டரெல்லாம் வேண்டாம் தம்பி. இரண்டு நாள் வலிக்கும். பிறகு சரியாகிவிடும்”

“அதுவரையில் அம்மா எப்படி சமையல் செய்ய முடியும்? நான் வரும் போது ரெடியாக இருங்கள். உங்களைக் கொண்டு வந்து வீட்டில் விட்டு விட்டுப் பிறகு நான் காலேஜ் போக வேண்டும்”  

அவன் வரும் போது வேலம்மா தயாராக இருக்க, அவளையும் அழைத்துக் கொண்டு, தங்கள் குடும்ப டாக்டரிடம் சென்றான். அங்கே அவளுக்கு எல்லாவிதமான பரிசோதனைகளை செய்து  எக்ஸ்-ரேவும் எடுக்க, எலும்பு ஏதும் உடையவில்லை; தசை தான் பிசகி இருக்கிறது என்றார்கள்.

பணம் கட்டி விட்டு, வேலம்மாவையும் அழைத்துக் கொண்டு காருக்கு  வந்தான். அப்போது மாதவி அங்கே ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தவள், ராகுலுடன் ஒரு வேலைக்காரி போல் இருந்த வயதான பெண்ணுடன் அவனைப் பார்த்து ஆச்சர்யமடைந்தாள். ஆனால் அவள் இவனைத் முன் பின் தெரியாதவள் போல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனுக்குக் கோபம்தான். இருந்தாலும் அவளை கலாட்டா செய்ய வேண்டுமென்று “ஹாய் மாதவி” என்றான்.

அவளும் பதிலுக்கு “ஹாய் சீனியர்” என்றாள்.

“காலேஜில் தான் சீனியர். இங்கே நடு ரோடில் கூடவா? எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறதல்லவா, அதை வைத்துக் கூப்பிடலாமே?” என்றான்.

“இந்த அம்மா யார்?” என்றாள் மாதவி.

“இவர்கள்…” என்று அவன் முடிக்குமுன்பே

“அம்மா, நான் அவர்கள் வீட்டு சமையல்காரி. கொஞ்சம் கால் முட்டியில் அடி பட்டு வீங்கி விட்டது. அதனால் நான் வேண்டாமென்று மறுத்தாலும், ராகுல் தம்பி என்னை இங்கே அழைத்து வந்து மருந்து, மாத்திரை, எக்ஸ்-ரே என்று ஏகப்பட்ட செலவு“ என்றாள் வேலம்மா ஆற்றாமையுடன்.

“அடேயப்பா, அவ்வளவு நல்லவரா இவர்?” என்றாள் மாதவி கிண்டலாக.

“ஏனம்மா கிண்டல் செய்கிறீர்கள்? தம்பி ரொம்ப நல்லவர் அம்மா, எனக்கு மட்டுமில்லை, வீட்டில் யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் முதலில் இவர் தான் எங்களுக்கு மாத்திரை மருந்தெல்லாம் தருவார்” என்றாள் அவனுக்கு மிகவும் பரிந்து வேலம்மாள்.

‘அப்படியா?’ என்பது போல் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தவள், “ஸாரி இவள் என் தோழி ஆஷா. மெடிசன் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள், இவளைப் பார்ப்பதற்குத்தான் நான் இங்கு வந்தேன்” என்றாள் அவளை அறிமுகப்படுத்தியபடி.

அந்தப் பெண் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரிடமும் மருத்துவமனைக்குள் வேலை இருக்கிறதென்று சொல்லி விடைபெற்று உள்ளே சென்று விட்டாள்.

“இங்கிருந்து நம் காலேஜிற்குத்தானே?” என்று கேட்டான் ராகுல் மாதவியிடம்.

“ஆம், ஆனால் எனக்கு உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்” 

“பேசலாமே, என்னுடன்  காரில் இப்போது வருவதில் ஒன்றும் ஆட்சேபமில்லையே?” என ராகுல் கேட்க, சிறிது தயக்கத்திற்குப் பிறகு ‘சரி’யென்று தலையசைத்தவள் பின் சீட்டில் ஏறி உட்காரப் போனாள்.

“ஹலோ மாதவி மேடம், முன்னால் வந்து உட்காருங்கள். இல்லையென்றால் உங்கள் இருவருக்கும் நான் டிரைவர் என்று நினைத்து விடுவார்கள்” என்றான் ராகுல் சிரித்துக் கொண்டு.

காரை ஸ்டார்ட் செய்த ராகுல், ”வேலம்மாவை வீட்டில் இறக்கி விட்ட பிறகு கல்லூரிக்குச் செல்லலாம்” என்றான்.

அவன் வீட்டு வாசலில் காரை நிறுத்தியவுடன் மாதவி திகைத்து விட்டாள். ‘அடேயப்பா! எவ்வளவு பெரிய வீடு! எவ்வளவு அழகான தோட்டம்!’ என்று வியந்தது அவள் மனம்.

வாசலிலேயே நின்றிருந்த அழகான ஒரு ஐம்பது வயது பெண்மணி ராகுலின் தாய் போலும். ராகுல் அவனுடைய அம்மாவைப் போலவே அச்சு அசலாக இருந்தான். ஆனால் அவன் அம்மாவிற்கு மெல்லிய தேகம். அவனைத் திரும்பிப் பார்த்தாள். கிரேக்க சிலைபோல வலுவான கட்டுமஸ்தான உடல்.

“ஒரு நிமிடம் மாதவி. அம்மா வெளியில் நிற்கிறார்கள், நான் வேலம்மாவின் ட்ரீட்மென்ட் விவரத்தை அம்மாவிடம் சொல்லி விட்டு வருகிறேன். நீங்களும் காரிலிருந்து இறங்கி வந்தால் உங்களையும் அறிமுகப்படுத்துகிறேன்” என்றான்.

காரிலிருந்து இறங்கிய மாதவியை புன்சிரிப்புடன் வரவேற்றாள் கௌசல்யா. ராகுல் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திய பின் வேலம்மாவின் மருத்துவ ட்ரீட்மென்ட்டைப் பற்றிக் கூறினான்.

மாதவியைக் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் கௌசல்யா. சிறிது நேரம் பேசிவிட்டு, மாதவி பலமுறை மறுத்தும் விடாப்பிடியாக அவளுக்கு இட்லியும், காபியும் கொடுத்து உபசரித்தாள்.

தன் மகன் இதுவரையில் அவன் நண்பன் விமலைத் தவிர வேறு யாரையும் வீட்டிற்கு அழைத்து வந்ததில்லை என்றாள். மாதவியைப் பார்த்தவுடன் அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த சிறிது நேரத்தில் அதை பலமுறை மனம் திறந்தும் சொல்லி விட்டாள். அதை அவள் சொல்லிய விதம் மாதவிக்கே கேட்க கூச்சமாக இருந்தது.

“ஆன்ட்டி, காலேஜிற்கு நேரமாகி விடும். ராகுல் கிளம்பலாமா?” எனறாள் மாதவி.

“நான் எப்போதோ ரெடி. நீங்கள் இருவரும் தான் ரொம்ப நாள் பிரண்ட்ஸ் போல் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள்! அம்மா, நாங்கள் கிளம்புகிறோம்” என்றான் கார் சாவியைக் கையில் வைத்துக் கொண்டு.

“ஒரு நிமிடம்” என்றார் கௌசல்யா.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொடுவானமேயில்லையோ? (புதுக்கவிதை) – இரஜகை நிலவன்

    நினைவுகளின் நறுமணம் (சிறுகதை) – அர்ஜுனன்.S