in ,

தங்க மெடல்! (சிறுகதை) – இரஜகை நிலவன்

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அந்த விளையாட்டு மைதானத்தில் கூட்டம் பொங்கி வழிந்தது. திருச்சியில் பிலிப் ஸ்டேடியத்தில் மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன.

திலகர் நூறு மீட்டர் பந்தயத்தில் முதலாவதாக வந்த ரோஷினியைப் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லோரும் அவளிடம் ஆட்டோகிராப்புக்காக மொய்த்துக் கொண்டிருந்தார்கள். மாநில அளவில் பல விளையாட்டுப் போட்டிகளில் தங்க மெடல்கள் குவித்துக் கொண்டிருந்தாள் ரோஷினி.

அதோடல்லாது அவளது சிவப்பு நிறமும் உடல் அமைப்பும் அழகிய நளினமும் எல்லோரையும் எளிதில் கவர்ந்து கொண்டிருந்தது. அடுத்த போட்டிக்கான அறிவிப்பைத் தொடர்ந்து உயரம் தாண்டுதல் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் ரோஷினி.

தூய சேவியர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கனவையும், தன் தாய் தந்தையரின் கனவையும் தன் கனவுகளோடு சுமந்து கொண்டு அந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்தான் திலகர்.

உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் நான்கு போட்டிகளிலும் கண்டிப்பாக தங்கம் வாங்கி அகில இந்திய அளவில் போட்டிக்கு சென்று அதையும் தாண்டி ஒலிம்பிக் போக வேண்டும் என்ற கற்பனைகளோடு வந்தவன், தங்களுடைய போடட்டிகள் மறுநாள் நடக்க இருப்பதால் வேடிக்கை பார்க்க வந்திருந்தான்.

திரும்பவும் ரோஷினி உயரம் தாண்டுதலில் முதலாவதாக வர கூட்டம் கரகோஷம் எழுப்பியது. அடுத்த தங்கம் வாங்கி விட்டதும் கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்து விட்டுப் போனாள் ரோஷினி.

திலகருக்கு, அவள் தன்னையே பார்த்துக் கையசைத்து விட்டுப் போனது போல இருந்தது. ரோஷினி எத்தனைத் தங்கம் வாங்கிக் குவித்தாலும் ஒரு அலட்டல் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறாள். நான் அவளை அதிகம் விட சாதிக்க வேண்டும் என்று எண்ணியவாறு எழுந்த போது ஓடி வந்த அந்தப் பெண் “சார் நீங்கள் திலகர் தானே?” என்றாள்…

“ஆமாம்…”

“உங்களை ரோஷினி பார்க்க வேண்டுமாம். உங்களைத்தான் தன் அறைக்கு வரச் சொன்னாள்…”

அவனுக்குள் ஆச்சரியமாக இருந்தது. ரோஷினியிடமிருந்து தனக்கு அழைப்பு வந்தது அவனுக்கு சொர்க்கத்திலிருந்து அழைப்பு வந்தது போல் தோன்றியது.

“எங்கே இருக்காங்க?“

“லேடீஸ் ஹாஸ்டல் ரூம் நம்பர் 315 மூன்றாவது மாடி…”

“நீ போ நான் அவர்களைப் போய் பார்க்கிறேன்.”

“சார். உங்களைத் தான் உடனே பார்க்க வேண்டும் என்றார்கள்..”

“சரி. நான் அங்கே தான் கிளம்புகிறேன்…”

“வாங்க திலகர். உங்களைச் சந்திக்க வேண்டுமென்று போன வருட ஸ்போர்ட்ஸ் மீட்டிங்கிலே ஆசைப்பட்டேன்” என்றாள் ரோஷினி. இப்போது சல்வார் கம்மீசுக்கு மாறியிருந்தாள்.

“ரொம்ப தேங்ஸ். நான் கூட உங்களை சந்திக்க வேண்டுமென்று ஆசைப்பட்டதுண்டு. என்ன விஷயமாக கூப்பிட்டீர்கள்?”

“நிற்கிறீர்களே.. உட்காருங்கள். கூல்டிரிங்க்ஸ் சாப்பிடுகிறீர்களா?” என்றவாறு ஒரு பெப்சி பாட்டிலை திறந்து இரண்டு கப்களில் ஊற்றினாள்.

“ரொம்ப தேங்க்ஸ்” என்றவாறு பெப்சியை எடுத்துப் பருகினான் திலகர்.

“சார், உங்களால் எப்படி ஹைஜம்பில் இவ்வளவு உயரம் தாண்ட முடிகிறது.. எப்படி டிரெய்னிங் எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்றவாறு அருகில் அமர்ந்தாள்.

அவளின் அருகாமை அவனை கிளுகிளுக்க வைக்க “என்ன ஒரு மாதிரி இருக்கிறீர்கள் உடலுக்குச் சுகமில்லையா?” என்றவாறு நெற்றியில் தொட்டுப் பார்த்தாள்.

திலகர் நிலைகுலைந்து போனான். அவளுடைய அருகாமை, அவளிடத்திலிருந்து வந்த மணம் எல்லாம் அவனை எங்கேயோ அழைத்துச் சென்றது.

“என்ன திலகர் சார் ஒன்றுமே பேச மாட்டேன் என்கிறீர்கள்?” என்று அவன் கன்னத்தில் கை வைத்தாள்.

“ஒன்றுமில்லை.. உங்களுக்கு கோச் யார்?” என்றான் கொஞ்சம் சங்கோஜமாக.

“எனக்கு கோச் எங்கள் பி.டி டீச்சர்தான். உங்களுக்கு இந்த சட்டை மிகவும் அழகாக இருக்கிறது” அவன் காலரை பிடிக்க திலகர் எங்கோ போய்க் கொண்டிருந்தான்.

“ரோஷினி என்ன விஷயமாக என்னைக் கூப்பிட்டீர்கள்?”

“ம்… புரியாத மாதிரிதான் பேசுகிறீர்கள். உங்களுக்கு கேம்ஸ் எப்போது?”

“நாளை காலை ஆரம்பிக்கிறது”.

“ஐயையோ.. நாளை திருச்சியைச் சுற்றிப் பார்க்க உங்களை அழைத்துக் கொண்டு போகலாம் என்றல்லவா நினைத்தேன்…”

“என்ன சொல்கிறீர்கள் ரோஷினி…”

“என் பிரண்ட்ஸ் யாரும் வரவில்லை. என்னுடைய கேம்ஸ் எல்லாம் முடிந்து விட்டது. இனி மாரத்தான் போட்டிகள் நாளை மறுநாள் தான் நடக்கப்போகிறது. நாளை எனக்கு விடுமுறை தனியாகத்தான் இருப்பேன். வர முடியுமா?” அவனைக் கிறக்கமாகப் பார்த்தாள் ரோஷினி…

“அது.. வந்து.. நாளை நடக்கிற எல்லா போட்டிகளிலேயும் நான் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறதே…” இழுத்தான் திலகர்.

“மற்றபடி உங்கள் விருப்பம் திலகர். நாளைக்கு மட்டும்தான் விடுமுறை…”

“ம்…எனக்கு நாளைக்கு…இல்லை வருகிறேன்…”

“வெரிகுட்.” அவன் எதிர்பார்க்காதலாறு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் ரோஷினி.

இரவில் அவள் பள்ளியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அந்த விளையாட்டு மைதானத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள்.

“என்ன ரோஷினி நாளைக்குத் திலகர் விளையாட வருவானா? இல்லை உன்னோடு அழைத்துக் கொண்டு வெளியே போகிறாயா? நீ என்ன செய்வாயோ தெரியாது. அவன் போட்டிகளில் விளையாட வந்தால் நம் பள்ளிக்கு ஆண்கள் பக்கத்தில் ஒரு தங்கமெடல் கூட கிடைக்கப் போவதில்லை” என்றான் சங்கர்.

“கவலைப்படாதே.. கண்டிப்பாக அவனை விளையாட்டு அரங்கத்திக்கு வர முடியாதபடி பார்த்துக் கொள்கிறேன்” என்று சிரித்தாள் ரோஷினி.

“அவன் மட்டும் போட்டிகளில் கலந்து கொள்ளா விட்டால் உயரம் தாண்டுதலில் போட்டியில் தங்கம் எனக்குத்தான்” என்றான் சங்கர்.

“நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்துத் தங்கம் வாங்கப் போவது நான்தான்” என்றான் பழனி.

“டிஸ்கஸ் த்ரோவில் தங்கம் எனக்குத்தா” என்றான் நாராயணன்.

“எல்லாம் ரோஷினியின் கையில்தான் இருக்கிறது..” என்றாள் தேவகி.

“கவலையே படாதீர்கள், திலகர் போன முறை ஏழு தங்கபதக்கங்களை தட்டிச் சென்றான். நம் பள்ளிக்கு ஒன்று கூட கிடைக்காமல் போனது. இந்த முறை அவன் எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு” என்றாள் ரோஷினி.

“வெரிகுட்” என்றான் சங்கர் ரோஷினியைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டு…

இரவில் தூங்க முயற்சி செய்து கொண்டிருந்தான் திலகர், ரோஷினியின் எதிர்பாராத முத்தமும் அவள் அருகாமையும் அவள் அங்கங்களின் உரசலும் எண்ணம் முழுவதும் அவளையே தேடிக் கொண்டிருந்தது. எத்தனை பேர் கனவுகளைச் சுமந்து கொண்டு தங்கப் பதக்கங்களைத் தட்டிச் செல்ல வந்தேன். இந்த முறை தங்கம் வாங்கவில்லை என்றால் அகில இந்திய விளையாட்டு போட்டிகளுக்கோ அதற்கடுத்து ஒலிம்பிற்கோ போக முடியாது.

ஆனால் ரோஷினிக்கு நாளைக்கு விடுமுறை எதிர்மறையாக என்னை அழைத்திருக்கிறாள். என்ன செய்யப் போகிறேன் என்று எண்ணிக் கொண்டே தூங்கிப் போனான்.

காலையில் திலகர் யோகாசனம் செய்து கொண்டிருக்கும்போது வேகமாக புயல் மாதிரி உள்ளே நுழைந்தாள் ரோஷினி. திலகர் இன்னும் கிளம்பவில்லையா? என்று கேட்டவாறு.

இரு புறப்பட வேண்டியதுதான் என்று அவன் எழுந்ததும் திரும்பவும் அவளின் எதிர்பாராத முத்தத்தால் தாக்கப்பட்டான்.

வெரிகுட் பாய் சீக்கிரம் குளித்து விட்டுக் கிளம்புங்கள் என்றவாறு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து தினசரி எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள் ரோஷினி.

கொஞ்ச நேரத்தில் குளித்து விட்டு ஸ்போர்ட்ஸ் உடையணிந்து கொண்டு வந்த திலகரைப் பார்த்துத் திடுக்கிட்டு என்ன திலகர்? என்னோடு வருவதாக சொன்னீர்களே? என்றாள் கோபத்தோடு.

ரோஷிணி மத்தியானம் வரை போட்டிகளில் கலந்து கொண்டு விட்டுக் கிளம்பலாமே.

நான் முக்கியமா உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் முக்கியமா? என்று மிக அருகில் வந்தவளை ஒதுக்கிவிட்டு ரோஷினி உன் தங்கம் போன்ற உடலை விட நான் கனவு கண்ட தங்க மெடல்கள் எனக்கு முக்கியம் வருகிறேன்.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மீண்டும் ஒரு புத்தர் பிறந்தார்!? (சிறுகதை) – இரஜகை நிலவன்

    தப்பா(ன)த பிள்ளை (சிறுகதை) – இரஜகை நிலவன்