எழுத்தாளர் பாத்திமா ஜெமீனா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அன்றும் வழமைப்போலவே தபால்காரனின் சைக்கிள் மணியோசை கேட்கிறது. பிரவீனிடமிருந்து லெட்டர் வந்திருக்கும்.
சாப்பிட்டு கொண்டிருந்தவள் அவசரமாக ஓடிப்போய் தபால்காரனிடமிருந்து கடிதத்தை கையில் வாங்கிக் கொண்டேன்.
“பிரியா, யாருக்கு லெட்டர் வந்திருக்கு….” என்றார் அப்பா.
சற்றும் தாமதியாமல் “லலிதாவிடமிருந்து அப்பா…” என்றேன் .
காரணம் லலிதா என் உயிர்தோழி. அவளிடம் இருந்து தான் எனக்கு கடிதம் வரதா அப்பா நம்பிட்டு இருக்கார். அவள் வேற்றூரில் ஒரு ஆசிரியராக பணிபுரிகிறாள். ஆனால் நானோ காலேஜ் எல்லாம் முடித்துவிட்டு காதல் எனும் மாயைக்குள் சிக்கித் தவிக்கிறேன்.
லலிதா கடிதம் அனுப்பி ஐஞ்சு வருஷமாச்சு. தபால்காரர் ஒருவிதமாய் புன்னகைத்தார். எனக்கு வெட்கமாய் போய்ச்சு.
எனக்கு பிரவீனிடமிருந்து கடந்த மூனு வருஷமாய் லெட்டர் வருவதை அவர் அறிந்தமையே அந்த புன்னகைக்கு காரணம். தபால்காரர் போனதும் அவசரமாய் கேட்டை இழுத்து மூடி விட்டு மாடிப்படிகளில் ஏறியோடினேன்.
“மெதுவா போ பிரியா. விழுந்துட போற” என அம்மா கத்தினாள்.
இருப்பினும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பீரவீனின் காதல் கடிதத்தை படிக்கும் ஆர்வத்தில் புள்ளிமானாய் துள்ளியோடினேன். சாப்பிடவும் மறந்து போனேன்.
“அன்பு காதலி பிரியாவுக்கு அன்புக்காதலன் எழுதுவது…”
அவன் பெயர் பிரவீன் என்பதை முதல் கடிதத்தில் எழுதியிருந்தான்.
பிரவீன் என் அப்பாவை சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தான். என் அப்பா ஒய்வுப் பெற்ற ஓர் இராணுவ அதிகாரி. அவனும் ஒரு இராணுவ வீரன் என்பதை அவன் ஆமி சீருடை எடுத்துக் காட்டியது. வேலை விஷமாக பேச வந்திருந்தான்.
பெண்ணழகில் ஆண்கள் விழுவது தான் வழமை, ஆனால் அன்று நிலைமை தலைகீழானது. அவன் இளநீலகண்கள் என்னை கட்டிப்போட்டன.
அதிசயமாய் அவன் கண்களை பார்த்தேன். மாடியில் இருந்தவாறு அவனை நான் ரசிப்பதை கண்டுவிட்டானோ என்னவோ பிரவீன் என்னை பார்த்து அவன் தத்துப்பற்கள் வெளியே தெரிய சிரித்தான் .
பிரவீன் எங்கள் தூரத்து உறவும் கூட. அதை என் அப்பாவின் பேச்சிலிருந்து தெரிந்துக் கொண்டேன். தான் வெளிநாட்டில் நடக்கவிருக்கின்ற போருக்கு செல்ல இருப்பதாகவும் தனக்கு ஏதாச்சும் நடந்துவிட்டால் தன் தாயை கவனித்துக் கொள்ளும்படியும் சொன்னான் .
அவனை கண்டமாத்திரத்திலே காதல் கொண்டுவிட்டதால் அவன் போருக்கு போகிறேன் என்ற செய்தி என்னை வதைத்தது . சில மாதங்களுக்கு பின் பிரவீனிடமிருந்து அப்பாக்கு ஒரு லெட்டர் வர அதை படித்தபோதுதான் புரிந்தது அது அவன் எனக்கு அனுப்பிய கடிதம் என்று….
அதில் அவன் எனக்காக எழுதிய முதல் கவிதை நினைவில் வந்து போனது.
உன் அழகிய புன்னகைக்கு
அடிமையானது (என்) தவறா ?
இல்லை புன்னகைத்த ( உன்)
இதழ்களின் தவறா?
அலுமாரி கண்ணாடி பார்க்கிறேன்.
புன்னகைத்தப்படி என்னை நானே ரசிக்கிறேன்.
இவ்வாறு பல கவிதைகளுடன் எம் காதல் பயணம் கடிதம் வழி தொடர்ந்தது.
ஆனால் கடந்த ஆறுமாதங்களாக அவன் கடிதம் வரவில்லை. அவன் இரண்டாவது முறையாக வெளிநாட்டிற்கு போய் வந்த பிறகுதான் கடிதம் வருவது முற்றாக நின்றவிட்டது.
எத்தணையோ கடிதங்கள் இதுவரை அனுப்பிவிட்டேன்.. இப்போதே ஒரு பதில் கடிதம் அனுப்பி இருக்கிறான். ஆவலாய் பிரித்தப் பார்க்கிறேன். அவன் கடிதம் சொன்னவைகளை என்னால் ஜீரணிக்க இயலவில்லை .
அன்பு காதலி பிரியாவுக்கு,
நான் இதுவரை உன்னை விரும்பியது உண்மை, ஆனால் இதற்கு பிறகு உன் நம்பிக்கையை வளர்க்க எனக்கு சத்தியில்லை. என்னை மன்னித்து மறந்து விடு .
காரணம் கேட்காதே. எல்லா காதலும் ஜெயிப்பது இல்லை..
நானோ ஒரு இராணுவன் . என் உயிருக்கு உத்தரவாதமில்லை . அப்படியே நான் உன்னை திருமணம் சம்மதித்தாலும் நீ சம்மதிக்க மாட்டாய் . வாழ்க்கை சிலசமயம் ஏற்றுக் கொள்ள முடியாத திருப்பங்களை தருகின்றபோது அதை ஏற்று கடந்தேதான் ஆகவேண்டும்.
என் நாடிநரம்புகள் இயங்க மறுத்தன. விதையாய் இருந்த என் காதலை விருட்சமாய் மாறவிட்டு வெட்டி வீழ்த்திட சொல்கிறாய்.
உன்னால் எப்படி இதை எழுத முடிகிறது பிரவீன். மீண்டும் மீண்டும் அதை வாசித்துப் பார்கிறேன்.
“பிரியா … இன்னும் சாப்பிடாம என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என அம்மா அறை கதவை தட்டுகிறாள்.
சிவந்து போயிருந்த என் கண்களை கண்ணாடியில் பார்கிறேன். அவன் அனுப்பிய அத்தணை கவிதைகளும் என்னை பார்த்து நக்கலாய் சிரிப்பதாய் தோன்றுகிறது .
கதவை திறந்தேன். அம்மா அறைவாசலில் நிற்கிறாள் . எனக்கு அழுகை வருகிறது .அடக்கிக் கொள்கிறேன்.
“உனக்கு யாரு கடிதம் போடுறது?”
“என்னம்மா கேக்குற ” என தடுமாறுகிறேன்.
“இன்றைக்கு லலிதா வந்திச்சு”
என் கையில் இருந்த கடிதத்தை மறைத்துக் கொண்டேன்.
“எப்போம்மா ..வந்தாள் ? ”
“நீ இன்ன காலையிலே கடைக்கு போனதுக்கு அப்பறமா” என்றதும் என்னால் பேசமுடியவில்லை. காரணம் லலிதாவுக்கு நான் வெகுநாட்களாக லெட்டர் போடுவதில்லை என்பதை அவள் சொல்லியிருப்பாள் .
அதற்கு பின் அம்மாவிடம் என்னால் ஒன்றும் மறைக்க முடியவில்லை. நடந்ததை அப்படியே சொன்னேன்.
அம்மாவுக்கும் ஏற்கனவே பிரவீனை தெரியும் என்பதால் என்னவோ அப்பாவிடம் சொல்லி என்னை பெண் பார்க்க வரும்படி சொல்லி விட்டாள் . எனக்கு கொள்ளை சந்தோஷம். ஆனால் பிரவீன் என்னை ஏன் புறந்தள்ளுகிறான் என்பதை அறியமுடியவில்லை .
தான் ஒரு இராணுவன் என்பதை காரணம் சொன்னாலும் அதை என்னால் ஏற்க முடியாது. “என் அப்பா கூட எங்கம்மா சந்தோஷமா வாழவில்லையா ”
அப்பா அழைத்தின் பெயரில் இன்று வீட்டுக்கு வருவதாக லெட்டர் போட்டிருந்தான் . என்னை நானே அலங்கரித்துக் கொண்டேன்.
“எப்படி இருக்கேன்ம்மா ”
“லட்சணமா இருக்க ” என்றபடி என்னை உச்சி முகர்ந்தாள் அம்மா.
“கிறீச் ….” என்ற சத்தத்துடன் கேட் திறக்கும் சத்தம் கேட்கிறது. உள்ளே ஒரு கறுப்பு கார் நுழைய அப்பா சிரித்தப்படி நின்றிருந்தார்.
“அம்மா பிரவீன் வந்துட்டான்” என்கிறேன் . “கொஞ்சம் பொறு . வீட்டுக்குள்ள வரட்டுமே” என்று அம்மா சிரித்தாள்.
பிரவீனின் தரிசனத்தை ஆவலோடு எதிர்ப்பார்த்து வண்ணம் அந்த கறுப்புகாரை பார்த்தேன் . காரிலிருந்து ஒரு வயோதிப பெண்மணி இறங்கினாள்.
அது பிரவீனின் அம்மாவாக இருக்க வேண்டும் . “இறங்கு பிரவீன் …” என்றப்படி கார் முன்புறமாக சென்று கார் கதவை திறந்து விட்டாள் .
அக்காட்சியை கண்டகணமே தலை சுற்றியது . காரணம் ஒருகாலை இழந்த நிலையில் ஊன்றுகோல் உதவியுடனும் அவன் தன் தாயின் கைதாங்கலாவும் எழுந்து நின்றான் .
அதற்குள்ளே அப்பா “பிரவீன்…” என சத்தமாய் கத்தியப்படியேஅவனருகே போய்விட்டார் .
வாழ்க்கை தரும் சில எதிர்பாராத திருப்பங்களை ஏற்று கடந்தேயாக வேண்டும் . லெட்டரில் மறைமுகமாக இதனை தானா குறிப்பிட்டான் .
என் பிரவீனால் இந்த ஜென்மத்தில் இழந்த காலை திரும்ப பெறமுடியாது . . எம் காதல் ஜெலிக்குமா இல்லை ஒரு இழப்புக்காக தோற்றுபோகுமா?… என்னை நானே கேட்கிறேன் . உண்மைக்காதல் தோற்பதில்லை.
என்ன கஷ்டமாக இருந்தாலும் என் அழைப்பிற்கு மதிப்பளித்து வீட்டுக்கு வந்திருக்கிறான். அவன் இளநீலவிழிகள் அங்குமிங்குமாக எதை தேடுகின்றன. அவன் முன் தரிசனமானேன் . தத்துப் பற்கள் வெளியே தெரிய அவன் இதழ்கள் சிரிக்கின்றன. நானும் பதில் புன்னகை பூக்கிறேன்.
தன் நாட்டுக்காக தன் உறுப்பொன்றையே இழந்தது தியாகம் செய்த தியாகி அவனை பார்த்து செல்லூட் அடிக்கத் தோன்றியது. இவனை வாழ்க்கை துணையாக ஏற்பது ஒன்றும் என் பெரிய தியாகமல்ல …
“பிரியா ..வாழ்க்கை பூரா நீ கஷ்டப்படனும் வேணாம் இந்த சம்மதம்” என்ற விட்டாள் என் அம்மா .
“நான் பிரவீனை தவிர வேறு ஒருத்தனை மனசிலையும் நினைக்க மாட்டன் . இதே நாங்க கல்யாணமான பிறகு இப்படி நடந்திருந்தால்…ஏற்றுக்கொள்ளதானே வேணும்….” என்றேன்.
அம்மா மெளனமாக இருந்தாள். அப்பா உன் இஷ்டம் என்றுவிட்டார்.
சில வருடங்களுக்கு பிறகு….
“அப்பா.. அப்பா..” என்றப்படி பிரவீனின் கைகளில் பந்தை திணிக்கிறான் என் இரண்டு வயது மகன் கவின். பிரவீன் செட்டியில் உட்கார்ந்தவாறே பந்தை கவினுக்கு போடுகிறான்.
தந்தையும் மகனும் விளையாடுவதை தூரத்திலிருந்து ரசிக்கிறேன். இன்னும் என் மனம் அவனை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறது. கவினின் நீலவிழிகள் ஜெலிக்கின்றன பிரவீனின் கண்களை போலவே..
எழுத்தாளர் பாத்திமா ஜெமீனா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings