இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
குறுந்தொகை பாடல் 28
ஆசிரியர் : ஒளவையார்
முட்டுவேன் கொல்?
தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்,
*அலமரல்* அசை வளி அலைப்ப
என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே”
அலமரல் (அச்சம்)
எங்கோ உரக்கப் பெய்து கொண்டிருந்தது மழை. தூரத்தில் பெய்யும் மழையின் தாக்கம், இதமான காற்று இதயம் வரை தொட்டுச் சென்றது அவர்கள் இருவரையும்.
இரவின் அந்த இனிமையில் நேகா தன் கணவனை இன்னொரு முறை இழுத்து அணைத்தாள், நேகாவின் அந்த அணைப்புக்கு அடிபணிந்தான் அவள் கணவன் சுபாஷ்.
அவர்களின் அணைப்புக்குள் இடைபுகுந்து தன்னையும் சூடாக்கி கொள்ள நினைத்த குளிர் காற்று அவர்களிடம் தோற்று பின்வாங்கியது. தூரத்தில் பெய்த மழை ஓய்வெடுக்க தொடங்கியது ஆனால் இடிச்சப்தம் மட்டும் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தது.
சற்று நேரம் கழித்து இரவு அமைதியானது அது தெரியாமல் நேகாவும் சுபாஷும் உறங்கிப் போயினர்.
முந்தைய நாளின் இரவின் இனிமை தெரியாமல் போன பகலவன் வழக்கம் போல தனது காலைப் பணியை தொடங்கியிருந்தது ஆனால் இரவு பெய்த மழையின் மேகமூட்டம் கதிரவனின் பணியினை கொஞ்சம் தாமதப்படுத்தியது.
காலை விடிந்தும் கூட எழாமலேயே குழந்தை போல படுத்திருந்த தனது மனைவி நேகாவை பார்த்து இரசித்து விட்டு ஒரு சிறு புன்னகையுடன் பாத்ரூமிற்குள் நுழைந்தான் சுபாஷ்.
குளித்து முடித்து வந்து பார்த்த போது நேகா எழுந்திருந்தாள், அவள் கையில் செல்போனை உயிர்ப்பிருந்தாள், அதில் உள்ள மெஸேஜூகளை படித்து கொண்டிருந்தா.
“நேகா காலைலேயே போன் பார்க்க ஆரம்பிச்சுட்டியா?”
“ஒரு அஞ்சு நிமிஷங்க, ‘ப்ளீஸ்’ நீங்க கீழ போங்க நான் இத முடிச்சுட்டு குளிச்சுட்டு வந்துர்றேன்”
சுபாஷ் அதற்கும் முறைத்தான்.
“ஓகேப்பா! தோ வச்சுட்டேன்” என்றாள் சிரித்துக் கொண்டே.
“சீக்கிரம் வா எனக்கு வயல்ல கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டு….” என்று அவன் முடிப்பதற்குள் நேகா இடைமறித்து கேட்டாள், “அப்போ சுபாகாவுக்கு நோட் புக்ஸ் எல்லாம் வாங்கனும்முன்னு சொன்னேனே”
“இரு.. இரு.. நான் இன்னும் முடிக்கல வயலுக்கு போயிட்டு சீக்கிரமா வந்துடுவேன், வந்ததும் டவுனுக்கு போலாம்”
“ஓகே! ஓகே! ”
அதற்கிடையே மீண்டும் மெஸேஜ் மணி அடிக்க, நேகா செல் போனை பார்க்க சுபாஷ் தலையில் அடித்தபடியே மாடியிலிருந்து இறங்கி கீழே வந்தான். அவன் இறங்கி வருவதைக் கண்ட அவனுடைய மகள் சுபாகா ஓடி வந்து கட்டிக்கொண்டாள்
“அப்பா..! அப்பா..! அங்க வந்து பாருங்க எவ்ளோ பெரிய வானவில்”
“இரும்மா வர்றேன்… ஏம்மா நேத்து நைட்டு நல்லா தூங்கினாளா இல்ல வழக்கம் போல தாத்தாவும் பேத்தியும் கத பேசுனாங்களா?” என்று அவள் கூடவே நடந்து வந்த அவன் அம்மா லட்சுமியைப் பார்த்து கேட்டான்.
“நல்லா தூங்கிட்டாடா… ஆனா கதையில்லாம தூங்கல ஆனா நேரத்துல எந்திரிச்சுட்டா உன்னைப் போலவே…. எந்திரிச்ச உடனே பல்லு விளக்கி குளிச்சிட்டு தோ இங்க வந்து இந்த வானவில்ல பாத்துட்டு இருந்தோம் நீ வந்துட்ட “
“அப்பா எந்திரிச்சிட்டாங்களா?”
“இல்லப்பா அப்பா கொஞ்சம் லேட் ஆவும் நேத்து நைட்டு தாத்தாவும் பேத்தியும் கதை கதையா பேசிட்டிருந்தாங்கல்ல அதான். இவ சுட்டி எந்திரிச்சுட்டா தாத்தாவுக்கு வயசாயிடுச்சுல “
அதற்குள் சுபாகா சுபாஷோட கையை பிடிச்சு இழுத்துக்கொண்டே
“அப்பா… அப்பா… இங்க வாங்க எவ்ளோ அழகா வட்டமா இருக்கு பாருங்க!” என்ற அவளது முகம் ஆச்சர்யத்தில் மூழ்கியிருந்தது.
“வர்றம்மா இரு.. இரு.. ஆமா! அரை வட்டமா அழகா இருக்கே !!”
“வானவில்ன்னா என்னப்பா? எப்படி அது வானத்துல வருது?”
சுபாஷ் தனது நான்கு வயது மகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்
“வானவில்லுனா மழை நேரத்துல வானத்துல இப்பிடி வில்லாட்டம் வளைஞ்சு கலர் கலராத் தெரியும், அதுதான் வானவில்”
“இப்படி கலர் கலராவா?” தனது பிஞ்சு கைகளை ஆட்டி ஆட்டி கேட்டாள்
“ஆமாங்க மேடம் வானவில்லுன்னா இப்படித்தான் இருக்கும் மொத்தமா ஏழு கலர் இருக்கும்”
“எனென்ன கலர்?” தன் அடுத்த கேள்வியைக் கேட்டாள் சுபாகா
“பச்சை, மஞ்சள், நீலம், ஊதா,….”
“இதுல நீலக் கலர் எதுப்பா?” சுபாஷ் முடிக்கும் முன்னரே முந்திக்கொண்டாள் சுபாகா.
“மேல இருந்து மூணாவதா இருக்குல அதான்… நீலக் கலர் சரி எங்க நீங்க சொல்லுங்க பார்ப்போம் அதுல ஆரஞ்சு கலர் எங்க இருக்கு? ”
“ம்ம்.. ம்ம்…”
வாயின் மீது விரலை லேசாக மடக்கி வைத்துக் கொண்டு வானவில்லை பார்த்துக் கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள்
“அது… அது… வந்து.. அய்யய்யோ அப்பா அத காணோம் பாருங்க மறைஞ்சு போயிடுச்சு”
அதற்குள் வானத்தில் வானவில் மறைந்து கரும் மேகங்கள் சூழ ஆரம்பித்தது மின்னல் வேறு லேசாக மின்னியது கூடவே மழைச்சாரல் அடிக்கத் தொடங்கியது
“அப்பா..!, ஹைய்யா! மின்னல் என்னப்பா மின்னி மறையுது”
“அதையெல்லாம் பார்க்க கூடாதும்மா வா.. வா… போதும்” என்று அவள் கையை பிடித்து இழுத்தாள் அவளுடைய பாட்டி லட்சுமி.
அதற்குள்ளாக “லட்சுமி! .. லட்சுமி!” என அழைத்தபடி அங்கே வந்தார் சுபாஷோட அப்பா ராமசாமி. ஐம்பத்தைந்து வயதானாலும் நல்ல திடமாக இருந்தார் ராமசாமி.
சுபாஷோட குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் ஒரு சிற்றூரான அந்த ஊரில் ஐந்து ஏக்கர் நிலத்தை வைத்து இயற்கையான முறையில் விவசாயம் செய்து வருபவர்கள். ராமசாமி, லட்சுமிக்கு தம்பதியனர்க்கு ஒரு மகள் மற்றும் மகனான இந்த சுபாஷ். மகள் சௌந்தர்யா சுபாஷ்க்கு அக்கா, பக்கத்து ஊரில்தான் அவளைக் கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்கள்.
சுபாஷூம், நேகாவும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் சுபாஷின் நல்ல குணங்களால் கவரப்பட்ட நேகா சுபாஷை விரும்பி இருவீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டவள்.
நேகாவுக்கு சுபாஷோடு நல்ல இணக்கம் இருந்தது ஒரு நாள் கூட அவனை விட்டு பிரிந்ததில்லை. சுபாஷூம் நேகாவின் மீது பாசம் வைத்திருந்தான். இருவருக்கும் ஒத்து போகாத ஒரே விஷயம் ‘செல்போன்’.
நேகா தன் கணவனை எப்படி பிரிந்து இருக்க மாட்டாளோ அதே போல ஒருபோதும் செல்போனை விட்டும் பிரியவே மாட்டாள். அதில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக், ட்விட்டர் அனைத்திலுமே அத்துப்படி.
சுபாஷூக்கு அப்படியில்லை தூரத்தில் இருப்பவர்களை கூப்பிட்டு பேசுவதற்கு உண்டான ஒரு சாதனம் அவ்வளவே, அதனால் சுபாஷ் ஒரு சாதாரண பட்டன் டைப் செல்போன் மட்டுமே வைத்திருந்தான்.
“அப்பா நான் வயலுக்கு போயிட்டு வந்துடறேம்ப்பா மழை வேற பெய்யுது”
“சரிப்பா சீக்கிரமா வந்துடு”
“சரிப்பா” என்று கூறிக் கொண்டு தனது ‘டீ.வி.எஸ்’ வண்டியை எடுத்தான் அதற்குள் நேகாவும் வந்து விட அவளுக்கும் தனது மகள் சுபாகாவுக்கும் டாட்டா காட்டி விட்டு புறப்பட்டான்
“அப்பா சீக்கிரமா வந்துடுங்க “
“ஆமாங்க அப்பா! சீக்கிரமா வந்துடுங்க” என்று சுபாகாவுடன் சேர்ந்து கொண்டு குறும்பாகச் சொன்னாள் நேகாவும்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சுபாஷ் திரும்பி வந்தான். வந்தவன் பரபரப்பாக வந்தான் நேரே அவன் அப்பாவிடம் வந்து,
“அப்பா… அப்பா… நம்ம தங்கராஜ் மேஸ்திரி பையன் குணசீலன பாம்பு கடிச்சிடுச்சாமாப்பா நான் கொஞ்சம் உடனே போயி பார்த்துட்டு வரம்ப்பா”
“அப்படியா எப்பப்பா?” அதிர்ச்சியில் கேட்டார் சுபாஷின் அப்பா.
“இப்பதாம்ப்பா டவுன் ஆஸ்பத்திரிக்குதான் கொண்டு போயிருக்காங்க நான் கிளம்பறேம்ப்பா “
“இருப்பா நானும் வர்றேன்”
“இல்லப்பா நான் மட்டும் போயிட்டு வந்துர்றேன்…. நேகா எங்கப்பா? “
அதற்க்குள்ளாக சத்தம் கேட்டு நேகாவும் அவன் அம்மாவும் வெளியே வந்தனர். நேகா பக்காவாக ரெடியாயிருந்தாள்
சுபாஷ் அவளிடம் நிலைமையை தெளிவாக எடுத்துக் கூற நேகாவும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, உடனே சம்மதித்தாள், கூடவே சுபாகாவுக்கு நோட் புக் தானே வாங்கி வருவதாக நோட் புக்ஸ் லிஸ்ட்டையும் வாங்கிக் கொண்டான் சுபாஷ் .
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings