எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முதல் முறையாக நீதிமன்றத்தில் நுழையும் பொழுது சற்று நடுக்கமாகவும் நெஞ்சம் படபடப்பாகவும் இருந்தது ‘அருண்’க்கு . இதயத்துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது.
நீதிமன்ற பணியாளர் வழக்குக்கட்டை பிரித்து, “வழக்கு எண்:113/2020 .திரு. காந்தி, திரு .இராதாகிருஷ்ணன் என்று வாதி…பிரதிவாதி வழக்கறிஞசர்களின் பெயரைச் சொல்லிவிட்டு …’அருண், மணிமேகலை என்று சொல்ல …அருண்… மணிமேகலை …அருண்…மணிமேகலை…” என்று கோர்ட் டவாலி சத்தகமாகக் கூப்பிட …
உள் நுழைந்த அருணுக்கு உடலில் நடுக்கம் …இதயத்துடிப்பு எகிறியது …சீராகக் கொஞ்ச நேரமானது.
சாட்சி கூண்டில் ஏறி நிற்கச் சொன்னார்கள்… “உங்கள் ஆதார் கார்டை கொடுங்க” என்று கேட்டு வாங்கிச் சரிபார்த்த பின்
“சத்தியமா சொன்றேன்னு சொல்லுங்க…” என்று நீதிபதி உதவியாளர் சொல்ல …அருண் அவ்வாறே சொன்னான்.
“எதுக்கா இந்த வழக்கு போட்டு இருக்கீங்க தெரியுமா?”…என்று கேக்க
அருண் … “தெரியும் …விவாகரத்துக்காக?”
“இது உங்கள் கையெழுத்து தானா ?”
“ஆமாம்…”
“கீழே இறங்கிக்கோங்க ….”
“அடுத்த வாய்தா …” என்று இரண்டு மாதம் கழித்து ஒரு தேதி சொன்னார்கள்.
இரண்டு மாதம் கழித்து நீதிமன்றத்திற்குச் செல்லும் போது முன்பிருந்த பதற்றம் இல்லை… இம்முறை எதிர்தரப்பில் ஒரு எழுத்துப்பூர்வ பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு முன்னால்… அருணுக்கு மணிமேகலைக்குப் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றது …திருமணத்திற்குப் பின்னர் ஒன்றாகக் குடும்பம் நடத்திய இருவருக்கும் ஒரு குழந்தையும் உண்டானது. அருண் அரசு வேலையில் இருந்தான். மணிமேகலை அரசு வேலைக்கு முயற்சி செய்துக்கொண்டிருந்தாள்.
குழந்தையை வைத்துக்கொண்டு இங்கே படிக்க முடியாது என்று அம்மா வீட்டுக்குப் போனவள் …அதற்குப் பின் வேலை கிடைக்கவும் திரும்பி வரவில்லை …திரும்பி வரும் எண்ணமும் இல்லை…அருண் போய் அழைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு காரணம் சொல்லி தள்ளிப் போட்டு வந்தாள் மணிமேகலை.
அவளின் பெற்றோரும் அவளது வருமானத்தை வைத்துக்கொண்டு வாழ ஆசைப்பட …மகளை அனுப்ப மறுத்து விட்டதோடு ..அருண் மீது வேறுவிதமான குற்றசாட்டுகளை ஊரில் பரப்பி விட்டனர்…தீயை விட அதிவேகமாக வதந்தி பரவியது .
இதெல்லாம் அனுபவித்த அருண் ஒரு கட்டத்தில் குழந்தையைச் சென்று பார்ப்பதையும் நிறுத்தி விட்டான் …ஏழு வருடங்கள் இவ்வாறு கடந்துவிட்டது இருவருக்கும் இடையே எவ்வித தகவல் தொடர்பும் இல்லை .
ஒரு முறை அருணின் உடல்நிலை மிகவும் மோசமாகியதால் …மருத்துவ மனையில் அனுமத்திக்கப்பட்டான் …அவனின் பெற்றோர்கள் பார்த்துக் கொண்டனர் …மனைவியோ அவளின் குடும்பத்தினொரு எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
அருணின் பெற்றோர், “இவ்வளவு நல்ல வேலையில் இருந்து…நல்ல சம்பளம் இருந்து…இவ்வளவு போராட்டத்திலும் எந்த வித தவறானப் பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் இருந்து என்ன பிரோயஜ்னம் …எங்களுக்குப் பின் உனக்கு யார் துணை? இனியும் நீ முடிவு எடுக்க வில்லை என்றால் ..உன்னை விட முட்டாள் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டான்” என்றனர் .உறவினர்களும் பலர் வருத்தப்பட்டனர்.
அதற்குப் பின்னர் அருண் எடுத்த முடிவுதான் இந்த விவாகரத்து வழக்கு ..
இரண்டு வாய்தாக்கள் இப்படியே போக …அடுத்த வாய்தாவில் எதிர்தரப்புக் கட்டாயம் ஆஜர் ஆகவேண்டும் என்று உத்திரவு இட்டார் நீதிபதி.
இப்பொழுது நீதிமன்ற நடைமுறை நிகழ்வுகள் தெரிந்து போயின …அடுத்த வாய்தாவில் எதிர்தரப்பு ஆஜர் ஆகி இருந்ததால் …இரு வக்கீல்களையும் நீதிபதி அழைத்து வாதத்தைத் தொடங்கச் சொன்னார்.
எதிர்தரப்பு வக்கீல் எழுத்துப்பூர்வ பதில் மனு ஒன்று தாக்கல் செய்தார் …அதன் சுருக்கம் ..அருண் மீது குற்றச்சாட்டும்…குழந்தையின் நலன் கருதி சேர்ந்து வாழ்வதாகவும் இருந்தது .
அருணும் மனத்தை மாற்றிச் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவிக்கலாம் என்று எண்ணிய போது …அடுத்த இரண்டு வாய்தாவில் மணிமேகலை வரவில்லை…மூன்றாவது முறை வந்த பொழுது …நீதிமன்ற ஆலோசனை குழுவிற்குச் செல்வதாக மணிமேகலை தரப்பு வக்கீல் சொல்லவும் …இருவரையும் அங்கே அனுப்பினர் நீதிபதி …அங்கேயும் சமரசம் ஏற்படுவதற்குப் பதில் சன்டையே வளர்ந்தது .
மீண்டும் வழக்கு நீதிமன்றத்தில்… கோடை விடுமுறை …இரண்டு நீதிமன்றங்களுக்கு ஒரு நீதிபதி… தற்காலிக நீதிபதி …வக்கீல் ஆஜர் ஆகாதமை என்று நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன …
வாதி, வாதியின் சாட்சி விசாரணை முடிந்தது …பிரதிவாதி விசாரணை தொடங்கியும் இரண்டு வாய்தாக்கள் வரவில்லை மணிமேகலை … மூன்றாவது வாய்தாவுக்கு வர வாய்ப்பு இருக்கு.
இன்னும் எதிர்தரப்பை விசாரிக்க வேண்டும் பின்னர் அவர்கள் தரப்பு சாட்சி விசாரணை… பின்னர் இருதரப்பு வக்கீல்கள் வாதாடுதல் ..எண்ணிப் பார்ப்பதற்குள் வயது இன்னும் ஐந்து கூடலாம்.
அருணுக்கு ஒரே குழப்பம் …உறவுக்காரர்கள் வழியாகப் பேசிய பொழுது மணிமேகலை … “சேர்ந்து வாழ விருப்பமில்லை.. எனக்கு வேலை இருக்கு ..சம்பளம் வருது ..விவாகரத்து வாங்கிட்டு போகட்டுண்ணும்” சொன்னது ..பின்னர் சேர்ந்து வாழறேன்னு பதில் மனு தாக்கல் செய்தது…சமரச மையத்தில் மீண்டும் முரண்பாடு …நீதிபதி முன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் என்று சொல்லலாம் …எதற்கு இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு ?”
இறுதியில் சில நண்பர்கள் மூலமாக விசாரித்ததில் தான் தெரிந்தது மணிமேகலையின் எண்ணம் “நான் வாழல …அவனும் வாழக்கூடாது …வழக்கை இழுத்தடித்தால் …வயது 45 கடந்திடும் ..அப்புறம் யார் பொண்ணு கொடுப்பாங்க …யார் கட்டிக்க முன் வருவாங்க …?”
இதற்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அருண் .
அருண் தன் வக்கீலிடம், “சார் ..உங்களுக்குத் தெரிந்த விவாகரத்து ஆன பொண்ணுங்க… நல்ல குணமுள்ள பொண்ணுங்க யாராவது தெரியுமா ? இருக்காங்களா ?” என்றான் .
“இருக்காங்களே …”என்றார்
“சார் …அப்போ …வழக்கு அது பாட்டுக்கு போகட்டும் …”
“சரி ..என்ன முடிவு செஞ்சியிருக்கீங்க ?”
“நான் என் வாழ்க்கைப் பாதையைச் சீரமைத்துக் கொள்ள முடிவுக்கு வந்துட்டேன்” என்றான்
“என்ன செய்யப் போறீங்க …?”
“வாழ்ந்து காட்டப் போறேன்”
“எப்படி …?”
“இரகசியம் …” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்
வக்கீல் புன்னகைத்தார்… “அவருக்கு தெரியாதா ?”
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings