in ,

மீண்டும் ஒரு புத்தர் பிறந்தார்!? (சிறுகதை) – இரஜகை நிலவன்

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மறுநாள் சிங்கப்பூர் போவதற்கு வேண்டிய ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தான் சுரேஷ். அவனுடைய புது மனைவி செல்வி அவனுக்கு உதவிக் கொண்டிருந்தபோதுதான் போன் ஒலித்தது.

“ஹலோ சுரேஷ் ஹியர்” என்றான் சுரேஷ் போனைக் கையில் எடுத்தவாறு.

“ஹாய் சுரேஷ் நான் அசோக் பேசுகிறேன். நாளைக்கு சிங்கப்பூர் பிளைட் எத்தனை மணிக்கு..?” என்றது எதிர்முனை.

“காலையிலே பதினொன்று பத்துக்கு. நீ இன்னுமா பாக்டரியிலே உட்கார்ந்திருக்கிறாய்?”

”இங்கே ஒரு சின்னப் பிரச்சினை”

“என்ன பிராப்ளம். நான் வர வேண்டுமா?”

“வேண்டாம். புதுப்பொண்டாட்டிக்காரன். நாளைக்கு சிங்கப்பூர் வேற போகிறாய். நமக்கென்ன மலந்தால் வானம். கமந்தால் பூமி. நான் கவனித்துக் கொள்கிறேன்”

“டேய்… நீ பாட்டுக்கு பாக்டரியிலே உட்கார்ந்து விடாதே. அம்மா இரண்டு முறை போன் பண்ணி நீ இன்னும் வீட்டிற்கு வரவில்லை. ஏதாவது பிரச்சினையா? என்று கேட்டு விட்டார்கள்”.

“இந்த அம்மாதான் பிரச்சினை. எப்போதும் தேடிக் கொண்டே இருப்பார்கள். சின்னப் பையன் தொலைந்து விடுவான் என்பது போல”

“அது சரி…. உன் அம்மாவிற்கு உன் மேல் கவலையில்லாமல் வேறு யாருக்கு கவலை வரும். இதிலே வேறே கல்யாணம் பண்ணிக் கொள் என்றால் சந்தியாசி வேடம் போடுகிறாய்’

“பாரு … சுரேஷ் எனக்கேற்ற பெண் கிடைத்ததும் நான் பண்ணிக் கொள்கிறேன் அப்படீன்னுதான் சொல்லியிருக்கிறேன். அப்புறம் நம்முடைய பாரட்னர்ஷிப் பத்திரம் புதுப்பிக்க வேண்டும். நீ வேறே கையெழுத்து போடாமல் போய் விட்டதாக ஆபீசிலே ஸ்டெனோ குனாலி சொன்னாள்”

“நான் சிங்கப்பூரிலிருந்து வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் அசோக். இந்த சிங்கப்பூர் ஆர்டர் மட்டும் கிடைத்து விட்டால் பணத்தை அள்ளி விடலாம். உனக்கு சிங்கப்பூரிலிருந்து என்ன வாங்கி வரட்டும்… ம் ஒரு சப்பை மூக்குப் பெண் வாங்கி வரட்டுமா? உனக்கு தான் மெட்ராஸ் பெண்கள் யாரையும் பிடிக்க மாட்டேன் என்கிறதே?”

“கப்பலிலே பொண்ணு வந்தா நான் ஏன் வேண்டாம் என்று சொல்கிறேன். இங்கே தினமும் கல்யாணம், புதுப் புது மனைவிகள். பத்தோட பதினொன்று சிங்கப்பூர் பொண்ணு.”

“என்றைக்குத்தான் திருந்தப் போகிறாயோ… அது சரி சாப்பாட்டிற்கு இங்கே வருகிறாயா? நான் காத்திருக்கிறேன்.”

“எவண்டா மடையன். புதுப்பொண்டாட்டியை விட்டு பிரிந்து நாளைக்கு புது ஊருக்குப் போகிறாய். அவள் ஊட்டி விடுவதை நான் பார்க்க வரணுமா? என்ஜாய் சுரேஷ் அம்மா திரும்ப போன் பண்ணுவ வந்ததற்குள் நான் வீட்டுக்கு திரும்ப வேண்டும்”.

“பாக்டரியிலே என்ன பிராப்ளம்”

“நம்ம மேனேஜர் ஒரு தொழிலாளியை அடித்து விட்டார்”

“மன்னிப்பு விட்டு கேட்கச் சொல். நாமெல்லாம் சாதாரண தொழிலாளியாக இருந்து இந்த நிலைக்கு வந்தவர்கள் என்பதை மறந்து விடாதே”

“எனக்குப் புரிகிறது. மேனேஜரிடம் என்ன தவறு நடந்திருந்தாலும் நீங்கள் கை நீட்டி நீட்டி அடித்திருக்கக் கூடாது என்று சொன்ன காரணத்திற்காக பாக்டரி ஆபீஸ் ஸ்டாப் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு புரடொக்ஷன் பண்ண விடமாட்டோம் என்று தகராறு பண்ணுகிறார்”.

“நான் வரட்டுமா?”

“ஒன்றும் வேண்டாம். இரண்டு யூனியன் லீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் சமாளித்து விடுவேன். நான் காலையிலே எட்டு மணிக்கு உன் வீட்டுக்கு வந்து விடுகிறேன்.”

“சரி காலை டிபனுக்காவது வா”

“ஏன்? உன் மனைவி உனக்கு எப்படி ஊட்டி விடுகிறாள் என்று பார்க்கவா?”

“அசோக் நீ திருந்தவே மாட்டியா?”

மறுநாள் காலையில் இரண்டு சூட்கேஸ், ஒரு ஹேண்ட்பாக் புது மனைவி, மாமனாரோடு முதலில் நின்ற சியலோ காரில் சுரேஷ் ஏறிக் கொள்ள “நேரே ஏர்ப்போர்ட் தானே” என்று கேட்டான் அசோக்.

“ஆமாம். நீ உன் மாருதியை இங்கேயே விட்டு விட்டு எங்க காரிலேயே வந்து விடேன் அசோக்”

“போடா எனக்கு இங்கிதம் தெரியும். நானும் எங்கம்மாவும் மாருதியிலே பின்னாலேயே வருகிறோம். எல்லாம் எடுத்துக் கொண்டாயா? நான் ஹோட்டல் ரோஸ் பார்க்கிலே ரூம் புக் பண்ணிக் கொடுத்த பேப்பரை எல்லாம் எடுத்துக் கொண்டாயா?”

“எல்லாம் தயார்”

“ஏர்போர்ட்டிலே மிஸ்டர் ஜெஸின் வந்து ரிசீவ் பண்ணி விடுவார். கவலைப்படாதே”

“சரி அசோக். இந்த காண்டிராக்ட் நமக்குக் கண்டிப்பாக கிடைத்தால் எவ்வளவு வசதி”

“ஏண்டா கவலைப்படுகிறாய். நீ தான் மலையைக் குடைந்து தண்ணீர் கொண்டு வருபவன் தானே? உனக்கா சாமர்த்தியம் போதாது? ஏன் கவலைப்படுகிறாய்?”

“நேற்று பிரச்சினையை எப்படிச் சமாளித்தாய்?”

“அதுதான் நமக்கு கை கலையாயிற்றே. கடைசியிலே மானேஜர் அந்தத் தொழிலாளிகிட்டே மன்னிப்பு கேட்டார்.”

“வெரி குட்”

“சரி நேரமாகி விட்டது. கிளம்பு. டிரைவர் வண்டியை எடுப்பா” என்று சொல்லி பின்னால் வந்து மாருதியை ஸ்டார்ட் பண்ணினான்.

கார்கள் இரண்டும் சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருக்க… வேகமாக எதிரே வந்த லாரி சுரேஷ் குடும்பம் அமர்ந்திருந்த சியலோ காரை மோதித் தூக்கி எறிந்து விட்டுச் செல்ல மாருதியை ஒதுக்கிக் கொண்டான் அசோக்.

ஆஸ்பத்திரியில் எவ்வளவோ முயன்றும் முடியாமல் போக, சுரேஷ் அவன் மனைவி, அவனுடைய மாமனார் மூவரையும் மயானத்தில் எரித்து திரும்பிய போதும் எதுவும் போசாமல் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தான்.

நான்கு நாள் சுழித்தும் இருந்த இடத்திலேயே சிகரெட் புகைத்துக் கொண்டு சாப்பிடாமல் வெறுமனே தண்ணீர் குடித்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்திருந்த அசோக்கை பார்த்து மிகவும் மனம் வருத்திப் போன அம்மா, “அசோக் போனவங்க போயிட்டாங்க பாக்டரியிலிருந்தும் ஆபீசிலிருந்தும் ஆயிரம் போனுக்கு மேலாக வந்து விட்டது. நீ இப்படி சாப்பிடாமல் யாருக்கும் பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி?” என்றாள்.

“எத்தனைக் கனவுகளோடு சுரேஷ் கல்யாணம் பண்ணினான் தெரியுமா? எத்தனை கற்பனைகளை வளர்த்துக் கொண்டு சிங்கப்பூருக்கு புறப்பட்டான் தெரியுமா?”

“விதியின் விளையாட்டுப்பா”

“மண்ணாங்கட்டி எல்லோரும் விதி அப்படீன்னு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். அப்படியே பழகிப் போன உங்களிடம் என்ன சொல்லி என்னப் பயன். அம்மா இந்த பாக்டரி ஆபீஸ் என் சொத்து, சுரேஷ் பிராப்பர்ட்டி எல்லாம் ஏதாவது அநாதை ஆசிரமத்துக்கு எழுதிக் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்”.

“என்னடா சொல்கிறாய்? அப்புறம் நீ என்ன செய்யப் போகிறாய்?”

“இதே ஆக்சிடென்ட் எனக்கு ஏற்பட்டால் என்ன ஆயிருக்கும் அம்மா?”

“என்னடா புதுக் கேள்வி?”

“சொல்லுங்கம்மா”

“நீ இறந்து போயிருப்பாய்”

“இனி என் நிலைமையும் அதுதான் அம்மா. நான் சந்நியாசியாகி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் அம்மா” என்றவாறு அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தான் அசோக்.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வேண்டாத அன்பளிப்பு! (சிறுகதை) – இரஜகை நிலவன்

    தங்க மெடல்! (சிறுகதை) – இரஜகை நிலவன்