in , ,

மனிதக்காட்சி சாலை (அத்தியாயம் 7 – குறுநாவல்) – முகில் தினகரன்

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்  

வீடு திரும்பிய என்னை ஜோதி குடைந்தாள்.  “என்னாச்சு?.. உங்க அப்பாவைத் தேடுற வேலை?” அவள் கேள்வியில் ஒருவிதமான கிண்டலே நிறைந்திருந்தது.

 “ம்… என்ன நீ எதிர்பார்க்கிறே?” திருப்பிக் கேட்டேன்.  நானும் கிண்டலாகவே பேச

 “அய்யோ சாமி… தெரியாமக் கேட்டுட்டேன் விடுங்க” கையெடுத்துக் கும்பிட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

மறுநாள் காலை சரியாக ஒன்பது மணிக்கு திவாகரின் கம்பெனியில் இருந்தேன்.

“சார்… எம்.டி. அவர் ரூம்லதான் இருக்கார்… நீங்க வந்ததும் உங்களை ரூமுக்கு அனுப்பச் சொன்னார்” என்று அந்த ரிசப்ஷன் மூதாட்டி சொல்ல, “தேங்க்யூ மேடம்” என்றபடி திவாகர் அறையை நோக்கி நடந்தேன்.

பார்த்துக் கொண்டிருந்த லாப்-டாப்பை மூடி விட்டு, “வாப்பா செல்வம்… எப்படியிருக்கே?” தனது குஷன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவாறே கேட்டார் திவாகர்.

 “ம்.. ஃபைன்” என்றேன் நான் சுரத்தேயில்லாமல்.

 “அப்புறம் இன்னிக்கு… நீங்க ஃப்ரீதானே?…”திவாகர் கேட்க, மேலும் கீழுமாய்த் தலையை ஆட்டினேன்.

 “நான் உங்களை ஒரு இடத்திற்குக் கூட்டிட்டுப் போகப் போறேன்… வர முடியுமா?”

 “எங்கே?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டேன்.

 “தட் ஈஸ் சஸ்பென்ஸ்” புன்னகையோடு சொன்னார் திவாகர்.

 நான் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்க்க, “ரொம்ப லேட்டாகாதுப்பா… ஜஸ்ட்… த்ரீ ஹவர்ஸ்…. திரும்பி வந்திடலாம்” என்றார் திவாகர்.

 “ஓ.கே.” என்றேன்.

 “அப்ப ஒரு காஃபி சாப்பிட்டுட்டுக் கிளம்பலாமே?” சொல்லியவாறே திவாகர் இண்டர்காம் ரிஸீவரைக் கையிலெடுக்க, “இல்லை திவாகர்… வேண்டாம்… இப்பத்தான் வரும் போது வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்தேன்” பொய்யைச் சொல்லி வைத்தேன்.  

பின்னே?.. காஃபி சாப்பிடும் மனநிலையிலா நான் இருக்கிறேன்?…இந்த திவாகரைப் போன்ற ஒரு நல்மனசுக்காரனுக்கு எதிரே அமரும் தகுதி கூட இல்லாதவன் அல்லவா நான்?’

 “அப்ப… வா கிளம்புவோம்”

இருவரும் வெளியேறி போர்ட்டிகோவில் நின்றிருந்த அவனது டஸ்டர் காரில் ஏறினோம்.

கோவையில் நகரப் பகுதியைக் கடந்து கார் பொள்ளாச்சி ரோட்டில் பயணித்தது. ஒரு ஆர்வத்தில் நான் மீண்டும் கேட்டேன்.  “எங்கே திவாகர் போயிட்டிருக்கோம்?”

 “ஒரு அரை மணி நேரம் பொறுத்துக்கப்பா… நீயே தெரிஞ்சுக்குவே” என்றார் திவாகர்.

மின்னல் வேகத்தில் பறந்த கார் பொள்ளாச்சியை அடைந்ததும், அங்கிருந்து கேரளா செல்லும் பாதையில் நுழைந்தது. இருபுறமும் பச்சைப் பசேலென்று வயல்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புக்களும் கடந்து செல்ல, அதை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் இறுக்கமாய் அமர்ந்திருந்தேன் நான்.  

“போலீஸ்காரங்க இந்த முறையாவது என் அப்பாவைக் கண்டுபிடித்து விடுவார்களா?” சிந்தனை முழுவதும் அங்கேயே நிலைத்திருந்தது.

 “அப்புறம் வீட்டில் சம்சாரம்… குழந்தைகள் எல்லோரும் நலம்தானே?” திவாகர் கேட்க,

 “ம்…” என்றேன் ஒற்றை வார்த்தையில்.

 “ஆமாம்… நான் கேட்கவே மறந்திட்டேன்… உங்க அப்பா எப்படியிருக்கார்?” ஸ்டியரிங்கை ஒடித்தவாறே திவாகர் கேட்க,

ஒரு கணம் “விக்”கித்து, பிறகு சமாளித்தேன்.  “ம்…ம்.. நல்லாயிருக்கார்”

மரங்களுக்கு மத்தியிலிருந்த ஒரு பெரிய கேட்டிற்குள் நுழைந்தது கார்.

“இது எந்த இடம் திவாகர்?” கேட்டேன்.

“அதோ அந்த பில்டிங்கை நெருங்கியதும்… அதன் மேலே ஒரு போர்டு போட்டிருக்கும் அதைப் பார்த்தா உங்களுக்கே புரிஞ்சிடும்” மீண்டும் சஸ்பென்ஸையே வைத்தார் திவாகர்.

கார் அந்த பில்டிங்கை நெருங்கியதும் நானே குனிந்து பார்த்தேன்.

“ஆலயம் முதியோர் இல்லம்”

“ஓ… இப்பப் புரிஞ்சுக்கிட்டேன்… நீங்க நடத்திட்டிருக்கற முதியோர் இல்லத்துக்கு என்னைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க… அப்படித்தானே?”

காரை நிறுத்தி விட்டு இருவரும் இறங்கி “அலுவலகம்” என்ற போர்டைத் தாங்கியிருந்த கட்டிடத்தின் கதவிற்குள் சென்றோம்.

வராண்டாவில் சிறிது தூரம் நடந்ததும், “மேனேஜிங் டிரஸ்டி” என்று எழுதப்பட்டிருந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தோம்

 “ஓ… இதுதான் உங்க ரூமா?” கேட்டேன்.

 “நோ… நோ… இது மேனேஜிங் டிரஸ்டி அறைப்பா… முன்னாடி கதவுல எழுதியிருந்ததே நீங்க பார்க்கலையா?”.திவாகர் கேட்க,

 “பார்த்தேன்… பார்த்தேன்… ஆனா… இது நீங்க உங்க சொந்தப் பணத்துல நடத்திட்டிருக்கற இல்லம்… அப்ப நீங்கதானே டிரஸ்டியா இருக்கணும்?” கேட்டேன்.

 “ம்ம்ம்… நீங்க சொல்றதும் சரிதான்… ஆனா நான் எத்தனை பொறுப்புக்களைத்தான் ஏத்துக்க முடியும்?… ஆக்சுவலா நான் ஒரு கார்ப்பரேட் குரூப்போட சேர்மேன்!…அந்த குரூப்ல ஏழு கம்பெனிக இருக்கு!,… ஏழும் ஏழு வகையான பிசின்ஸ்… என் ஒருத்தனால எப்படி எல்லாத்தையும் வெற்றிகரமா நடத்த முடியும்?… சொல்லுங்க நீங்க ஒரு ஹெச்.ஆர்.பர்ஸன் தானே?… சொல்லுங்க” திவாகர் என்னை உசுப்ப

 “ம்ம்ம்… கஷ்டம்தான்” என்றேன்.

 “அதான்… இந்த முதியோர் இல்லத்துக்கு ஒரு சீனியர் சிட்டிஸனை மேனேஜிங் டிரஸ்டியா நியமிச்சிட்டேன்…அவரும் சக்சஸ்ஃபுல்லா ரன் பண்ணிட்டிருக்கார்” என்றார் திவாகர்.

 “நீங்க சொல்றதைப் பார்த்தா அவர்… டிரஸ்ட் மேனேஜ்மெண்ட்ல டாக்டரேட் பண்ணியவராய்த் தான் இருக்கணும்!… இல்லேன்னா எம்.பி.ஏ.படிச்சு… பழுத்த எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவராய்த்தான் இருக்கணும்!… யாம் ஐ கரெக்ட்?”

என் கேள்விக்கு பதில் சொல்லாமல் புன்னகைத்தன் திவாகர்.  அப்போது அவர் மொபைல் ஒலிக்க, எடுத்துப் பார்த்தார்.  

“டிரஸ்டிதான் லைன்ல” என்று என்னிடம் சன்னக் குரலில் சொல்லி விட்டு, மொபைலை ஸ்பீக்கரில் போட்டு விட்டு, “யெஸ் டிரஸ்டி சார்… நான் திவாகர்தான் பேசறேன்!… இப்ப உங்க ஆபீஸில்தான் இருக்கேன்..” என்றார் மிகவும் பவ்யமாக,

எதிர்முனையில் பேசியவரின் ஆங்கிலம் என்னை சிலிர்க்க வைத்தது. 

“சார்… நவ் ஐயாம் வித் ஸம் ஃபாரீன் கெஸ்ட்ஸ்… ஐ வில் கம் தேர் வித் இன் ட்வெண்டி மினிட்ஸ்”

“ஓ.கே.சார்… ஐ வில் வெய்ட் ஃபார் ய

இணைப்பிலிருந்து வெளியேறிய திவாகர், “செல்வம்… வாயேன் அவர் வர்ற வரைக்கும் நாம் இல்லத்தின் உள்ளே சென்று பார்த்து விட்டு வருவோம்” அழைத்தார்

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வார்த்தை (கவிதை) – மணிராம் கார்த்திக்

    மனிதக்காட்சி சாலை (இறுதி அத்தியாயம் – குறுநாவல்) – முகில் தினகரன்