எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
உணர்வதற்கு கொஞ்ச நேரமாயிற்று. பஸ் ஸ்டாப்பில் நிற்கும் அனைவரும் அவளையே பார்ப்பது போல ஓர் உணர்வு தென்பட்டது.
அர்ஜூள் இப்போது வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவன் இன்னும் வரவில்லை. இப்போது நேரம் என்ன இருக்கும் என்று திரும்பி மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாப்பில் உள்ள கடிகாரத்தைக் கவனித்த போது விடிகாலை 4.30 மணி என்றது. சாயங்காலம் 5 மணிக்கு அர்ஜூனோடு அவளும் பஸ் ஸ்டாப்பிற்கு வந்ததும் இருவரும் சர்பத் குடித்தனர்.
நான் போய் பெரியார் பஸ் ஸ்டாண்ட் போவதற்கு ஆட்டோ கொண்டு வருகிறேன் என்றான் அர்ஜூன்.
ஆட்டோ எதற்கு பஸ்ஸிலே போய் விடலாமே என்றாள் பத்மினி.
என் மகாராணியை வீணாக இந்த பஸ்ஸில் நெரிசலில் இடிபட விடுவேனா? என்று சிரித்து சொல்லிக் கொண்டே போனவன் திரும்பவேயில்லை.
இப்போது வந்து விடுவான் என்று நினைத்து இதில் அமர்ந்து தூங்கி போயிருக்கிறேன். இன்னும் வரவில்லை. என் நகைகளை கழற்றி பணம் பண்ணியதில் கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்ட போது கூட அர்ஜூன் என்னை இப்படி ஏமாற்றி விட்டு போவான் என்று எதிர்பார்க்கவில்லை.
என்ன செய்வது? பாம்பன் குளத்திலிருந்து நாகர்கோவில் பஸ்ஸில் டிக்கட் எடுக்க கூட பணம் இல்லாமல் வந்தவனிடம் பர்ஸை கொடுத்தேன், எவ்வளவு நம்பிக்கை வைத்து அவனோடு புறப்பட்டேன்.
நாகர்கோவிலில் புறப்பட்டு திருநெல்வேலி வந்து லாட்ஜில் ஒரு நாள் முழுவதும் நாம் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே என்று ஆசை காட்டி என்னை சக்கையாய் பிழிந்து விட்டு அடுத்த நாள் என் நகைகளை சுழற்றி மார்வாடி கடையில் வைத்து பணம் வாங்கிக் கொண்டு மதுரை வந்து இங்கிருந்து சென்னை போய் வாழ்க்கை நடத்தலாம் என்று ஆசை காட்டி என்னை அழைத்து வந்த அர்ஜூனை நான் இந்த அளவிற்கு நம்பியது எவ்வளவு பெரிய பேரிடியாக விழுந்து விட்டது.
என் எதிர்காலம் எனக்குள்ளே இருட்டாக தெரிகிறது. என்ன செய்வது எழுந்து மெதுவாக டீக்கடை வந்த போது எதிரில் இரண்டு இளைஞர்கள் அவளைப் பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கையில் ஐந்து காசு கூட இல்லாமல் பத்மினி தவித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு முதல் முறையில் தனித்து விடப்பட்டது. உரைக்க ஆரம்பித்தது.
வீட்டிலே மாமா வீட்டிற்கு போய் விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். மாமா வீட்டிற்கு போயிருந்தால் வீட்டிலிருந்து யாராவது நான் எங்கே போனேன் என்று தேட ஆரம்பித்து விடுவார்கள் என எண்ணிய போது குபுக்கென்று கண்ணீர் வர ஆரம்பித்தது.
என்ன செய்யப் போகிறோம் என்று புரியாமல் அவள் தவித்துக் கொண்டிருந்த போது நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு போகும் பஸ்ஸில் வந்த டிரைவர் முருகன் அவளைப் பார்த்ததும் ‘ஏய் பத்மினி. என்ன இந்த நேரத்தில் இங்கு நின்று கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார்.
அவருக்கும் பாம்பன் குளம்தான் சொந்த ஊர். பத்மினியின் வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் தங்கியிருக்கிறார்.
‘அது வந்து… வந்து…’ என்று சொல்ல முடியாமல் தத்தளித்தவள் கண்டிப்பாக என்னைப் பற்றி இவருக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை என்று உணர்ந்த பிறகு, ‘இங்கே மாமா வீட்டிற்கு வந்தேன். வீட்டிற்கு கிளம்பி வரும்போது ஆட்டோவில் என் பர்ஸை விட்டு விட்டேன். அதுதான் திரும்ப மாமா வீட்டிற்கு போவோமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றாள் தன் துக்கத்தை மறைத்துக் கொண்டு.
‘இனி எதற்கு மாமா வீட்டிற்கு திரும்ப போக வேண்டும். இந்தா நூறு ரூபாய் வைத்துக் கொள். வீட்டில் வந்து வாங்கிக் கொள்கிறேன். அதோ பார் நாகர்கோவில் பஸ் நிற்கிறது. வேகமாக கிளம்பு’ என்றார் முருகன்.
அழுகை பீறிட்டு வந்ததை அடக்கிக் கொண்டு வேகமாக கிளம்பினாள் பத்மினி. வீட்டில் பூகம்பம் வந்து முடிந்திருந்தது. அவள் மாமா வீட்டிற்கு போகவில்லை என்று தெரிந்ததும் அர்ஜூனையும் ஊரில் காணவில்லை என்று தெரிந்ததும், யாருக்கும் தெரியாமல் பத்மினியைத் தேட ஆரம்பித்ததில் பிரச்சனை ஆரம்பித்து அவளைக் கண்டதும் வீட்டிலுள்ள அனைத்து அங்கத்தினரும் நகை எங்கே? என்றும் எங்கே போயிருந்தாய் என்றும் கேள்விகளால் துளைத்து விட, அப்பா மட்டும் கோபத்தால் பெல்ட்டைக் கழற்றி அவளை அடித்துத் தள்ளிவிட்டு ஆசைப்படுகிறேன் என்று சொல்லியிருந்தால் கூட உனக்கு அவனை திருமணம் செய்து வைத்திருப்பேனே பத்மினி. இப்படி ஒன்றுமில்லாமல் ஆகி வந்து நிற்கிறாயே என்று அழுதவாறு பெல்ட்டை தூர எறிந்து விட்டுப் போக பத்மினி ஒரு வாரம் கழித்து தன்னுடைய பழைய புத்தகங்களை ஒதுக்கிய போது கீழே விழுந்த அந்தக் கடிதத்தைப் பார்த்தாள்.
குமரேசன் அடுத்த தெருவில் வசிக்கும் தன் கல்லூரியில் படிக்கும். மாணவன் எழுதிய காதல் கடிதம். விரித்து வாசித்துப் பார்த்தாள்.
‘நான் உறவினன் என்றாலும் தூரத்திலிருந்து உன்னைத் தரிசிக்கும் ஒரு ஏழை’ என்று எத்தனையோ விதமாக எந்த விதத்திலும் அகம்பாவம் தொனிக்காமல் அழகாக தன் மனதை தெரிவித்திருந்தான்.
அவளுக்குச் சிரிப்பு வந்தது. ‘நான் கொண்ட காதல் என் நகையோடு கற்பையும் சூறையாடிக் கொண்டு போனது. நீ என்னை ஒரு தலையாய் காதலித்து தேவதையாய் தரிசித்திருக்கிறாய்’ என்று எண்ணியவாறு கடிதத்தை கிழிக்க முற்பட்ட போது வாசலில் நிழலாட, எட்டிப் பார்த்தான் குமரேசன்.
‘வா…குமரேசா அப்பா, அம்மா எல்லோரும் தோட்டத்திற்கு போயிருக்காங்க’ என்றாள்.
‘நான் உன்னைத் தான் பார்க்க வந்தேன்’
‘என்ன விஷயம்?’
‘உன் கையிலிருக்கும் கடித விஷயமாகத்தான்’ என்று குமரேசன் சொன்னதும் கையிலிருந்த கடிதத்தை மறைத்தாள்.
‘என்ன எதிர்பார்க்கிறாய்?’
‘உன் பதிலைத்தான் பத்மினி’
‘என்னை பற்றி உனக்கு என்ன தெரியும் குமரேசா?’
‘அரசல் புரசலாக உன் அம்மா மூலம் எனக்கும் காதில் விழுந்தது.’
‘நான் ஏற்கனவே ஒருவனைக் காதலித்தவள் என்பது..’
‘தெரியும். அவனோடு ஓடிப் போய் நகைகளை இழந்துவிட்டு திரும்பவும் வீடு வந்ததும் தெரியும்’.
‘என்னையே இழந்து விட்டு நான் வந்து நிற்பதை கண்டிப்பாக நீ தெரிந்திருக்க முடியாது குமரேசா’
‘ஒரு பெண்ணைப் பற்றி அரசல் புரசலாக ஏதாவது கேள்விப்படும் போது ஒரு ஆண்மனம் முதலில் அவள் கற்பைப் பற்றிதான் கேள்வி எழுப்பும் பத்மினி. உன் தந்தையிடம் நீ சொல்லி அழும்போது நான் வாசல் வரை வந்து நின்று கேட்டு விட்டு உன்னைச் சந்திக்கும் மனநிலையில் அப்போது இல்லாமல் திரும்பி போனவன் நான்’.
‘இனி இவ்வுலக வாழ்க்கைக்கு உபயோகமில்லாதவள் இந்தப் பத்மினி. என் வாழ்க்கையின் முடிவுரை ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது’.
‘அங்கே தான் நீ தப்புப் பண்ணுகிறாய் பத்மினி. வாழ்க்கையில் தவறு செய்தவர்கள் எல்லாம் தற்கொலை செய்து கொள்ள நினைத்தால் உலகமே சுடுகாடாகிப் போய்விடும்’.
‘நான் உனக்கு லாயக்கில்லாதவள்’
‘அப்படி ஏன் உன்னையே தாழ்த்திக் கொள்கிறாய். செய்த தப்பை மறந்து விட்டு கனவாக உதறி எறிந்து விட்டு வா. இனி நம் வாழ்க்கையின் முகவுரையை எழுத ஆரம்பிக்கலாம் பத்மினி’.
‘குமரேசன் உண்மையாகவா சொல்கிறாய்’ என்றாள் பத்மினி கண்களில் பொங்கிய ஆனந்தக் கண்ணீரோடு…
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings