in , ,

வாராயோ வெண்ணிலாவே (பாகம் 2) – சுபாஷினி பாலகிருஷ்ணன்

இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முன்கதைச் சுருக்கம்:

மைதிலி ரகு தம்பதியருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். அதிக வயது வித்தியாசத்தில் செய்த திருமணத்தின் பலனாய் குடும்பத்தில் ஒட்டுதல் இல்லாமல் இருக்கும் தம்பதியராய் ரகு மைதிலி இருக்க குடும்பம் எப்படி நகர்கிறது என்பதை இனி காண்போம்.

இனி:

மைதிலியின் பதினாறு வயதில் முப்பது வயதுடைய ரகுவிற்கு திருமணமானது. திருமணமான புதிதில் தாம்பத்தியத்தில் நாட்டமில்லாமலும், விளையாட்டுத்தனமாகவும். இருந்த நந்தினியின் மீது ரகுவிற்கு கோபமே வந்தது. பிறகு அவளின் வயதிற்கே உண்டான விளையாட்டுத்தனமென புரிந்து கொண்டான்.

பிறகு தந்தையை இழந்த ஒரு வீட்டில் மூத்த மகனுக்கே உண்டான பொறுப்புடன் இருந்தான் ரகு. கல்யாணிக்கு நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து கொடுத்து தானும் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணமே நடுத்தர வயதில் ரகுவிற்கு இருந்தது.

தன் அப்பாவிற்கு சமமாக தன்னை ஆளாக்கி திருமணம் செய்து கொடுத்ததால்,  அண்ணன் மீது உயிரையே வைத்திருந்தாள் கல்யாணி. சில நேரம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளும் கல்யாணியின் மீது மைதிலிக்கு கோபமும், வெறுப்பும் வரும்.

அலுவலக நண்பர்களின் திருமணத்திற்குக் கூட மனைவியோடு தங்கையை அழைத்துச் செல்வான் ரகு.

அம்மா இது குறித்து பேசும்போதெல்லாம், “அப்பாவுக்கப்பறம் நீ எங்கயும் வெளிய போறதில்ல சரிம்மா. ஆனா, அவ சின்ன பொண்ணுமா. நான் வெளிய கூட்டீண்டு போகலண்ணா யார்தாம்மா அவளை கூட்டீண்டு போவா, சொல்லு?” என்றவனைப் பார்த்து இப்படி ஒரு பாசக்கார மகனைப் பெற்றதை நினைத்து ஒரு  அம்மாவாகப் பெருமைபட்டுக் கொள்வாள் செல்லம்மா.

மைதிலியின் திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் கழித்து கல்யாணிக்கு நல்ல வரன் அமைய பத்து பவுன் நகை போட்டு மொத்த திருமண செலவையும் செய்து நல்லபடியாக திருமணம் செய்து கொடுத்தான் ரகு.

வருடங்கள் உருண்டோட மூன்று குழந்தைகளை வளர்ப்பதிலும், வயதான மாமியாரை கவனிப்பதிலும், வீட்டு வேலைகளைப் பார்ப்பதிலும் மைதிலிக்கு நேரம் போனதே தெரியவில்லை.

வருடத்தில் இரண்டு முறை பிறந்த வீட்டிற்குப் போவதே மைதிலிக்குப் பெரிதாக இருந்தது. அதுவும் காலையில் கூட்டிச் சென்று மாலையில் வீட்டுக்கு கூட்டி வந்து விடுவான் ரகு. இதனால் மைதிலியின் உடன்பிறந்தோருக்கும் ரகுவின் மீது பெரிய அபிப்பிராயம் இல்லாமல் இருந்தது.

தன்னுடைய மூன்று குழந்தைகளின் பிள்ளைப்பேறுக்கு அம்மா வீட்டிக்குப் போய் வந்தது மட்டுமே அவளுக்கு பிறந்தவீட்டு சுகத்தை அனுபவித்த நாட்களாக இருந்தது.

தன்னுடைய எந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாத ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு விட்டோமே என்ற ஆதங்கம் மைதிலியின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

“நாங்க தான் அப்பவே சொன்னோமேடி. மாப்பிள்ளை உன்னை விட நிறத்துல  குறைச்சல். அப்பா இல்லாத வீடு. மொத்த பொறுப்பும் இவர் மேல தான் வரும்னு படிச்சு படிச்சு சொன்னோமே.  நீதான் நாங்க சொன்னத எதுவுமே காது குடுத்த கேக்கல. அப்பாவை எதிர்த்து பேசமாட்டேன்னு சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிச்ச” என்று சொல்லும் அண்ணன்மாரிடம்,

“இத்தனை விஷயத்தை எங்கிட்ட சொல்ற  நீங்களே, அப்பா முன்னாடி நின்னு பேச பயப்படறேள். அப்பறம்  நான் எப்படி பேசுவேன்” என்றாள் மைதிலி.

புகுந்த வீட்டில் பொறுப்பான மாட்டுப் பெண்ணாக இருந்த போதிலும், ஒரு மனைவியாய் கணவனிடம் ஒரு ஒட்டுதல் இல்லாத வாழ்க்கையாகவே மைதிலிக்கு சென்றது.

உடல்நிலை சரியில்லாமல் மாமியார் பத்து நாட்கள் காய்ச்சலில் படுத்து காலமாக, தன்னுடன் நீண்ட வருடம் பயணித்தவரின் மரணம் அவளை உலுக்கிப் போட்டது. அதுவரை மாமியாரிடம் கொட்டித் தீர்த்தவள் குழந்தைகளிடம் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தாள்.

சிறுவயது முதல் பொறுப்புகளைச் சுமந்த ரகு, ஒரு நடுத்தர வயது ஆண்மகனாய் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலேயே  குறியாக இருந்தான். அதனால் தான் எதிர்பார்த்த காதல் கணவனிடம் நந்தினிக்குக் கிடைக்கவில்லை.

பிறகு, மைதிலியின் காதலை நாடும் போது அவள் மனதளவில் விலகியிருந்தாள். வயது வித்தியாசம், அவர்கள் வாழ்வின் வசந்தத்தை முழுவதும் அனுபவிக்க முடியாமல்  தாமரை இலைத் தண்ணீராகவே இருக்கச் செய்து விட்டது.

தன் நிலை, நாளை தன் வீட்டிற்கு வரப்போகும் மாட்டுப் பெண்ணுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் முடிவாகவே இருந்த மைதிலி, அதைக் குழந்தைகளிடம் சொல்லிச் சொல்லி வளர்த்தாள்.

“எங்க காலத்துல பொண்ணுகளைப் பெருசா படிக்க வைக்கல. அதனால கல்யாணத்துக்கு நிறைய நகை போட்டா. ஏதாவது பிரச்சனைன்னா தன்னோட பொண்ணு, அந்த நகையை வச்சாவது பொழச்சுப்பாளேன்னு நெனச்சா. ஆனா காசு, பணம் கூட காலத்துல அழிஞ்சு போயிடும். படிக்கற படிப்பு சாகற வரைக்கும் உனக்கு சோறு போடும். அதனால, அம்மா வீட்டுல இருக்கறச்சயே படிக்கற வரைக்கும் படிச்சுக்கோ ரஞ்சு. அதுதான் உனக்கான மூலதனம்” என்று ஆத்மார்த்தமாக உண்மையைச் சொல்வாள் மைதிலி.

இதுவரைக்கும் தனக்கு பயமில்லாமல் இருந்தாலும், ரஞ்சனி முதுகலைப் படிப்புக்கு வந்ததும் மைதிலியின் கவலை அதிகமானது. வீட்டுல யாரைப் பத்தியும் எதுவும் அக்கறை இல்லாம இப்படி இருந்தா, மூணு பேரையும் நான் எப்படி கரை சேர்ப்பேன் என்ற கவலை மைதிலியை வாட்ட ஆரம்பித்தது.

அம்மாவின் உணர்வினைப் புரிந்து கொண்ட கார்த்திக், “நீ எதுக்கும் கவலைப்படாதம்மா. எல்லாம் காலாகாலத்துல நல்லபடியா நடக்கும். அப்பா அமைதியா இருக்காளே தவிர எதாவது கெட்ட பழக்கம் இருக்கா. உங்கிட்ட எப்பப்பாரு சண்டை போடறாளா. இல்லையே. பின்ன நீ ஏன் கவலைப்படற? நான் பாத்துக்கறேன்” என்றான்.

கடைக்குட்டி கிருஷ்ணா தன் வகுப்பிலேயே முதலாவதாக வந்தாலும் வீட்டு விஷயம் எதிலுமே தலையிடாமல் ஒட்டாமலேயே இருப்பான். இதற்கு நடுவில் ஓரளவு நன்றாக படித்துக் கொண்டிருந்த கார்த்திக் திடீரென படிப்பில் மதிப்பெண் குறைவாக எடுக்க ஆரம்பித்ததை அப்பா கவனிக்கத் தவறவில்லை.

“நீங்க கார்த்திக்கிட்ட கொஞ்சம் பேசுங்கோ. அவனுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு. இந்த வயசுல நான் போய் கேட்டா நன்னா இருக்காது. ரஞ்சுகிட்ட எனக்கு எதுவானாலும் பேசத் தயக்கமா இருந்ததில்ல. ஆனா, மத்த விஷயத்தை மணிக்கணக்காக கார்த்திக்கிட்ட பேசற எனக்கு இந்த வயசுல வரப் பிரச்சனையைப் பேச கூச்சமா இருக்கு” என்றாள் மைதிலி.

ஒரு நிமிடம் அமைதியாக மைதிலியைப் பார்த்த ரகு, “உன் பசங்களுக்காக மட்டும் தான் எங்கிட்ட வந்து பேசுவ இல்ல” என்றதும்

“அப்படீன்னு யார் சொன்னா? உங்களுக்கு நான் என்ன குறை வக்கறேன்? நேர நேரத்துக்கு தட்டுல கொண்டு வந்து தரேன். இதை விட என்ன வேணும்?” என்றவளை ஆழமாக பார்த்தவன்

“சரி. நான் பாத்துக்கறேன். நீ கவலைப்படாத” என்றான்.

அடுத்தநாள்…..

“மைதிலி, இன்னைக்கு எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல. நான் ஆஃபீஸ் போகல” என்ற ரகு, “கார்த்திக், இன்னைக்கு உனக்கு எதாவது பரிட்சை இருக்கா?” என்று கேட்க

“இல்லப்பா. சொல்லு.  என்ன வேணும்?” என்றவனிடம்

“கொஞ்சம் ஹாஸ்பிடல் வரைக்கும் போய்ட்டு வரணும். நீயும் நானும் போய்ட்டு வந்துடலாமான்னு பார்த்தேன்” என்றார் ரகு.

“ஏங்க, உடம்புக்கு என்னாச்சு? நானும் வரேன்.  ஒரு எட்டு போய்ட்டு வந்துடுவோம்” என்ற மைதிலியிடம்

“செக்அப் தான மைதிலி. நானும் கார்த்திக்கும் மட்டும் ஹாஸ்பிடல் போய்ட்டு வந்து டாக்டர் என்ன சொன்னார்னு சொல்றோம். ரஞ்சு காலேஜுக்குப் போகட்டும். நீ சைக்கிள்ல இன்னைக்கு பத்திரமா ஸ்கூலுக்கு போயிட்டு வந்துடு கிருஷ்ணா” என்றான்.

பிறகு இருவரும் கல்வீரம்பாளையம் பேருந்து நிலையம் வரை நடந்து வர,  சாலையைக் கடக்கும் முன், “கார்த்திக், நாம ரெண்டு பேரும் பேரூர் மருதமலை வரைக்கும் போய்ட்டு வந்துடலாம். இங்கயே நில்லு. பஸ் வந்தா ஏற சௌரியமா இருக்கும்” என்றார் ரகு.

“அப்பா…..ஆனா?” என்றவனிடம், “இப்ப எதுவும் பேச வேண்டாம். பொறுமையா பேசிக்கலாம்” என்றதும் அமைதியானான் கார்த்திக்.

ஐந்தாவது நிமிடம் வந்த பேருந்து எண் எழுபதில்  ஏறியவர்கள் கடைசி இருக்கையில் அமர, பேருந்து இ.பி. ஆஃபீஸ், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை சட்டக் கல்லூரியைத் தாண்டி மருதமலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

“ஏங்க, நடை எத்தனை மணிக்கு சாத்துவாங்க? சாயங்காலம் எத்தனை மணிவரை கோவில் திறந்திருக்கும்? மேல ஏற பஸ் இருக்குமுல்ல?” என்று புதிதாய் வருபவர்கள் அருகிலிருந்தவர்களிடம் சந்தேகங்களைத் கேட்டுக்கொண்டிருக்க, பேருந்தில் சஷ்டி, கார்த்திகை, செவ்வாய் கிழமை நாட்களில் வழக்கமாக வரும் சில முகங்களையும் பார்க்க முடிந்தது.

“மருதமலை வந்தாச்சு. கோவிலுக்குப் போறவங்க நேரா கொஞ்சதூரம் மலைப்பக்கம் பார்த்து நடந்தீங்கண்ணா, வலது பக்கம் மலை மேல போறதுக்கு தேவஸ்தான பஸ் நிக்கும். அதுல ஏறி மலைக்குப் போகலாம்” என்று புதிதாக வருபவர்களுக்கு கோவிலுக்குப் போவதற்கான வழியையும் கேட்காமலேயே எல்லோருக்கும் பொதுவாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார் நடத்துனர்.

பணத்துக்கு மட்டுமல்லாமல் நியாயத்திற்காக மனதார வேலை பார்ப்பவர்களும் இருக்கத்தான்  செய்கிறார்கள்.

இறங்கி அமைதியாக நடந்து கொண்டிருந்த கார்த்திக், “ஹாஸ்பிடலுக்குப் போகாம இப்ப மருதமலைக்கு ஏம்ப்பா கூட்டீண்டு வந்த?”  என்று கேட்க

“ஸ்வாமிக்கு மாலையும், அபிஷேகத் தட்டையும் முதல்ல வாங்கீண்டு வாடா” என்றார் ரகு.

ஏதோ காரணத்தோடு தான் அப்பா தன்னை மலைக்குக் கூட்டி வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்ட கார்த்திக், அதற்கு மேல் எதுவும் பேசாமல் கடையில் எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ள, இருவரும் தேவஸ்தான பேருந்தில் ஏறி மருதமலைக் கோவிலை அடைந்தனர்.

பஸ்ஸில் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இறங்கியவர்கள் கொஞ்ச தூரம் பொறுமையாக நடந்து படிகளில் ஏற ஆரம்பித்தனர்.

கார்த்திக்கின் பள்ளிப்படிப்பு  மற்றும் நண்பர்கள் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தார் ரகு. அவன் ஓட்டப்பந்தய விளையாட்டில் எப்போதுமே முதலாவதாக வருவதைக் குறிப்பிட்டவர், “படிப்புல  ரொம்ப புத்திசாலியான இருந்து நன்னா மார்க் வாங்கி வாழ்க்கைல முன்னேறி வரது ஒரு ரகம்னா, விளையாட்டு, படிப்பு, எல்லா பிரச்சனையையும் அணுகறமுறைனு  வாழ்க்கைப் பாடம் எல்லாத்துலயும் ஜெயிக்கறது ரெண்டாவது ரகம். நீ ரெண்டாவது ரகம்டா. எதைப் பத்தியும் யோசிக்காம அரசுத் தேர்வு, ராணுவம், கடற்படை, விமானப்படைனு எல்லா  பரிட்சைக்கும் தயார் பண்ண ஆரம்பி கார்த்தி. உனக்கு கண்டிப்பா ஏதோ ஒண்ணுல வேலை கிடைக்கும்-னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

நம்ம முதல் காதல்ல தோத்துட்டோம்னா வாழ்க்கையே முடிஞ்சு போயிடும்னு அர்த்தமில்ல கார்த்தி. வாழ்க்கைல காதல்ங்கறது ஒரு அத்தியாயம் தானே தவிர அதுவே வாழ்க்கையில்ல. அதனால, எதை நெனச்சும் கவலைப்படாத. இப்போதைக்கு நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கற வழியைப் பாரு. மத்ததை கடவுள்கிட்ட விட்டுடு. அவன் பாத்துப்பான்” என்றார்.

“அப்பா, அது வந்து…..” என்று கார்த்திக் இழுக்க,

“நானும் உன் வயசைக் கடந்து வந்தவன்தான்டா. பேரென்ன?” என்ற ரகுவிடம்,

“பேர் பிந்து’பா, மலையாள பிராமின். ரொம்பவே நல்ல பொண்ணுப்பா. அவங்க வீட்டுல ஒத்துக்க மாட்டான்னு சொல்லீட்டாப்பா” என்றவனை

“நாங்க மட்டும் ஒத்துப்போம்னு நெனச்சயா. இந்த வயசுல காதல் வேண்டாம்னு பெத்தவா சொல்ல  காரணம் இருக்குடா. எதையும் புரிஞ்சுக்க முடியாத வயசு. கல்யாணத்துக்கப்பறம் ஒரு குடும்பத்துல இருந்து இன்னொரு குடும்பத்தோட  பழகவே நமக்கு ரொம்ப நாளாகும். இதுல வேற குடும்ப பழக்கவழக்க முறைக்குள்ள நம்மள இணைச்சுக்க ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கும். சாப்பிடற முறைல இருந்து சொந்தபந்தம் வரை யாரோடும் ஒட்டவும் முடியாம, விலகவும் முடியாம, ஏண்டா காதல் கல்யாணம் பண்ணீன்டோம்னு வேதனைப்பட்ட என்னோட நிறைய   ஃப்ரெண்ட்ஸைப் பாத்திருக்கேன். கடைசி வரைக்கும் ரெண்டு பக்க சொந்தத்தோட அவங்க ஒட்ட முடியாம அதோட அவங்க குழந்தைகளும் ஒரு தீவு மாதிரி வாழறது  கொடுமைடா. இருக்கற ஒரு ஜென்மத்துல சொந்த பந்தம்னு எல்லோரோடயும் சேர்ந்து சந்தோஷமா வாழணும்” என்றதும்,

‘நம்ம அப்பாவா இப்படி பேசறார்’னு ஒரு நிமிடம் கார்த்திக் மனதுக்குள் நினைக்க

“கார்த்திக், கொஞ்சம் அசதியா இருக்கு. ஒரு சோடா ஒன்னு வாங்கீண்டு வாயேன். பத்து நிமிஷம் உட்கார்ந்துட்டு அப்பறமா உள்ள போகலாம்” என்று சொல்ல, உடனே விரைந்தவன் ஒரு சோடாவையும், தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக் கொண்டு வந்தான்.

“இதுக்குதான் என்னை இவ்வளவு தூரம் கூட்டீண்டு வந்தயாப்பா?” என்று கேட்க

“உங்களுக்காக ஒரு பிரச்சனைக்கு நிக்காம யாருக்காகடா நிக்கப் போறேன்?” என்ற ரகுவை அந்த நொடியில் புரிந்து கொண்டான் கார்த்திக்.

பிறகு இருவரும் முருகப் பெருமானை தரிசித்து விட்டு வலம் வரும் வழியில் துர்கையையும், பெருமாளையும், நவக்கிரகங்களையும் தரிசித்துவிட்டு இறுதியாக கொடிக் கம்பத்திற்கு முன்பு இருவருமாக விழுந்து வணங்கிவிட்டு மண்டபத்தில் உட்கார

“நீ வேணா  பாம்பாட்டி சித்தர் குகைக்கு போய்ட்டு வா. நான் இங்கேயே உட்கார்ந்துண்டு இருக்கேன்” என்றவரிடம்

“நான் உன்னை விட்டுட்டு தனியா போகலப்பா. வீட்டுக்குப் போலாம்ப்பா” என்றவனிடம்,

“இந்த வயசுல போகாம எப்பப் போகப் போற. நான் இங்கயே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன். நீ போய் பார்த்துட்டு வா. சித்தர்கள் ஜீவசமாதியான  இடத்துக்கு தனி சக்தி உண்டு” என்றதும்

“சரிப்பா” என்ற கார்த்திக் பாம்பாட்டி சித்தர் குகைக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி வரும் போது தூரத்தில் ஒரு பாறையின் இடுக்கில் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்து எட்டிப் பார்த்தபடி படமெடுத்து நிற்க சிலிர்த்துப் போனான் கார்த்திக்.

இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண் சிமிட்டும் வானவில் (அத்தியாயம் 16) – இரஜகை நிலவன்

    வாராயோ வெண்ணிலாவே (பாகம் 3) – சுபாஷினி பாலகிருஷ்ணன்