எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
புதியதாக வங்கிக் கடனில் வாங்கிய தன் மாருதிக் காரை மாற்றி மாற்றி துடைத்துக் கொண்டிருந்தான் சூர்யா.
“டேய், உனக்குத் தானே கல்யாணத்திற்குப் பெண் பார்க்கப் போகிறோம். காருக்குக் கல்யாணம் போல் காலையில் இருந்து அதை துடைத்துக் கொண்டு இருக்கிறாய். நீ இன்னும் தலை கூட ஒழுங்காக வராமல் பரட்டைத் தலையாய் நிற்கிறாய்! அழகு தான் போ“ என்று தலையில் அடித்துக் கொண்டாள் பாட்டி.
“பாட்டி! பெண் கட்டாயம் அண்ணாவைப் பார்த்து மயங்க மாட்டாள். அதனால் அட்லீஸ்ட் காரையாவது பார்த்து மயங்கட்டுமே என்று அண்ணா நினைக்கிறான் பாட்டி. உனக்கு இது புரியவில்லையா“ என்றாள் அங்கு வந்த ஆஷா கிண்டலாக.
சூர்யா அவளை முறைத்தான், அதற்குள் பாட்டியே அவன் சார்பில், “வாயைப் பார்! அண்ணா என்று மரியாதையில்லாமல் அவன் இவன் என்று பேசுவதை. முடி மட்டும் நீளமாய் வளர்த்து இருக்கிறாய்! அதை ஒரு பின்னல் போட முடியவில்லை. சபதம் போட்ட பாஞ்சாலி மாதிரி தலைவிரி கோலமாய் சுற்றுகிறாய். நீ என் பேரனை கேலி செய்கிறாயா? போடி உள்ளே“ என்று அதட்டி விட்டு உள்ளே போனாள் பாட்டி.
அன்று சூர்யாவிற்குப் பெண் பார்க்கப் போகிறார்கள். சூர்யா ஒரு வங்கியில் கிளார்க்காக வேலை செய்கிறான். நல்ல உயரம், மா நிறம், சுருண்ட முடி, லட்சணமான முக அமைப்பு, அமைதியான குணம்.
தரகர் மூலம் வந்த வரன் தான் இந்த மைதிலி. போட்டோவைப் பார்த்தே மயங்கி விட்டான் சூர்யா. ஜாதகமும் நன்கு பொருத்தமாக இருந்தது.
மைதிலியும் இவனைப் போலவே ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தான் பணி செய்து கொண்டு இருந்தாள். நல்ல வசதியான குடும்பம். சூர்யாவைப் போலவே அவர்கள் வீட்டிலும் ஒரே பெண்ணும், ஒரு பையனும் தான்.
மைதிலியின் அண்ணா அமெரிக்காவில் வேலை செய்கிறான், அதனால் கல்யாணம் சிறப்பாக செய்வார்கள் என்று தரகர் வேறு வானத்திற்கும் பூமிக்குமாக அளந்து கொண்டிருந்தார்.
சூர்யா கோட் சூட் டையென படியப்படிய வாரிய தலையுடன் காரில் ஏற வந்தான். அவனைப் பார்த்தவுடன் அடக்க முடியாத சிரிப்புடன் வாயில் கையை வைத்து சிரித்தாள் ஆஷா.
“ஏ ஆஷா, என் பேரன் ராஜா மாதிரி இருக்கிறான். ஏண்டி அவனை கேலி செய்து சிரிக்கிறாய்?” என்று பாட்டி சிடுசிடுத்தாள்.
“அண்ணா, நீ பெண் பார்க்கப் போகிறாயா இல்லை ஏதாவது கம்பெனியில் இன்டர்வியூக்கு போகிறாயா?” என்று கேட்டாள் ஆஷா கேலியாக சிரித்தபடி.
“இன்று தான் என் பிள்ளை ஒழுங்காக தலை வாரியிருக்கிறான். நீ ஏன் ஆஷா அவனை எப்போது பார்த்தாலும் மரியாதை இல்லாமல் கேலி செய்கிறாய்?“ என்றாள் அம்மா.
“அண்ணா, ஏதாவது ஒரு ஜீன்ஸ் பேன்ட்டும், டீ ஷர்ட்டும் போட்டுக் கொள். முதலில் தலையில் கொட்டி வைத்திருக்கிறாயே ஒரு எண்ணை, அதை ஒரு டவலால் நன்கு துடைத்து விட்டு முன்பு போலவே கொஞ்சம் கையால் கோதி தலைமுடியை கலைத்து விட்டு வா. அப்படியே ஏதாவது ஒரு பெர்புயூம் போட்டு ஒழுங்காக வா. ஆபீஸ் போகும் போது நல்ல ஸ்டைலாகப் போவாய், இப்போது சரியான கோங்குரா. இதெல்லாம் உன் பாட்டி டைரக்ஷனா?” என்று தலையில் அடித்துக் கொண்டாள் ஆஷா.
கொஞ்ச நேரத்தில், சூர்யா வருவதற்குள் அவன் அப்பா அம்மாவும், பாட்டியும் பெண் பார்க்கப் போவதற்கு தயாராக காரின் அருகில் நின்றனர். ஆஷாவும் தான் வழக்கமான அவள் டிரெஸ்ஸில் நின்றாள். அப்பா எப்போதும் போல் வெள்ளை வேட்டி சட்டை. அம்மாவும், பாட்டியும் ஒரு முழம் அகல ஜரிகைப்புடவை. நகைகளோ சொல்ல முடியாத அளவு.
”அம்மா, பாட்டி ஏன் இவ்வளவு நகைகள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றான் சூர்யா திகைப்போடு.
“அண்ணா, திருடர்கள் இவர்களைத் தூக்கினாலே போதும். வேறு எந்த ஏ.டி.எம். மெஷினிலும் கொள்ளை அடிக்க வேண்டாம்“ என்றாள் ஆஷா.
“ஏ ஆஷா! நம் வீட்டுக்கு வரப் போகிற மருமகளைப் பார்க்கப் போகிறோம். இப்போதாவது அந்தத் தலை முடியைப் பின்னி, பட்டுப் பாவாடை தாவணி என்று உடுத்தக் கூடாதா? ஆம்பிளை மாதிரி ஒரு ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட், கண்ராவி. இந்த முடி மட்டும் இல்லையென்றால் சூர்யாவின் தம்பியா என்று தான் கேட்பார்கள்” என்று மோவாய் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டாள் அம்மா.
“எல்லாம் அவளுக்குத் தெரியும். நீங்கள் மாமியாரும் மருமகளும் வெளிஉலகத்தைப் பார்த்தால் தானே! ஆஷா இப்போது இருப்பது போலவே இருக்கட்டும். அவளையும் உங்களைப்போல் பட்டுப் புடவைக்கும், நகைக்கும் அடிமையாக்கி விடாதீர்கள்“ என்று அதட்டிப் பேசி எல்லோர் வாய்க்கும் பூட்டு போட்டார் அப்பா.
பெண் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். பெண்ணின் அம்மா, அப்பா, இருவரும் வாசலிலேயே நின்று வரவேற்றனர். அபார்ட்மென்ட் தான், ஆனால் பணக்கார்ர்கள் வாழும் போஷ் லொகாலிட்டி என்றார்கள்.
“சொந்த வீடா?” என்று கேட்டாள் பாட்டி. அப்பா அவளை முறைத்தார்.
“இல்லை பாட்டி, வாடகை வீடு தான். இங்கெல்லாம் ஒரு அபார்ட்மென்டின் விலையே ஒரு கோடி என்கிறார்கள். எங்களால் எல்லாம் வாங்க முடியாது“ என்றார் பெண்ணின் அப்பா.
வீட்டின் உள்ளே பெரிய ஹால். அங்கே இருந்த சோபாவில் பிள்ளை வீட்டாரை உட்காரவைத்து பெண்ணின் அம்மா எல்லோருக்கும் முதலில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். பிறகு ஸ்வீட் காரம் ஆரஞ்சு ஜூஸ் எவ்லாம் கொண்டு வந்து அம்மாவும், ஒரு வேலைக்காரப் பெண்ணுமாக எல்லோருக்கும் டிஸ்போசபிள் தட்டில் வைத்துக் கொடுத்தார்கள். ஜூஸும் அட்டை டம்ளரில் தான்.
சூர்யா தான் சாப்பிடாமல் நெளிந்தான். பாட்டி அவனைப் புரிந்து கொண்டாள்.
“முதலில் பெண் பார்த்து விடலாமே, பெண்ணை அழைத்து வாருங்கள்“ என்றாள் பாட்டி.
மைதிலியை அவள் தோழிகள் இருவர் அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்தனர். அவளைப் பார்த்தவுடன் பிரமித்து நின்றான் சூர்யா.
தேவதை மாதிரி அப்படி ஒரு அழகு. அதிக மேக்-அப் இல்லை. லேசாகப் பௌடர் பூச்சும், ஒரு சிகப்பு கலர் ஸ்டிக்கர் பொட்டும் தான். அழகான மேக வர்ணக் கலரில் சிம்பிளாக ஒரு டிசைனர் சாரி, கழுத்தில் ஒரு முத்து மாலை, கைகளில் இரண்டிரண்டு முத்துக்கள் பதிக்கப்பட்ட வளையல்கள்.
எப்போதும் எல்லோரையும் கலாட்டா செய்யும் ஆஷா கூட அவளைத் திறந்த வாய் மூடாமல் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மைதிலி எழுந்து எல்லோரையும் இரண்டு கைகளைக் குவித்து வணக்கம் தெரிவித்து விட்டு லேசான புன்னகையுடன் மீண்டும் தன் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள். பெண்ணைப் பாரத்து திருப்தியான பிறகு தான் எல்லோரும் டிபன் சாப்பிடத் தொடங்கினர்.
மைதிலியை எல்லோருக்கும் பிடித்து விடவே மேற்கொண்டு வியாபாரம் பேசத் தொடங்கினார்கள். அது தாங்க, சீர் செனத்தி, தங்கம் வைரநகைகள் பற்றி எல்லோருக்கும் எல்லாமும் திருப்தியாகிவிட, பிள்ளை வீட்டின் சார்பாக பாட்டி பேசலானாள்.
“எங்களுக்குப் பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. இன்று நல்ல நாள் தான். இப்போது ஒப்பு தாம்பூலம் மாற்றிக் கொண்டு பின்னர் நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தமும், கல்யாணமும் வைத்துக் கொள்ளலாம்“ என்று கூற இரு வீட்டாரும் ஒத்துக் கொண்டார்கள்.
உடனே அதற்கான் ஏற்பாட்டைத் தொடங்கினார்கள். அப்போது மைதிலி, “ஒரு நிமிடம், நான் சூர்யாவோடு கொஞ்சம் பேச வேண்டும்“ என்றாள்.
“பேசு, அதென்ன சூர்யா என்று எங்கள் எதரிலேயே மண்டையில் அடித்தாற் போல் பேர் சொல்லி கூப்பிடுவது“ என்று முகம் சுளித்தாள் சூர்யாவின் அம்மா.
மைதிலி ஒன்றும் சொல்லாமல் அவளை உறுத்துப் பார்த்தாள். சூர்யா கண்ணசைவில் தன் தந்தையின் அனுமதி பெற்று, அவளோடு பேசத் தயாராகி உள்ளே போனான்.
“முன்பெல்லாம் பையன்கள் தான் பெண்களுடன் தனியாகப் பேச வேண்டும் என்பார்கள். அதற்கே சிலர் அனுமதி தரமாட்டார்கள். இப்போது காலம் மாறி விட்டது, எல்லாம் கலிகாலம். பெண்களெல்லாம் ஆண்களைப் போல் நடக்கிறார்கள்” என்று பெருமூச்சி விட்டாள் பாட்டி.
சிறிது நேரம் பேசி விட்டு சூர்யாவும் மைதிலியும் வெளியே வந்தனர். இருவரின் முகமும் தெளிவாக இல்லை.
“வீட்டிற்குப் போகலாம்“ என்றான் சூர்யா வரண்ட குரலில். யாரிடமும் எதுவும் சொல்லாமல் காரின் அருகில் நின்றான்.
“ஏன் மாப்பிள்ளை ஒரு மாதிரி கோபமாகப் போவது போல் இருக்கிறதே? எங்கள் மைதிலி ஏதாவது ஏடாகூடமாகப் பேசி விட்டாளா? அப்படி இவள் ஏதாவது தவறுதலாகப் பேசியிருந்தாலும், நாம் உட்கார்ந்து பேசி அவர் சங்கடத்தைப் போக்கி விடலாம்“ என்றாள் பெண்ணின் அம்மா.
“நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் சம்பந்தி அம்மா. நாங்கள் வீட்டில் போய் சூர்யாவை விசாரித்து உங்களுக்கு தகவல் சொல்லுகிறோம். சூர்யா சுலபமாக்க் கோபப்படும் ஆள் இல்லை. எல்லாம் ஆண்டவன் கருணையால் நல்லபடியாக முடியும்” என்று சூர்யாவின் அப்பா சொல்லச் சொல்ல, சிரித்தவாறு தலையை ஆட்டிக் கொண்டு நின்றிருந்தாள் அவன் அம்மா. அவர்கள் எல்லோருக்கும் மைதிலியை அவ்வளவு பிடித்து விட்டது.
வீட்டில் சூர்யா, “அம்மா, அந்தப் பெண் என்னைத் தனியே அழைத்துக் கொண்டு போய், ‘திருமணம் முடிந்த பிறகு நீங்கள் எங்கள் வீட்டில் வந்து இருக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக பெண்கள் தானே ,பெற்றோர்கள், உடன் பிறப்புகள் எல்லோரையும் விட்டு மாப்பிள்ளை வீட்டில் போய் இருக்கிறோம். இனிமேல் அதை மாற்ற வேண்டும்.
இதற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் தனிக்குடித்தனம் போக வேண்டும். ஏன் பெண்கள் மட்டும் பழகிய வீடு அம்மா அப்பா பாசம் என்று எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்? நீங்கள் மட்டும் உங்கள் வீட்டில், உங்கள் பெற்றோருடன் ஜாலியாக இருப்பீர்களா? என்றாள் அம்மா” என்றான் கோபமாக.
“சபாஷ்… அண்ணி சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள். வாழ்க அண்ணி, வளர்க பெண்ணுரிமை” என்றாள் ஆஷா.
“சூர்யா… அந்தப் பெண்ணை உனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறதென்று தெரியும். இந்த ஒரு காரணத்திற்காக மைதிலியை நிராகரிக்க வேண்டாம். இதே எண்ணம் முப்பது வருடங்களுக்கு முன்பே எனக்கும் இருந்தது. அப்போது என்னால் வாயைத் திறந்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. இப்போது காலம் மாறிவிட்டது, மைதிலி ஓப்பனாகப் பேசுகின்றாள்.
திருமணமான பின் நீங்கள் தனிக்குடித்தனம் போனால் சுதந்திரம் உங்களுக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் தான். அதனால் இன்னும் காலம் தாழ்த்த வேண்டாம், மைதிலியுடன் திருமணத்திற்கு ஒத்துக்கொள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கணவரிடமும் பாட்டியிடமும் கேட்டாள்.
“அண்ணா… அண்ணி எவ்வளவு அழகாக மாடர்னாக யோசிக்கிறார்கள். ஆண்கள் எல்லாம் ரொம்ப செல்பிஷாக, பெண்களை அடிமைப்படுத்துகிறீர்கள் .அடிமைத்தளைகளை உடைப்போம்“ என்றாள் ஆஷா.
“சுயமாக உங்கள் காலில் நீங்கள் நிற்பது நல்லது தான்” என்று அப்பா பச்சைக் கொடி காட்டினார். பிறகு சூர்யா சம்மதம் தெரிவித்து மைதிலியுடன் சந்தோஷமாகப் பேசினான்.
எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings