in ,

வயதென்பது வெறும் எண்தான் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வீட்டு வேலைகளை முடித்துவிட்டுக் கிளம்பிய செல்லம்மா, தன் கூடையில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

அவளைக் கவனித்த ரேவதி,“என்ன செல்லம்மா, என்ன தேடறே?” என்றார்.

“இல்ல மா, இன்டிவேசன் குடுக்கலாம்னு கொண்டு வந்தேன். அதான்…”

கூடையில் இருந்த சாப்பாட்டு சம்படத்தை நகர்த்திவிட்டு ஒரு அழைப்பிதழை வெளியே எடுத்தாள் செல்லம்மா.

“யம்மா… என் வூட்டுக்காரருக்கு எம்பது வயசாகுது மா. அதுக்காக எம்புள்ளைங்க, பேரப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து ஏதோ ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நா வேல செய்யற வூட்டுல ரொம்பப் பழக்கமானவங்கள மட்டும் கூப்புடறேன். அவசியம் வந்துரு மா. ஐயா வந்தா நான் சொன்னதா சொல்லு.”

“வரேன் செல்லம்மா, கண்டிப்பா வரேன். ஆமா உன் வீட்டுக்காரருக்கு எண்பது வயசாயிருச்சா? அப்படின்னா உனக்கும் உன் வீட்டுக்காரருக்கும் வயசு வித்தியாசம் அதிகமா செல்லம்மா?”

“ஐயோ என்னம்மா, திடீர்னு இப்படி ஒரு கேள்வியக் கேட்டுப்புட்டே?”

“இல்ல செல்லம்மா, உன்னைப் பார்த்தா வயசு குறைச்சலாத் தெரியுது. ஆனா உங்க வீட்டுக்காரருக்கு எண்பது வயசாச்சுன்னு சொல்றே. அதான் சந்தேகமா இருக்கு. உனக்கு என்ன வயசு செல்லம்மா?”

தன்னைப் போல் அறுபதோ அல்லது அறுபத்தியரண்டு வயதோ இருக்கும் என்றுதான் ரேவதி நினைத்துக் கொண்டிருக்கிறார்.

“என் வயசெல்லாம் எனக்குத் தெரியாது மா. அதெல்லாம் நான் கணக்கே பண்றதில்ல.”

“என்ன செல்லம்மா இப்படிச் சொல்றே? இவ்வளவு வருஷத்துல உன் பொறந்தநாள் எப்போன்னு யாரும் சொன்னதில்லையா? சரி விடு, நீ எப்போ பொறந்தேன்னு சொல்லு, நான் உன் வயசைக் கணக்கு பண்ணி சொல்றேன்.”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது மா. நம்ம நாட்டுக்கு சொதந்திரம் கெடச்சுது இல்ல, அதுக்கு மறுவருஷம் பொறந்தேன்னு சொல்வாங்க. மாசம் தேதி எல்லாம் தெரியாது மா. இம்புட்டு வருசத்துல நான் பொறந்த நாள் எல்லாம் கொண்டாடினது இல்ல. என் வயசையும் கணக்கு பண்ணதில்ல. என் பேரப் புள்ளைங்கதான் ஏதோ கணக்கு பண்ணிச் சொல்லும். ஆனா அது எனக்கு நினைவே இருக்காது.”

“என்ன செல்லம்மா, உங்க அப்பா அம்மாகிட்ட நீ பொறந்த மாசத்தைக் கேட்டிருக்கலாமே.”

“அதெல்லாம் எனக்கு வாய்க்கல. நான் பொறந்து ஒரு மாசத்துலயே எங்க அப்பா அம்மா தவறிட்டாங்களாம். எங்க சித்தப்பாதான் எங்களை வளர்த்துச்சு. எனக்கு முன்னாடி எங்க வீட்டுல ஏழெட்டு குழந்தைங்க. எல்லாரையும் அவங்களால வளர்க்க முடியல. அதனால எனக்கு அஞ்சு வயசு இருக்கும்போது வெளியூருக்கு யார் கூடவோ அனுப்பி விட்டுட்டாங்க. அப்போ இருந்தே அவங்க வீட்டுல தங்கி வீட்டு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டேன்.

இப்போ வரைக்கும் வீட்டு வேலை செய்யறது மட்டும்தான் எனக்குத் தெரியும். என் கூடப் பொறந்தவங்களைக் கூட அதுக்கப்புறம் நான் பாக்கல.  அதனால என் பொறந்த நாள் எல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. சரி, எனக்கு நேரமாச்சு மா. நான் கிளம்பறேன். விசேஷத்துக்கு அவசியம் வந்துரு மா.”

வெள்ளந்தியாய்ச் சொல்லிவிட்டுப் போகும் செல்லம்மாவையே ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் ரேவதி. அவசரகதியில் செல்லாமாவின் வயதைக் கணக்குப் போட்டது ரேவதியின் மனது.

‘செல்லம்மா சொல்றதை வச்சு பார்த்தா என்னைவிட பதினஞ்சு வயசுக்கு மேல கூடுதலா இருக்கும் போலிருக்கே. நான் இவ்வளவு நாளா அது தெரியாம பேர் சொல்லிக் கூப்பிட்டிருக்கேன். செல்லம்மாவைப் பார்த்தா அறுபது வயசு மாதிரிதான் இருக்கு. என் வயசுதான் இருக்கும்னு நினைச்சு வா போன்னு பேசினேன். அஞ்சு வருஷமா வேலை பண்றா, இல்ல… பண்றாங்க. அவங்க வயசைக் கேட்கணும்னு எனக்குத் தோணவே இல்ல. ஆனா எப்படி இந்த வயசுலயும் இவ்வளவு சுறுசுறுப்பா வேலை செய்யறாங்க. ஆச்சரியமா இருக்கு.’

ரேவதிக்கு இதை நம்புவது கடினமாக இருந்தது. அதுமட்டுமா, தன் ஆரோக்கியம் மற்றும் மனநிலை குறித்தும் கேள்வி எழுந்தது. ரேவதி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். மகளுக்கும் மகனுக்கும் திருமணம் முடித்து வைத்தாயிற்று. இருவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இப்போது ரேவதியும் கணவர் சுப்பிரமணியனும் மட்டும்தான் வீட்டில் இருக்கிறார்கள்.

வேலைக்கும் போய்க் கொண்டு வீட்டையும் கவனிக்க வேண்டியிருந்ததால், ரேவதி எப்போதும் வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வார். மகன் புதிதாக வாங்கிய இந்த வீட்டிற்குக் குடிவந்த பிறகு, செல்லம்மா இங்கே வேலைக்குச் சேர்ந்தார். ஐந்து வருடங்களாக எந்தத் தொந்தரவும் இல்லாமல் செல்லம்மா ரேவதியின் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

அனாவசிய வம்புப் பேச்சு இருக்காது. வேலை சுத்தமாக இருக்கும். தேவையில்லாமல் விடுப்பு எடுக்க மாட்டார். எல்லாவற்றையும் விட நம்பிக்கையானவர். செல்லம்மாவை நம்பி வீட்டுச் சாவியைக் கொடுக்கலாம். இதுவரை ஒரு பொருள் காணாமல் போனதில்லை.  

எப்போதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த ரேவதி, மகனும், மகளும் திருமணம் முடிந்து வெளிநாடு போனதுமே சற்று வெறுமையாக உணர்ந்தார். ஆனாலும் வேலைக்குச் சென்று கொண்டிருந்ததால் அந்த வெறுமை பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் ஓய்வுக்குப் பிறகு நாள் முழுவதும் வீட்டில் பேச்சுத் துணை இல்லாமல் இருப்பது சிரமமாக இருந்தது.

ரேவதியின் கணவர் எப்போதும் அவரின் நட்பு வட்டத்துடன்தான் அதிகம் பேசக் கூடியவர். வீட்டில் அளந்து அளந்துதான் பேசுவார். வீட்டில் இருக்கும் நேரமும் குறைவுதான். நண்பர்களைப் பார்க்க, கடைக்குப் போக என்று ஏதோ ஒரு காரணத்தை வைத்து வெளியே கிளம்பிவிடுவார்.

இருவருமாக வெளியூர்ப் பயணங்களுக்குப் போய்க் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் கடந்த ஏழெட்டு மாதங்களாக முட்டிவலி, இடுப்புவலி என்று இயலாமையாக உணர்ந்தார் ரேவதி. அதனால் சுப்பிரமணி தனியே பயணிக்கத் துவங்கினார். அவரால் வீட்டில் ஒருநாள் முழுவதும் இருக்க முடியாது. அப்படியே பழகிவிட்டதால் ரேவதிக்கு வெறுமை அதிகமானது. அப்போதெல்லாம் செல்லம்மாதான் உற்ற துணையாக இருந்தார்.

செல்லம்மா வேலைக்கு வந்ததும் அவரிடம் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார் ரேவதி. செல்லம்மாவின் குடும்பம், பேரக் குழந்தைகளின் படிப்பு என்று ஏதாவது கேட்டுக் கொண்டிருப்பார். அதனால் செல்லம்மாவை வீட்டு வேலை செய்யும் பெண்மணியாக மட்டும் ரேவதியால் நினைக்க முடியவில்லை. நெருங்கிய தோழிபோல் அன்பாக நடத்தினார்.

செல்லம்மா வயதில் தன்னைவிட மூத்தவர் என்பது ரேவதிக்கு நம்பமுடியாத ஆச்சரியமாகத்தான் இருந்தது.  செல்லம்மா இதுநாள்வரை கால் வலி, மூட்டு வலி என்று சலித்துக் கொண்டதே இல்லை. ஒடிசலான உடல்வாகு, பரபரவென வேலை செய்யும் கைகள், எதற்கும் சலித்துக் கொள்ளாத குணம், வயதைப் பற்றி, தள்ளாமையைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத மனம் இதெல்லாம் ரேவதிக்கு இப்போதும் ஆச்சரியம் தரும் விஷயங்கள்.

ரேவதிக்கு, தன்னிடம் சமீப காலங்களில் ஏற்பட்ட மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

‘வயசாகுது, வரவர முன்னாடி இருந்த சுறுசுறுப்பு உடம்புல இல்ல. சீக்கிரமே டயர்ட் ஆயிருது. திடீர்னு கால் முட்டி இழுத்துப் புடிச்சாப்போல வலிக்குது. தூங்கி எந்திருக்கும் போது கை மரத்துப் போன மாதிரி இருக்கு. கொஞ்ச நேரம் கிச்சன்ல சேர்ந்தாப்போல நின்னா இடுப்பு வலிக்க ஆரம்பிச்சுருது. ஏதோ செல்லம்மா எல்லா வேலையும் செஞ்சு குடுக்கறதால சமாளிக்க முடியுது. இன்னும் வயசு கூடக் கூட என்னென்ன பிரச்சனைகள் வருமோ.’

இதெல்லாம் சமீப நாட்களில் ரேவதி அடிக்கடி தனியே புலம்பிக் கொள்ளும் விஷயங்கள். வேலைக்குப் போய்க் கொண்டிருந்தவரை நன்றாக இருந்த ஆரோக்கியம் திடீரென சீர்குலைந்து விட்டதாக ஒரு எண்ணம். முதுமையை எப்படிக் கையாளப் போகிறோம் என்ற பயம் கொஞ்சம் அதிகமாகவே ரேவதியை ஆட்டிப் படைத்தது. இந்த நிலையில்தான் செல்லமாவின் வயது தெரியவந்தது.  

செல்லம்மா கொடுத்திருந்த அழைப்பிதழை எடுத்துக் கொண்டு, அவர் வீட்டு விசேஷத்திற்குப் போனார் ரேவதி. செல்லம்மாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

“ரேவதி மா, எங்கே என் வூட்டு விசேசத்துக்கு நீ வர மாட்டியோன்னு நினைச்சேன். என்னையும் மனுசியா மதிச்சு நீ வந்தது ரொம்ப சந்தோசம்,” என்று மகன், மருமகன், பேரன் பேத்திகள். கொள்ளுப்பேரக் குழந்தைகள் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் செல்லம்மா.

“யம்மா, பொறுமையா இருந்து அவசியம் சாப்புட்டுத்தான் போவணும். நான் மத்த எல்லாரையும் கவனிக்கணும். ஏ கமலா, இங்க வா. இவங்க ரேவதி மா. இவங்களை நல்லா கவனிச்சுக்க. யம்மா, ஏதும் வேணும்னா இவகிட்ட சொல்லுங்க. என் மக வயித்துப் பேத்திதான். தப்பா எடுத்துக்காதீங்க.”

செல்லம்மா பம்பரமாகச் சுழல்வதைப் பார்த்த ரேவதிக்கு மலைப்பாக இருந்தது. கமலாவிடம் மெல்ல பேச்சு கொடுத்தார்.

“செல்லம்மா உனக்கு பாட்டியா? அவங்களுக்கு எவ்வளவு வயசாகுதுன்னு சரியாத் தெரியுமா?”

“ஆன்ட்டி, ஆச்சிக்கு இப்போ எழுபத்தியாறு வயசிருக்கும். எங்க தாத்தாவுக்கும் ஆச்சிக்கும் நாலு வயசுதான் வித்தியாசம்னு எப்பவோ எங்க அம்மா சொல்லியிருக்கு. ஆனா ஆச்சி வயசைப் பத்தி யோசிக்கவே யோசிக்காது. எங்க அம்மாவுக்கு ஐம்பது வயசாகுது. என்னைக்காவது எங்க அம்மா வயசாகுது, முடியலேன்னு புலம்பிச்சுன்னா, ஆச்சி திட்டும். வயசாகுதுன்னு நினைச்சாலே உடம்பு நோவு வந்துரும். நம்ம மனசுதான் எல்லாத்துக்கும் காரணம். நமக்கு வயசாகல, நாம நல்லா இருக்கோம்னு நினைக்கணும். முடியல, கால் வலிக்குது, வயசாயிருச்சுனு நினைச்சா, அந்த நினைப்பே நம்மளைப் படுக்க வச்சிரும்னு அடிக்கடி சொல்லும். ஆச்சிதான் எங்களுக்கெல்லாம் பக்கபலம் ஆன்ட்டி. அதனால நாங்களும் ஆச்சியோட வயசைப்பத்தி யோசிக்கறதே இல்ல. இந்த விசேஷமே நாங்க எல்லாம் ரொம்ப அடம்புடிச்சுதான் ஒத்துக்க வச்சோம்.”

அதன்பிறகு கமலா பேசியதில் ரேவதிக்கு கவனம் இருக்கவில்லை. தன் சமீபத்திய இயலாமைக்கான அடிப்படைக் காரணம் புரிந்ததால், அவற்றை அலசி ஆராய்வதில் மனம் ஈடுபட்டது. அதே சிந்தனையோடு அங்கிருந்து கிளம்பி வந்தார் ரேவதி. வீடு வந்து சேரும்போது அவர் எண்ணத்தில் நிறைய மாற்றங்களும் வந்திருந்தன.

‘பொறுப்பெல்லாம் முடிச்சாச்சு, வேலை செஞ்சு ரிடையர் ஆயாச்சு, இனிமே வாழ்க்கைல நமக்குன்னு எதுவும் இல்லன்னு நான் நினைக்க ஆரம்பிச்சதுதான் என்னோட முதல் தப்பு. வயசாகுதுன்னு நான் நினைக்க ஆரம்பிச்சதுமே என் மனசுல இருந்த சுறுசுறுப்பு காணாம போயிருச்சு. சின்னச் சின்ன உடல் உபாதைகளைக் கூட முதுமையோட தொடர்புபடுத்தி பயப்பட ஆரம்பிச்சது அடுத்த தப்பு. வயசுங்கறது வெறும் நம்பர்தான். நம்ம மனசுல இளமையா  இருந்தா செல்லம்மா மாதிரி ஆரோக்கியமா சுறுசுறுப்பா இருக்கலாம்.’

புதுத் தெம்புடன் வயதை மறந்து சுறுசுறுப்பானார் ரேவதி.

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனம் இருந்தால் (ஒருபக்க கதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    ஏழை தாய் (சிறுகதை) – பாலாஜி ராம்