எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஊரே ஒன்றுகூடி கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்து விட்டார்கள். இப்படி ஒரு திருவிழாவை நடத்துவார்கள் என்று யாருமே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். வானவேடிக்கைகள், தாரை தப்பட்டைகள் , பாட்டாசுகள் ,மாலைகள்,பேனர்கள் என்று அதகளப் படுத்திவிட்டார்கள்.
இதற்கு முன்னர் இதுபோன்று ‘முத்தனுர்’ கிராமத்தில் இது மாதிரி ஒரு விழா நடந்திருக்குமா ? என்பது சந்தேகமே. அரசியல் கட்சி தலைவரை வரவேற்பதைப் போல் இவ்வளவு அமர்க்களம் எதற்காக ? எல்லாம் அந்த ஊருக்குப் பெருமை சேர்த்த நம் கதாநாயகி ‘அகிலா’வுக்காகத் தான். அப்படியென்ன சாதனையைச் செய்துவிட்டார் அகிலா?!
அண்மையில் வெளியிடப்பட்ட இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுத் தமிழகத்தில் முதலிடம் பெற்றவர் தான் அகிலா.இதற்கு முன்னர் இவருக்கு ஊரார் என்னென்ன உதவிகள் செய்தார்கள் என்றால் ஒன்றுமில்லை. ஆனால்’ இன்று கொண்டாடுகின்றனர் .பணம் பதவி பார்த்ததால் தானே மாலை மரியாதைகள் கிடைக்கின்றன .
நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த அகிலா…கல்லூரியில் முதலாமாண்டு அடியெடுத்து வைக்கும் போது எதிர்பாரா விதத்தில் தந்தையை இழந்து விட்டார் .மாரடைப்பு வந்து அவரைக் கொண்டு போனது.
அகிலாவின் அப்பா விவசாயியாய் இருந்தாலும் முன்று மகள்களின் எதிர்காலம் கருதி சில சேமிப்புகளைச் செய்து இருந்தார். அது அவர்களுக்கு துணை நின்றது. மூன்று பெண்பிள்ளைகள் உள்ள வீட்டில் மூத்தவள் அகிலா .
அகிலாவின் அம்மா ‘சாந்தி’ சத்துணவு அமைப்பாளர்.அவரிடம்… “மூணு பொம்பளப் புள்ளைங்கள எப்படிக் கரை சேர்க்க போற…? பேசாமா யாராவது மாப்பிள்ளை வந்தா கட்டி கொடுத்திடு” என்று வருவோர் போவோர் எல்லோரும் ஆலோசனைகள் சொன்னார்கள்.
அவர்களிடமெல்லாம் எந்த ஒரு உதவியையும் எதிர்ப்பார்க்கவில்லை .அவர்களுடன் விவாதங்களும் செய்யவில்லை .மாறாக அவர்கள் எல்லோருக்கும் ‘ சாந்தியின் ‘ ஒரே பதில் புன்னகை மட்டுமே.
உற்றார் உறவினர் யாருடைய தயவையும் எதிர்பாராமல் சாந்தி தன்னுடைய வருமானத்திலும் பிள்ளைகளின் நன் முயற்சியிலும் அவர்களை முன்னுக்குக் கொண்டுவர பாடுபட்டார் .
ஆண் இல்லா குடும்பம் அப்படியே பட்டுப் போய்விடும் என்று பலரும் எண்ணினார்கள். ஆனாலும் இன்று இளந்தளிர் வளர்ந்து ‘பூத்தது வாழ்க்கை’.அகிலா பொறியியல் பட்டப்படிப்பு முடித்துக் கல்லூரி வளாகத் தேர்வில் வேலை கிடைத்தது .
அந்த வேலையைப் பார்த்துக் கொண்டே இந்தத் தேர்வுக்கும் தயாராகி வென்று நிற்கிறார் .இவருக்குப் பின்னால் வரும் இரு சகோதரிகளும் படிப்பை முடிக்கப் போகிறார்கள். அவர்களையும் நாளைக்கு அரசு பணியில் எதிர்ப்பார்க்கலாம்.
விழாவெல்லாம் முடிந்து வீதியுலா முடிந்து வீட்டிற்கும் வந்த குடும்பத்தினரை ஆரத்தி எடுத்தனர்.
அப்பொழுது சாந்தியிடம் …“நீ வைராக்கியம் பிடித்தவள் சாந்தி…எப்படியோ மகள்களை நல்லா படிக்க வச்சிட்ட” என்று பலரும் சொல்லிவிட்டுப் போனார்கள்.
அவர்கள் எல்லோரும் மனதாரப் பாராட்டிவிட்டுப் போனார்களோ? இல்லை வயிற்றெரிச்சலில் சொல்லிவிட்டுப் போனார்களோ ? தெரியாது.அவர்கள் அனைவருக்கும் சாந்தியின் பதிலோ புன்னகை மட்டுமே.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings