in ,

நான் இயேசு அல்ல… நரசிம்ஹா… (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘றப்’ என்ற திடீர் சப்தம் அந்த அமைதியான பள்ளியின் பிரேயர் ஹாலில் பட்டு எதிரொலித்தது.  திடீரென்று ஏற்பட்ட‌ அந்த  சப்தத்தின் அதிர்வில், அருகில் இருந்த‌ மரத்தில் அமர்ந்திருந்த பறவைகள் வெருண்டு, விருட்டென்று சிறகடித்துப் பறந்தது,  ‘றப்’ என்ற சப்தத்தின் எதிரொலி போல் அமைந்தது.  

பிரேயரில் முன் வரிசையில் நின்ற மாணவர்களுக்கு மட்டும் தெரிந்தது, மாணவன் ரங்கசாமி முன் வரிசையில் இருந்து வேகமாகச் சென்று, கொடிக்கம்பத்தின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த‌  கணபதி ஆசிரியரை கன்னத்தில் ஓங்கி அறைந்தது.  

அதே பள்ளியில் ரங்கசாமி பிளஸ் டூ படிக்கும் மாணவன் என்பதோடு கூடுதல் சிறப்பு, அவன் பள்ளி மாணவர் தலைவனும் கூட.  யாரும் எதிர்பாராமல் நடந்த அந்த நிகழ்வு, பிரேயருக்காக குழுமியிருந்த ஆசிரியர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சியில் கல்லாக  உறைய‌ வைத்தது.

ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதைப் பார்த்திருந்த‌ அவர்களுக்கு, ஒரு மாணவன் ஆசிரியரை அடித்தது ஜீரணிக்க முடியாததாகவே இருந்தது.

பின் வரிசையில் நின்றிருந்த மாணவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. முன் வரிசையில் இருந்த மாணவர்கள்,  ‘நம்ம எஸ்.பி.எல். ரங்கசாமி, கணபதி ஆசிரியரை அறைஞ்சிட்டான்’  என்று பேசிய கிசுகிசுப்பு அந்த பிரேயர் ஹாலில் பரவி அங்கு நிலவி இருந்த அமைதியைக் குலைத்தது.          

அங்கு நின்றிருந்த‌ மற்ற ஆசிரியர்களும் திடீரென்று நடந்த அந்த எதிர்பாராத சம்பவத்தில் தாக்குண்டு  திகைத்து நின்றனர். கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தலை குனிந்து நின்றிருந்த கணபதி ஆசிரியரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.  

அந்தச் சூழ்நிலையில் தலைமை ஆசிரியர் மாத்திரம் சுயஉணர்வு பெற்று, அனைவரையும் உடனடியாக‌ வகுப்புக்குக் கலைந்து போகும்படி உத்தரவிட்டார். சலசலவென்று பேசிக் கொண்டே கலைந்து சென்ற அந்த மாணவர்கள் இருந்த இடம், அடுத்த ஐந்து நிமிடத்தில் வெறிச்சோடி அமைதியாயிற்று.

தலைமை ஆசிரியரின் அறையில், தலைமை ஆசிரியருடன் சீனியர் தமிழாசிரியர் பழனிசாமி, டிராயிங் மாஸ்டர் சண்முகம், பி.டி. ஆசிரியர் கோபாலன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இவர்கள் அனைவரும் நீண்ட காலமாக‌ அந்தப் பள்ளியில் பணி புரிந்து கொண்டிருப்பவர்கள்.

அவர்களுக்கு அருகில் தலைகுனிந்து மெளனமாக அமர்ந்திருந்தார் கணபதி ஆசிரியர். யாரும் உள்ளே வந்து விடாமல் தலைமை ஆசிரியரின் அறை உட்பக்கமாகத் தாளிடப்பட்டு இருந்தது. அறைக்கு வெளியே சற்றுத் தள்ளி பியூன் முனுசாமி அறைக்குக் காவல் இருந்தார்.

‘சொல்லுங்க கணபதி சார்… அந்தப் பையன் உங்களை எதுக்கு அறைந்தான்?  நீங்கள் சொல்வதை வைத்துத்தான் அவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவனின் இந்த நடவடிக்கைக்கு ஏதாவது நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும். இதுவரையில் நம் பள்ளியில் நடக்காத ஒன்று இன்று நடந்துவிட்டது.  இதுபோல் இனிமேல் நடக்காமல் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்ற ஆசிரியர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஏன், மாணவர்களில் கூட பெரும்பான்மையினர் உங்கள் மீது அனுதாபத்தில் உள்ளார்கள். ஆனால் நடுநிலையாளன் என்ற முறையில் உணர்ச்சி வசப்படாமல் உண்மையைத் தெரிந்து கொள்ள நான் நினைக்கிறேன்..’  என்றார் தலைமையாசிரியர்.

தலை நிமிர்ந்து தலைமை ஆசிரியரைப் பார்த்த கணபதி ஆசிரியரின் கண்களின் விளிம்பில் நீர் பளபளத்துக் கொண்டிருந்தது. அழக்கூடாது என்று திடமான வைராக்கியத்துடன் இருந்த போதிலும்,  நூற்றுக் கணக்கானவர்களின் முன்பு பட்ட அவமானம் அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. கரகரப்பான மெல்லிய குரலில் ஆரம்பித்தார்.

‘ரங்கசாமி எங்க ஊர் பையன் தான்.  கொஞ்சம் தூரத்து உறவும் கூட. கொஞ்ச நாட்களுக்கு முன்பு எங்கள் குடும்பத்திற்கும், அவனின் குடும்பத்திற்கும் சிறிய நிலத்தகராறு ஒன்று இருந்தது.  அது எங்கள் ஊர்ப் பெரியவர்களால்  தீர்த்து வைக்கப் பட்ட பின்பும் கூட அவனின் குடும்பம் எங்களை எதிரிகளாகவே பாவித்து வருகின்ற‌னர். ரங்கசாமி ஒரு படி மேலே போய், என்னை எங்கு பார்த்தாலும் கோபத்துடனும், வன்மத்துடனுமே பார்த்து வந்தான்.  

அதுவும் அவன் நமது பள்ளி மாணவர் தலைவர் ஆன பிறகு, பள்ளியிலும், வகுப்பிலும் மற்றவர்கள் முன் என்னை மிகவும் அலட்சியமாகவே நடத்தி வந்தான். மற்ற மாணவர்களைப் போல வணக்கம் சொல்வதோ அல்லது ஆசிரியருக்கான மரியாதை கொடுப்பதோ இல்லை. ஆனால் அவன் மனதில் இந்த அளவிற்கு என்மேல் வெறுப்பு இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை..’ என்று முடித்தவர், களைப்புடன்,  ‘குடிக்க கொஞ்சம் தண்ணீர்…’ என்றார்.

பரிதாபமாகத் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த கணபதி ஆசிரியரைப் பார்த்த தலைமை ஆசிரியர் மனம் பொறுக்காமல், ‘கணபதி சார்… இன்றைக்கு நீங்க மனதளவில் ரொம்பவும் பாதிக்கப் பட்டிருக்கறீங்க… இந்த சமயத்தில் நான் என்கொயரி நடத்த விரும்பல.  நீங்க வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வாங்க..’ என்றவர், பி.டி. ஆசிரியர் கோபாலனைப் பார்த்து, ‘கோபாலன்… என் காரில் கணபதி சாரை வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு வாங்க’ என்றார்.  

பின்பு தமிழாசிரியர் பழனிசாமியைப் பார்த்து, ‘ஐயா, அந்த பையன் ரங்கசாமி வகுப்பில் இருந்தால் அவன்கிட்ட‌ ஒரு வாரம் லீவு லெட்டர் எழுதி வாங்கிக்கிட்டு வீட்டிற்குப் போகச் சொல்லுங்க.  ஒரு வாரம் கழித்து ஸ்கூல் பக்கம் வந்தால் போதும்னு தெளிவா சொல்லி அனுப்புங்க… அத்தோடு அவனிடம் இந்த விவகாரத்தைப் பற்றி வேறு யாரும் பேச வேண்டாம் என்றும் மற்றவர்களிடம் சொல்லி விடுங்க’ என்று சொல்லி மீட்டிங்கை முடித்தார். 

அடுத்த நாள் மீட்டிங்கிற்கு வந்த கணபதி ஆசிரியரின் முகம் கொஞ்சம் தெளிவாக இருந்தது. நேற்று இருந்த அத்தனை பேரும் தலைமை ஆசிரியரின் அறையில் இருந்தனர்.

முதல் நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார் தலைமை ஆசிரியர், ‘எப்போதோ நடந்து முடிந்த உங்கள் நிலத்தகராறுக்காக இத்தனை நாள் கழித்து இப்போது இந்தப் பழி வாங்குதல் ஏன் கணபதி சார்?’.

கொஞ்சம் தயக்கத்துடன் தொடர்ந்தார் கணபதி ஆசிரியர், ‘போன வாரம் வேறு ஒரு சம்பவம் நடந்ததுங்க ஐயா… ஒருவேளை அது கூட‌ காரணமாக இருக்கலாமா என்ற ஐயம் உள்ளதுங்க…’

தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். சம்பவங்கள் கூடிக் கொண்டே போவதைப் பார்த்தால் கணபதி ஆசிரியரின் மேலும் ஏதாவது தவறு இருக்கக் கூடுமோ என்பதுதான் அந்தப் பார்வையின் அர்த்தம். 

‘போன வாரம் என்ன நடந்ததுங்க சார்?’ என்றார் ஆவலுடன் தலைமை ஆசிரியர்.

‘சார், உங்களுக்கும் தெரியும்… என் தம்பியும் இந்தப் பள்ளியில்தான் படிக்கிறான். அவனும் ரங்கசாமியும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள். இப்போதும் கூட வகுப்புத் தோழர்கள்தான்.  ஆனால் நான் குறிப்பிட்ட அந்த நிலத்தகராறுக்குப் பின் ரங்கசாமி என் தம்பியுடனும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.  அது மாத்திரம் அல்ல, எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் என் தம்பியை அவமானப்படுத்துவதும், ஜாடையாக கேலி செய்வதுமாக இருந்தான்.  

வாரத்தில் மூன்று நாட்கள் என் தம்பியின் சைக்கிள் பள்ளியில் பஞ்சர் ஆகி நிற்கும். ரங்கசாமிதான் காரணம் என்று தெரிந்தாலும் ஆதாரம் இல்லாததால் அவனை எதுவும் செய்ய முடியாது.  முத்தாய்ப்பாக, போன வாரத்தில் ஒரு நாள் டியூசன் முடிந்து இரவில் தம்பி சைக்கிளில் தனியாக‌ வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, நான்கு பேர் அவனைத் தடுத்து நிறுத்தி, தம்பியின் சைக்கிளில் காற்றைப் பிடுங்கி விட்டு, கெட்ட வார்த்தையால் அவனையும் எங்கள் குடும்பத்தையும் திட்டி, காலால் எட்டி உதைத்து அனுப்பி விட்டிருக்கின்றனர்.  

இருட்டில் முகம் தெரியாவிட்டாலும், அந்த நால்வரில் ஒருவன் ரங்கசாமி என்று உறுதியாகக் கூறினான் என் தம்பி.  அதனால் அடுத்த நாள் பள்ளியில் ரங்கசாமியைக் கூப்பிட்டு நான் லேசாகக்‌ கண்டித்து அனுப்பினேன். ஒருவேளை அந்தக் கோபத்தில் இதைச் செய்திருப்பானோ என்றும் ஐயம் உள்ளது சார்..’ என்று முடித்தார் கணபதி ஆசிரியர்.

சிறிது யோசனைக்குப் பின் தலைமை ஆசிரியர் கூறினார், ‘கணபதி சார், நீங்க ரங்கசாமியின் மீது கூறிய எந்தக் குற்றச்சாட்டிற்கும் நேரடி ஆதாரம் இல்லை. அப்படி இருக்க,  உங்க தனிப்பட்ட காரணத்துக்காக நீங்க ரங்கசாமியை பள்ளியில் வைத்து கண்டித்தது தவறு. பள்ளி மற்றும் படிப்பு சம்பத்தப்பட்ட விசயத்திற்காக உங்களின் கண்டிப்பு இருந்திருந்தால் நியாயம். உங்களின் தனிப்பட்ட காரணத்திற்காக ரங்கசாமியைப் பள்ளியில் வைத்துக் கண்டித்தது தவறு என்று கூறும் அதே நேரத்தில், ரங்கசாமி நேற்று பிரேயர் ஹாலில் செய்தது தண்டனைக்குறியது என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை..’  என்றார்.

‘சார், நீங்கள் கூறியது போல ரங்கசாமி செய்த மற்ற காரியங்களுக்கு சாட்சிகள் இல்லை என்றாலும், நேற்று அவன் பிரேயர் ஹாலில் செய்தது நூற்றுக்கணக்கான சாட்சிகளுக்கு முன்னால்தான். ஆகவே அவனுக்குக் கடுமையான தண்டனை விதிப்பதே மற்ற மாணவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்’ என்றார் டிராயிங் மாஸ்டர்  கடுப்புடன்.

எங்கே ரங்கசாமிக்குக் கிடைக்கும் தண்டனை நீர்த்துப் போய் விடுமோ என்ற கவலை அவருக்கு.  அதே கருத்தில் இருந்த பி.டி.மாஸ்டரும்,  தமிழாசிரியரும் அவரின் கருத்தை தங்கள் தலை அசைப்பில் ஆதரித்தனர்.

‘அவனுக்கு எந்தத் தண்டனையும் கொடுக்க வேண்டாம் சார்..’ என்றார் கணபதி ஆசிரியர் அமைதியான குரலில்.

தூக்கி வாரிப் போட்டது போல் தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் கணபதி ஆசிரியரை முறைத்துப் பார்த்தனர்.  வாங்கிய அடியில் அவருக்கு தலை கெட்டு விட்டதோ அல்லது ரங்கசாமியைப் பார்த்து பயந்து விட்டாரோ என்ற சந்தேகம் இருந்தது அந்தப் பார்வையில்.  

அதற்கும் விளக்கம் கொடுப்பது போல் தொடர்ந்தார் கணபதி ஆசிரியர், ‘நீங்க நினைக்கிற மாதிரி அவனைப் பார்த்து எனக்குப் பயம் இல்லை. நேற்று முழுவதும் நன்றாகச் சிந்தித்துப் பார்த்து விட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். ஒரு ஆசிரியர் கொடுத்த தண்டனையால் ஒரு மாணவனின் எதிர்காலம் கெட்டு விட்டது என்ற அவப்பெயர் எனக்கு வேண்டாம். காலம் அவனுக்கு நிச்சயம் தக்க தண்டனை கொடுக்கும் என்பது திண்ணம். அவனைப் பழி வாங்கித்தான் எனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நான் நிச்சயமாகச் சொல்கிறேன், அவன் எதிர்காலத்தில் இதற்குரிய தண்டனையை அனுபவிப்பான். ஆகவே நீங்கள் என்ன சொன்னாலும் அவன் மீது நான் புகார் கொடுக்கப் போவதில்லை. இது உறுதி..’.

கடுப்பான தலைமை ஆசிரியர், ‘என்ன பேசறீங்க கணபதி… ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்று கூறிய இயேசுவைப் போல நீங்க‌ நல்ல பெயர் எடுக்க நினைக்கறீங்களா?  நீங்க வேணும்னா இயேசுவா இருங்க… ஆனா நாங்க அப்படி இருக்க முடியாது.  இந்தப் பள்ளிக்கும், பள்ளி ஆசிரியருக்கும் நடந்த அவமானத்தை சகித்துக் கொள்ள முடியாது. இது எங்கள் அனைவருக்கும் நடந்த அவமானம். அதற்கான‌ நடவடிக்கை எடுத்தே தீருவோம்… ஆனால் அதற்கு நீங்கள் கொடுக்கும் புகார் கண்டிப்பாகத் தேவை. இதன் மூலம் உங்களுக்கு எந்தத் தீங்கும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை. அப்படி இந்தப் பள்ளி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கை மற்ற ஆசிரியர்களுக்கு பாதுகாப்பாகவும், மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும்.  நீங்கள் ஒரு புகார் மாத்திரம் கொடுங்க போதும்’  என்றார் பொறுமையாக.

‘மன்னிக்கவும் சார்… எனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை. என்னை அடித்தவன் மேல் புகார் கொடுத்து அவனை மாணவர்களுக்கு மத்தியில் ஒரு வீரனாக்க விரும்பவில்லை. ஆனால் உங்கள் அனைவரின் கண் முன்னால் விரைவில் அவன் தண்டனை அனுபவிப்பான்’ என்றார் கணபதி ஆசிரியர், ஒரு ஜோசியக்காரரைப் போல.

அடுத்து அந்தப் பள்ளியில் நடந்த நிகழ்வுகள் ஒரு சினிமாவில் நடப்பதைப் போலவே நடந்தேறின.  யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ரங்கசாமி பள்ளியிலிருந்து தானே நின்று விட்டான்.  

அந்த விசயத்தில் அவன் ரோசக்காரனாகவே இருந்தான். பள்ளி நிர்வாகம் அவன்மேல் நடவடிக்கை எடுக்க அவன் வாய்ப்பே கொடுக்கவில்லை. பள்ளி நிர்வாகிகளும், மேலும் பிரச்சினையைப் பெரிதாக்க விரும்பாமல் அப்படியே கண்டும் காணாமலும் விட்டு விட்டனர். 

அடுத்த ஒரு வருடம், கணபதி ஆசிரியரும் தானுண்டு தன் கெமிஸ்ட்டிரி பாடம் உண்டு என்று பள்ளியில் தன் பணிக்காலத்தை அமைதியாக ஓட்டிக் கொண்டிருந்தார்.

தலைமை ஆசிரியர் அழைப்பதாக பியூன் வந்து சொல்லியதும், வகுப்பறையில் இருந்து உடனே அவரின் அறைக்குச் சென்றார் கணபதி ஆசிரியர்.

‘இதைப் பார்த்தீங்களா சார்?’ என்று அன்றைய பேப்பரில் வந்திருந்த ஒரு செய்தியைச் சுட்டிக் காட்டினார் தலைமை ஆசிரியர்.

‘தம்பா குரூப்பைச் சேர்ந்த ரெளடி ரங்கசாமி, மாதன் குரூப்பைச் சேர்ந்த ரெளடிகளால் நடு ரோட்டில் வெட்டிக் கொலை’ என்ற கொட்டை எழுத்துச் செய்தியைப் பார்த்ததும், ‘காலையிலேயே பார்த்தேன் சார்.. இப்படி நடக்கும் என்பது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் அவன் என்னை அடித்தபோது, கிளிப்பிள்ளை போல அவன் ஒரு நாள் தண்டனை அனுபவிப்பான் என்று உங்க எல்லோர்கிட்டேயும் சொன்னேன்’ என்றார் கண்பதி ஆசிரியர்.

‘முன்னாலேயே தெரியுமா? தெரிந்திருந்தால் அவனுக்கு அறிவுரை கூறி திருத்தியிருக்கலாமே சார்? அதுதானே நல்ல ஆசிரியருக்கு அழகு?’ என்றார் தலைமை ஆசிரியர்.

‘சார், அவன் நம்முடைய‌ பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நம் ஊரில் உள்ள மோசமான ரெளடியான‌ தம்பான் குரூப்பில் சேர்ந்து விட்டான். என் தம்பிதான் அதைத் தெரிந்து கொண்டு வந்து என்னிடம் முதலில் சொன்னான்.  நம்ம ஊர் தம்பான் குரூப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? அதில் சேர்ந்தால் மற்றவர்களை வெட்ட வேண்டும் இல்லாவிட்டால் மற்ற குரூப்பால் வெட்டுப் பட வேண்டும்.

இதைத் தெரிந்துதான் நான் ரங்கசாமியை பள்ளியில் அழைத்து எச்சரித்தேன்.  என் தம்பியிடம் போட்ட சண்டையைப் பற்றி நான் அவனிடம் பேசவே இல்லை.  தம்பான் குரூப்பில் இருந்து அவன் விலகிவிட பலவாறு அறிவுரை கூறினேன்.  அதற்குக் கிடைத்த பரிசுதான் சார் பிரேயர் ஹாலில் எனக்குக் கிடைத்த அறை.    

சார்… ஆசிரியர்களை தெய்வங்களாக மதித்துப் போற்றிய காலங்களில் வேண்டுமானால் நாம் இயேசுவாக இருந்திருக்கலாம்.  இப்போதுள்ள காலகட்டத்தில், நாமும் சிலசமயம் தூணைப் பிளந்து கொண்டு வந்து ஹிரண்யனை வதம் செய்த நரசிம்ஹாவைப் போல் இருக்க வேண்டியிருக்கிறது.  வதம் செய்த நரசிம்ஹாவைக் கூட, நாம் உயர்ந்த இடத்தில் வைத்துத் தொழுகிறோம் இல்லையா சார்?  என்று முடித்தார் கணபதி ஆசிரியர்.

என்ன பேசுவது என்று தெரியாமல் கணபதி ஆசிரியரின் முகத்தையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர். 

எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அரூபன் (இறுதிப் பயணம்) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

    வழக்கு…நடக்கட்டும் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்