இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மணமகனின் பக்கம் இருந்து யாமினி வீட்டில் ஜோதிமணியின் அக்காவும் மாமாவும் இதே வீட்டில் இன்று தங்கி இருக்க…“அப்புறம் உன் டாக்டர் படிப்பு எல்லாம் எப்படி போகுது தம்பி?” என்று ஜோதிமணியின் மாமன், யாமினியின் தம்பியை பார்த்து கேக்க, அவனோ இவரை முறைத்து பார்த்தவன்.
“என்ன கிண்டலா? நான் டாக்டர் படிக்கிறேன்னு உங்களுக்கு யார் சொன்னது? என் அக்கா தான் டாக்டர்க்கு படிக்கிறாங்க” என்றவனின் பதிலை கேட்டு
“என்ன சொல்லுற தம்பி யாமினி டாக்டர்க்கு படிக்கிறாளா? அப்போ யாமினி 12th Fail இல்லையா?” என்று ஜோதிமணியின் அக்கா பதற்றதுடன் கேக்க
“என்ன சொல்லுறீங்க?என் அக்கா காலேஜ் டாப்பர். எங்க குடும்பத்துல படிப்புல என் அக்கா தான் நம்பர் 1” என்ற யாமினியின் தம்பி சொன்ன வார்த்தையை கேட்டு ஜோதிமணியின் அக்காவும் மாமாவும் தலையில் இடி இறங்கியது போல அசையாமல் நின்று இருந்தனர்.
“மாமா என்னங்க இது? யாமினி டாக்டர் படித்த பொண்ணா?” என்று ஜோதிமணியின் அக்கா பதற்றதுடன் கேக்க “எனக்கும் ஒன்னும் புரியல, ஏன் பா தம்பி உன் அக்கா அப்போ டாக்டரா?” என்று மாப்பிளையின் மாமன் கேக்க
“எத்தனை முறை சொல்லுறது என் அக்கா டாக்டர்தான்” என்ற யாமினியின் தம்பி மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவன் அறைக்குள் சென்றான்.
“இப்போ என்ன மாமா பண்ணுறது? அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியுமா? தெரியாதா?” என்று ஜோதிமணியின் அக்கா கேக்க
“தெரிந்தால் இந்த கல்யாணமே நடந்துருக்காதே, ஆனா மாமா எப்படி இந்த விஷயத்தை கவனிக்காமல் விட்டாருன்னு தான் எனக்கும் தெரியல” என்று புலம்பியவன், “இனி இதுல நம்ம பேச என்ன இருக்கு, உன் தம்பி தான் அவனோட வாழ்கையை வாழ ஆரம்பிச்சிட்டானே, சரி நீ தூங்கு எல்லாம் விதிப்படி நடக்கட்டும்” என்றவன் கண்கள் மூடி படுத்தவனுக்கு அடுத்தடுத்து இவர்கள் கூட்டு குடும்பத்தில் நடக்க போகும் பிரச்சனைகளை பற்றிய பயம் ஏற்பட்டது.
மறுநாள் காலை முதல் ஆளாக யாமினி கண் விழித்தவள் இரவெல்லாம் கூடல் கொண்ட அசதியில் உறங்கிக்கொண்டு இருந்த தன்னவனின் முகத்தை பார்த்து அந்த நாளை இனிதாக தொடங்க எண்ணியவள், குளியலறை சென்று, தலைமுழுகி, மஞ்சள் பூசி நீராடியப்பின் கூந்தலில் ஈர துண்டுடன்,மஞ்சள் நிற காட்டன் புடவையில் கண்ணாடி முன் நின்று தன் நெற்றியில் குங்குமம் இட்டவளை பார்த்துக் கொண்டே ஜோதியமணியும் குளியலறை புகுந்தவன் சில நிமிடங்களில் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு தோளில் ஒரு துண்டை போர்த்தியப்படி வெளியே வந்தவன் எதிரில்
“பால் பிடிக்காதுன்னு சொன்னிங்களே, காலையில இளநீர் குடிப்பிங்களா?” என்று யாமினி கேட்டதும்
“ம்” என்றவன் தன் அன்பு மனைவியை அவனுடன் இறுக்கமாக கட்டிக்கொண்டு அவளின் கன்னத்தில் இதழ் பதித்தான்.
“மணி..மணி ஆகுது.. கீழ எல்லோரும் நமக்காக காத்து இருப்பாங்க நேரத்தோடு சாப்பிட்டு கோவிலுக்கு போகணும்னு நேத்தே அம்மா சொல்லி அனுப்புனாங்க” என்று யாமினி சிறு சிணுங்களுடன் சொல்ல
“சரி சரி மீதி கதையே நைட்டு பார்த்துக்கலாம்” என்றபடி வேறு ஆடை அணிந்த ஜோதிமணி, அறையிலிருந்து சிறுசங்கோஜத்துடன் வெளியே வர,அவனைத் தொடர்ந்து யாமினியும் உணவருந்தும் இடத்திற்கு வந்தவள்
“வாங்க மணி..உட்காருங்க.அம்மா இளநீர் கேட்டேனே” என்று யாமினி தன் அன்னையைக் கேட்க, தன் வீட்டு மாப்பிள்ளைக்கு இளநீருடன் அவர் எதிரில் வந்து நின்றார் யாமினியின் அன்னை.
“மாமா எங்க?” என்று தானாக முன் வந்து பேசும் தன் மாப்பிள்ளை பார்த்து இயல்பாக சிரித்த யாமினியின் அம்மா, “மதியம் விருந்துக்கு பலகாரம் வாங்க டிரைவர் கூட போயிருக்காங்க தம்பி, நீங்க இளநீர் குடிங்க. யாமினி… மாப்பிளைக்கு காலையில டிபன் ரெடியா இருக்கு, எப்ப சாப்பிடுறாருன்னு கேளு, எல்லோரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடுவோம்” என்ற தன் மாமியாரை பார்த்து மீண்டும் இயல்பாக சிரித்துக்கொண்ட ஜோதிமணி தன் அக்காவையும் மாமாவையும் தேடினான்.
“மாப்ள.. உங்க அக்காவும் மாமாவும் தோட்டத்துல தான் இருக்காங்க, நீங்க இளநீர் குடிச்சிட்டு போயி அவங்கள பாருங்க. யாமினி நீ அவங்களுக்கும் காபி கொண்டு போய் கொடும்மா” என்று தன் அம்மா சொல்ல, யாமினியும் காப்பி டம்பலரை எடுத்துக்கொண்டு தன் கணவனுடன் தோட்டத்திற்கு செல்ல, அங்கே தன் நாத்தனாரும் அவளின் கணவனும் ஏதோ மும்முறமாக பேசிக்கொண்டு இருந்தவர்கள் யாமினியை பார்த்ததும் பேச்சை நிறுத்தியவர்களை யாமினியும் கவனித்தாள்.
“வாங்க என்ன நைட் நிம்மதியா தூங்குனிங்களா?” என்று ஜோதிமணியின் அக்கா கேட்டதும் “நல்லா தூங்கணும்” என்று இருவரும் சிரித்துக் கொண்டே பதில் கூறினார்கள்.
“மாப்பிள்ள, உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் கொஞ்சம் இந்த பக்கம் வா” என்று தன் மாமன் அழைததும்
நேற்று இரவு நடந்த முதல் இரவை பற்றி தான் தன் மாமன் கிண்டலாக கேள்வி கேட்கப் போகிறார் என்று எண்ணிய ஜோதிமணி இதழில் புன்னகையை ஏந்தியபடி தன் மாமனின் பின் செல்ல, தன் நாத்தனாரிடம் இயல்பாக பேசிக்கொண்டு இருந்தாள் யாமினி.
“என்ன மாமா எதுக்கு தனியா அழைச்சீங்க? என்ன கிண்டல் பண்ண போறீங்களா?” என்று ஜோதிமணி கேட்க. “அட நீ வேற மாப்பிள.. ஆமா! உன் பொண்டாட்டி என்ன படிச்சிருக்கான்னு கேட்டியா?” என்று தன் மாமன் கேட்கும் கேள்வி அபத்தமாக தெரிந்த நிலையில்
“என்ன கேக்குறீங்க? அவ தான் 12த் failனு நீங்க சொன்னிங்களே அப்புறம் என்ன?” என்று ஜோதிமணி கேட்டான்.
“மாப்ள… உன் பொண்டாட்டி டாக்டர்க்கு படிக்கிறாளாம், அவ தம்பி தான் 12th fail” என்று தன் மாமன் சொன்னதை கேட்டு ஜோதிமணியின் தொண்டைக்குள் இளநீர் இறங்க மறுத்தது.
“என்ன மாமா சொல்லுறிங்க, டாக்டரா?” என்று இவன் வாயை திறக்க.
“ஆமா மாப்ள… டாக்டரே தான்” என்ற தன் மாமனின் மீது இருந்த பார்வையை இப்போது ஜோதிமணி தன் மனைவியின் பக்கம் திருப்பியவன், “மினி” என்று அவளை அழைக்க,
யாமினி தன் கணவனின் அழைப்புக்கு இணங்கி அவன் முன் வந்து நின்றவளை பின் தொடர்ந்து அவளின் நாத்தனாரும் வந்து சேர்ந்து கொண்டாள்.
“சொல்லுங்க மணி..டிபன் எடுத்து வைக்க சொல்லவா?” என்று யாமினி கேக்க
“அதெல்லாம் இருக்கட்டும், ஆமா நீ என்ன படித்து இருக்க?” என்று தன் கணவன் கேக்கும் கேள்வியில் வாய்விட்டு சிரித்தாள் யாமினி.
“என்னமா சிரிக்கிற? நீ 12th fail தானே?” என்று தன் நாத்தனார் கேக்க
“ஐயோ இல்ல அண்ணி.. நான் MBBS படிக்கிறேன். என் தம்பிக்கு தான் படிப்பு வரல, அவன் தான் 12th fail” என்று பதில் சொன்ன தன் மனைவியை பார்த்து சொல்வதரியாமல் அமர்ந்து இருந்தான் ஜோதிமணி.
“ஏன்மா… நீ MBBSனா ஏன் பத்திரிகையில உன் பெயருக்கு பின்னாடி டிகிரி ஏதும் போடல?” என்று ஜோதிமணியின் மாமா கேக்க
“அது எப்படி? மணி BA படிச்சு இருக்காரு. நான் MBBSனா பத்திரிகையை பார்க்குற ஆளுங்க எதாவது பேசுவாங்கனு தான் அப்பா படிப்பு எல்லாம் mention பண்ண வேணான்னு சொல்லிட்டாரு” என்று யாமினி சொல்ல
“ம்… பார்த்தியா மாப்ள, நீ என்னமோ என் வருங்கால பொஞ்சாதி 12th fail ஆனா நான் மட்டும் BAன்னு போட்டா அவ மனசு கஷ்டப்படும்னு நினைச்சு நம்ம அடிச்ச பத்திரிகையில படிப்பை போடாம பெருந்தன்மையா நடந்து இருக்கோம்னு பார்த்தா, உண்மையில் உன் பொஞ்சாதி தான் உனக்கு பாவம் பார்த்து இருக்காள்” என்று தன் மாமன் சலிப்பாக சொன்னதை கூட காதில் வாங்காத ஜோதிமணிக்கு, தன் தந்தைக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயம் தான் இருந்ததே தவிர, அவன் மனைவி மருத்துவர் என்பது அவனுக்கு மகிழ்ச்சியை தான் தந்தது.
“மினி… மாமா வந்துட்டாரா பாரு. நம்ம சாப்பிட்டு கோவிலுக்கு போகலாம்” என்றவன் யாமினியை நாசுக்காக அங்கிருந்து அனுப்பி வைத்தவன்
“அக்கா,மாமா… இப்போதைக்கு நம்ம வீட்ல யாருக்கும் யாமினி ரொம்ப படித்த பெண்ணுனு தெரிய வேணா, அவங்களா தெரிஞ்சிக்கும் போது தெரிஞ்சிக்கட்டும்” என்று ஜோதிமணி சொல்ல
“ஐயயோ… நான் அப்பாகிட்ட எதையும் மறைக்க மாட்டேன், நான் ஊருக்கு போனதுமே எல்லா உண்மையும் சொல்லிடுவேன்” என்ற தன் அக்காவை முறைத்து பார்த்தான் ஜோதிமணி.
“சரி சொல்லு, அப்ப நானும் சில உண்மையை சொல்லுறேன்” என்ற தன் தம்பியை பார்த்து
“நீ என்ன சொல்ல போற?” என்று கேக்கும் தன் அக்காவை கண்டு கிண்டலாக சிரித்தவன்
“ம்… நீ சின்ன வயசுல ஒரு பையனை காதலிச்ச தானே! அதை நான் அப்பாகிட்ட சொல்லிடுவேன் ஜாக்கிரதை” என்று மிரட்டும் தன் தம்பியை முறைத்து பார்த்தாள் ஜோதிமணியின் அக்கா.
“என்ன? சின்ன வயசுல நீ காதல் பண்ணியா!? ஏய் என்ன டி சொல்லுறான் உன் தம்பி?” என்று தன் கணவன் பதறியதும், “அட லூசு மாமா.. நான் சின்னதுல உன்னை காதலிச்சதை தான் சொல்லிட்டு போறான் உங்க மச்சான். சரி வாங்க எல்லாம் விதிபடி நடக்கட்டும்” என்ற ஜோதிமணியின் அக்கா தன் கணவனை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் செல்ல, அங்கே இவர்களுக்கு விருந்து உபசரிப்பு ஏகப்போகமாக நடந்து முடிந்தது.
புதுமண ஜோடிகள் கோவில், கடற்கரை, சினிமா என்று நேரத்தை கடத்த, இவர்களுடனேயே ஜோதிமணியின் அக்காவும் மாமாவும் அதே தருணத்தை ரசித்து மகிழ்ந்தனர்.
இரண்டு நாட்கள் யாமினி வீட்டில் தங்கிய மணமக்கள், அன்றைய நாள் யாமினியை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்த அவளின் பெற்றோர்கள் மகளை ஆசிர்வாதம் செய்து மனநிறைவுடன் அவளின் கணவனுடன் அனுப்பி வைக்க, ஜோதிமணியின் குடும்பத்தில் அனைவருமே யாமினியை அவர்களின் பெண்ணை போல பார்த்துக்கொண்டனர்.
படிப்புக்கும் திமிருக்கும் சம்மந்தம் இல்லை, படிப்புக்கும் வீட்டு வேலைக்கும் சம்மந்தம் இல்லை, படிப்புக்கும் சக மனிதர்களிடம் பண்புடன் பழகுவதற்கும் சம்மந்தம் இல்லை’என்ற வார்த்தைக்கு மதிப்பு தரும் விதமாக யாமினியின் நல்ல குணம், வெகுவாக புகுந்த வீட்டில் உள்ள ஆட்களை கவர்ந்த நிலையில்
ஆண்கள் அனைவரும் காலையில் இருந்து இரவு வரை கடை வேலையை பார்ப்பவர்கள் முகூர்த்தம் பண்டிகை என்று புடவை நகைகடையில் தங்களின் பாதி வாழ்கையை வாழ வேண்டிய நிரூபணந்தத்தால் யாமினியின் படிப்பு விஷயம் அவளின் புகுந்த வீட்டில் உள்ள நபங்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது.
ஆனால் ஜோதிமணிக்கு மட்டும் தன் மனைவியை பற்றிய விவரங்கள் தெரிந்து இருந்ததால், என்று பூகம்பம் வெடிக்கும் என அவனும் சிறு அச்சத்தில் தான் வளம் வந்தான்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings