இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சௌம்யா கூட தன் அம்மாவை கலாட்டா செய்து கொண்டிருந்தாள். “ஏம்மா… நான் எத்தனை முறை காலேஜில் படிக்கும் போதும், ஹாஸ்பிடலில் வேலை செய்யும் போதும் லேட்டாக வந்திருப்பேன். ஆனால் நீங்கள் ஒரு முறை கூட இப்படிக் கவலைப்பட்டதில்லையே” என்று கலாய்த்தாள்.
“நீ சொல்வது சரிதான். அது என்னவோ இந்த ரேஷ்மாவைப் பார்த்தால் எங்கோ தவறவிட்டது இப்போது கிடைத்தது போலவும், மீண்டும் கை நழுவிப் போய் விட்டால் என்ன செய்வது என்ற பயமுமே காரணம் என்று நினைக்கிறேன்” என்றாள் காமாட்சி.
ரேஷ்மா, அங்கே டிரைவரில்லாமல் நின்றிருந்ததை ரிஷி அவனுடைய அம்மாவிடம் சொல்ல, அவளுக்கு கோபம் பயங்கரமாக வந்தது.
“ரேஷ்மா, உனக்கு அஷோக்கிடம் பயமா? அவன் ஏற்பாடு செய்த எல்லா ஆட்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இந்த டிரைவரை நிறுத்தி விட்டு, நமக்கு நம்பிக்கையான டிரைவர்களை நம் சர்க்கரை மில்லிலிருந்து கொண்டு வரலாமா? அவன் ஏற்பாடு செய்த சமையல்காரியை நிறுத்தியவுடன், உன்னிடம் ஏற்கெனவே இருந்த ஒரே ஆள் எல்லா வேலைகளையும் சரியாக செய்கிறாள் பார். டூ மெனி குக்ஸ் ஸ்பாயில் த குக் என்பது சரியாகத் தான் இருக்கிறது” என்றாள் காமாட்சி கோபமாக.
“எனக்கு பயமில்லை. அஷோக் தேவையான நேரத்தில் ஆடிட்டர் எல்லாம் அனுப்பி இன்கம்டேக்ஸ் விவகாரத்தில் உதவி செய்தான் என்ற நன்றியுணர்ச்சித்தான்” என்றாள் ரேஷ்மா.
“நன்றி உணர்ச்சி இருக்க வேண்டியது தான், ஆனால் அவன் ஆடிட்டர் ஏற்பாடு செய்ததுடன் நிற்க வேண்டியது தானே. ஏன் சமையல்காரி முதல் டிரைவர் வரை எல்லோரையும் மாற்ற வேண்டும்? இதில் ஏதோ குள்ளநரித்தனம் தான் தெரிகிறது” என்றாள் காமாட்சி எரிச்சலுடன்.
“அம்மா… போதுமே இந்தப் பேச்சு. வேண்டுமானால் இந்த டிரைவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப் பாருங்கள் ரேஷ்மா, பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் ரிஷி.
அதன் பிறகு ஒரு வாரம் எல்லாம் வழக்கம் போலவே சென்றது. அந்த டிரைவரும் ஏதோ நொண்டிச் சாக்கெல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்டான். ரிஷியின் ஆலோசனைபடி அவனைக் கண்டு கொள்ளாமல் விட்டாள்.
வீட்டில் வேலை செய்யும் பெண்களை குறைத்து விட்டதோடு, ஏஜன்ஸி மூலம் ஏற்பாடு செய்த ஆட்கள் தான் இப்போது ரேஷ்மா வீட்டில். ஆடிட்டரையும் மாற்றி விட்டான், ரிஷியின் கம்பெனி ஆடிட்டரே இவளுக்கும் ஆடிட்டர்.
சௌம்யாவும் அவள் கணவரும் லண்டன் செல்லும் நாளும் வந்து விட்டது, அதனால் அவள் கணவர் ரகுவும் சென்னைக்கே வந்து விட்டார். அவர்களை வழியனுப்ப ரிஷியின் அப்பாவும் அவருடனே வந்து விட்டார். அவர்களும் லண்டன் கிளம்பி விட்டனர்.
ஒரு நாள் வீட்டிற்கு வேவு பார்ப்பது போல் வந்த அஷோக், இந்த கூட்டத்தைப் பார்த்தவுடன் பயந்து விட்டான். இந்த ரிஷியும் அவன் குடும்பமும் இங்கிருக்கும் வரையில், தன் தந்திரம் எதுவும் பலிக்காதென்று புரிந்து கொண்டான். அதனால் கொஞ்ச நாட்கள் தன் திருவிளையாடல்களை நிறுத்தி விட்டுப் பிறகு பார்க்கலாம் என்று முடிவு செய்தான்.
ரிஷியும் தன் கம்பெனி வேலைகளை நிறுத்தி விட்டு சென்னையில் அதிக நாட்கள் தங்க முடியாதென்று, தன் சொந்த ஊரான சுவாமிமலைக்கு போக வேண்டுமென்று ரேஷ்மாவிடம் கூறி விடை பெற்றான்.
சதீஷை அவளுடைய எல்லா வேலைகளுக்குமான பி.எ.வாக கணிசமான சம்பளத்துடன் ஏற்பாடு செய்து விட்டான். அவளுடைய கால்ஷீட்டுகளை பிக்ஸ் செய்வது முதல் எல்லாம் சதீஷின் வேலையாயிற்று. வேலை அதிகம் தான், ஆனால் சம்பளமும் அதிகமாகவே இருக்க அவனும் சந்தோஷத்துடன் வேலையில் சேர்ந்து விட்டான்.
காமாட்சிக்கு மட்டும், ரேஷ்மா இப்படி ஷூட்டங் ஷூட்டிங்கென்று ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பாடுபடுவது பிடிக்கவில்லை.
ஒரு நாள் அவளிடமே நேரிடையாக்க் கேட்டாள். “நீ உயிரைக் கொடுத்து சம்பாதிப்பது யாருக்காக? ஒருவேளை சாப்பாடு கூட ஒழுங்காக வீட்டில் சாப்பிட முடியவில்லை, ஏன் இவ்வளவு பாடுபட வேண்டும்” என்று கேட்டாள்.
“அம்மா… நான் ஒரு அனாதை, வளர்ந்ததெல்லாம் ஹோமில். இந்தத் தொழிலும் நல்ல தொழில் தானம்மா, யாரையும் ஏமாற்றிப் பிழைக்கவில்லை. நான் முடித்த பட்டப்படிப்பிற்கு எனக்கு எந்த வேலையும் ஒழுங்காகக் கிடைக்கவில்லை.
நான் வேலை தேடிய போது எல்லோரும் என்னை இரை தேடும் கழுகுகள் போலத்தான் பார்த்தார்களே தவிர, யாரும் மனுஷியாகக் கூட மதிக்கவில்லை. அப்போது தான் பணமும் புகழும் இருந்தால் தான் நாமும் சுயமரியாதையுடன் நம் கற்பைக் காப்பாற்றிக் கொண்டு வாழ முடியும் என்று நம்பினேன்.
கையில் பணமில்லை ஆதரிக்க சொந்தமில்லை, நான் எப்படி பணமும் புகழும் சம்பாதிக்க முடியும்? நான் தன்மானத்துடன் வாழ, என்னை நானே காப்பாற்றிக் கொள்ளத்தான் இந்த தொழிலைத் தேர்ந்தெடுத்தேன்.
நடிகையாக இருந்தால் யாரும் கற்புடன் கண்ணியமாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தத் தொழில்தான், இதனால் வரும் பணமும் புகழைம் தான் எனக்கு வேலியாக இருக்கிறது. இந்தத் தொழிலிலும் நன்றாகப் படித்தவர்களும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் மற்ற வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் போலத்தான் இங்கும் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள்.
நீங்கள் என்னை இத்தனை நாட்கள் கூடவே இருந்து பார்க்கிறீர்களே, உங்களுக்கு என் பார்வையிலோ அல்லது பேச்சிலோ ஏதாவது விகல்பம் தெரிகிறதா?” என்று மூச்சு விடாமல் கேட்டாள் ரேஷ்மா.
ஊருக்குக் கிளம்ப தன் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்த ரிஷியின் காதுகளில் இந்த சம்பாஷணை துல்லியமாக விழுந்தது. ரேஷ்மாவின் பேச்சு அவன் கண்களைக் கலங்க வைத்தன. கண்களை மட்டுமல்ல இதயத்தையும் தான்.
‘எந்த விகல்பமும் தெரியவில்லை ரேஷ்மா, நீ கறந்த பால் போல் தூய்மையானவள் என் கண்ணே’ என்று உரக்க உலகத்திற்கே அறிவிக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.
ஆனால் அடுத்தாற்போல் அவன் அம்மா, ரேஷ்மாவிடம் கேட்ட ஒரு கேள்வி அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அம்மா தன் பேச்சைத் தொடர்ந்தாள்.
“எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை ரேஷ்மா. ஓரு நல்ல குடும்பத்தில் பிறந்த, வசதியான வீட்டுப் பையன் உன்னைத் திருமணம் செய்துக் கொள்ள விரும்பினால், நீ இந்தத் தொழிலை விட்டு விடுவாயா?”
“அதெப்படி முடியும் அம்மா? இந்தத் தொழில் தான் என்னை கௌரவமாக வாழ வைத்தது. உண்டி கொடுத்து உயிரும் கொடுத்தது. இப்போது மானத்தோடு வாழ ஒரு வாழ்க்கையையும் கொடுத்திருக்கிறது. நான் ஏன் இந்தத் தொழிலை விட வேண்டும்?” என்றாள் பிடிவாதமான குரலில்.
“ஓ அப்படியா?” என்றாள் அம்மா. அந்தக் குரலில் பல விதமான அர்த்தங்கள் தெரிந்தன.
“ரிஷி இன்று கிளம்புகிறான், நாங்களும் ஒரு வாரம் கழித்துக் கிளம்புகிறோம் ரேஷ்மா. டக்கென்று எல்லோரும் போய் விட்டால் வீடு மிகவும் வெறுமையாகிவிடும் இல்லையா?” என்றாள் அம்மா.
“அம்மா… நீங்கள் என்னுடனே இருங்களேன். அவர்கள் போனால் நீங்களும் போக வேண்டுமா?” என்றாள் ஒரு வித ஏக்கத்துடன்.
ரிஷி கிளம்பும் போது, “ரேஷ்மா… உங்களுக்கு டிரைவிங் தெரியாதா?” என்று கேட்க, ‘தெரியாது’ என்று தலையை ஆட்டினாள்.
“நீங்கள் சீக்கிரம் டிரைவிங் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு அது தான் பாதுகாப்பு” என்றான்.
விஷயம் புரியாமல் விழித்தாள் ரேஷ்மா.
“நம் சர்க்கரை மில்லிலிருந்து ஒரு டிரைவரை உடனே இங்கு அனுப்புகிறேன். அஷோக் அனுப்பிய டிரைவர் ஏதாவது கொஞ்சம் தகராறு செய்தால் கூட, கொஞ்சமும் தயங்காது உடனே வேலையிலிருந்து நீக்கி விடுங்கள். நான் அனுப்பும் டிரைவர் ரொம்ப சின்சியர். நாளையே இங்கு வந்து வேலையில் சேர்ந்து விடுவார். அம்மா அப்பாவிற்கும் அவரை நன்றாகத் தெரியும், அவரே உங்களுக்கு டிரைவிங் சொல்லித் தருவார்” என்றான்.
எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டினாள் ரேஷ்மா.
ரிஷி கிளம்பியவுடன் வீடு வெறிச்சென்று ஆகி விட்டது. நல்லவேளையாக சதீஷ் மட்டும் ஆபீஸ் ரூமில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தான். சில செக் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து கையெழுத்து வாங்கினான். அடுத்த நாள் ஷூட்டிங் பற்றி அவளுடன் விவாதித்துக் கொண்டிருந்தான்.
எல்லாம் முடிந்த பிறகு, சதீஷிடம் உடம்பு சரியில்லாத்தால் இன்றைய ஷூட்டிங்கை, கேன்ஸல் செய்து விட்டதாக டைரக்டருக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டாள் ரேஷ்மா.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த காமாட்சி, “உடம்பு சரியில்லையா? என்னம்மா தலை வலிக்கிறதா?” என்று கேட்டுக் கொண்டே அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.
“அதெல்லாம் ஒன்றுமில்லைம்மா, ஒருமாதிரி வெறுமையாக இருக்கிறது. தனிமை எனக்கு பழக்கம் தான். ஆனால் சில நாட்களாய் எல்லோரும் ஒன்றாய் இருந்து விட்டுப் பிரிந்தால் அது மனதிற்கு மிகவும் கஷ்டமாய் இருக்கிறது” என்றாள்.
காமாட்சிக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது. இந்த தனிமை, ரிஷி ஊருக்குக் கிளம்பி விட்டதால் வருகிறதோ என்று சந்தேகப்பட்டாள். ஆனாலும் யாரோ முன் பின் தெரியாத ஒரு பெண்ணிற்காக ரிஷியின் வாழ்க்கை பலிகடா ஆவதை ஒரு அம்மாவாக அவள் விரும்பவில்லை.
காமாட்சி ஊருக்குக் கிளம்பும் வரை ரேஷ்மா அவளையே சுற்றிச் சுற்றி வந்தாள். முதல்நாள் இரவு, தலையணையையும், போர்வையையும் இழுத்துக் கொண்யடு காமாட்சியின் படுக்கையறைக்கு வந்து நின்றாள்.
கட்டிலில் சாய்ந்து நைட்லேம்ப் வெளிச்சத்தில் ஏதோ படித்துக் கொண்டிருந்த ரிஷியின் தந்தை, “என்னம்மா இங்கே படுத்துக் கொள்ளப் போகிறாயா?” என்று கேட்டார்.
“அங்கிள்… எனக்கு இன்று அம்மா பக்கத்தில் படுக்க வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது” என்றாள்.
“என்னடிப் பெண்ணே திடீர் பாசம்?” என்று சிரித்தவாறு உள்ளே நுழைந்தாள் காமாட்சி.
“திடீர் பாசமெல்லாம் இல்லயம்மா. நான் அனாதையாக இருந்தாலும், எனக்கு நிறைய உறவினர்கள் வேண்டும் என்று ஆசை. எனக்கு உங்களிடமும் அங்கிளிடமும் ஏதோ சொல்ல முடியாத ஒரு உறவு இருப்பது போல் மனதிற்குள் தோன்றிக் கொண்டிருக்கிறது. எனக்கு உங்களிடம் நிறைய பேசவேண்டும் அம்மா” என்றாள்.
“சரிம்மா… நீ இங்கே படுத்துக் கொள், நான் பக்கத்து அறையில் போய்ப் படுத்து நிம்மதியாகத் தூங்குகிறேன். நாளை ஊருக்குப் போனவுடனே எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது” என்று ஆளை விட்டால் போதும் என அடுத்த அறைக்குக் கிளம்பி விட்டார் ரிஷியின் அப்பா.
சமையல்காரம்மா கொண்டு வந்து கொடுத்த பாலைக் குடித்து விட்டார்கள் மூவரும். படுத்துக் கொள்ளப் போகும்போது, வேண்டுமென்றே காமாட்சியை நெருக்கிக் கொண்டு படுத்தாள் ரேஷ்மா.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings