in , ,

பெண் கல்வி – பகுதி 2 (நாவல்) – லீலா சந்திரன்

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

யாமினியை பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்து போன நிலையில். “வந்து இப்படி உக்காரு யாமினி” என்ற ஜோதிமணியின் அம்மாவை பார்த்து சிரித்த முகத்துடன் அவர் அருகில் அமர்ந்து கொண்டாள் யாமினி.

“நீயும் வந்து இப்படி உக்காரு தம்பி” என்று யாமினியின் தம்பியை ஜோதிமணியின் மாமன் அழைக்க.

“இட்ஸ் ஓகே” என்றவன் ஜோதிமணியை ஒரு மார்க்கமாக பார்த்துக்கொண்டு இருந்தான்.

“சரி பையனும் பொண்ணும் தனியா பேசிட்டு வரட்டும்,நம்ம வேற கதையை பேசலாம்” என்று ஜோதிமணியின் அக்கா சொன்னதும்.

“யாமினி! தம்பியை தோட்டத்துக்கு அழைச்சிட்டு போ மா” என்று தன் அம்மா சொல்ல, ஜோதிமணியும் யாமினியும் இவர்களை விடுத்து தோட்டதுக்கு சென்றார்கள்.

பூக்களின் நறுமணமும்,துளசியின் வாசமும் தோட்டம் முழுதும் நிரம்பி இருந்தது.

“வாங்க மணி,இந்த பக்கம் வந்து உக்காருங்க,அங்க இன்னும் கொஞ்ச நேரத்துல லட்சிமி வந்துடுவாங்க” என்ற யாமினியின் ரம்யமான குரலை கேட்டதும் ஜோதிமணியின் செவிகளுக்கு இனிமையாக தோன்றியது.

“லட்சிமி யாரு நம்ம சொந்தக்காரங்களா?” என்று அவன் கேட்டதும். “இல்ல நம்ம வீட்டு கோமாதா” என்று இருவரும் நான் என்ற சொல்லை விடுத்து,நாம் என்ற சொல்லில் அவர்களின் இதயமும் இணைந்து இருந்ததை இருவரும் அறிந்து இருந்தார்கள்.

“ஒ!வீட்டுல மாடு எல்லாம் வளக்குறிங்களா!? சூப்பர்” என்றவன் தோட்டத்தை கண்களால் நோட்டாமிட.

“எனக்கு பசும் பால் தான் ஒத்துக்கும். அதனால அப்பா வீட்டுலேயே மாடு வளர்க்க ஏற்பாடு பண்ணிட்டாரு” என்றவள் அவனிடம் சகஜமாக பேசினாள்.

“அப்போ நீ நம்ம வீட்டுக்கு வரும் போது லட்சுமியை அழைச்சிட்டு வந்துடுவியா?” என்றவனின் கேள்வியில் அவனுக்கு தன்னை பிடித்து இருக்கு என்று இவளும் அறிந்து கொண்டவள்.

“பரவாயில்ல, கல்யாணத்துக்கு அப்புறம் நான் நம்ம வீட்டுல காபி குடிக்காம இருந்துப்பேன்” என்றாள்.

இருவரும் மேற்கொண்டு பேசும் முன்பே.. “ஜோதி” என்ற தன் மாமாவின் குரலில்.

“ஹாங் வரேன் மாமா” என்றவன்

“போகலாமா?”என்று கேக்க.

“ம், உங்களுக்கு என்கிட்ட கேக்க எதுவும் இல்லையா?” என்று யாமினி கேக்க.

“கேக்க ஒன்னும் இல்ல,சொல்ல தான் ஒன்னு இருக்கு” என்றான்.

“என்ன சொல்லனும்? எதுவா இருந்தாலும் சொல்லுங்க” என்ற யாமினியை ஒருக்கனம் கண் இமைக்காமல் பார்த்தவன்.

“நீ ரொம்ப அழகா இருக்க மினி. உனக்கு இந்த புடவையின் நிறம் ரொம்ப எடுப்பா இருக்கு. நீ அணிந்து இருக்கும் நகையில் இருந்து உன்னோட கூந்தலில் இருக்குற பூச்சரம் வரை எல்லாமே ரொம்ப அழகா இருக்கு. உன்னோட இந்த அழகுக்கு அழகு சேர்க்கும் விதமா தான் உன்னோட சுபாவமும் இருக்கும் என்று நான் நம்புறேன். உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு மினி. உனக்கும் என்னை பிடித்து இருந்தால், என்னை பற்றி எதாவது நீ தெரிஞ்சிக்கணும்னு ஆசைப்பட்டால் சொல்லு இப்போவே மேற்கொண்டு எல்லாத்தையும் பேசிடலாம்” என்ற ஜோதிமணியின் நேர்கொண்ட பார்வையும் தெளிவான பேச்சும் யாமினிக்கு அவனை பிடித்து போனது என்று அவனுக்கும் தெரிந்து தான் இருந்தது.

ஜோதிமணியுடன் யாமினி வீட்டுக்குள் நுழைந்ததும். “என்னமா என் கொழுந்தனை உனக்கு பிடித்து இருக்கா?” என்று ஜோதிமணியின் அண்ணி கேக்க.

“ம், பிடிச்சி இருக்கு அக்கா” என்றாள் யாமினி.

“அப்புறம் என்ன பிள்ளைங்க பேசி முடிவை சொல்லிட்டாங்க.அடுத்த முகூர்த்ததுல கல்யாணம் வைச்சிடலாம் தானே?” என்று யாமினியின் அப்பா கேக்க.

“இன்னும் மாப்புள்ள தம்பிக்கு நம்ம மகளை பிடித்து இருக்கான்னு சொல்லவே இல்லையே” என்ற யாமினியின் அம்மாவின் கேள்விக்கு விடையாக. “எனக்கு உங்க பொண்ணை பிடிச்சி இருக்கு அத்த” என்று பதில் சொன்னான் ஜோதிமணி.

“ரொம்ப நல்லது மாப்ள. அப்போ ஜோசியரை பார்த்து நல்ல நாள் குறிக்கலாம்.நம்ம கடையிலேயே கல்யாணத்துக்கு தேவையான எல்லா உபகரணங்களையும் வாங்கிக்கலாம்” என்ற மாப்பிளையின் தந்தையின் வார்த்தைக்கு கடுப்பட்டு ஜோதிமணி யாமினியின் திருமணம் விரைவில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது….

“மற்ற விஷயம் எல்லாம்” என்று யாமினியின் அப்பா சீர் வரிசியை பற்றி பேச தொடங்கியதும்

“நாங்க வரதச்சனை எல்லாம் கொடுக்கவும் மாட்டோம் கேட்கவும் மாட்டோம்.கல்யாண செலவு மட்டும் சரிசமமா பிரித்து பண்ணிக்கலாம். அதுகூட உங்க பொண்ணுக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுவீங்க என்ற ஒரே காரணத்தால் தான். மற்றபடி நம்ம வீட்டு பொண்ணுக்கு ஒரு குறையும் இல்லாம் நாங்க பார்த்துப்போம்” என்று மாப்பிளையின் அப்பா தெளிவாக சொல்லி முடிக்க.

“சந்தோசம் சம்மந்தி.சரி வாங்க எல்லோரும் சாப்பிடலாம்” என்று யாமியின் அப்பா மாப்பிளை வீட்டாரை அழைக்க.

அங்கே தலைவாழை இலை விரித்து விருந்தினருக்கு தடப்புடலாக விருந்து நடந்து முடிந்தது.

மாப்பிள்ளை வீட்டில் உள்ள அனைவரும் பெண் வீட்டினரிடம் சந்தோசமாக பேசி மகிழ்ந்து இருக்க, “அண்ணி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க?” என்று ஜோதிமணியின் தங்கை தன் வருங்கால அண்ணியை புகழ்ந்து பேசியப்படி அவளிடம் உரிமையாக பழக.

“சமையல் நல்லா பண்ணுவியா மா?”என்ற கேள்வியில் ஆரம்பித்து.இயல்பாக பேசிய மாப்பிளையின் அக்காவில் இருந்து,

“என் மருமகளுக்கு சமையல் தெரியலைன்னாலும் பார்வையில்லலை, நானே எல்லாத்தையும் பார்த்துப்பேன்” என்று ஜோதிமணியின் அம்மா சிரித்த முகத்துடன் பதில் சொன்னதில் இருந்து

“இல்ல இல்ல,என் சின்ன அண்ணி மெட்ராஸ் கோழிக்கறி எனக்கு செய்து தந்தே ஆகணும்” என்று உரிமையாக கேக்கும் ஜோதிமணியின் தம்பி முதற்கொண்டு அனைவரையும் யாமினிக்கு மிகவும் பிடித்து போக,


பெண்ணும் பையனும் அடிக்கடி கண்களால் மௌன மொழியில் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள,

“சரி,அப்போ வீட்டுக்கு போய்ட்டு ஜோசியரை பார்த்து நல்ல நாள் குறித்து பத்திரிகை அடித்து கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிடலாம்” என்று மாப்பிளை வீட்டில் சொன்னதும்.

“நல்லது சம்மந்தி, எல்லாமே நல்லபடியா ஆரம்பிப்போம்” என்று பெண்ணின் தந்தை மகிழ்ச்சியுடன் சொல்ல,வந்தவர்கள் அனைவரும் விடைபெற்ற நிலையில், இறுதியாக வீட்டில் இருந்து வெளியேறிய ஜோதிமணி 

“மினி உன் போன் நம்பர் என்ன?” என்று கேட்டதும். “என் நம்பர் உங்க மாமாகிட்ட இருக்கு, அதுல இருக்குற கடைசி நம்பருக்கு பதிலா 2 போட்டா என் அக்கா நம்பர் கிடைக்கும்” என்ற யாமினியின் தம்பியை மார்க்கமாக பார்த்த ஜோதிமணி.

“ஓகே மினி பாப்போம்” என்றவன் தன் வருங்கால மனைவியை பிரிய மனமில்லால் பிரிந்து சென்றான்.

சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பயணம் செல்லும் தூரம். “பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஏற்ற புள்ள மாதிரி தான் இருக்காள்” என்று ஜோதிமணியின் அக்கா சொன்னதும்.

“ஆனா எனக்கு என்னமோ அந்த பொண்ணோட தம்பியை பார்த்தா தான் கொஞ்சம் நெருடலா இருக்கு” என்று ஜோதிமணியின் அண்ணன் சொல்ல,

“அது வேற ஒன்னும் இல்ல மாப்ள. அவன் டாக்டர்க்கு படிக்கிறான், அதான் ஆளு ஒரு மார்க்கமா இருக்கான்” என்று பதில் சொன்னார் ஜோதிமணியின் மாமன்.

“எனக்கு பெண்ணை ரொம்ப பிடித்து இருக்கு, நம்ம குடும்பத்துக்கு ஏற்ற பெண்ணா தான் தெரியுது, சீக்கிரமா நல்ல நாள் பார்த்து கல்யாணத்தை முடிக்க ஏற்பாடு பண்ணுங்க” என்று மாப்பிளையின் அம்மா ஆசைப்படி அடுத்து வந்த சுப முகூர்த்த நாளில் இவர்களின் திருமணம் ஏற்பாடு செய்த நிலையில்.. தினமும் அலைபேசியின் வாயிலாக மணமக்கள் இருவரும் தவறாமல் தங்களின் அன்பை பகிர்ந்து கொண்டனர்.

நீண்ட நாட்கள் தள்ளி போடாமல், இருவீட்டாரின் சம்மததோடும் பெரியர்களின் ஆசிர்வாததோடும் யாமினி ஜோதிமணியின் திருமணமும் அடுத்த இரண்டு வாரத்தில் நல்ல முறையில் நடந்து முடிந்தது .

அன்றைய தினம் பெண் வீட்டில் ஏற்பாடு செய்து இருந்த முதல் இரவு அறைக்குள் மணமகன் மணமகளுக்காக காத்து இருந்தான்.

அடர்பச்சை நிறத்தில் கைவேலைப்பாடுகள் அடங்கிய பட்டுபுடவையை அணிந்து. அளவான ஒப்பனையில் யாமினி முதல் இரவு அறைக்குள் கையில் வெள்ளி பால் சொம்புடன் உள்ளே நுழைய.அங்கே ஜோதிமணியும் இவளுக்காக காத்து இருந்தவன். தன் மனைவியின் அழகில் மெய்மறந்து சொக்கி நின்றான்.

பெரியவர்களின் அறிவுரைப்படியே தன் கணவனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று எண்ணிய யாமினி தன் மணவாளனின் காலில் விழ போனவளை தடுத்து. “மினி,இதெல்லாம் வேணாம்.நீ வந்து உக்காரு” என்றவன் முதலில் தன் மனைவியுடன் இயல்பாக பேசி பழக வேண்டும் என்று எண்ணியவன்.

“இப்போ தான் உன்னை பொண்ணு பார்க்க வந்த மாதிரி இருந்துச்சு, ஆனா அதுக்குள்ள நமக்கு கல்யாணம் முடிந்து நம்ம ரெண்டு பேரும் இப்போ ஒண்ணா உக்காந்து இருக்கோம்” என்று தன் மனதில் உள்ளதையே பேசும் தன் கணவனை கண்டு மெலிதாக சிரித்து கொண்டாள் யாமினி.

“உனக்கு என்கிட்ட எதாவது சொல்லனுமா?” என்று இவன் கேக்க.

“என்ன சொல்லணும்?” என்று கேட்டாள் அவள்.

“இல்ல,நம்ம கல்யாணம் தான் சட்டுன்னு முடிஞ்சிடுது,அடுத்து நடக்க போறது எல்லாம் பொறுமையா நடக்கட்டும்ன்னு நீ எதாவது யோசிக்கிறியா?” என்று இவன் கேக்க.

“ஹ்ம் ஹ்ம், நான் அப்படி எல்லாம் எதுவும் யோசிக்கல,நம்ம ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் பிடித்து போய் தானே கல்யாணம் பண்ணிகிட்டோம். இனி இதுல யோசிக்க என்ன இருக்கு,அதுவும் இல்லாம நம்ம ரெண்டு வீட்டு பக்கமும் கல்யாணத்தை ரொம்ப விமர்சையா பண்ண வேணான்னு முடிவு பண்ணி தானே எளிமையான முறையில பண்ணோம்,அதனால எனக்கு வேற எந்த யோசனையும் இப்போ இல்ல” என்று பதில் சொன்னாள் யாமினி.

“ம், சரி பால் குடிக்கிறியா?” என்றவன் அவள் முன் பால் சொம்பை நீட்டி 

“இது மாட்டு பால் தானே?” என்று கேக்க.

“ஏன் கேக்குறீங்க, உங்களுக்கும் பாக்கெட் பால் ஒத்துக்காதா?”என்று இவள் கேட்டதும்

“நான் பால் சம்மந்தப்பட்ட எந்த விஷயமும் சாப்பிட மாட்டேன்,ஆனா நீ நம்ம வீட்டுக்கு வந்ததும் உனக்கு கண்டிப்பா பசும் பால் கிடைக்கும்,ஏன்னா நம்ம வீட்டுலயும் சீதான்னு ஒரு கோமாதா இருக்கு” என்றவன் சொம்பில் இருந்த பாலை மீண்டும் அவள் முன் நீட்டியதும்.

“தேங்க்ஸ்” என்றவள் கொஞ்சமாக பாலை அருந்தியப்பின் மேசை மேல் வைக்க.

“எனக்கு பால் இல்லையா?” என்று அவன் கேட்டதும்

“உங்களுக்கு தான் பிடிக்காதுன்னு சொன்னிங்களே, பிடிக்காத விஷயத்தை ஏன் சடங்கு சம்பர்த்தாயத்துக்காக பண்ணனும், விடுங்க நானே எல்லா பாலையும் குடிச்சிக்கிறேன்” என்றவள் மீதி இருந்த பாலையும் குடித்து முடிக்க.

“லைட் ஆப் பண்ணலாமா?” என்று ஜோதிமணி கேட்டதும்

வெட்கத்துடன் “ம்” என்ற யாமினியின் அழகினை கண்களால் களவாடிய கள்வனவன் மின்விளக்கை அணைத்த கையோடு தன் மனைவியின் தேகத்தில் தஞ்சம் அடைந்தான்.

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    💐பெண்🔱கல்வி💐- பகுதி 1 (நாவல்) – லீலா சந்திரன்

    பெண் கல்வி – பகுதி 3 (நாவல்) – லீலா சந்திரன்