in , ,

நின்னயே ரதியென்று ❤ (பகுதி 5) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சிறிது நேரத்தில் ரேஷ்மாவின் செல்போன் அழைத்தது, அஷோக் தான் அழைத்தான்

“எங்கேயிருக்கிறாய் ரேஷ்மா?”

“வீட்டில் தான் இருக்கிறேன் அஷோக்”

“நீ இப்போது ப்ரீயா? உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும்”

“இப்போது ஒன்றும் வேலையில்லை, ஆனால் கொஞ்சம் டயர்டாக இருக்கிறது அஷோக். நாளை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திக்கலாமா?” என்று கேட்டாள் ரேஷ்மா.

“ரொம்ப தூரப் பயணமா ரேஷ்மா? சொல்லாமல் வேறு டிரைவரோடு கார் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாய்?”

“எல்லாம் நாளை விவரமாகப் பேசலாமா அஷோக்? எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கிறது, பை” என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

“ஏதும் பிரச்சினையா ரேஷ்மா?” எனக் கேட்டான் ரிஷி.

“பிரச்சனையென்று ஏதும் இல்லை. அஷோக் எங்கே போயிருந்தாய் என்று கேட்கிறான். எனக்கு மிகவும் களைப்பாக இருந்ததால் நாளை பேசலாம் என்று சொல்லிவிட்டேன்” என்றாள் ரேஷ்மா.

ரேஷ்மா ஏதோ யோசனையாக எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன ரேஷ்மா, என்ன யோசனை?” என்றாள் அம்மா காமாட்சி.

“ஒன்றும் இல்லை அம்மா. அஷோக் எங்கே போனீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்”

“இதில் யோசனை என்ன வேண்டியிருக்கு? பாட்டி வீட்டிற்குப் போயிருந்தேன் என்று சொல்” என்றாள் காமாட்சி. சௌம்யா அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

“நோ நோ, அப்படி சொல்லாதீர்கள். இத்தனை நாள் இல்லாத பாட்டி இப்போது எங்கிருந்து வந்தார்கள் என்று கேட்பான். அதனால் ஆன்ட்டி வீட்டிற்குப் போய் வந்ததாகச் சொல்லுங்கள். ஆன்ட்டி என்றால் உறவுமுறையை எப்படி வேண்டுமானால் அட்ஜஸ்ட் பண்ணி சொல்லிக் கொள்ளலாம் இல்லையா?” என்றான் ரிஷி.

“அது சரி” என்று எல்லோரும் சிரித்தனர்.

இரவு சாப்பிட்டு விட்டு அவன் அறைக்குத் திரும்பினான் சதீஷ். எல்லோரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைக்குப் படுக்கச் சென்றனர்.

எல்லோருக்கும் படுக்கையும் போர்வையும் சௌகர்யமாக இருக்கிறதா என்று விசாரிக்க, முதலில் ரிஷியின் அறைக்குள் கதவை லேசாகத் தட்டி விட்டு சென்றாள் ரேஷ்மா.

அவன் கட்டிலுக்கு எதிரே உள்ள சோபாவில் உட்கார்ந்து கொண்டு ஏதோ ஆங்கில நாவல் படித்துக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த அவளைப் பார்த்து, டக்கென்று எழுந்து நின்றான்.

அவன் எழுந்த வேகத்தைப் பார்த்து அவள் சிரிப்பை அடக்க முடியாமல் கைகளால் வாயைப் பொத்தி சிரித்தாள். எழுந்தவன் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நீல நிற மெல்லிய நைட்கௌனில் வானிலிருந்து இறங்கி வந்த தேவதை மாதிரியே இருந்தாள்.

“என்ன சார் டீச்சரைப் பார்த்த ஸ்டூடண்ட் மாதிரி எழுந்து நிற்கிறீர்கள்?” என்று கேட்டவள் மீண்டும் சிரித்தாள்.

“ம்… நீங்கள் ஏன் சொல்ல மாட்டீர்கள்? இந்த அமைதியான இரவு நேரத்தில் டக்கென்று தேவதை மாதிரி ஒரு அழகான பெண் நீல நிற நைட் கௌனில் எதிரில் வந்து நின்றால் இது மோகினியா, இல்லை ரேஷ்மாவா என்று பிரமித்து விட்டேன்” என்றான் ரிஷி கண்கள் மின்ன.

“ரிஷி சார்… இது டூ மச். உங்களுக்கு ரூம் சௌகர்யமாக இருக்கிறதா என்று கேட்க வந்தேன், நீங்கள் என்னையே கலாட்டா செய்கிறீர்களே” என்றாள் சிரித்துக் கொண்டு.

“சத்தியமாக இது கலாட்டா இல்லை மேடம். ரூம் பைவ் ஸ்டார் ஹோட்டல் பெட்ரூம் மாதிரி வசதியாகத் தான் இருக்கிறது ரேஷ்மா”

“சரிங்க ரிஷி சார். நான் சௌம்யா அக்கா, அம்மா அவர்களுக்கு ஏதாவது தேவையா என்று கேட்டு விட்டு நானும் போய் படுக்கிறேன். ஏதாவது தேவையென்றால் போனிலோ இல்லை இன்டர்காமிலோ கூப்பிடுங்கள்” என்றவள் அடுத்த அறைக்குச் சென்றாள்.

காமாட்சி அம்மாவின் அறைக்குள் நுழைய கதவைத் தட்டிக் கையை ஓங்கிய போது, உள்ளே ரேஷ்மாவின் பேரைச் சொல்லி சௌம்யாவும் அவள் அம்மாவும் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.

“அம்மா, நீங்கள் ஏன் ரேஷ்மாவிடம் அப்படிச் சொன்னீர்கள்?” என சௌம்யா கேட்க

“என்னடி இது, திடீரென்று மொட்டை தாதன் குட்டையில் விழுந்தாற் போல் தலையுமில்லாமல் காலுமில்லாமல் பேசுகிறாய்? நான் என்ன சொன்னேன் அவளிடம்?” என்றார் காமாட்சி.

“அஷோக் எங்கே போயிருந்தாய் என்று கேட்டால், ‘பாட்டி வீட்டிற்குப் போயிருந்தேன் என்று சொல்’ என்று சொல்லவில்லையா நீங்கள்?” என்று கேட்டாள் சௌம்யா.

“ஆம் அப்படித்தான் சொன்னேன், அதனாலென்ன?” என்றார் காமாட்சி.

“ரேஷ்மாவிற்கும் நமக்கும் என்ன உறவு? திடீரென்று உங்கள் வாயிலிருந்து ஏன் அப்படி ஒரு உறவு முறை வந்தது?” என சௌமியா கேட்க, காமாட்சி சிறிது நேரம் எங்கோ வெறித்துப் பார்த்தாள். பிறகு மெதுவாகப் பேசலானாள்.

“எனக்கு இந்தப் பெண்ணைப் பார்த்தால் அனாதை என்றே தோன்றவில்லை. எங்கோ தொலைந்த நம் சொந்தம் மீண்டும் கைகளில் வந்தது போலவே மனதில் தோன்றுகின்றது. இந்த உள்ளுணர்வு எனக்கு மட்டுமில்லை, உன் அப்பாவிற்கும் அப்படியே தான் இருக்கிறது என்கிறார்”

“அம்மா எனக்குப் புரியவில்லை”

“உனக்குப் புரியாது. நீ அப்போது மிகவும் சிறிய பெண். ரிஷியோ கைக்குழந்தை. அந்த காவ்யா அப்போது தான் எங்களை விட்டுப் பிரிந்தாள்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது ரேஷ்மாவின் செல்போனில் அவளை யாரோ அழைத்தார்கள்.

அதற்கு மேலும் வெளியே காத்திருந்து அவர்கள் பேசுவதைக் கேட்க முடியாது என்று அந்த அறைக் கதவைத் தட்டினாள். கதவிற்கு வெளியே நின்றிருந்த ரேஷ்மாவைப் பார்த்து அம்மாவும் மகளும் திடுக்கிட்டனர்.

“நீ எப்போது வந்தாய் ரேஷ்மா?” என காமாட்சி கேட்க

“நான் இப்போது தான் வந்தேன் அம்மா. உங்களுக்கும் அக்காவிற்கும் போர்வை தலையணை எல்லாம் போதுமா என்று கேட்கத்தான் வந்தேன். நான் உங்களை ஏதும் தொந்தரவு செய்து விட்டேனா?” எனக் கேட்டாள் ரேஷ்மா.

“எல்லாம் சூப்பராக இருக்கிறது. வேலைக்காரப் பெண், பால் கொண்டு வந்து வைத்தாள். படுக்கும் முன் அம்மாவிற்கு மாத்திரைகள் கொடுக்க வேண்டும், அதற்கு தான் வந்தேன்” என்றாள் சௌம்யா.

“சரிக்கா… நானும் போய் படுக்கிறேன், குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்று அவர்களிடமிருந்து விடைபெற்றாள் ரேஷ்மா.

அடுத்த நாள் காலை எட்டு மணிக்கெல்லாம் கொஞ்சம் மேக்-அப்போடு டிரைவரை காரை எடுக்கச் சொல்லி விட்டு ஷூட்டிங்கிற்குக் கிளம்பி விட்டாள் ரேஷ்மா.

ரோஜா நிற சாட்டின் சல்வார் கமீஸில், அவளே ஒரு ரோஜாப்பூ மாலையாக நின்றாள். அவள் அழகில் திகைத்த அவன் உதடுகள் தன்னையறியாமலே, ‘ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம்’ என்று விசிலடித்தது.

“ஹலோ ரிஷி சார், என்ன கனவு காண்கிறீர்களா?” என்று சொடக்குப் போட்டு அவனை நிஜஉலகிற்குக் கொண்டு வந்தாள் ரேஷ்மா. அவள் உதடுகளில் மென்மையாக ஒரு புன்னகை மின்னலாய் தோன்றி மறைந்தது.

“ஸாரி ரேஷ்மா… சாப்பிட்டீர்களா இல்லையா, அதற்குள் கிளம்பி விட்டீர்கள்” எனக் கேட்டான் ரிஷி.

“இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும். இங்கிருந்து போகவே ஒரு மணி நேரம் ஆக விடும், வருகிறேன்” என்றவள், அவனை மீண்டும் ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு கிளம்பினாள்.

“ரேஷ்மா உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால் உடனே கூப்பிடுங்கள், எங்கிருந்தாலும் நான் உடனே வந்து விடுவேன்” என ரிஷி கூற, சரியென்று தலையாட்டி விட்டு, அவனைப் பார்த்துக் கொண்டே போய் காரில் அமர்ந்தாள்.

 அதுவரை ஒரே ஆரவாரமாக இருந்த வீடு, அவள் ஒருத்தி அங்கிருந்து சென்றவுடன் பௌர்ணமியாக இருந்த வானம் ஒரே இருட்டாக ஆனாற் போல் இருந்தது.

ரிஷி இங்கிருந்தே ஆன்லைனில் சர்க்கரை ஆலையைக் கண்காணித்து, அங்கிருக்கும் மேனேஜர்களுக்கு லேப்-டாப்பில்  உத்தரவுப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.  இரண்டு மணி நேரம் எப்படியோ ஓடி விட்டது. 

இவர்கள் வந்தவுடனே ஒரு சமையல்காரி நின்று விட, இப்போது ஒருத்தி தான் வேலை செய்கிறாள். அவள் ரேஷ்மாவுடன் வெகு நாட்களாக இருக்கிறாள், அதாவது அவள் அஷோக்கின் ஆள் இல்லை.

அவள் எல்லோருக்கும் ஆரஞ்சு ஜூஸ் போட்டு, மேலே ஐஸ் கியூபும் போட்டு அழகாக எல்லோருக்கும் கண்ணாடி டம்ளரில் கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது ரிஷியின் செல்போன் அழைத்தது, கூப்பிட்டது ரேஷ்மா தான்.

“ரிஷி… இந்த டிரைவர், அஷோக் கூப்பிடுகிறார் என்றும் அரைமணி நேரத்தில் வந்து விடுவதாக கூறிவிட்டு போனவர் தான். ஒரு மணி நேரமாகியும் இன்னும் வரவில்லை, நீங்கள் கொஞ்சம் வர முடியுமா?” என ரேஷ்மா கூற, ரிஷிக்கு பயங்கர டென்ஷனாகி விட்டது.

“ரேஷ்மா, உடனே லொகேஷனை வாட்ஸ்-அப்பில் அனுப்பு. அங்கே உன்னுடன் ஷூட்டிங்கிற்கு வந்த ஆட்கள் இருக்கிறார்களா? இல்லை எல்லோரும் கிளம்பி விட்டார்களா?” என்றான் பதட்டத்துடன்.

அதைக் கேட்ட அவன் அம்மா காமாட்சி, மிகவும் பயந்து விட்டாள்.

“இல்லை, இன்னும் யாரும் போகவில்லை. லேடி ஆர்ட்டிஸ்டைத் தனியாக விட்டு விட்டு போக மாட்டோம் என்று பிடிவாதமாகக் காத்திருக்கிறார்கள்” என்றாள் ரேஷ்மா.

“நான் கிளம்பி விட்டேன், இன்னும் அரை மணி நேரத்தில் உன்னிடம் வந்து விடுவேன் பயப்படாதே” என்றவன், அவள் தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏதேதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டே போனான்.

சொன்னது போலவே அரை மணி நேரத்தில் ரிஷி அவளிடம் சென்று விட்டான். அவளுடைய ஐ-20 பக்கத்தில் நின்று கொண்டிருந்தது. இவனைப் பார்த்தவுடன் தாயிடம் ஓடி வரும் கன்றுக்குட்டி போல் ஓடி வந்து இவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள் ரேஷ்மா.

அவள் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்ட ரிஷிக்கு, அஷோக்கின் மேல் கோபம் அதிகமாகியது. வண்டியின் சாவி காரிலேயே தொங்கிக் கொண்டிருந்தது. ரிஷிக்கு கோபம் பயங்கரமாக வந்தது, உடனே காரை செர்வீஸ் செய்யும் சென்டரில் இருந்து ஒரு மெக்கானிக்கை வரவழைத்து காரை ரேஷ்மாவின் வீட்டில் விடச் சொன்னான்.

ரேஷ்மாவை இவனுடைய ஆடி காரில் தன் அருகில் அமர்த்திக் கொண்டு, அங்கிருந்தவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினான் ரிஷி. அதற்குள் ஒரு ஐந்து முறை போன் செய்து விட்டார் காமாட்சி.

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சொல்லிடுவீர் பொறாமையோரே (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    நின்னயே ரதியென்று ❤ (பகுதி 6) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை