எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மந்திரி கமலா சுப்ரமணியன் மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் போதே, உதவியாளர் அன்றைய புரோக்ராம்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.
கமலா சுப்பிரமணியனை சந்திக்க வந்திருந்தவர்கள் வரவேற்பறையில் காத்திருக்க, “மகாதேவ் எங்கே?” என்று கேட்டார்.
வேலைக்கார பெண்மணி “இன்னும் தூங்கி முழிக்கலீங்கம்மா?” என்றாள்.
“இன்னும் என்ன தூக்கம், சே! ப்ளஸ் டூ படிக்கிறோம், ஒரு பாடத்திலே கூட பாஸ்மார்க் வாங்கவில்லை. படிக்க வேண்டும் என்ற அக்கறையேயில்லையே” என்றவாறு மகாதேவ் படுக்கையறையினுள் நுழைந்து அவனை தட்டி எழுப்பினாள்.
“மம்மி தூங்க விடுங்க” திரும்பவும் இழுத்து மூடிக்கொண்டு தூங்க எத்தனித்தான். “சே! எல்லாம் உங்க அப்பன் கொடுக்கிற செல்லம். எழுந்திருடா தடி மாடு” என்று கத்தினாள்.
“எழும்பி நான் இப்போ என்ன செய்ய வேண்டும்” அமர்ந்தான் மகாதேவ்.
“ஒரு சப்ஜெக்டிலேயாவது இதுவரை பாஸ் மார்க் வாங்கியிருக்கிறாயா? இதுவரை என் அரசியல் ஆதாயத்திலே உன்னை பாஸ் பண்ண வச்சாச்சு. எஸ்எஸ்எல்சியிலேயே உன்னை பாஸ் பண்ண வைக்கப்பட்டபாடு… ஏற்கனவே கட்சியிலே கெட்ட பேரு… இதிலே மந்திரியின் மகன் பிளஸ் டூவில் பெயில்னு கொட்டை எழுத்திலே அச்சிலே வந்து அது வேறே புது அவமானம் வரப்போது. எழுந்திருச்சு படிடா மடையனே”
“என்னாலே முடியலையே மம்மி” கண்களைக் கசக்கினான்.
“என் ராஜா இல்லே, கண்ணில்லே… படிக்க முயற்சி செய்யுப்பா”
“சரி பக்கத்திலே உட்கார்ந்து சொல்லிக்கொடேன்”
“இந்த வேண்டாத ஆசைகள் எல்லாம் புதுதினுசாக இருக்கு. மகாதேவ் எனக்காக வெளியே எத்தனை பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?”
“எனக்கு படிக்க வரலியே மம்மி, உனக்கு சிவபாலன் வாத்தியாரை தெரியுமில்லையா? அவர்கிட்டே என்னை டியூசனுக்காகவாவது சேர்த்து விடு. அவரிடம் டியூசன் படிக்கிற பையன்கள் அத்தனை பேரும் பாஸ் பண்ணிவிடுகிறார்கள். அவர் போர்டு எக்ஸாம் மெம்பரும் கூட. அவர் ஒரு முறை டியூசனில் சேர்த்துக் கொண்டால் அப்புறமாக அவர் கையைக் காலைப் பிடித்தாவது…”
“சீ! இன்னும் படிக்க விரும்பவில்லை. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்தே பாஸ் பண்ணி விடணும்கிற குரூப்பிலேயே இருக்கிறாய். சரி, சிவபாலன் சார் கொஞ்சம் குட்டையா சிவப்பா இருப்பாரு. கண்ணாடி போட்டுக்கொண்டு எப்போதும் கக்கத்திலே ஒரு வெள்ளைத் துணிப்பை வைத்துக் கொண்டு வருவார். அவர் தானே!”
“ஆமாம் மம்மி. உங்களுக்கு எப்படி தெரியும்?”
“எனக்கும் ஒரு காலத்திலே அவர் கிளாஸ் டீச்சரா இருந்தார். அவரிடம் ரொம்ப வம்பு பண்ணியிருக்கிறேன். சரி நாளைக்கு”. ம் “ராமராஜன்” என்று உதவியாளரை அழைத்தாள்.
“என்ன மேடம்”
“நாளைக்கு காலையிலே என்ன புரோக்ராம்?”
“மேடம். மாதர் சங்க இருபத்தைந்தாம் ஆண்டு விழாவிலே குத்து விளக்கேற்றப் போறீங்க. அப்புறம் அரசாங்க ஆஸ்பத்திரியிலே கலவரத்திலே அடிப்பட்ட ஆட்களைச் சந்திக்கப் போறீங்க”
“ஓகே. மாதர் சங்கம் போவதற்கு முன்னால் நாம் முதலிலே மகாதேவனின் பள்ளிக்கு போய் விட்டுப் போகிறோம் சரியா?”
“ஒ.கே மேடம்”
“தேங்க் யூ மம்மீ” என்றான் மகாதேவ்.
“எனக்கென்னடா தேங்க்ஸ், எல்லாம் உனக்காகத்தான் இந்த ஓட்டமும், சாட்டமும்” என்று எழுந்து வெளியே காத்திருந்தவர்களைச் சந்திக்கச் சென்றாள்.
மறுநாள் காலையில் வீட்டிலிருந்து கிளம்பி நேராக டான்பாஸ்கோ மேல்நிலைப் பள்ளிக்குக் கிளம்பினாள் கமலா தேவி தன் மகனுடன்.
பிரின்ஸிபாலிடம் தன்னை அறிமுகப்படுத்தாமலே வரவேற்கப்பட்டு தடபுடலான உபசாரங்கள் நடந்தன.
ஆசிரியர் சிவபாலன் வந்ததும், “மகாதேவ் நீ வகுப்பிற்கு போ” என்றாள்,
“சார். என் மேலே நீங்கள் கோபத்திலே இருப்பீர்கள் என்று தெரியும். மந்திரியோட மகளாக அன்று இருந்ததால் அப்படியெல்லாம் விளையாடப் போய்… உங்களுக்கு வேண்டுமென்றே நான் காதல் கடிதம் கொடுத்து, அதற்கு பதில் உங்க கையெழுத்திலே தயாரித்து தோழிகளெல்லாம் சேர்ந்து கொட்டமடிக்க, ஹெட் மாஸ்டருக்குத் தெரிந்து போய் உங்களை சஸ்பெண்ட் பண்ணியதெல்லாம் நினைவிருக்கிறது. மறக்கவில்லை. ஆனால் அதை ஒதுக்கிவைத்து விட்டு என் பிரச்சனையை கொஞ்சம் தீர்த்து வைப்பீர்கள் என்று நம்புகிறேன்”.
“சொல்லுங்க கமலா சுப்பிரமணியம்”
“என்ன இருந்தாலும் நான் உங்கள் மாணவிதானே. வா!போ! என்றே கூப்பிடலாமே”
“பரவாயில்லை. சொல்லுங்கள்”
“சார். என் மகன் படிப்பிலே கொஞ்சம் மக்கு”
“கொஞ்சமில்லை நிறைய”
“நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்”
“உங்களிடம் என் மகனை டியூசனுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்”
“நான் நன்றாகப் படிக்கிற பையன்களுக்கு இன்னும் அவர்களுடைய திறமையைப் பட்டை தீட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான். நன்றாகப் படிக்கிற மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறேன். ஸாரி கமலா, உங்க மகனுக்கு டியூசன் எடுக்க முடியாது”
“சார். நீங்கள் ஏற்கனெவே இருமுறை அரசுக் கல்லூரி புரொபசர் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள்”
“ஆமாம்”
“நீங்கள் என் மகனை டியூசனில் சேர்த்துக் கொண்டால் என்னாலே நீங்கள் அரசு கலைக் கல்லூரியில் புரொபசராக முடியும்”
“அதாவது படிக்காத முட்டாளை டியூசனில் சேர்த்து பாஸாக்கிவிட்டால் என்னை பதவி உயர்வு செய்ய ஆவன செய்வீர்கள் அப்படித்தானே?
“ஆமாம்” என்று தலையாட்டினாள் கமலா.
“பாருங்கள். உங்கள் அரசு பலம் உங்களோடு இருக்கட்டும், ஒரு மக்குப் பையனை பாஸ் பண்ணி எனக்கு வேறு நல்ல வேலை கிடைக்க வேண்டாம். உங்கள் அரசியல் குறுக்கு வழியை கல்வியிலும் இனிமேல் காட்டாதீர்கள். இது என்றாவது ஒருநாள் சீரழிவிற்கு முன் உதாரணமாகிவிடும். என்னிடம் பதவி ஆசை காட்டாமல், நீங்கள் முறையுடன் கேட்டிருந்தால் நான் மனிதாபிமான அடிப்படையில் உங்கள் பையனுக்கு கல்வி கற்றுக் கொடுத்திருப்பேன்.
அதை விடுத்து உங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி எனக்கு லஞ்சமாக பதவியுயர்வு வாங்கித் தர நீங்கள் தயாராக இருந்தாலும், அதைப்பெற நான் தயாராக இல்லை. என்னை மன்னித்து விடுங்கள்! மேலும் உங்கள் பையன் உங்களிடத்தில் வளர்ந்து உங்களை போலவே ஒரு அரசியல்வாதியாக வளரும் பட்சத்தில் அவனும் உங்களைப் போலவே ஒரு நேர்மையற்ற அரசியல்வாதியாக வளர நான் விரும்பவில்லை. ஏனென்றால், நல்லவிதை இருந்தாலும் அது வளர நல்ல நிலமும், தண்ணீரும், இயற்கை சூழ்நிலையிலும் வேண்டும்.
அதுமாதிரியான சூழ்நிலை உங்களிடத்தில் இல்லை. இதை நான் உங்களின் முன்னாள் ஆசிரியர் என்ற முறையில் கூறுகிறேன். இவ்வாறு புத்திமதி கூறுவது ஒரு ஆசிரியரின் கடமையும் கூட, இப்படி நான் தத்துவம் பேசுவது உங்களுக்கு அதிகப்படியாகத் தெரிந்தாலும்கூட அதைப்பற்றி நான் துளியும் கவலைப்படவில்லை. என்னிடத்தில் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் கேட்ட உதவிக்கு உதவ முடியாத சூழ்நிலையில், அதற்கான காரணத்தை உங்களிடம் கூற வேண்டிய கடமையிலுள்ளேன்” என்று கூற…
எதிர்பாராத ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டாலும் அதை மறைக்க முயற்சி செய்த மாண்புமிகு அமைச்சருக்கு முடியவில்லை. வெளிறிய முகத்தோடும், குற்றஉணர்வும் கை கோர்க்க “அப்போ வர்ரேன் சார்” என்றவாறு புறப்பட்டார் மாண்புமிகு அமைச்சர் கமலா சுப்பிரமணியம்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)ra
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings