இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இதற்குள் சமையல் அறையில் இருந்து வந்த சௌம்யா, “எல்லோருக்கும் சாப்பாடு ரெடி, சாப்பிட்டு விட்டுப் பிறகு பிரச்சினைகளைப் பற்றிப் பேசலாம். அப்படியே நம் வயல்களையும் வயலில் உள்ள பண்ணை வீட்டையும் பார்க்கலாம், அங்கு இருக்கும் அம்மாவும் அப்பாவும் உங்களைப் பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார்கள். பிறகு நம் சர்க்கரை ஆலையையும் சுற்றிப் பார்க்கலாம். பிரச்சினைகளை மறந்து இரண்டு நாட்கள் இங்கே தங்கி நல்ல ஓய்வெடுங்கள்” என்றாள்.
“சௌம்யா… வந்தவர்களை திசை திருப்பாதே, அவர்கள் சாப்பாட்டிற்காகவும், ஓய்விற்காகவும் இவ்வளவு தூரம் வரவில்லை. முதலில் அவர்களுடைய கஷ்டம் என்னவென்று ரிஷி விசாரிக்கட்டும், அதற்கு நம்மால் எவ்வளவு தூரம் உதவி செய்ய முடியும் என்று பார்க்கலாம். இன் தி மீன் டைம், நமக்கு லண்டன் போவதற்கு இன்னும் ஒரு வாரம் தான் டைம் இருக்கிறது. இதற்குள் பரச்சேஸிங், பேக்கிங் எல்லாம் முடிக்க வேண்டும். நீ விருந்தினரை கவனி, நான் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு வருகிறேன்” என்ற ரகு, கையில் செல்போன் வாலட் சகிதம் கிளம்ப
“அக்கா, என்ன பர்சேஸ் செய்ய வேண்டும் என்று மாமா லிஸ்ட் எடுத்துக் கொண்டாரா?” என ரிஷி கேட்க
“அதெல்லாம் உன் மாமா கூகுள் பிளேயில் குறித்துக் கொண்டிருப்பார், நீ ஒன்றும் கவலைப்படாதே” என்றாள் சௌம்யா சிரித்துக் கொண்டே.
“நீங்களும் இருங்கள் அங்கிள், நீங்கள் இருந்தால் எங்களுக்கு ஏதாவது ஐடியா தருவீர்கள் இல்லையா அங்கிள்” என்றாள் ரேஷ்மா.
அதைக் கேட்ட ரகு, “சொல்லம்மா” என மீண்டும் உட்கார்ந்தான்.
ரேஷ்மா மெதுவாக எழுந்து சென்று ஜன்னல் அருகில் போய் நின்றாள். அவளுக்கு எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை போலும். சதீஷும் எழுந்து வந்து அவள் அருகில் நின்றான்.
“என்ன ரேஷ்மா ஸ்டார்டிங் ட்ரபிளா? சரி, எனக்குத் தெரிந்தவரையில் நான் சொல்லுகின்றேன். ஒரே வரியில் சொல்லப் போனால், அஷோக் தெரியுமில்லையா? சூப்பர் ஹீரோ. அவனால் இவர்களுக்குப் பிரச்சினை. இப்போது நீங்கள் கன்டினியூ பண்ணலாமில்லையா?” என்றான் ரேஷ்மாவைப் பார்த்து.
ரேஷ்மா பேசத் தொடங்கினாள்.
“ரிஷி, உங்கள் கமென்ட்ஸ் பார்த்து சில லோ பட்ஜெட்டில் படம் எடுக்கும் பட முதலாளிகள், என் கல்லூரிப் பிரின்ஸிபாலையும், என்னை வளர்த்து ஆளாக்கிய ஹோமில் உள்ள மதரையும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் ‘நன்றாகப் படிக்கும் பெண்ணை நாங்கள் இப்போது அனுப்ப மாட்டோம். உங்கள் விசிட்டிங் கார்ட் இருந்தால் கொடுத்து விட்டுப் போங்கள். இன்னும் ஒரு வருடத்தில் அவள் டிகிரி கோர்ஸ் முடிந்து விடும். பிறகு அவள் விருப்பப்பட்டு, தேவையாக இருந்தால் உங்களை வந்து பார்ப்பாள்’ என்று சொல்லி அனுப்பி விட்டு என்னிடமும் விஷயத்தைச் சொன்னார்கள்.
ஆரம்பத்தில் எனக்கொன்றும் சினிமா பற்றித் தெரியாது. ஆனால் டிகிரி முடிந்தும், முதல் வகுப்பில் தேறியும் எனக்குப் பெரியதாக ஒன்றும் வேலை கிடைக்கவில்லை. அதனால் பட முதலாளிகளைப் போய்ப் பார்க்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டேன்.
சிலரைச் சந்தித்த பிறகு குரூப் டேன்ஸ் ஆட சேர்த்துக் கொண்டார்கள். தினம் கிடைக்கும் வருமானம் என் ஒருத்திக்குப் போதுமானதாக இருந்தது. அப்போது ஒரு படத்தில் நடனமாடும் போது அந்தப் படத்தின் கதாநாயகி பணத்தகராறால் நடிக்க மறுத்துவிட்டார். முதலாளிக்கு பணக்கஷ்டமாதலால் என்னைக் கதாநாயகியாக ஏற்பாடு செய்து விட்டார்.
அந்தப் படத்தின் கதாநாயகன் அஷோக், என்னைக் கதாநாயகியாகப் போட்டதால் அப்படத்தில் நடிக்க மறுத்து விட்டான். அதை நான் புரிந்து கொண்டேன். ஆப்டர் ஆல் குரூப் டேன்ஸ் ஆடும் ஒரு பெண்ணுடன் அப்போது சுமாரான மார்க்கெட் உள்ள கதாநாயகன் எப்படி நடிப்பான்?” என்றவள் கொஞ்சம் நிறுத்த்தினாள்.
பிறகு வேறு ஒரு ஹீரோவை வைத்து அந்தப் படத்தை எடுத்தார்கள். அது எதிர்ப்பார்த்ததை விட பட்டிதொட்டியெல்லாம் நன்றாக ஓடியது. முதலாளிக்கும் நல்ல லாபம் கிடைத்தது. என்னுடைய பெயரும் புகழும் நன்றாகப் பரவியது”
அப்போது சதீஷ் இடையில் புகுந்தான். “இதற்கு மேல் நான் சொல்கிறேன் ஸிஸ்டர். அஷோக் அவனாக உங்களைத் தேடி வந்ததும், உங்களுடன் நடிப்பதற்காக உங்களுக்கும் பெரிய படமுதலாளிகளுக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பெரிய விருந்து நடத்தியதும் தான் எல்லா தினசரிகளிலும் படித்தோம்” என்றான்.
“கரெக்ட், அப்போதிலிருந்து தான் அஷோக் மெதுவாக என் வாழ்க்கையில் மெதுவாக ஆமை போல் உள்ளே நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக டாமினேட் செய்யத் தொடங்கினான். அதற்குள் எனக்கு சில நல்ல படங்கள் கிடைத்தன. அந்தப் படங்களில் சில நடனங்களும் சேர்த்தார்கள். நான் நடனம் முறையாக ஒன்றும் கற்கவில்லை. எல்லாம் டேன்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்தது தான். அந்த நடனங்களுக்கு எனக்கு அவார்ட் கூட கிடைத்தது, அதனால் பணமும் புகழும் பெருகின.
அந்த நேரத்தில் எனக்கு வருமானவரி இலாக்காவிலிருந்து வருமானவரி கட்ட வேண்டும் என்று பயங்கரமாக பயமுறுத்தி நோட்டீஸ் வந்தது. அதை சரி செய்வதற்காக நான் அஷோக்கின் உதவியை நாடினேன். அந்த நேரத்தில் உடனே ஆடிட்டரை ஏற்பாடு செய்தான். அதன் பிறகு நம்பிக்கையான ஆட்கள் வேண்டும் என்று, சமையல்காரர், தோட்டக்காரன், கார் டிரைவர் எல்லோரையும் நீக்கி விட்டு அவன் ஆட்களாகவே நியமித்தான்.
இதனால் என் ப்ரைவசி போயிற்று. இப்போது அவன் பேச்சும் செயல்களும் சரியாக இல்லை, எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால்தான் பயந்து கொண்டு சதீஷின் உதவியை நாடினேன். அவர் ரிஷியின் யோசனையைக் கேட்கலாம் என்று இங்கே அழைத்து வந்தார்” என்று முடித்தாள் ரேஷ்மா.
அவளின் கலங்கிய கண்களையும், உதவி கேட்டு தவிப்பதையும் பார்த்து ரிஷிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
‘நேரில் சென்று பார்த்து அங்கேயே சில நாட்கள் தங்கினால் தான் நிலமையை சரி செய்ய முடியும் என்று நினைத்தான். அஷோக் பணத்தாலும், புகழாலும், அரசியலிலும் செல்வாக்குப் பெற்றவன். அவனுக்கு போலீசெல்லாம் நல்ல செல்வாக்கு இருக்கும். அவனை எதிர்த்து இந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய வேண்டுமா? இந்தப் பெண்ணின் குணத்தைப் பற்றியும் நமக்கு ஒன்றும் தெரியாது’ என்று யோசித்தான்.
“இப்போது என்ன செய்வதென்று எனக்கே புரியவில்லை, ஒரு பத்து நாள் டைம் வேண்டும்” என்றான் ரிஷி.
“பத்து நாட்கள் டைம் எதற்கு?” என அவன் அக்கா சௌமியா கேட்க
“நிலத்தின் அறுவடை, தென்னைமரங்களின் குத்தகை பணம் வசூலித்தல், மேலும் சர்க்கரை ஆலை நிர்வாகம் எல்லாம் பார்க்க வேண்டும். நீங்களும் மாமாவும் லண்டன் போகும் போது நான் சில பொருட்களை வாங்கித் தர வேண்டும். மேலும் அம்மா அப்பாவின் உடல் நிலையை கவனிக்க ஒரு புல்டைம் நர்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும். இன்னும் சொல்ல முடியாத வேலைகளும் இருக்கின்றன” என்றான் ரிஷி.
“டேய்… கடல் அலை எப்போது ஓய்வது, எப்போது நீ ஸ்நானம் செய்வது?” எனக் கேட்டான் சதீஷ்.
“ஆமாம் ரிஷி, நாங்கள் வேண்டுமானால் எங்கள் பயணத்தைக் கொஞ்ச நாட்கள் தள்ளி வைக்கிறோம். உன் பெற்றோரின் ஆரோக்யம் எங்கள் பொறுப்பு. சர்க்கரை ஆலையைப் பார்த்துக் கொள்ள ஒவ்வொரு செக்ஷனிலும் ஒரு மேனேஜர் இருக்கிறார், தினம் நடக்கும் வேலைகளின் விவரங்களை ஆன் லைனில் அனுப்பச் சொல். நிலங்களை மேற்பார்வையிட, அறுவடைப் பணம், குத்தகைப் பணம் எல்லாம் வசூலிக்க கணக்குப்பிள்ளை இருக்கிறார்.
நீ அவர்களுடனே போய் ஒரு பத்து நாள் தங்கி நிலமையைப் புரிந்து கொள், பிறகு இங்கு வந்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். உன் உதவி தேவையாக இருந்ததால் தானே, சதீஷ் இந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறான்” என்றார் ரகு.
அப்போது ரிஷி ரேஷ்மாவைப் பார்க்க, அவனையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது இந்தப் பெண் எவ்வளவு பெரிய நடிகை, இருந்தும் இங்கு வந்து தயவுகேட்டு நிற்பது அவனுக்கே மிகவும் கஷ்டமாக இருந்தது.
“ரேஷ்மா… இன்று என் முக்கியமான வேலைகளை முடித்து விட்டு மேனேஜருக்குத் தேவையான இன்ஸ்ட்ரக்ஷன்ஸ கொடுத்து விட்டு, அப்படியே தோட்டத்து வீட்டிற்குப் போய் அம்மா அப்பாவிடம் சொல்லி விட்டு, அங்கேயே அவுட் ஹௌஸில் இருக்கும் கணக்குப் பிள்ளையிடமும் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் தான் மேற்கொண்டு வேலை ஒழுங்காக நடக்கும். ரகு மாமாவும் அக்காவும் டாக்டர்கள், அவர்கள் மேற்பார்வை தான் இடமுடியும், நான் சொல்வது புரிகிறதா?” என ரிஷி கேட்க
புரிகிறது என்பது போல் தலை அசைத்தவள், “உங்கள் அம்மா அப்பாவை நான் பார்க்க முடியுமா?” என்றாள்.
உடனே சௌம்யா, “தாராளமாகப் பார்க்கலாம், நாங்களும் வருகிறோம். அம்மா சமையல் சூப்பராக இருக்கும், நான் இப்போதே போன் செய்து விடுகிறேன். அங்கேயே இன்று இரவு தங்கி விட்டு நாளைக் காலை நீங்கள் சென்னை கிளம்பலாம்” என்றாள்.
“அம்மாவிற்கு ஏன் கஷ்டம்? நாங்கள் வெளியில் எங்காவது ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறோம்” என ரேஷ்மா சங்கடமாய் உரைக்க, சௌம்யாவும் ரிஷியும் சிரித்தார்கள்.
“அம்மா வீட்டில் எப்போதும் இரண்டு சமையல்காரர்கள் இருப்பார்கள். அம்மா சமையலுக்கு மெனு கொடுப்பதும், ரெசிப்பி கொடுப்பதும் மட்டுமே செய்வார்கள். அந்த சமையல்கார மாமிகளே எக்ஸ்பெர்ட், அதனால் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். எத்தனை பேர் வருகிறோம் என்று சொல்லி விட்டால் போதும், ஸ்வீட்டோடு சாப்பாடு ரெடியாக இருக்கும்” என்றாள் சௌம்யா.
“பயணம் செய்தது களைப்பாக இருக்கும். நீங்கள் இருவரும் குளித்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். டிரைவரையும் சாப்பிட்டு விட்டு காரிலேயே ஓய்வெடுக்கச் சொல்லுங்கள். இந்த டிரைவர் கூட அந்த அஷோக்கின் ஆளா?” என்று கேட்டான் ரிஷி.
“இல்லை, இவர் கால் டிரைவர்” என்றான் சதீஷ்.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கெல்லாம் தலைகுளித்து பெட்ரூம் பால்கனியில் நின்று கொண்டு தலைக்கு ஹேர் ட்ரையர் போட்டுக் கொண்டிருந்தாள் ரேஷ்மா.
மெல்லிய ஆகாய நீல நிற அமெரிக்கன் ஜார்ஜெட் புடவை, அதே நிறத்தில் எந்த ஆடம்பரமும் இல்லாத ஒரு சோளி, கழுத்தில் காஸ்ட்லியான இரட்டைச்சர முத்துமாலை. ஒரு கையில் இரண்டு முத்து வளையல்கள், ஒரு கை வெறுமையாக இருந்தது.
சற்றே தலை நிமிர்ந்து பார்த்தவள், பக்கத்து அறை பால்கனியிலிருந்து ரிஷி அவளையே பார்த்துக் கொண்டு சிலையாய் நிற்பதைப் பார்த்தாள். அவள் முகம் டக்கென்று அந்தி வானமாகச் சிவந்தது.
“ரிஷி சார், என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றாள் சற்றே நாணத்துடன்.
கனவிலிருந்து விழித்தவன் போல் திகைத்து நின்றான். “ரேஷ்மா மேடமா இது? நான் ஆகாயத்திலிருந்து தவறி விழுந்த தேவதையோ இல்லை அலை கடலிலிருந்து வந்த கடல் கன்னியோ என்று நினைத்தேன்” என்றான் ரிஷி அவளையே விழுங்கி விடுவதைப் போல் பார்த்துக் கொண்டு.
“ரிஷி சார், பத்திரிகைத் தொழிலை விட்டவுடன் கவிஞராகி விட்டீர்களோ என்று நினைத்து பயந்தே விட்டேன்” என கலகலவென்று சிரித்தாள்.
காலையில் வெறும் காபியை மட்டும் குடித்து விட்டு, ரிஷியின் அம்மா அப்பாவைப் பார்க்க எல்லோரும் இரண்டு கார்களில் கிளம்பினார்கள். கார்கள் ரிஷியின் வயல் வழியாகவே நன்கு அமைக்கப்பட்ட பாதையில் சென்றன.
நிலத்தின் மத்தியில் அறுவடைப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், நிலத்தின் உரிமையாளர்கள் மேற்பார்வையிட வந்து போவதற்கும் ஒரே ஒரு வண்டி போகுமளவு ஒரு பாதை அமைக்கப்பட்டிருந்தது.
கார் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. பச்சைப் பசேலென்ற வயல்களின் நடுவில் அங்கங்கே வெண்ணிறக் கொக்குகள் ஒற்றைக் காலில் நின்று தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தன. அது பார்ப்பதற்கு ஒற்றைக் காலில் தவமிருக்கும் முனிவரைப் போல் இருந்தன. அதைப் பார்த்து ரேஷ்மா புன்னகை செய்தாள்.
முன்னால் இருந்த ரியர் வியூ கண்ணாடியில் அவளையே பார்த்துக் கொண்டு வந்த ரிஷி, அவள் சிரிப்பதன் காரணம் தெரியாமல் திகைத்தான். சௌம்யாவும், அவளுடைய லேசான புன்சிரிப்பைப் பார்த்தாள்.
“ஏன் சிரிக்கிறாய் ரேஷ்மா?” என சௌம்யா கேட்க
“கொக்குகள் ஒற்றைக் காலில் நிற்பது, பார்ப்பதற்கு முனிவர்கள் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்வது போல் இருந்தது. அதை நினைத்தேன் சிரிப்பு வந்தது” என்றாள் ரேஷ்மா.
“ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு என்ற ஔவயாரின் மூதுரையை நீங்கள் படித்ததில்லையா ரேஷ்மா. கிணற்றிலிருந்து இறைக்கும் நீரில் வரும் மீன்களுக்காக கொக்குகள் தவம் இருக்கின்றன” என்று விளக்கவுரை கொடுத்தான் ரிஷி.
எல்லாவற்றையும் கண்களை அகட்டி, வியப்புடன் பார்த்து வந்தாள் ரேஷ்மா. கொக்கு வாயில் மீனைக் கவ்விக் கொண்டு பறந்து போவதைக் கண்ட ரேஷ்மா, சந்தோஷத்துடன் துள்ளி குதித்தாள்.
“சௌம்யா அக்கா, இங்கே காரைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லுங்களேன். இந்த வயல் வரப்பின் மேலேயே கொஞ்ச தூரம் நடந்து போய் வரலாம்” என்று குழந்தை போல் கெஞ்சினாள்.
“வயல் வரப்பில் நடக்கும் போது கொஞ்சம் தடம் மாறினாலும் கீழே விழுந்து விடுவாய், ரொம்ப ஜாக்கிரதையாக நடக்க வேண்டும்” என்று தயங்கினாள் சௌம்யா.
“இல்லை அக்கா, நான் மிகவும் ஜாக்கிரதையாக நடப்பேன். கொஞ்ச தூரம் நடந்து விட்டு செல்பி எடுத்துக் கொள்ளலாம் அக்கா” என்றாள் மீண்டும் சௌம்யாவின் கைகளைப் பிடித்தபடி.
ரேஷ்மாவின் வேண்டுகோளை ரிஷியால் மறுக்க முடியவில்லை. “அக்கா, காரை நிறுத்தச் சொல்கிறேன், அவர்கள் ஆசையைத் தடுக்க வேண்டாம். சென்னையிலேயே வளர்ந்தவர்களுக்கு இந்த காட்சியெல்லாம் அதிசயமாகத்தான் இருக்கும். கொஞ்ச தூரம் போய் விட்டு உடனே திரும்பி விடலாம்” என்றவன், பின்னால் அவர்களைத் தொடர்ந்து வரும் கார் டிரைவருக்கும் போனில் விஷயத்தைச் சொல்ல, அந்த காரும் இவர்களின் காருக்கு சற்றுப் பின்னால் நின்றது.
சௌம்யா முதலில் காரிலிருந்து இறங்க, அவளுக்குப் பின் தொடர்ந்து ரேஷ்மாவும், அவளுக்குப் பின்னால் ரிஷியும் ஒருவர் பின்னால் ஒருவராகச் சென்றனர்.
கொஞ்ச தூரம் சென்ற பிறகு கொஞ்சம் அகலமான நிலப்பரப்பு வந்தது. எங்கிருந்தோ தோட்டத்தின் காவல்காரர் ஓடி வந்தார். அவரிடம் ரிஷி ஏதோ சொல்ல, அவர் ஓடிச்சென்று எல்லோருக்கும் இளநீர் வெட்டி அதில் ஸ்ட்ராவும் வைத்துக் கொடுத்தார்.
காலையில் டிபன் ஏதும் சாப்பிடாமல் வெறும் காபியோடு கிளம்பியவர்களுக்கு, அந்த இளநீர் தேவாமிர்தமாக இருந்தது. ரேஷ்மாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ரிஷியின் கைகளைப் பிடித்து குலுக்கினாள்.
“மிக்க நன்றி ரிஷி சார், உங்களால் தான் இந்த இனிமையான அனுபவம் கிடைத்தது” என்று சின்னக் குழந்தை போல் குதித்தாள்.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings