இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“நான் மேற்கொண்டு படிக்கவே வேண்டாம், எனக்கு நம் குடும்ப நிம்மதியே போதும்” என்று யாமினி சொன்னதும்.
“பேசி முடிச்சிட்டியா மினி. நீ கூட இந்த ஊர் உலகத்துக்கு தான் பயப்புடுறியா?.நான் தெரியாம தான் கேக்குறேன். நம்மள பத்தி ஒரு நாளைக்கு பத்து நிமிடம் மட்டுமே நினைக்க போகும் ஊர் உலகத்துக்கு பயந்து நம்ம ஆசை கனவை எல்லாம் அழிச்சிக்க நினைக்கிறது உனக்கு முட்டாள் தனமா தோணலையா?. வேணா மினி, நான் சொல்லுறத கேளு, நீ ஆசைப்பட்ட படிப்பை நீ படி. அது தான் உனக்கு நல்லது. ஏன் நம்ம குடும்பத்துக்கும் அது நல்லது தான்” என்று ஜோதிமணி தன் மனைவியின் பக்கம் நின்று பேசுவதை கேட்டு அவனின் தந்தைக்கு இன்னும் அதிகமாக கோவம் வந்தது.
“ஓ… இந்த அளவுக்கு பேசுவியா நீ? அப்போ என்னைக்கோ நீயா ஒரு முடிவு பண்ணிருக்க. என்னோட வார்த்தையை விட உன் பொண்டாட்டி படிப்பு உனக்கு முக்கியம், அப்படி தானே?“ என்ற தன் தந்தையை பார்த்து மென்சிரிப்பை உதிர்த்தவன்.
“உங்களோட இயலாமையை நினைத்து நான் கவலைப்பட கூடுமே தவிர, உங்களுக்காக நான் பரிந்து பேச முடியாதுப்பா. நாங்க போறோம். நீங்களும் சீக்கிரமா உங்களோட இந்த எண்ணம் தவறுன்னு எண்ணி கவலைப்படுற நாள் வரும். அப்போ கண்டிப்பா நீங்களே எங்கள தேடி வருவீங்க. மினி வா போகலாம்” என்ற ஜோதிமணி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வீட்டை விட்டு வெளியேறியவன், சென்னையில் உள்ள தன் நண்பனின் வீட்டில் குடி ஏறினான்.
தனக்காக தன் கணவன் அவன் குடும்பத்தையே எதிர்த்து நின்று தன் லட்சியதுக்காக தனக்கு துணை நிற்கிறான் என்று நினைக்கும் பொழுதே யாமினிக்கு தன் மணவாளன் மீது மரியாதை கலந்த காதல் ஏற்பட, இருப்பினும் அவள் மனதில் பாரம் கூடி போனது.
“ஏன் இப்போ சோகமா இருக்க மினி? எல்லாத்தையும் நம்ம கடந்து தான் வாழ்ந்தாகணும்” என்று ஜோதிமணி அவன் மனைவிக்கு உறுதுணையாக நின்று இருந்தான்.
யாமினியின் குடும்பமும் ஜோதிமணியின் குடும்பமும் ஒட்டு உறவு இல்லாமல் தனித்தனியே பிரிந்து நின்று அவரவர் வேலைகளை பார்க்க தொடங்கினார்கள்.
ஜோதிமணியும் அவன் படிப்புக்கு ஏற்ற வேலைக்கு சென்றவன், தன் அக்காவின் கணவனிடம் அவன் குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதை கேட்டு தெரிந்து கொள்வான்.
யாமினி வீட்டில் அவ்வப்போது தன் மகளையும் மருமகனையும் பார்க்க வந்தவர்களுக்கு யாமினி மீது அவன் கணவன் கொண்ட அக்கறையை கண்டு உள்ளம் மகிழ்ந்து தான் போனார்கள்.
தன் கணவனுக்கு தெரியாமல் கோவில் குளம் என்று யாமினியையும் ஜோதிமணியையும் அவனின் அம்மா சந்தித்து பேசினாலும் தன் கணவனை எதிரித்து பேச முடியாத நிலையில் தான் அவரும் வாழ்ந்து வந்தார்.
ஜோதிமணியின் தங்கையை மேற்கொண்டு படிக்க அனுப்பாமல் அவளின் 19 வயதிலேயே வெளிநாட்டு மாப்பிளையை பார்த்து திருமணம் செய்து கொடுத்து தன் மகளை வேறு நாட்டுக்கு அனுப்பி வைத்த ஜோதிமணியின் தந்தை, திருமண நிகழ்விற்கு கூட அவனை அழைக்கவில்லை என்று யாமினி மிகவும் கவலைக்கொள்ள, இதையெல்லாம் எதிர்பார்க்காத ஜோதிமணிக்கு எப்படியாவது யாமினி மருத்தவ படிப்பை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் பசு மரத்து ஆணியை போல் அவன் மனதில் நிலைத்து இருந்தது.
இப்படியாக மாதங்கள் வருடங்களாக கடந்த நிலையில்…
6 வருடத்திற்கு பிறகு.
“என்ன டாக்டர் சொல்லுறீங்க…ஆபரேஷன் தவிர வேற ஒன்னும் பண்ண முடியாதா? ஏன் மாத்திரையில் குணப்படுத்த முடியாதா?” என்று ஜோதிமணியின் அண்ணன் புகழ் பெற்ற மருத்துவமனையில் நின்று பெரிய மருத்துவரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
“இல்ல Mr. ஆபரேஷன் தான் ஒரே தீர்வு. யூ டோன்ட் ஒர்ரி… ஆபரேஷன் பண்ணா உங்க அப்பா நல்லா இருப்பாரு” என்ற மருத்துவரின் அறையை தட்டிக்கொண்டு. “Excuse me” என்ற குரலை கேட்டு ஜோதிமணியின் அண்ணன் வாசலை பார்த்தான்.
“பெரிய மாமா, நீங்க…நீங்க என்ன பண்ணுறிங்க இங்க? யாருக்கு என்னாச்சு?சொல்லுங்க மாமா என்ன பிரச்சனை? “ என்று மருத்துவரான Dr.யாமினி கேட்டதும்.
“இவங்கள உங்களுக்கு தெரியுமா டாக்டர்?” என்று சக மருத்துவர் கேட்க
“இவரு என்னோட மூத்தார் தான்” என்ற யாமினியை பார்த்து அவள் அருகில் சென்ற ஜோதிமணியின் அண்னன்
“நீ இங்க தான் வேலை பாக்குறியா?” என்று யாமினியை பார்த்து தயக்கத்துடன் கேட்டான்.
“ஆமா மாமா, நான் இங்க தான் வேலை பாக்குறேன். ஆனா நீங்க ஏன் இங்க இருக்கீங்க. யாருக்கு என்னாச்சு?” என மீண்டும் யாமினி கேக்க
“அப்பாவுக்கு தான் நெஞ்சு வலி. இங்க வந்து அட்மிட் பண்ணா, அவருக்கு உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லுறாங்க. அம்மாவும் அழுதுகிட்டே இருக்காங்க” என்றவன் எதிரில் தன் தம்பியின் மனைவி இன்று மருத்துவராக அவன் முன் நின்று இருப்பதை நினைத்து மனதளவில் மகிழ்ச்சி அடைந்தான்.
“உங்க தம்பியும் பசங்களும் லீவுக்கு ஊருக்கு போய்ட்டு வந்தோம் மாமா, அதான் எங்களுக்கு வீட்டுல நடந்த எந்த விஷயமும் தெரியல. சரி வாங்க போய் பெரிய மாமாவை பார்க்கலாம்” என்று யாமினி சொன்னவள், தன் மூத்தாருடன் அவள் மாமனார் இருக்கும் சிகிச்சை அறைக்கு செல்ல, அங்கே அவளின் மாமியார் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தார்.
“அத்த..” என்று யாமினி அழைத்ததும். தன் மருமகளை கட்டிப்பிடித்து அவள் மாமியார் கவலை தீர அழுதுக்கொண்டு இருக்க, அவளின் மாமனாரோ கட்டிலில் படுத்தப்படி யாமினியை மருத்துவர் உடுப்பில் பார்த்ததும் தன்னுடைய முட்டாள்தனத்தை எண்ணி என்ன சொல்வதென்று புரியாமல் வேறு பக்கம் திரும்பி படுத்துகொண்டார்.
“மாமா..” என்று யாமினி அழைக்க, பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக படுத்து இருந்த தன் மாமனாரை பார்த்து யாமினியும் கவலைகொண்டு டேபிள் மேல் இருக்கும் கேஸ் ஷீட்டை எடுத்து படித்து பார்த்தாள்.
“யாமினி… நீ இங்க தான் வேலை பார்க்குறியா?” என்று அவள் அத்தை கேட்டதும்.
“ஆமா அத்த… நீங்க பயப்புடாதீங்க. மாமாவுக்கு பெரிய பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல. ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணா சரியாகிடும். நீங்க தைரியமா இருங்க.” என்ற யாமினி இத்தகவலை தன் கணவன் ஜோதிமணியிடம் தெரிவித்ததும். அவன் தன் தந்தையை பார்க்க விரைந்து வந்தான்.
“அப்பா… அப்பா என்னாச்சுப்பா, அம்மா அப்பாவுக்கு என்னாச்சும்மா?” என்று தன் மகன் அழும் நேரம் தான் அவன் தந்தைக்கு புரிந்தது, ஜோதிமணி அவர் மீது எவ்வளவு பிரியம் வைத்து உள்ளான் என்று.
ஜோதிமணியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் யாமினியிடம் மீண்டும் சகஜமாக பேச, அவள் மாமனார் மட்டும் அமைதியாகவே இருந்தார்.
பெரிய மருத்துவர்களின் ஆலோசனையின்படி ஜோதிமணியின் அப்பாவுக்கு இருதய அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து முடிய, யாமினியின் மாமனார் என்ற முன்னுரிமையும், அந்த மருத்துவமனையில் அவருக்கு கூடுதல் நன்மைகளை செய்து கொடுத்தது.
ஒரு வார காலம் கடந்து ஜோதிமணியின் அப்பா இப்போது இயல்பாக பேசியவரின் கண்கள் என்னவோ யாமினியை தேட, அவள் அன்று பகல் முழுவதுமே மருத்துவமனைக்கு வராமல் போக, தன் மருமகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருள் எழுந்த நிலையில்,
“யாமினி இன்னைக்கு வரலையா?” என்று அங்கே பணிபுரியும் செவிலியரிடம் கேட்டார் .
“யார கேக்குறிங்க, டாக்டர் யாமினியை கேக்குறிங்களா?” என்று செவிலியர் கேட்டதும்.
“ம்..டாக்டரை தான் கேட்டேன் ” என்ற சொல்லுக்கு விடையாக.
“அவங்க பசங்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள்… அதனால அவங்க இன்னைக்கு நைட் டூட்டி பார்க்க தான் வருவாங்க.” என்று செவிலியர் சொன்னதும்.
“பசங்களா?” என்று கண்கள் கலங்கி கேட்டார் ஜோதிமணியின் தந்தை.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings