இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இரவு வளர்ந்து அந்தக் கல்லூரி முழுவதும் படர்ந்திருந்தது. இருளும், ஆழ்ந்த அமைதியும் இனம்புரியாத பயத்தைத் தந்தன.
நண்பர்கள் நால்வரும் எப்படித் தப்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தனர். அப்போது யாரோ விசும்பும் சத்தம் மெலிதாகக் கேட்டது.
ஏற்கனவே பயத்துடன் பயணித்த அவர்களுக்கு, இப்போது பயம் டாப் கியரில் தடதடத்தது. அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடுத்திருந்த இருக்கையில் யாரோ உட்கார்ந்திருப்பது போல மங்கலாகத் தெரிந்தது. விசும்பல் சத்தம் அங்கிருந்துதான் வந்தது.
“யா….ரது….?”
திக்கித் திணறிக் கேட்டான் ப்ரேம்.
“உங்களால பாதிக்கப்பட்டவன் தான். அது சரி, உங்களால பாதிக்கப்பட்டவங்க ஒருத்தரா ரெண்டு பேரா? கொஞ்சநஞ்சமா அந்நியாயம் பண்ணியிருக்கீங்க. இந்தக் காலேஜ்ல எவ்வளவு பேரைக் கஷ்டப்படுத்தியிருக்கீங்க. அவ்வளவு பேரையும் உங்களால ஞாபகம் வச்சுக்க முடியாதில்ல. ஆனா உங்களால பாதிக்கப்பட்டவங்க உங்களை மறக்க மாட்டங்க. அந்த மாதிரி உங்களால பாதிக்கப்பட்ட ஒருத்தன்தான் நான்.
போன வருஷம் இதே நாள் இதே இடம், ஞாபகமிருக்கா? எனக்கு அப்படியே பசுமையா ஞாபகமிருக்கு. எனக்கு என்னைப்பத்தி கடைசியா ஞாபகம் இருக்கறதும் அதுமட்டும் தான்.”
மீண்டும் விசும்பல் சத்தம் கேட்டது. ஆழ்ந்த அமைதியைக் கடைவிரித்து உட்கார்ந்திருக்கும் இருள் நிறைந்த மைதானத்தில், அந்த விசும்பல் சத்தம் உயிர்வரைப் பரவி என்னவோ செய்தது. நான்கு பேரும் ஒருவரை ஒருவர் திகிலோடு பார்த்துக் கொண்டார்கள். ப்ரேம்தான் திணறலோடு கேட்டான்.
“கார்….த்திக், கார்த்திக்கா நீ?”
கேட்டு முடிப்பதற்குள் ப்ரேமுக்கு பயத்தில் தொண்டை காய்ந்துபோனது. பயத்தில் வார்த்தைகள்கூட தொண்டைக் குழியைத் தாண்டி வர மறுத்தன.
“ப்ரேம், இந்த நாலு பேர்ல நீ மட்டும்தான் கொஞ்சம் நல்லவன். அதான் சரியா கண்டுபிடிச்சுட்டே.”
“நீ… நீ ஹாஸ்பிடல்ல கோமா ஸ்டேஜ்ல இருந்தியே.”
“அது ரெண்டு மாசம் முன்னாடி வரைக்கும். அதுக்கப்புறம் இந்த ஸ்டேஜ்லதான் அலைஞ்சுட்டிருக்கேன்.”
அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போனார்கள் நான்கு பேரும். ஒருவருக்கொருவர் நெருங்கி நின்று கைகளைக் கோர்த்துக் கொண்டனர். ஆதி திக்கித் திக்கிக் கேட்டான்.
“நீ… நீ… செத்துட்டியா? எப்…படி?”
“நீங்கதான் சொல்லணும். நடந்தது உங்களுக்குத்தானே தெரியும்.”
“என்ன பேசறே கார்த்திக்? நாங்க விளையாட்டாத்தான் செஞ்சோம். ஏதோ உன் சாவுக்கு நாங்கதான் காரணம்ங்கற மாதிரி பேசறே?”
“ஆமா, நீங்கதான் காரணம். இன்னிக்கு என் பிறந்தநாள். போன வருஷம் இதே நாள் எவ்வளவு ஆசையா காலேஜுக்கு வந்தேன். ஆனா எல்லாத்தையும் சிதைச்சுட்டீங்களே.
உங்க வம்புக்கு என்னிக்காவது நான் வந்திருக்கேனா? நீங்கதான் எல்லாரையும் வம்பிழுக்கறீங்க. யாரையாவது பொறந்தநாளை நிம்மதியாக் கொண்டாட விட்டிருக்கீங்களா?
எங்கிருந்து கத்துக்கிட்டீங்க இந்தப் பழக்கத்தையெல்லாம்? உங்களால காலேஜ்ல யாருமே இப்போ பொறந்தநாளைப் பத்தி மூச்சே விடறதில்ல. மத்தவங்களைக் கஷ்டப்படுத்திப் பார்க்கறதுதான் உங்க சந்தோஷமா?
அழுக்குத் தண்ணியை தலைல ஊத்தறது, சாக்கடைல தள்ளிவிடறது, குப்பையை மேல போடறது, எதிர்பாராத நேரத்துல காலை இடறி கீழே விழவச்சு மேலே ஏறி உட்கார்ந்து சிரிக்கறது, கேக் உள்ளுக்குள்ள கெட்டுப் போன பழங்களை மறைச்சு வச்சு, அவங்க கேண்டிலை ஊதும்போது அவங்க முகத்தை கேக்ல வச்சு அழுத்திட்டு கைகொட்டி சிரிக்கறது இதெல்லாம் கொண்டாட்டம்னு உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தா?
ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் எவ்வளவு பேரை இந்தமாதிரி கஷ்டப்படுத்தியிருப்பீங்க. எல்லாரும் மனசளவுல பாதிக்கப்பட்டிருக்காங்க. ஆனா அதைப்பத்தி உங்களுக்குக் கொஞ்சம்கூட கவலையே இல்ல.
எவ்வளவோ கனவுகளோட படிக்க வந்தேன் தெரியுமா. உங்களுக்கு வேணா படிக்கறது பொழுதுபோக்கா இருக்கலாம். ஆனா எங்க குடும்பத்துல நான்தான் முதல் தலைமுறைப் பட்டதாரி ஆயிருக்கணும். ஆனா இப்படி அல்பாயுசுல என் கனவைக் கலைச்சுட்டீங்க.
பத்து மாசம் எதுவுமே தெரியாம ஆஸ்பத்திரில இருந்திருக்கேன். எங்க அப்பா அம்மா கதறினதெல்லாம் உயிர் போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சது. அதுகூட தெரியாம எல்லாத்தையும் தொலைச்சிட்டு வாழ்ந்தேன்னு சொல்றதா, இல்ல அப்பவே செத்துட்டேன்னு சொல்றதா?
எனக்கு ஏதோ சர்ப்ரைஸா கிஃப்ட் தரப் போறதா சொல்லி இந்த இடத்துக்குக் கூட்டிட்டு வந்தீங்க. எனக்கு எதுவும் வேண்டாம்னு எவ்ளோ கெஞ்சினேன். கேட்டீங்களா?
நாலு பேரும் ஏதேதோ சொல்லி என்னை இங்கே கூட்டிட்டு வந்து, யாருமே இல்லாத இந்த இடத்துல என்னைச் சுத்தி நின்னு, குப்பையைத் தலைல கொட்டி ஹேப்பி பர்த்டே கார்த்திக்னு சொன்னீங்க. இதுதான் பிறந்தநாள் கொண்டாடற முறையா, விட்ருங்கன்னு கெஞ்சினேன்.
இந்த சந்தோஷ் கேட்டானா? திடீர்னு என் காலைத் தட்டிவிட்டான். அப்படியே முன்பக்கமா சரிஞ்சு இந்த பெஞ்சுலதான் என் தலை பட்டுச்சு. அதுக்கப்புறம் நான் கோமா ஸ்டேஜ்க்குப் போயிட்டேன். நீங்க நாலு பேரும் குற்ற உணர்ச்சியே இல்லாம சுத்திட்டிருக்கீங்க.
நான் நானா இருந்தப்போ ரொம்ப அமைதியான பையன். ஆனா இப்போ அப்படியிருக்க முடியல.”
விசும்பலோடு மெதுவாக வந்து கொண்டிருந்த அந்தக் குரல் இப்போது கர்ஜனையாகக் கேட்டது. நான்கு பேரும் பயத்தின் உச்சியில் உறைந்து நின்றார்கள். அவர்கள் முன் புகைமண்டலமாக நெடுநெடுவென ஒரு பெரிய உருவம் உறுமியது.
நான்கு பேருக்கும் இதயம் தாறுமாறாகத் துடித்தது. உதடுகள் உலர்ந்து போயின. கண்கள் இமைக்க மறந்தன.
சுற்றி நின்ற இருட்டு கைகொட்டிச் சிரித்தது. எதிரில் வளர்ந்து நின்ற புகை உருவம் ஆக்ரோஷமாக உறுமியது. ஏற்கனவே பலவீனமாக இருந்த சந்தோஷ் பொத்தென்று இருக்கையில் உட்கார்ந்தான். அவனுக்கு அப்போதே ரத்தம் உறையத் துவங்கியிருந்தது.
“உங்க நாலு பேரையும் கொல்லணும்னுதான் வந்தேன். ஆனா எனக்கு என்ன நடந்ததுங்கறது எல்லாருக்கும் தெரியணுமில்ல. அதனால ஒரே ஒரு கொலை செஞ்சுட்டு மூணு பேரை விட்டுட்டுப் போறேன். அந்த மூணு பேரும் நீங்க பண்ண தப்பையும், அதுக்குக் கிடைச்ச தண்டனையையும் எல்லார்கிட்டயும் சொல்லுங்க. சொல்லல மறுபடியும் வருவேன்.”
நெடுநெடுவென்றிருந்த ‘அது’ அப்படியே சுருங்கி, புயல்போல அங்கிருந்து கிளம்பியது. கிளம்பிய வேகத்தில் அப்படியே சந்தோஷின் உயிரையும் அள்ளிக்கொண்டு போனது. அமர்ந்திருந்த இருக்கையில் அப்படியே சரிந்து விழுந்தான் சந்தோஷ். மற்ற மூன்று பேரும் சிலையாகி நின்றனர்.
புயல் அடித்து ஓய்ந்ததுபோல் மயான அமைதி நிலவியது. காற்றில் மெலிதாக ஒரு குரல் மட்டும் மிதந்து வந்தது.
இன்னொரு கொலை செய்யட்டுமா?
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(நிறைவடைந்தது)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings